தலைப்பு

வியாழன், 2 ஏப்ரல், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | மா ஆனந்தமயி


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

மா ஆனந்தமயி(1896 - 1982):

ஹே மா ஆனந்தமயி ஜனனி என்ற பாடல் இறைவன் சத்ய சாயி ஆராதனா சாய் பஜனில் அனைவரும் பாடுவதே!

எல்லா மகான்களும் சுவாமிக்குள் அடக்கம்.. சுவாமியிடமிருந்தே அனைத்து மகான்களின் அனுபவ மகத்துவமும்.. மகிமை விநோதங்களும்.. பல சூட்ச்சும பேருணர்வுகளும் தொடக்கம்...

அனைத்து மகான்களின் இறை அனுபவமாகத் திகழ்கிறார் இறைவன் சத்ய சாயி.

மா ஆனந்தமயி அம்மா ஒரு பேரானந்தமயமான மகான்...

பகவான் ரமணரைப் போல் மா ஆனந்தமயிக்கும் குரு என்று எந்தத் தனி நபரும் இல்லை..

ரமண மகரிஷிகளுக்குக் கூட அருணாச்சலம் என்ற ஒரே சொல் குருவாக மாறி இழுத்து பாதாள லிங்க குகையில் தள்ளியது.


மா ஆனந்தமயி அம்மாவோ பிறந்த குழந்தையாக இருந்த போதே ஆனந்த நிலையில் திளைத்தவர்கள்.

30/4/1896 ஆம் ஆண்டு இந்த பூமி ஆனந்தமயி அம்மாவைச் சுமந்து பேரானந்தப்பட்டது.

வெள்ளி நள்ளிரவு 1.12 am இவர்களின் ஜனன வைபவம் நிகழ்ந்தது.

இயற்பெயர் நிர்மலா சுந்தரி தேவி.

பிஹாரி பட்டாச்சார்யா ... மோக்ஷ சுந்தரி இருவர் செய்த தவம்.. அம்மா ஆனந்த வரமாய் கிழக்கு வங்காளத்தில் (இப்போது பங்களாதேஷ்) பிறந்தார்.

பிறந்த குழந்தை அழவே இல்லை. சிரித்தது..

எந்த சூழ்நிலையிலும் அம்மா அழுததே இல்லை...

மகான்களின் வாழ்க்கையை வாசிப்பவர்கள் உள்வாங்கும் பொழுது கற்பூரத்தை ஆன்மாவில் தாங்கியவர்கள் ஆன்ம சாதனையில் பற்றி எரிவார்கள்..

இதற்காகவே மகான்களின் வாழ்க்கைச் சம்பவங்கள்.. அவர்களின் சம்பாஷனைகள்... அவர்களின் ஆன்மிக அனுபவங்கள் இங்கே வழங்கக் காரணம்..

இதனோடு அவர்கள் இறைவன் சத்ய சாயி பற்றிய அனுபவம் பகிர்வதை வாசிக்கும் போது பரம சத்தியம் இன்னும் பரம சக்தியாய் வாசிப்பவர்கள் இதயத்தில் பரிமளிக்கும்... சாயி அனுபவத்தை பரிசளிக்கும்...

கற்பூரம் கணப்பொழுதில் பற்றும் ஈர விறகுகள் தாமதமாகவேப் பற்றும்.
அதற்கும் அம்மா ஆனந்த லயத்தில் மொழிந்ததை பின்னர் காண்போம்...

13ம் வயதிலேயே அம்மாவுக்கு ஸ்ரீ ரமண் மோஹன் சக்ரவர்த்தி என்பவரோடு திருமணம் நடக்கிறது.


18 வயது வரை தாய் வீட்டில் வாழ்ந்த பிறகு கணவர் இல்லம் வருகிறார்..

இயல்பிலேயே ஆனந்தமாய் .. தன்னுள் தான் ஒடுங்கி உணர்வற்றவராய்.. அசைவற்றவராய்.. இந்த உலகத்தில் இல்லாதவராய் அம்மா  தோற்றம் அளித்ததால் சுற்றி உள்ளோர் கவலைப்பட்டனர்..

அம்மாவைப் பற்றிய புத்தக அனுபவமானது சம்பவங்களை விட அவரின் ஆனந்த லயிப்பில் அவர்களின் உடல் மாற்றம்.. முக மாற்றம்.. அவர்களின் உடலிலிருந்து தெய்வத் தோற்றங்கள் வெளிப்படுவது.. அவர்களின் வாயிலிருந்து மந்திரங்கள் வெளிப்படுவது.. விரல்கள் தானாகவே சில முத்திரைகள் வைப்பது என அவர்களின் ஆனந்த நிலையே ஆச்சர்யமாக விவரிக்கப்படுகிறது...

அம்மா உடம்பாய் இந்த பூமியில் வசிப்பதாகப் பார்ப்பவர்க்குத் தோன்றி இருந்தாலும்.. அவர்கள் சூட்ச்சும உலகில் தான் தன் இருப்பை வைத்திருந்தார்கள் என்பதை உணர முடிகிறது.

ஆதி காலத்தில் கணவர் மோகிக்க வருகையில் அம்மாவின் உடல் பிணம் போல் ஆகி .. முகம் மட்டும் பரமானந்த லஹரியாய்த் திகழும்..

படிப்படியாக கணவரும் துறவியாகி அம்மாவை ஒரு மகளாய் ஏற்று தொண்டு செய்து வரலானார்.

அம்மாவின் சாதகர்கள் அவரை போலாநாத் என்றும் பிதாஜி என்றும் அழைத்தனர்.

அடியேனுக்கு இவர்களின் ஆன்மீக வாழ்க்கையும் ராமகிருஷ்ண பரமஹம்சர் மா சாரதா தேவி வாழ்க்கை போலவே தோன்றியது.

போலாநாத் அவர்களும் ஆன்மிகத்தில் உயர்நிலை எய்தி 1938 முக்தி எய்தினார்.

1924 ல் பாய்ஜி எனும் உத்தம சீடர் அறிமுகமாகி தாயிழந்த அவர் மா ஆனந்தமயி அவர்களையே தாயாக... குருவாக ஏற்றார்..ஒருமுறை சித்தேஸ்வரி ஆசிரமத்தில் அம்மாவின் ஆனந்த நிலை கண்டு அவர்களை முதன்முறையாக மா ஆனந்தமயி என அழைத்தது இவரே..

குரு ரமணருக்கு சீடர் கணபதி முனி ரமண மகரிஷி எனப் பெயரிட்டது போல் இந்த அற்புத சம்பவமும் நிகழ்ந்தது..

வேலைக்குச் செல்வதாக இருந்த பாய்ஜி அவர்களை அம்மா உடனே சித்தேஸ்வரி ஆசிரமம் அழைத்து .. மேலதிகாரி வரவை தாமதமாக்கி.. இந்தப் பெயரிடும் படலத்தையும் நிகழ்த்தி அற்புதம் புரிந்திருக்கிறார்.


பாய்ஜி அம்மாவை தியானத்தில் தரிசித்திருக்கிறார்.. சூட்ச்சுமமாய் அம்மா அவரின் வீட்டிற்கு வருவதை கண்டிருக்கிறார்.

அப்போது அம்மா அணிந்த அதே நிறப் புடவையே (வெள்ளை.. சிகப்பு பாடர்) நேரில் அவர் தரிசிக்கச் செல்ல ஆசிரமத்திலும் அதே நிறப் புடவையில் அம்மா தரிசனம் தந்ததைப் பல முறை கண்டு புல்லரித்திருக்கிறார்.


1929 ஆம் ஆண்டு டாகாவில் அம்மாவுக்கென ஆசிரமம் உருவானது..

டாகாவில்  போலாநாத் பணி நிமித்தமாக நவாப் தோட்டத்தில் மேலாளராய் வர..
அங்கேயே ஆனந்த ஆன்மிக வைபவமும் ஆழங்கால் பதித்தது.

அம்மாவின் ஆன்மிக ஆகர்ஷனம் உலகளவில் ஈர்க்கப்பட்டிருக்கிறது.

மா ஆனந்தமயி அம்மாவின் உடலில் இருந்து வெளிப்படும் அதிர்வலைகள் ஆனந்தத்தையே சுற்றி இருப்பவர்களுக்கு சுரக்கச் சுரக்க வழங்கிக் கொண்டு வந்திருக்கிறது... (இப்போதும் ஹரித்வார் சமாதியிலும் அதே ஆனந்த அதிர்வலைகள்)

அம்மாவின் ஆனந்த இருப்பால் ஆன்மிக சாதகர்களுக்கும் அவர்களின் தியானத்திற்கான சூழலை ஏதுவாக அமைத்துத் தந்திருக்கிறது.

அம்மாவின் பரவெளி உணர்வானது தனது சிறுவயது பழக்கத்தையும் (உதாரணமாக பல் துலக்குதல்.. உணவு உண்ணுதல்) மறக்கச் செய்திருக்கிறது.

பிறந்த குழந்தையைப் போலவே அவரின் நிலை இருந்தபடியால் சாதகர்களே அம்மாவுக்கு சிறிது அன்னமும் பருப்பும் ஊட்டிவிடுவார்கள்...

பரவெளி அனுபவம் சர்வ சாதாரணம் அல்ல.. அந்தப் பரவெளியே இறைவன் சத்ய சாயி எனும் படியால் அவர்கள் தனது ஆசிரமத்தில் கிருஷ்ண பஜனைகள் பாடுவார்.. ஆடுவார்..சிரித்தால் நிறுத்தவே முடியாத அளவுக்குச் சிரிப்பார்..

தனது உடல்... பொருள்... ஆவி அனைத்தையும் ஸ்ரீ ஸ்ரீ மா அவர்கள் பரவெளியிடம் ஒப்படைத்ததால்
தன்முனைப்பு என்பதே அம்மாவிடம் இல்லை..

தனக்கென எந்த சங்கல்பமுமே இல்லை என்பார்...

மகான்களுக்கு தன்முனைப்பால் எந்த சங்கல்பமும் இருந்ததில்லை...

இறைவன் சத்ய சாயி சங்கல்பப்படியே இந்தப் பூ உலகில் மகான்கள் அனைவரும் தாங்கள் வந்த ஆன்மிகப் பணியை நிகழ்த்துகின்றனர்.

இறைவனின் பாத்திரமாகவே மகான்கள் திகழ்கிறார்கள்...

அந்தப் பாத்திரத்தில் அமுதூற்றி ஆன்மிக சாதகரின் ஆன்ம தாகத்தைத் தீர்ப்பது இறைவன் சத்ய சாயியின் சங்கல்பமே...!

சீடரும் ஆன்மிக சாதகருமான பாய்ஜி அவர்கள் தியானத்தில் அம்மாவின் குரலைக் கேட்பார்கள்...

ஆசிரமத்தில் அதே நேரம் அம்மா என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை விசாரிக்க பிதாஜியோ அதற்கு அம்மா படுத்துக் கொண்டு பிறர் காதுகளுக்கு விழாதபடி ஏதோ முணுமுணுத்தார் என்பார்கள்.

பாய்ஜிக்கு அம்மாவின் தியான வழிகாட்டுதலும் தொடர்ந்திருக்கிறது.

மகான்களே தனது சீடர்களிடம் தியானத்தில் பேசிடும் பொழுது..


அவர்களின் மெய்யுணர்வான நமது சுவாமியும் வெளி நாட்டு சாதகர்கள் முதல் அனைத்து ஆன்மிக சாதகர்களிடமும் சரியான காலகட்டத்தில் இருந்து தியானத் தொடர்பிலிருக்கிறார்...

இதைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட தியான ஆழத்தில் சுவாமி பக்தர்கள் இந்த சூட்ச்சும சுவாமி தொடர்பை அனுபவித்துக் கொள்ளலாம்...

பாய்ஜி ஒருமுறை இதய நோய்க்கு ஆட்பட இருமுறை இல்லம் சென்று ஸ்ரீஸ்ரீ மா இரண்டாம் முறை நோயோடு பேசி... "நீ இதுவரை இருந்தது போதும்.. கிளம்பி விடு" என்றிருக்கிறார்.

நோய் விலகியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை...

பாய்ஜி கேட்டதற்கு.. "மனிதர்கள் உங்களைப் போலவே ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு உருவம் உண்டு" என சூட்ச்சும ரகசியம் பேசி இருக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ மா.

ஆழமான பரவெளியில் உறைந்திருக்கும் அம்மாவின் மூச்சு பல நேரங்களில் இயங்காமலிருந்ததை பாய்ஜி அவர்கள் நேரில் பலமுறை தரிசித்ததை தனது புத்தகக் குறிப்பில் ஆச்சர்யப்பட்டுப் பகிர்ந்திருக்கிறார்..

அந்த அற்புதமான புத்தகத்தின் பெயர் மாத்ரு தரிசனம் (தமிழாக்கம்).

அம்மா திருவாய் மலர்ந்தருளி சாதகர்களிடம் பேசியதை விட பரவெளி உணர்வில் மௌனமாய் இருந்ததே அதிகம்..

அவர்களின் ஒவ்வொரு சம்பாஷனையும் அடியேனுக்கு சுவாமியையே கண்முன் நிறுத்தியது..

சத்தியம் ஒன்றுதான்.. அந்த சத்தியமான சத்திய சாயியை மகான்கள் ஞான மொழிகளாய் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு தாய்மொழியில் வெவ்வேறு விதங்களில் பேசி இருக்கின்றனர்."தான் செய்யும் செயல்களுக்கு எல்லாம் தனக்குத் தானே சுய உரிமையுடைய செயலாளி என்னும் கண்மூடித்தனமான அகம்பாவத்திற்கு ஆளாகாதபடி விழிப்புடன் இருக்க வேண்டும்"

"இவ்வுடல் ஓர் இசைக் கருவி போலானது. நீ கேட்கும் இசையின் தன்மை நீ அதை வாசிப்பதைப் பொறுத்தது . இந்த சர்வ லோகத்திலும் ஒரேயொரு தலைவனின் இசைதான் உள்ளது என்பதை நான் காண்கிறேன்"

அந்த தலைவன் சத்ய சாயி ஒருவரே..
எப்படி என்பதை அம்மாவே பிற்காலத்தில் சொன்னதை இறுதியில் பார்ப்போம்..

"குறிப்பிட்ட நேரம் வரும்வரை ஏதும் நிகழ்வதில்லை. எவரெவர் எவ்வளவில் பெற தகுதியுடையவரோ அவ்வளவே அவர் பெறுவார்" (ஈர விறகுகள் ஈரம் காய வேண்டாமா?)

"ஈக்கள்.. எட்டுக்கால் பூச்சிகள் மற்றும் இதர பூச்சிகள்... மனிதர்கள் யாவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவைகள் என்னவாக இருந்தன.. இருக்கின்றன.. இருக்கப் போகின்றன என்பதையும்.. எப்படி ஒன்றுக்கொன்று உறவாயிற்று என்பதையும் மனிதர்கள் யாருமே அறியார்"

"இந்த உலகத்தில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் மற்ற சமூகத்தினர்களும் ஒன்றே. ஒரே பரம்பொருளாகிய கடவுளை அவர்கள் யாவருமே அவர் கருணையை நாடி பூஜிக்கிறார்கள்.. கீர்த்தனா மற்றும் நமாஸ் இவ்விரண்டும் கருத்தில் ஒன்றே"

ஒரு குரு தனது ஜாதியில் பிறந்தவர் என்பதற்காக அவரின் உபதேசங்கள் எதையும் கடைப்பிடிக்காமல் வெறும் சம்பிரதாயங்களைச் செய்கிறோமென அவர் படத்திற்கு பூப்போட்டு அவரை அந்த ஜாதியினர் வழிபடுவதால் எந்த பயனும் இல்லை..
அதை அவரே ஏற்றுக் கொள்வாரில்லை..

உபதேசம் வேறு குரு வேறல்ல..

அனைத்து குருமார்களும் இறைவன் ஒருவனே என்றும் அதில் பல குருமார்கள் இறைவன் சத்ய சாயியே கிருஷ்ண கடவுள் என்றும் உணர்ந்திருக்கின்றனர் அதை  உரைத்தும் இருக்கின்றனர்.இருந்தும் சில சாயி பக்தர்களுக்கு சந்தேகம் விட்டபாடில்லை.

பக்தி ...ஆன்மிக சாதனையாகி ஆழமாய் தியானம் அனுபவப்பட அனுபவப்பட சுவாமியை பூரணமாய் உணரலாம்.

"ஒரு குழந்தையைப் போல் ஒருவர் உள்ளத்தில் ஆழ்ந்து பக்தியுடையவராய் இருத்தல் வேண்டும்"

"ஒருவன் பக்குவமான காலத்தில் தான் கடவுளின் தரிசனத்தைப் பெறுவான்"

"மறுபிறப்பென்பது உண்மையே. அதைப் பற்றி ஒரு சந்தேகமும் இல்லை.. நான் உன்னைக் காணும் போது உன் முற்பிறவிகளின் தொடர்ச்சியான படங்களை என்னால் காண முடியும்"

இவை (குறியீட்டுக்குள் உள்ளவை) எல்லாம் மா ஆனந்தமயி பல அரிய சந்தர்ப்பங்களில் சில சாதகர்களோடு பேசியவை.

மேலும் "முக்தி அடைந்த மகான்கள் எல்லோரும் வேறொரு  உலகத்தில் வசிக்கிறார்கள்.. அவர்களை எல்லாம் உங்களைக் காண்பது போலவே காண்கிறேன்" என்கிறார்..

"நீ நாளை காணப்போகும் புயலை விட இது சீற்றம் குறைவு தான்" என பாய்ஜியிடம் ஒரு மலை ஏற்ற பொழுதுகளில் அறிவிக்க.. அடுத்த நாள் கட்டுகளற்ற புயல்..

மகான்களுக்கு நடக்கபோவது முன் கூட்டியே தெரியும்...
அந்தத் திரிகால ஞானமே இறைவன் சத்ய சாயி தான்."எல்லா நதிகளுக்கும் ஒரே கடல்.. எல்லா மதங்களுக்கும் ஒரே பரம்" என்கிறார் ஸ்ரீ ஸ்ரீ மா .

ஒருமுறை ஒரு பக்தர் ஆர்வ மிகுதியில் நீங்கள் எந்த ஜாதி? .. உங்கள் பிறப்பிடம் எங்கே? எனக் கேட்டதற்கு..
ஸ்ரீ ஸ்ரீ மா உடன் சிரித்தபடியே..
"இந்த உலகப் பார்வையிலிருந்து இந்த உடல் கிழக்கு வங்கத்தைச் சார்ந்தது.. ஜாதியோ பிராமண வகுப்பைச் சார்ந்தது... ஆனால் நீ இந்த செயற்கையான வித்யாச எண்ணங்களை விட்டு எண்ணிப் பார்த்தால் இந்த உடல் ஒட்டு மொத்த மனித குலத்தின் ஒரு அங்கம் .. வசுதைவ குடும்பகம் என்பதை நீ உணர்வாய்"
என்றிருக்கிறார்.

எப்பேர்ப்பட்ட பரம ஞானம்.
எப்பேர்ப்பட்ட பர உணர்வு.

குடும்பத் தலைவரான அந்த வசுதேவனைப் பற்றி அதாவது சத்ய சாயி இறைவனைப் பற்றி பல முறை பல வெளி நாட்டு சாதகர்களும் ஸ்ரீ ஸ்ரீ மா விடம் கேட்க.. மௌனமாகவே இருந்திருக்கிறார்.

புத்தரிடம் இறைவனைப் பற்றிக் கேட்டதற்கு அவர் மௌனமாய் இருந்ததைப் போல்..

 அந்த பரிபூரண ஆழ் மௌனமே சத்ய சாயி .

இறைவன் சத்ய சாயியை‌ இதய வார்த்தைகள் கூட அவரின் முழுமையை உணர்த்துவதில்லை..

தியான மௌனமே பரம்பொருள் சத்ய சாயி என்பதன் அனுபவ விளக்கம்.

சுவாமியைப் பற்றிய அந்தக் கேள்வியே
ஸ்ரீ ஸ்ரீ மா விடம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சுற்றிவர.

தான் சமாதியாகப் போகும் காலக்கட்டத்தில் ...
ஒரே ஒருமுறை பேசி இருக்கிறார்..


"இந்த உடலானது இந்தக் கேள்விக்கான பதிலை ஒரே ஒருமுறை தான் பேசும்.. மீண்டும் கேட்கக் கூடாது... சத்ய சாயி பாபா ஒரு பரிபூரண இறைவன் ..அரிதிலும் அரிதாய் அவதாரமாய் இறங்கியவர்.. இப்படி ஒரு அவதாரம் மீண்டும் நிகழ அறுபது நூற்றாண்டுகள் ஆகலாம்" எனச் சொல்லிய உடன் சட்டென்று பரவெளியில் ஆனந்தமாய் முகம் வைத்தபடி வழக்கம் போல் தனது ஏக சுபாவத்தில் நிறைந்து மௌனமாகிறார்.

இதை RD Awle தனது மின் பக்கப் பதிவிலும் (ஆகஸ்ட் 2001) பதிவிட்டிருக்கிறார்.

ஏன் ஒருமுறை மட்டுமே கேட்க வேண்டும் என அம்மா சொல்ல வேண்டும்..?  ஏன் அந்த ரகசியக் கேள்வி குறித்து நீண்ட மௌனமாகவே இருக்க வேண்டும் ? என புத்தகம் (மாத்ரு தரிசனம்) புரட்டினோம்..

சுவாமியின் சங்கல்பத்தில் அம்மாவின் தெய்வீக இயல்பை உணர முடிந்தது..

சாதாரணமாக அம்மாவைச் சுற்றி பல பக்தர்கள் இருப்பார்கள். ஆனால் பொதுவாக அவர் எல்லோருக்குமே இவைகளைச் சொல்லுவதில்லை. ஏனெனில் அவர் சில சமயங்களில் தன் பேச்சைத் திடீரென நிறுத்திக் கொள்வார். பக்தர்களின் நலனுக்காக சொல்லும் விஷயங்களை வெகு சிலரே புரிந்து கொள்வார்கள். (மாத்ரு தரிசனம் -- பக்கம் 52 --- நூலாசிரியர் பாய்ஜி)

இறைவன் சத்ய சாயி சங்கல்பித்தால் ஒழிய மகான்கள் எதையும் மொழிவதில்லை..
சுவாமி அனுமதி வேண்டும் சுவாமியைப் பற்றி மொழியவும்.. சுவாமி எனும் பேரருவியில் வழியவும்...

மகான்கள் சுவாமியைப் பற்றி மொழிவதும் கொடுத்து வைத்த சிலருக்கே சில போதே கிடைத்திருக்கிறது.

தியான சாதகர்களுக்குக் கூட சுவாமி தியானத்தில் மொழியும் சிலவற்றை வெளியே தெரிவிக்க அனுமதி வழங்குவதில்லை...

ஸ்ரீ ஸ்ரீ மா மேலே சொல்வது போல் எல்லா நிகழ்விற்கும் குறிப்பிட்ட காலம் வர வேண்டும்..


இதை உணர்ந்து கொள்ள ஒரே வழி பக்தர்கள் ஆன்மிக சாதகர்களாய் மாறுவதே..

வேறு குறுக்கு வழி ஏதுமில்லை..
வேறு மாற்றுப் பாதை எதுவுமில்லை.

ஆத்ம சாதனை ஒன்றே சத்ய சாயி எனும் இறைப் பேரனுபவத்தை  உணர்த்தும்.

உள்முகப்படுதல் மட்டுமே பரவெளியை... பரம்பொருளான சத்ய சாயியை கண்முன் காட்டும்.

 வேறொன்றும் இதற்கு மாற்றான உபாயமில்லை.

சத்தியம் ஒரு புல்லாங்குழல் .. வெறும் மூங்கில் அல்ல .. கண்டவர்கள் கற்பனையில் வளைத்தால் வளைவதற்கு..

புல்லாங்குழல் திறந்திருப்பதைப் போல் திறந்திருக்க வேண்டும்..
தியானம் ஒன்றால் மட்டுமே உள்ளே திறக்க முடியும்...

மகான்கள் திறந்தவர்கள்.
திறந்தவர்கள் என்பதால் நிறைந்தவர்கள்.

மனிதர்கள் நாளைய பக்தர்கள்...
பக்தர்கள் நாளைய சாதகர்கள்...
சாதகர்களோ மகான்களைப் போல் நாளை  திறக்கப்போகிறவர்கள்.

 இவையே இவர்களின் இடையேயான பரிணாம வேறுபாடுகள்.

காந்திஜி, ஜவஹர்லால் நேரு , இந்திராகாந்தி என ஸ்ரீ ஸ்ரீ மா வை தரிசிக்காத தலைவர்களே இல்லை.


பகவான் ரமண மகரிஷி  அதிஷ்டானத்திற்கான மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டியதே ஸ்ரீஸ்ரீ மா அவர்கள் தான்.

 "ஹே..பரம்பொருளே, தாங்களே எல்லா வடிவங்களாகவும் தோற்றமளிக்கின்றீர்.
இந்த உலகமும் அதில் உருவாக்கப்பட்டுள்ள வஸ்துக்களும் , புருஷன், மனைவி , தாய் , தந்தை மற்றும் சிசுக்கள் , யாவும் நீயே ஆவாய்.
உலக பந்தத்தால் மனிதனின் அறிவு மறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மனம் தளர்வதற்கு காரணமேதும் இல்லை.
தூய உணர்வு , அசையா நம்பிக்கை, மிக ஆழ்ந்த நாட்டம் ஆகியவற்றின் உதவியால் முன்நோக்கிச் செல்ல...
உன் நிஜ சொரூபத்தை உணர முடியும்"

என்ற ஸ்ரீ ஸ்ரீ ஆனந்தமயி மா அவர்களின் பிரார்த்தனை வாக்கிற்கு இணங்க...
ஆனந்தப் பரவெளியில் கரைய...
சத்ய சாயி பரம் பொருளை தியானித்தபடி...

 பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக