தலைப்பு

வெள்ளி, 3 ஏப்ரல், 2020

வழிகாட்டி வழித்துணை வரும் பரமன்!


இறைவன் சத்யசாயியை மனமார உருகி உருகி நினைத்து அழைத்தால் உலகத்திற்கு ஒளித் துணையாக இருக்கும் சுவாமி நமக்கு வழித் துணையாகவும் வருவார். அப்படி அழைத்து துணையாக்கிக் கொண்டவர்களின் அனுபவங்களோ ஏராளம்.

வெங்கடரமண நிலையம் என்று அழைப்பதைவிடவும்,'சாயி ஷேத்ரா' என்று அழைப்பதற்கு அந்த வீட்டிற்கு சகல பொருத்தமும் இருக்கிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், அந்த மந்தவெளி வீட்டில் வாழ்ந்த சீதம்மா (பாபா பாட்டி) என்ற பழுத்த சாயிபக்தையும் அவருடைய சாயிவட்டத்துப் பணிகளும் மிகவும் பிராபல்யம். சத்ய சாயிபாபா அவருக்கு வேல் தந்து, வியாதிகளைப் போக்கும் சிக்கல்களைத் தீர்க்கும் அனுக்ரஹமும் தந்திருக்கிறார். மூன்று சாயி அவதாரங்களோடும் தொடர்பு கொண்டவராகச் சொல்லப்படும் சீதம்மா,'வொயிட் பீல்டில்' சுவாமியின் பேட்டியைப் பெற்ற அன்புத்தாய்! விக்ரஹங்கள், சின்னஞ் சிறு கட்டில்கள், தொட்டில்கள், வேல் போன்றன தந்து இன்னாருக்கு இன்ன தருக என்று இந்த அம்மைக்கு ஸ்வாமி உத்தரவிடுவதுண்டு. சத்ய சாயிபாபாவின் மேல் சீதம்மாவிற்கு இருந்த பாசம் அளவிடற்கரியது. சீதம்மா உயிரோடிருக்கும் வரை, வந்துபோகும் பக்தர் கூட்டத்தாலும் நித்ய வழிபாடுகளாலும் நடக்கும் பஜனைகளாலும் வீட்டில் தினந்தோறும் திருவிழாவாகவே இருந்தது. அம்மாவிற்குப் பிறகு அந்த வீட்டில் கணவரோடு வாழும் மகள் ராஜேஸ்வரியம்மாவிற்கும் சுவாமியின் அருள் பூரணமாக இருக்கிறது. சுவாமியின் அருளாணைப்படி இவரும் சுவாமி தந்த வேல் மூலம் சுவாமியிடம் பிரார்த்தித்து தன்னிடம் வரும் பக்தர்களின் வியாதிகளைப் போக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

சத்யசாயிபாபாவின் நிற்கும்.. நடக்கும்.. ஊஞ்சலாடும் அழகிய படங்களும் சீரடி பாபாவின் பெரிய சிலையும் சர்வ தெய்வங்களும் நிறைந்த எளியதோர் ஆசிரமம் போன்றது அந்த வீடு. ராஜேஸ்வரியம்மாவிற்கு வாரிசுகள் இல்லை. சாயி வழிபாடு பஜனைகளுக்குப் போவது புனிதத் தலங்களுக்குப் போய் வருவது என்று வாழும் இந்த பக்தைக்கு சுவாமியின் கருணைக் கடாட்சம் சகோதர வாஞ்சையோடு கிடைத்த வண்ணம் இருக்கிறது! உறவுகளின் ஆதரவு அதிகம் இல்லாததால் எல்லாவற்றிற்கும் 'சாயி ராமா' என்று சகஜமாக அழைத்து பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டுவிடும் எதார்த்தமான  பக்தை இவர்.
சமீபத்தில் பம்பாயில் ஒரு கல்யாணத்திற்கு இவர் மட்டும் கிளம்பிப் போயிருந்தார். கல்யாணம் ஆனதும் அக்கா வீட்டில் தங்கியிருந்தவர் 'ஜுகு'விலிருந்து 'நியூபாம்பே' போவதாக இருந்தார். இவருக்கு வழியும் தெரியாது மொழியும் தெரியாது என்பதால் இவருடைய அக்கா பெண் இவரை அழைத்துவரக் கார் அனுப்பியிருந்தார். ராஜேஸ்வரியம்மாள் சொல்கிறார். வண்டியில் ஏறி கிளம்பிவிட்டேன். வண்டிபாட்டுக்கு போய்க்கொண்டேயிருக்கிறது. ராத்திரியாகிவிட்டது.. டிரைவருக்கு ஹிந்தி தான் தெரியும். அவனிடம் ஏதும் கேட்கமுடியவில்லை. எனக்கோ  'திக்திக்' கென்றிருக்கிறது. சாயிராமா இதென்ன சோதனை எந்நப் பாதையில் கார் போகிறது என்று தெரியவில்லையே கேட்கலாம் என்றால் பாஷையும் புரியவில்லை நீ தான் என்னைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று  பக்கவாட்டில் ஒரு வெள்ளை வேன் 'சாய்ராம் சர்வீஸ்(Sairam service)என்று போட்டிருந்தது.. பக்கத்திலேயே அந்த வெள்ளைவேன் வரத் தொடங்கியது. உள்ளே யார் இருந்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. இந்த வண்டி திரும்பும் போதெல்லாம் அதுவும் கூடவே திரும்பியது! என் பக்கத்திலேயே என்னைத் தொடர்ந்து வந்தது. திடீரென்று இந்த வண்டியிலிருந்த டிரைவர் என் பக்கம் திரும்பி, '10மினிட்ஸ் மேடம்' என்றான்.ஓகோ வீடு வரப்போகிறது என்று புரிந்தது. சட்டென்று பக்கத்தில் பார்த்தேன் வெள்ளைவேன் மாயமாய் மறைந்துவிட்டிருந்தது! வேனும் தானுமாய் வந்தது சுவாமியே! சுவாமியின் அற்புத லீலையல்லவா அது என்று சொல்லும் இந்த பக்தைக்கு இதேபோன்ற அனுபவங்கள் பின்பும் ஏற்பட்டிருக்கின்றன என்கிறார்.

மேற்கு மாம்பலத்தில் ஒரு முறை நவராத்திரி பஜனைக்குப் போய் பஜன் முடிந்து வெற்றிலைப் பாக்கு வாங்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறினேன். அந்த டிரைவர் குடித்திருப்பது தெரிந்தது. வண்டியை என்னவோ அவன் ஒழுங்காக ஓட்டினாலும் ஒரே பயமாயிருந்தது எனக்கு.. மனதிற்குள், 'சாயிராமா பயமாயிருக்கிறது வீட்டில் நல்லபடியாகக் கொண்டு போய்ச் சேர்த்து விடு' என்று புலம்பியபடியிருந்தேன். 'சாய்ராம்'(sairam) என்று போட்டு ஒரு வெள்ளை வண்டி ஏ.சி.கார் ஆட்டோவின் பக்கத்தில் வரத் தொடங்கியது. ஆட்டோ போகுமிடமெல்லாம் காரும் தொடர்ந்து வந்தபடியிருந்தது. அடையாறு கேட் ஹோட்டல் வரை வந்தது. அப்புறம் காணவில்லை. மறுபடியும் மனதில் திகில் கிளம்பியது. 'என்னப்பா சாயிராமா இன்னும் வீடு ரொம்ப தொலைவிலிருக்கே இந்த ஆட்டோவுல போறது பயமாயிருக்கே' என்று மனதிற்குள் புலம்பத் தொடங்கினேன். திரும்பவும் பின்னாலிருந்து வெள்ளை நிற sairam கார் வரத் தொடங்கியது! மந்தவெளி 'டெர்மினஸ்' வரையில் வந்தது. எனக்கு நித்ய வழித்துணையாயிருக்கும் சத்ய சாயியின் கருணைமிகு லீலையல்லவா அது என்று சொல்லி நெகிழ்கிறார் இந்த பக்தை. பக்தர்களின் அடிமனதிலிருந்து அபயக்குரல் கேட்கும்போது ஆபத்பாந்தவனாய் சுவாமியின் வருகை நிகழ்ந்துவிடுகிறது.

இன்னொரு முறை பஜனைக்கு போய்விட்டு இரவு எட்டரை மணிக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது தெருவில் யாருமில்லை.. நிசப்தமாயிருந்தது. இவருக்கு ஒரே அச்சம் கிலி.. சொற்ப நகைநட்டு தான் போட்டிருந்தேன் என்றாலும் தனியே நடக்க அப்படியொரு பயமாக இருந்தது.'சாயிராமா பயமாக இருக்கிறதப்பா சாயிராமா' என்று கூப்பிட்டபடி நடந்தேன். 'சடாரெ'ன்று எனக்கு முன்னே இரண்டு நிழல் உருவங்கள். சீரடிசாய்! சத்யசாய்! தோன்றி நடக்கத் தொடங்கின! அதுமட்டுமல்லாமல் பேசிக்கொண்டே நிறையப் பேர் வருவது போன்ற ஜன சந்தடியும் கேட்கத் தொடங்கியது! நான் கேட்டைத் திறந்து வீட்டிற்குள் போகும்போது பார்த்தால்... கவனித்தால் நிழலும் இல்லை சத்தமும் இல்லை. நிழலாய் வந்ததும் பேசியபடி வந்ததும் சாயி செய்த மாயமே அல்லவா என்கிறார் இந்த பக்தை.

பொங்கல் சமயத்தில் கணுவின் போது சகோதர நலனுக்காகப் பிரார்த்தித்துக் காக்கைக்குச் சோறு வைப்பதுண்டு. இவர் ஏதோ ஒரு சலிப்பில் ஆமாம் யார் இருக்கிறார்கள் அண்ணன் தம்பி கணுவிற்கு ஐந்து ரூபாயாவது அனுப்ப என்று சொல்லிக் கொண்டு பேசாமலிருந்துவிட்டார். அம்மா இருந்த சமயம் அது 'காக்கைக்கு சோறு வைத்துவிட்டு எல்லோரையும் சகோதரராக பாவித்து பிரார்த்தனை செய்து பிறகு ராஜேஸ்வரி வந்ததும், ஆரத்தி எடு' என்று சுவாமி அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அப்படியே செய்தோம். அடுத்த வருடம் பொங்கல் சமயம் ஒரு மணியார்டர் 30 ரூபாய்க்கு என் பெயருக்கு வந்தது. எல்லாம் சுவாமி வேலை! சகோதர வாஞ்சையோடு சாயி புரிந்த லீலை என்று கள்ளங்கபடில்லாமல் சிரிக்கிறார் இந்த பக்தை. 'தர்மஷேத்ரே  அவதரிஞ்சன சாயி.. கலியுக அவதாரமு ஸ்ரீ சத்யசாயி' என்று பாடப்படும் சுவாமியின் அவதாரமகிமையும் அற்புத லீலைகளும் நிறைந்திருக்கின்றன இந்த சாயிஷேத்திரத்தில்...!!!

ஆதாரம்: சாயி பிருந்தாவனம்(சாயி பக்தர்களின் அனுபவங்கள்) - கவிஞர். பொன்மணி
வெளியீடு: ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக