தலைப்பு

திங்கள், 6 ஏப்ரல், 2020

டிரம்ஸ் சிவமணி அவர்களின் சாயி அனுபவங்கள்!


நாத மய பிரபஞ்சமிது. அந்த லயத்தில் தான் பூமி சுற்றுகிறது. ஒரே லயத்தில் தான் சுவாசம் இயங்குகிறது. அதன் லயம் கெடும் போதே வியாதிகள் மனிதர்க்கும்.. இயற்கை சீற்றங்கள் பூமிக்கும்...

டிரம்ஸ் ஆனந்தன் அவர்கள் திரைஇசைத் திலகம் கே.வி மகாதேவன் அவர்களின் வாத்திய குழுவில் டிரம்ஸ் வாசித்தவர்.

அவரின் மகனே சிவமணி. தாளத்திற்காகவே பிறந்த தவமணி.
சிறுவயதிலிருந்தே கச்சேரி அரங்கேற்றம், திரைப்படப் பாடல்கள், இசை அவியல் (ஃபியூஷன் ) என பரபரப்பானவர்.

இறைவன் சத்ய சாயி அவரை எவ்வாறு ஆட்கொண்டார் என்பது மிகுந்த சுவாரஸ்யமானது.

ஆன்மிக தாகம் மிகுந்த டிரம்ஸ் சிவமணி வடபழனி மகான் முதல் பல மகான்களை தரிசனம் செய்து வந்தவர்.

அவரை இறைவன் சத்ய சாயி தடுத்தாட்கொண்டது மிக மிக கருணை பூர்வமானது.

ஒரு முறை லண்டனில் தனியாக தன் வீட்டிலிருந்த சிவமணி..  வயதான பக்கத்து வீட்டுப் பெண்மணி அவசரமாக எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்...

எங்கே என சிவமணி விசாரிக்கிறார்.

அந்த "எங்கே" என்று கேட்ட கேள்வி இறைவன் சத்ய சாயி உள்ளே இயக்கியது..

தனது தெய்வீகத் திரைக்கதையை மிக மிக ஆச்சர்யகரமாக... அற்புதமாக நாம் உணரும் வண்ணம் எழுதுபவர் இறைவன் சத்ய சாயி.

அந்த கனைட்டிவிட்டி மிக மிக நேர்த்தியாக இருக்கும்.

மனிதன் நடத்தும்‌ வாழ்க்கை எல்லாம் இறைவன் சத்ய சாயி எழுதும் திரைக்கதையே.

எங்கே என கேட்டவர்க்கு வாழ்க்கையின் பாதை திரும்பியது.

சாய் பஜன் என பதில் சொல்லி இருக்கிறார் அந்தப் பெண்மணி...

சும்மா இருப்பதற்கு அங்கே செல்வோமே எனத் தோன்ற...

சுவாமி தோன்ற வைத்திருக்கிறார்.

அங்கே சென்று பஜனில் தப்லா வாசிக்கிறார்.

வருகையில் இந்தியா செல்லும் போது ஹாஸ்பிட்டல் சேவைக்காக இந்த 200 டாலரை சுவாமியிடம் சேர்ப்பித்துவிடுங்கள் என அந்தப் பெண்மணி சொல்லிவிட்டு நகர்கிறார்.

இவர் இந்தியா சுற்றி தாள வலம் வருபவர் என்பதால் அந்த டாலர் இவரிடம் வந்ததோ என வாசிப்பவர்கள் கருதலாம்.

இது சுவாமி இணக்கத்திற்கான இன்னொரு திருப்புமுனை.

இந்தியா வருகிறார் டிரம்ஸ் சிவமணி. இந்த டாலரை எப்படிச் சேர்ப்பது என யோசித்துக் கொண்டிருக்க...

அதே யோசிக்கும் நொடி..

பாடகி பி.சுசிலா சாய்ராம் இடமிருந்து தொலைபேசி அழைப்பு.

அதிர்ந்து போகிறார்.
பரவசமாகிறார்.

சுவாமி எழுதிடும் திரைக்கதையில் மூன்றாவது திருப்பம்..

வொயிட் ஃபீல்ட் டில் தன் இசைக் கச்சேரிக்கு சிவமணியை அழைக்கிறார். மணி ஒப்புக் கொள்கிறார்.

கச்சேரி. சுவாமி தரிசனம்.
சுவாமி சிருஷ்டிப் பொருள்.
சுவாமியின் கையால் சுவாமியின் திருப்ப(ட)ம்.
சுவாமி சம்பாஷணை எல்லா மகிமையும்
அனுபவிக்கிறார்.

சுவாமியின் பாதங்களில் கரைகிறார்.
இறைவன் சத்திய சாயி அருளில் நனைகிறார்.

இன்னொரு பொற் பொழுது...

உலக சங்கீத மகாநாடு காலம் ..
சுவாமியை பெங்களூரில் தன் கச்சேரி முடிந்து வொயிட் ஃபீல்டுக்கு தரிசிக்க விரைகிறார்.

சுவாமி புட்டபர்த்தியில் எனக் கேள்விப்பட்டு.. மாநாட்டையும் கேள்விப்பட்டு தனக்கு
முறையான வாசிக்க அழைப்பு இல்லை என்பதால் சுவாமியை மட்டும் தரிசித்து திரும்பி சென்றுவிடுவோம் என உத்தேசிக்கிறார்.

முதன்முறையாக சிவமணி இறைவன் அவதரித்த தலத்திற்கு வருகிறார்.

புட்டபர்த்தியில் காற்றெல்லாம் விபூதி மணம்.
அதிர்வலைகள் எல்லாம் அருள்.
பக்தர்களின் காலடிச் சப்தத்தில் கூட நாத லயம்.

பிரம்மித்தபடி காரில் பயணித்தபடி நெருங்குகிறார்.

இவரைப் பார்த்து விடுகின்றனர் சுவாமி மாணவர்கள். ஏற்கனவே வொயிட் ஃபீல்டில் கச்சேரி நிகழ்த்தியதால் இவரைக் கண்டுபிடிக்கின்றனர்.

அவரையும் மாநாட்டிற்கு வரவேற்கின்றனர்.
தயங்குகிறார்.
கல்லூரி முதல்வர் அழைப்பார் எனச் சொல்லி தொலைபேசி எண் வாங்குகின்றனர்.

இன்னொரு திருப்புமுனை.

முதல்வர் அழைக்கிறார்.

சுவாமி உங்களை பதினைந்து நிமிடம் வாசிக்கச் சொல்லி இருக்கிறார் என்பதை சிவமணி கேட்டவுடன்...

பிரம்மிப்பு..
அந்த டிரம்ஸ் ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கிறது.

கும்பிடப் போன தெய்வம் கலை சேவை ஆற்றச் சொல்கிறதே என...

கடவுள் சத்ய சாயி கருணை அளப்பரியது.

யூகிக்க முடியாதது.

இறைவன் சத்ய சாயி எழுதும் மனிதனின் திரைக்கதை என்பது மிக மிக சுவாரஸ்யம் நிறைந்தது.

டிவிஸ்ட் நிரம்பியது.

அந்த உலக இசை மகாநாட்டில் இந்தியா சார்பில் யாருமில்லை.

இவர் வாசிக்கிறார்.


சுவாமியின் சங்கல்பப்படியே இப்பூமியில் எல்லாம் நிகழ்கிறது.

சிவமணி வாசிக்கிறார்.
சுவாமி ரசிக்கிறார்.

பரிசுகளும் பிரியங்களும் பரிமாறப்படுகின்றன...

அந்த சமயத்தில்.. சுவாமி வெளிநாட்டு அன்பர்களிடம் உங்கள் மத சிம்பல்  என்ன எனக் கேட்டிருக்கிறார்..

அதற்கு கிராஸ் என்கிறார்கள்.

கிராஸ் என்றால் என்ன ? என்று சுவாமி கேட்கிறார்.

அவர்களிடம் தெளிவான பதிலில்லை.

ஜீசஸை அறைந்த கருவி என்கிறார்கள்

இல்லை என்கிறார் சுவாமி.

சுவாமியே அவர்களிடம்...

"ஐ என்றால் என்ன...
ஈகோ (அகந்தை)
அதை அடித்தால் .. அதாவது அழித்தால்..
அது தான் கிராஸ் என்கிறார்"

அருகிலிருந்து பார்த்த சிவமணி முதல் அனைவருக்குமே புல்லரித்தது.

இன்றும் சிவமணி அவர்கள் சாய்ராம் என்றே தனது தினசரி வழிபாட்டினை ஆரம்பிக்கிறார்.. சாய்ராம் என்றே அதை பூர்த்தியும் செய்கிறார்.


டிரம்ஸ் வாசிக்கும் போதெல்லாம் சாய்ராம் என்றே மனதில் சொல்லி வேண்டிக் கொண்டே தனது விரல்களால் டிரம்ஸ் மீது விளையாடல் புரிகிறார்.

சுவாமி எந்தவகையில் எவருக்கு எப்போது எந்தவிதம் அருள் புரிவார்... தடுத்தாட்கொள்வார் என யாராலும் யூகிக்க முடியாது.

சுவாமி குறித்த நேரத்தில் குறிப்பிட்ட விதத்தில் நம் வாழ்க்கையை அவர் சங்கல்பப்படி மட்டுமே திருப்பிப் போடுவார்.

இறைவன் சத்ய சாயி ஒரே ஒருவரால் மட்டுமே இது சாத்தியம்...

மற்றவர்கள் அதோ என வழி காட்டலாம்..
இறைவன் சத்ய சாயி ஒருவர் மட்டுமே நம்மைத் தூக்கிச் சுமந்தபடி அந்த வழியில் பயணிப்பார்.

சிவமணி மட்டுமல்ல.. உலகக் கலைஞர்கள் அனைவரின் கலை ஆற்றலாய் உள்ளிருந்து இயங்குவது இறைவன் சத்ய சாயி ஒருவரே.

   பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக