தலைப்பு

சனி, 11 ஏப்ரல், 2020

பகவான் சத்ய சாயி பாபா கர்மாவை மாற்றி அமைப்பாரா?


கேள்வி: பகவான் சத்ய சாயி பாபா கர்மாவை மாற்றுவார் என்று சொல்கிறார்கள் அது உண்மையா?  என்னுடைய கர்மாவையும் மாற்றி பிரச்சனையை தீர்ப்பாரா?

பதில்: அருமையான கேள்வி. ஆம் என ஒரே வார்த்தையில் பதலளித்தாலும் ... முதலில் கர்மா என்பது யாதென புரிந்து கொள்வது முக்கியம்...

கர்மா என்பது நாம் செய்கின்ற செயல் மட்டும் அல்ல. 
இந்த கர்மாவானது ஜென்ம ஜென்மங்களுக்கு தொடர்ந்து கொண்டிருப்பது.. 

அந்த கர்மா உலக விஷயங்களில் என்றால் விஷய கர்மா.
ஆன்மிக விஷயங்களில் என்றால் ச்ரேயோ கர்மா.

அந்த செயல் சொல்லிலிருந்து உருவாகிறது.
அந்த சொல் எண்ணத்திலிருந்து உருவாகிறது.

எண்ணமே மூலம்.

எண்ணமே உங்களுடைய கர்மா என்கிறார் இறைவன் சத்ய சாயி.

அதனாலேயே கர்மா தொற்றிக் கொள்கிறது.

பொதுவாக கர்மா.. தலை எழுத்து .. வினை.. இவை எல்லாம் வலி.. வேதனை.. துக்கம்.. வருத்தம் என தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

ஒருவன் கஷ்டத்தில் இருக்கிறானா 
கர்மா என்கிறார்கள்.
அவனே சந்தோஷத்தில் இருந்தால் அது அவனின் கெட்டிக்காரத்தனம்.. கொடுத்து வைத்தவன் என்கிறார்கள்.

இது தவறு.

ஒருவன் கஷ்டத்தில் இருந்தாலும்.. சந்தோஷத்தில் இருந்தாலும் இரண்டுமே கர்மா தான்.

ஒருவரிடம் வெறுப்பாகப் பேசுகிற போது தான் கர்மா தொற்றிக் கொள்கிறதா..

இல்லவே இல்லை..

நீங்கள் அந்த வெறுப்பை மனதிற்குள் சுமக்கும் போதே ... அந்த நொடியே கர்மா தொற்றிக் கொள்கிறது.

இது கர்ம பூமியே. ஒரு ஜீவ ராசியால் கூட இந்தக் கர்ம சுழற்சி முறையில் இருந்து தப்பிக்கவே முடியாது.

நல்லதோ .. கெட்டதோ.. மகிழ்ச்சியோ துக்கமோ அனுபவித்தே ஆக வேண்டும்.

அப்போது எல்லாம் கர்மா தான் நிகழ்த்துகிறதா? அப்போது இறைவனாகிய சத்ய சாயி எதற்கு? என வாசிப்பவர்கள் நினைக்கலாம்.

ஒவ்வொரு ஜீவராசிகளின் பிறப்பே கர்மாவை சார்ந்ததே ...


ஜீவராசிகள் வெறும் பொம்மைகள்.
கர்மாவே இயக்குகிறது.
அதிலிருந்து யாரும் தப்பிக்கவே இயலாது. சாத்தியமே இல்லை..

ஒரே ஒரு சாத்தியம் இருக்கிறது. அதை முடிவில் பார்ப்போம்.

நாம் இந்த ஒரு பிறவி மட்டுமே என்று நினைத்துக் கொண்டால் அது முற்றிலும் தவறு. 

நம்  கர்மாவின் அடிப்படையிலேயே பிறவி.. பெற்றோர்.. குடும்பச் சூழல்.. சந்திக்கும் வாழ்க்கை.. சம்பவங்கள் யாவும் அமைகின்றன...

இந்த உடலானது எந்த கர்மாவினால் மீண்டும் இந்த மண்ணில் பிறந்ததோ அதன் இலக்கை அடைந்தே தீரும்..

மனமும் மனம் சார்ந்த அறிவும் கர்மாவின் வாகனம்.

அந்த வாகனத்தில் தான்  ஜீவராசிகள் பயணித்துக் கொண்டிருக்கின்றன...

தாமே எல்லாம் செய்கிறோம் என மனிதன் நினைக்கிறான். இதில் வேடிக்கை என்னவென்றால் அதுவும் ஒரு கர்மாவாகிப் போகிறது அவனுக்கு.

அவன் சேகரித்து வைத்த கர்மாவே எல்லாம் செய்கிறது. 
ஆட்டிப் படைக்கிறது...

கர்மா என்பதும் வங்கிக் கணக்கைப் போல் தான்..
இருக்கிற வரை சுகமோ .. துக்கமோ அனுபவிக்க வேண்டியது தான்.

சரி இறைவன் சத்ய சாயி வெறும் பார்வையாளர் தானா? என வாசிப்பவர்கள் யோசிக்கலாம்.

செய்த புண்ணிய கர்மாவே கடவுள் சத்ய சாயிடம் நம்மை கொண்டு வந்து சேர்க்கிறது.

பல பிறவிகளில் ஏதோ ஒரு பிறவியில் (விலங்குப் பிறவியோ / மனிதப் பிறவியோ)  செய்த புண்ணியத்தால் கூட இறைவன் சத்ய சாயியின் பேரன்பிற்கு பாத்திரமாகிவிடும் மனிதர்களும் இருக்கின்றனர்... பிற ஜீவராசியும் இருக்கிறது.

கர்மாவுக்கான விடுதலை காலமும் உண்டு. 


உலக நீதிமன்றம் வெறும் செயலை மட்டுமே பார்க்கிறது.
கடவுள் சத்ய சாயியின் நீதிமன்றமோ அதன் மூலமான எண்ணத்தைக் கூட விட்டு வைக்காமல் பார்க்கிறது.

நீங்கள் உள்ளே தீமைகள் நினைத்து வெளியே நன்மைகள் செய்யலாம்.. போலீசோ .. நீதி மன்றமோ உங்களை எதுவும் செய்யப் போவதில்லை...

ஆனால் அந்த தீய சிந்தனைக்கான  தகுந்த தண்டனையை அனுபவிக்காமல் முற்றிலும் பிறவிகள் முடிய ஒரு வாய்ப்பும் இல்லை.

நாம் கடந்த ஜென்மத்தில் செய்த ஏதோ ஒரு புண்ணியத்தால் இறைவன் சத்ய சாயிடம் வந்துவிட்டோம்.

பார் நான் எவ்வளவு பக்தியாக இருக்கிறேன் என நினைத்தாலும் அது அகங்கார கர்மாவே.
பார் நான் அந்தப் பொறுப்பில் இருக்கிறேன்.. இந்தப் பொறுப்பில் இருக்கிறேன்.. எவ்வளவு சேவை செய்கிறேன் தெரியுமா.. எத்தனை எழுதுகிறேன்.. சுவாமியைப் பற்றிய நான் பேசாத சமிதிகளே இல்லை...
நான் பாடினால் பஜனையில் அனைவருக்கும் கண்ணீரே வரும்..
என் வீட்டில் எத்தனை வருடமாக விபூதி வருகிறது தெரியுமா...அவன் எல்லாம் ஒரு பக்தனா... என் பக்திக்கு ஈடாகுமா...
என இப்படி நினைக்க.. நினைக்க.. பேசப் பேச...

உங்களின் புண்ணிய கர்மாக்கள் எல்லாம் கரைந்து அகங்கார அறியாமையால் பாவ கர்மாவாக ஏறிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்தே போகாதீர்கள்.

எப்போதும் அடுத்தவர் பற்றி குறை சொல்வது.. ஒருவரை இன்னொருவரோடு ஒப்புமைப் படுத்தி தாழ்த்திப் பேசுவது.. ஒருவரின் நல்ல திறம்பட செய்கையைக் கண்டு பொறாமைப் படுவது..

இந்த எல்லா தீய கர்மாவுமே நாம் ஜென்ம ஜென்மமாய் கொண்டு வந்த புண்ணிய‌ கர்மாவை கழித்து  பாவ கர்மாவை வாழ்க்கையில் ஏற்ற வைத்துவிடுகிறது... 

கர்மாவை அழிப்பதற்கே ஒவ்வொரு பிறவியும் பூமியில் பிறக்கிறது.
மேலும் மேலும் புதிய புதிய கர்மாக்களை சேர்த்துக் கொண்டு பிறவிகளை நீட்டிப்பது புத்திசாலித்தனமில்லை..
எல்லா எண்ணப் பதிவுகளும் இறைவன் சத்ய சாயிடம் வந்து கொண்டே இருக்கிறது.

எந்த ஜீவராசியும் அவரிடமிருந்து தப்பிக்கவே முடியாது.

கர்மாவை இறைவன் சத்ய சாயியால் மாற்ற முடியாதா??

நல்ல கேள்வி. மாற்ற முடியும். பலருக்கு மாற்றியும் இருக்கிறார். அது நம் புண்ணியங்களைப் பொறுத்தே...
நம் தன்னலமற்ற தன்மையைப் பொறுத்தே அமைகிறது.

இறைவன் சத்ய சாயி சங்கல்பிக்கும் போதும்.. செயலாற்றும் போதும் அவரவர்களின் பூர்வ பிறவிகளின் புண்ணியங்களை  அனுசரித்தே செய்கிறார்.

இயற்கையின் விதியில் இறைவன் சத்ய சாயி தலையிடுவதில்லை.
காரணம் அந்த விதியே அவர்தான்.

ஐந்தொழில்களைப் புரியும் இறைவன் அவர் ஒருவரே.

பெரும்பாலும் நாம் நமக்குக் கிடைத்த புண்ணிய கர்மாவை உணர்வதில்லை.. ஆன்ம சாதனை புரியாமல் காலத்தை வீணடித்து விஷய கர்மாவை (உலகியல் ஆசைகள் வழி செயல்கள்) வளர்த்துக் கொள்கிறோம்.

இவை எல்லாம் மீண்டும் மீண்டும் பிறக்கவே வழிவகை செய்கிறது.

பாசம்.. சுயநலம்.. காமம்.. கோபம்.. பொறாமை.. கருமித்தனம் இவை எல்லாம் பிறவிகளை வளர்த்துவிடும் கொடிய கிருமித் தொற்றுகள்.

கர்மா அது புண்ணியமோ .. பாவமோ.. இருக்கும் வரை பிறவிகள் இருக்கும்.

பிறவாமை வேண்டுமெனில் புண்ணியங்களைக் கூட தியாகம் செய்திட வேண்டும்.


முக்கியமாக "நான்" என்ற எண்ணம்.. இதுவே கர்மாவின் முதல் தொற்று.

வீர்யம் மிகுந்த சில கர்மாக்கள் அனுபவித்தே தீர்க்கப்பட வேண்டும்.
சுவாமி அதை அனுமதிக்கிறார்.

புண்ணிய கர்மா செய்யச் செய்ய.. பழைய பாவ கர்மாவை அலுங்காமல்.. அலட்டாமல் அனுபவித்து கடந்துவிடலாம்.

எந்த கர்மாவையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை தியானம் போன்ற ஆன்ம சாதனை செய்கையில் வந்துவிடுகிறது.

இறைவன் சத்ய சாயியிடம் முழுமையாக அவரை இறைவன் எனும் சத்தியம் உணர்ந்து சரணாகதி அடையும் போது..
உலக எண்ணம் கடக்கப் படுகிறது. கர்மா தாண்டப்படுகிறது.

வேண்டுதல்கள் இறைவன் சத்ய சாயியோடு கலந்து போவதற்கு இல்லாமல் வெறும் குறைகளின் புலம்பல்களாகவே இருந்தால் பிறவிகள் தொடர வேண்டி வருகிறது. 


பிறவிகள் தொடரும் எனும் போது மீண்டும் மனிதப் பிறவி என நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
நாம் செய்யும் கர்மாவுக்கு தகுந்தபடி பன்றியாகவோ... பூனையாகக் கூட பிறக்க நேரிடும் .. சர்வ ஜாக்கிரதையாக நாம் இருந்தே ஆக வேண்டும்.

புண்ணியாத்மாக்கள் இறைவன் சத்ய சாயியிடம் சரணடைகின்றன.. சரணடைந்தோரின் கர்மாவை மட்டும் இறைவன் சத்ய சாயி மாற்றுகிறார்.

சரணாகதி என்பது உங்களின் "நான்" எனும் எண்ணத்தை முற்றிலும் விடுவது.
அந்த மாயையை விட்டு வெளியே வருவது.

சரணடையாதோரின் கர்மா தீரும் வரை.. நான் எனும் ஆணவம் கரையும் வரை இறைவன் சத்ய சாயி காத்திருக்கிறார்.

அதே சமயம் பல அனுபவங்களினால் கரைவதற்கும்  அருள்கிறார்.

விழிப்போடிருக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் (ஒவ்வொரு ஜென்மத்தில்) ஆணவம் அழிகின்றன...

இறைவன் சத்ய சாயியிடம் பரிபூரணமாக சரணாகதி அடைந்துவிட்டால் எந்த கர்மாவும் நம்மை எதுவும் செய்யாது.

"நான் " என்ற எண்ணம் இல்லாத போது எந்த கர்மாவும் தோன்றாது.

பரிபூரண சரணாகதி செய்ய உள்முகப்படல் உதவும். ஆன்ம சாதனை பயனளிக்கும்...


யாரையும் வெறுக்காதீர்கள்.
யாரையும் பழிக்காதீர்கள்.
யாரையும் தவறாகக் கூட நினைக்காதீர்கள்.
தற்பெருமை கொள்ளாதீர்கள்.
சுயநலமாய் இருக்காதீர்கள்.
கோபப்படாதீர்கள்.
யாரையும் உதாசீனப்படுத்தாதீர்கள்.
யாரோடும் வாதம் புரியாதீர்கள்.
யாருக்கும் பயப்படாதீர்கள்.
எதற்கும் குறைபடாதீர்கள்.

அப்படி இல்லை என்றால் கர்மா உங்களை வைத்து வைத்து செய்யும்.

அப்போது இறைவன் சத்ய சாயி சாட்சியாக மட்டுமே உங்களைப் பார்ப்பார்..

ஆணவம் கரையும் வரை கடவுள் சத்ய சாயியின் பரிபூரண அருள் நம்மீது விழாது.

காரணம்.. 
ஆணவம் ஆண்டவனிடம் முதுகு காட்டுகிறது.
பக்தியோ முகத்தைக் காட்டுகிறது.
ஆனால் சரணாகதியோ இறைவன் சத்ய சாயியின் பாதத்தைத் தவிர வேறு எதையும் பார்ப்பதில்லை.

"நான் செய்கிறேன்" "என்னால் தான் நடந்தது" என மனிதன் நினைக்கிற வரையில் பாவ கர்மாவும் .. அதன் பிரதிபலன்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சரணாகதியே கர்ம விடுதலை.

-ஒரு சராசரி சுவாமி பக்தன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக