தலைப்பு

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | பகவான் பரமஹம்ஸ ஸ்ரீ யோகானந்தர்


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

பகவான் பரமஹம்ஸ ஸ்ரீ யோகானந்தர்(1893-1952):

கிரியா என்பது செயல் வழி இறைநிலை எய்தல். அந்த செயலற்ற செயல் குருமுகமாக புருவ மத்தியில் மெய்யுணர்வை கவனித்து இறை நிலை அடைவது.

இந்த கிரியா எனும் யோகமுறை மகானே பரமஹம்ச யோகானந்தர்.

இந்த கிரியா யோகத்தின் வேர் மகாவதார் பாபாஜி அவர்கள். அவரிலிருந்து கிளை பரப்பியதே இந்த கிரியா யோக சங்கம் (யோகோதா).


பரமஹம்ச யோகானந்தரின் முதன்மை சீடர்களில் ஒருவர் இறைவன் சத்ய சாயியை எவ்வாறு அனுபவித்தார் என்பதை அறியும் முன்..வேரிலிருந்து ஒரு சிறு ஆன்ம அலசல் புரிவோம்... 

🌸 மகாவதார் பாபாஜி:


30 நவம்பர் 203 கிமு'வில் தோன்றிய மகான் மகாவதார் பாபாஜி.

தமிழ்நாடு கொடுத்து வைத்திருக்கிறது இவரைச் சுமந்து... பரங்கிப்பேட்டையில் பிறந்த இந்த மகானுக்கு ஒரு கோவிலும் அங்கே இயங்கி வருகிறது. அவரின் இயற்பெயர் நாகராஜ்.

ஒருமுறை நகைக்காக குழந்தை நாகராஜை ஒரு திருடன் கடத்தி கிடத்திய ஊர் பழனி.

இறைவன் சத்ய சாயியின் தெய்வீகத் திரைக்கதையே இப்படித் தான்.

உங்களின் வருத்தங்களே உங்களுக்கான திருத்தங்கள்..
உங்களின் விருப்பத்தினால் வரும் வலிகளே உங்களுக்கான ஆன்மிகத் திருப்பங்கள்.

கொடுத்து வைத்த திருடன் மகானாகப் போகும் ஒரு குழந்தையின் பாத ஸ்பரிசம் தீண்டியது.
அவன் கடத்திச் சென்றதால் மட்டுமே அந்த நல்ல காரியம் நிகழ்ந்தது...

குழந்தையை அங்கு வந்த ஒரு வடநாட்டு குடும்பம் எடுத்துச் சென்று வளர்க்கிறது.

பாசத்தைக் கொட்டுகிறது. ஆனால் ஆன்ம விதை நாகராஜுக்குள் வளர இதயத்தை முட்டுகிறது...

வட பிரதேச இயற்கை இறை நிலையை இதயத்தில் வாங்கியபடி மெய் மறக்கிறான் பாலகனான நாகராஜ்..

குடும்ப வறுமை என்பதால் வேறொரு வீட்டில் வேலைக்குப் போகிறான்..
நோய்வாய்ப்படுகிறான்... பிறருக்கு தொந்தரவு என .. அவன் வேலை செய்து வசித்த இடத்தின் அருகேயான மலை உச்சியில் இப்படியே உயிர் போகட்டும் எனப் படுத்துவிடுகிறான்..

இறைவன் சத்ய சாயியின் இரண்டாம் திரைக்கதை திருப்பம்..

நோயே தாயாய்த் தாலாட்டி நாகராஜை அந்த மலை உச்சியில் அழைத்துப் போகிறது..


எப்போது ஒருவரது வாழ்க்கையில் எல்லாம் பறிக்கப்படுகிறதோ அப்போது இறைவனே தன்னைத் தருவார்...

எப்போது அகங்காரம் சுக்கல் நூறாகப் போகிறதோ அப்போதே இறைவன் சத்ய சாயி ஆலிங்கனம் புரிந்து உள்முகத் தொடர்பில் வருவார்...

நாகராஜ் தன் உயிரின் கடைசி நொடியை எண்ணிக் கொண்டிருக்கிறான்...
இறக்கப் போகிறோம் என தெரிந்துவிட்டது... அந்த நொடி..
இருள் கவ்விக் கொண்டிருந்தது அந்த மலையை...

இன்னும் சிறிது நேரத்தில் தன் உயிரும் நெருங்கிக் கொண்டிருக்கிற மரண இருளில் மறைந்துவிடும் என நினைத்துக் கொள்கிறான்..

இருண்ட ஆகாயம்.. ஆறுதலுக்கு ஒரே ஒரு நிலா. கடைசி உறவு அந்த நிலாவே நாகராஜுக்கு.

தாய் இல்லை.. தந்தை இல்லை..  வளர்த்தவர் இல்லை.. எஜமானன் இல்லை...
நாம் பரிதாபப்படுவோம் ..
ஆனால் அது தான் உண்மையில் பெரிய ஆசிர்வாதம்...

நாம் வாழ்க்கையில் எதையாவது இழக்கிறோம் என்றால் உண்மையில் எதையும் இழக்கவில்லை. அகங்காரத்தையே இழக்கிறோம் என்று அர்த்தம்.

அந்த நிலாவையே பார்த்துக் கொண்டிருக்கிறான் நாகராஜ்...

அப்போதே அந்த அதிசயம் நடக்கிறது...

இறைவன் சத்ய சாயி சங்கல்பம் குறித்த நேரத்தில் குறிப்பிட்டவருக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

அந்த நிலா இரண்டாகிறது..


நாகராஜ்க்கு 14 முதல் 16 வயதே இருக்கும். சிறிய பாலகன்..

அந்த இரண்டாம் நிலா நாகராஜை நெருங்கி... கீழ் இறங்கி வருகிறது...

அதே ஒளிப்பந்து நாகராஜை நெருங்குகிறது...

ஒளி வெள்ளம்... பால் கனலின் விஸ்வரூப தரிசனம்...

அவன் புருவ மத்தியைத் தொடுகிறது..

பாபாஜி தனது குருவான அஸ்வத்தாமா அவர்களிடமிருந்து கிரியா தீட்சை பெற்றபோது

அந்த நொடி... அதே நொடி ... அவனுக்கு முற்பிறவி காட்சிகள் முதல் எதற்கு பூமியில் வந்திருக்கிறோம் வரை அனைத்தும் விளங்கிக் கொண்டிருக்கிறது...

கிரியா யோக தீட்சை அளிக்கப்படுகிறது..

பாலகன் நாகராஜுக்கு அந்த அரிய அனுபவமும் , ஆன்மிக சம்பவமும் இது என்னவிதம் என சந்தேகம் வரவில்லை..

செத்துக் கொண்டிருப்பவனால் சந்தேகப்பட முடியாது...
அகந்தை இருக்கும் வரை தான் சந்தேகம் இருக்கும்...

ஆகவே தான் நீதிமன்றத்தில் கூட சாவதற்கு முன்பான மனிதரின் வாக்குமூலம் சத்திய சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது..

பாலகன் நாகராஜுக்கு அந்த வெளிச்சத்திற்குள் இதை எல்லாம் செய்வது யார் என தெரிந்து கொள்ள ஆவல் ஏற்படுகிறது..

இப்போது நாகராஜுக்கு நோய் இல்லை.. சந்தேக நோய் இல்லவே இல்லை... பிறவி கர்மா இல்லை...

அப்போது அவனது குரு தரிசனம் தருகிறார்...

பெயர் வினவுகிறான் சீடன் நாகராஜ்

"மகரிஷி அஸ்வத்தாமா" என மொழிந்து.. கிரியா யோக தீட்சையை  தேர்ந்தெடுப்பவர்க்கு வழங்குமாறு அறிவுறுத்தி நிலாவோடு நிலவாக மறைகிறார் நாகராஜின் குருநாதர்..

(சிலர் அகத்தியரும்.. போகரும் தான் தீட்சை வழங்கியதாக சொல்வர். இல்லை.. இந்த பாபாஜி கிரியா மார்க்கமும்.. சீடன் நாகராஜ் பற்றிய குறிப்பும் சித்தர்கள் அவர்களின் எந்த எழுத்துக் குறிப்பிலும் இல்லை... )

குருவுக்கும் சீடனுக்கும் உறவு என்பது ஜென்ம ஜென்மமாக தொடர்கின்ற ஒன்று...
அதன் கடவுட் சங்கிலி ஒருபோதும் அறுவதில்லை.

குருவையும் கடந்து இறைவனை அனுபவித்தல் எனும் மெய்யுணர்வை அடைய பூஜை,சடங்கு,சம்பிரதாயங்களை விட்டால் மட்டுமே சாத்தியம்..

உள்ளன்போடு சுயநலமின்றி ஆத்மார்த்தமாய் பூஜை போன்ற சடங்குகள் செய்தாலே அதிலிருந்து விடுபட்டு மேன்மை நிலை அடைய முடியும்.
இல்லை எனில் இயந்திரத் தனமாய் செய்யும் சடங்குகள் கடைசி வரை குண்டுசட்டி குதிரையாகவே பிறவி சுழற்சியில் சிக்க வைத்து வருகிறது.

அவைகள் மாடிப் படிகள் போலவே...
படியிலேயே நின்றால் மாடி அறை வராதது போல்..  அவை எந்தப் பிறவியில் விடப்படுகிறதோ அந்தப் பிறவியில் மனித ஆன்மா மேன்மை நிலை நோக்கி நகர்கிறது..

ஆன்மிக வாழ்க்கையும்.. இறை நிலை அடைவதற்கான வாழ்வியல் தயாரிப்புகளும் அனைவருக்கும் ஒரே ஜென்மத்தில் சாத்தியமில்லை..

அவை யாவுமே மனிதப் பிறவிப் பரிணாமங்களால் நிகழ்கின்றன...

🌸 யோகிராஜ் ஷியாமா சரண் லாஹிரி:


இந்த மகான் மகாவதார் பாபாஜியின் முதலும் கடைசியுமான நேரடி சீடர்.
இவரிடமிருந்தே இந்த பூவுலகம் கிரியா யோக தீட்சையைப் பெற்றது...

வேலை நிமித்தமாக மாற்றலாகி இமாலய மலைத் தொடர்புக்கு வரும் குடும்பஸ்தரான ஷியாமா சரண் லாஹிரி ஒரு நாள் மாலை மகாவதார் பாபாஜியை தரிசிக்கிறார்.

"ஷியாமா" என அழைக்கிறார் அந்த பாலகன் ...
அதே நாகராஜ் .. எந்த வயதில் தனது குருவால் மெய்யுணர்வை அடைந்தாரோ அந்த வயதோடு தோற்றம் அப்படியே நின்றுவிடுகிறது..

பேராத்ம அனுபவத்திற்குப் பிறகு சதை உடல் .. ஒளி உடலாகி விடுகிறது..
உலகத் தேவைகள் இருந்தால் மட்டுமே சதை உடல் ஒரு வாகனமாகி வருகிறது.

ஷியாமா சரணுக்கு எதுவும் விளங்கவில்லை.. யார் இவன் என நினைக்கிறார்.. தன் பெயர் எப்படி தெரியும் எனவும் யோசிக்கிறார்..

வா என அழைக்கிறார் பாபாஜி...
சொன்னதைச் செய்பவராய் பின்தொடர்கிறார் ஆச்சர்ய உணர்வுடன் ஷியாமா..

ஒரு மலை குகையைக் காட்டுகிறார்...
அதில் சில யோக சாதனைக்காக உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன..

"என்ன எல்லாவற்றையும் மறந்துவிட்டாயா...?"

இங்கே தான் நீ தவம் இயற்றியது...
நீ பயன்படுத்தியவைகளை அப்படியே வைத்திருக்கிறேன் பார் எனக் காட்டுகிறார்...

அப்போதும் நினைவு வரவில்லை ஷியாமாவுக்கு...

பாபாஜி புன்னகைத்துக் கொண்டே புருவ மத்தியைத் தொடுகிறார்...

ஷியாமா சரண் லாஹரி தனது குருவான பாபாஜியிடம் தன் முற்பிறவி குகையில் கிரியா தீட்சை பெற்ற போது

ஷியாமாவுக்கு எல்லாம் தத்ரூபமாய்த் தெரிகிறது.. முற்பிறவிகள் புரிகின்றன..

கண்கலங்கிக் கால்களில் விழுகிறார்..

இப்படியே முற்பிறவி நினைவு படுத்தி ஆன்மிகத்தில் ஆட்கொள்வது மகா குருமார்கள் மற்றும் இறைவன் சத்ய சாயியின் சத்திய நியதிகள்...

பாபாஜி இப்போது கிரியா யோக தீட்சை அளிக்கிறார்..

அப்படியே உறைந்து போகிறார் ஷியாமா சரண் ஜி...

அந்த குகையை விட்டும் .. தனது குருவை விட்டும் வெளியே செல்ல மனமே இல்லை குடும்பஸ்தரான ஷியாமாவுக்கு...

இந்த கிரியா யோக தீட்சையை  தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த உலக மக்களிடம் வழங்கி.. கொடிய சம்சாரக் கடல் தத்தளிப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பக்குவமான இல்லற வாசிகளுக்கு இறை பேரானந்த நிலையை நீயே வழங்க வேண்டும் என அருளுவந்து .. நீ எப்போது அழைத்தாலும் வருவேன் என வாக்கு தந்து.. உன்னை இங்கே அழைக்கவே வேலை மாற்றம் நடந்தது.. நீ ஊருக்கே (காசி) போ  என  ஷியாமாஜியின்
அழுகையைத் தேற்றி விடை அனுப்புகிறார் பாபாஜி.

வீட்டிற்கு வருகிறார் ஷியாமா ஜி.

தவறான பணிமாற்றத்திற்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் காசியிலேயே பணி அமர்வதற்காக வந்திருந்த அரசாங்க  கடிதம் வாசித்து பாபாஜியை நினைத்து வியக்கிறார் ஷியாமா ஜி.

காசி திரும்புகிறார். பாபாஜி தீட்சை அளித்த கிரியா யோகத்தையே விடாது ஆழ்ந்து பழகி.. அதையே அனுபவித்து..

பல பக்குவமான  இல்லத்தார்க்கு தீட்சை அளிக்கிறார்.

இலவசமாக கொடுத்தால் அருமை தெரியாதென ... ஐந்து மற்றும் பத்து ரூபாய் (விதவைகளுக்கு) வாங்குகிறார்.

இவர் தனது சீடர்களை பல விதங்களில் ஆன்மீகத்தில் முன்னேற்றி.. பல இடங்களில்.. இடர்களில்  அவர்களுக்கு காட்சியும் அளிக்கிறார்.

இவரிடம் தீட்சை வாங்கியவர்கள் பலர். அதில் முக்கியமானவர்களில் ..
பாரத தேசத் தாயாய் விளங்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் .. வாங்கிய நாள் 12 ஜுன் -- 1939.

"கடந்த கால எதிர்கால கவலைகள் இன்றி நிகழ்காலத்தில் பணியாற்ற வேண்டும். எல்லாவற்றையும் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.. உங்கள் உடலையும் கூட..
பக்தியானது பரிசுத்தமாக இருக்க வேண்டும்.
செல்வத்தினால் யாருக்கும் சுகம் இல்லை. சுகமும் கிடைக்காது.
கிரியா யோக அப்பியாசமே உங்கள் வேத பாடம்.
சஞ்சலமான கற்பனை மனதை விட்டு விட்டு யோனி போன்ற ஆக்ஞா சக்கரத்தில் (புருவ மத்தியில்) மனம் என்ற லிங்கமானது நுழைந்து விட வேண்டும். இவ்வாறே ஆனந்தம் வெளிப்படுகிறது."
போன்ற பல ஞான உபதேசங்களை அவ்வப்போது தனது சீடர்களுக்கு வழங்குகிறார்.

ஒரு மருத்துவர் உடலைப் பரிசோதிக்க வருகையில் ஷியாமாவுக்கு நாடித் துடிப்பே இயங்கவில்லை..
அதிர்ச்சியாகிறார் மருத்துவர்.
சிரிக்கிறார் பகவான் மகா சாயர் ( ஷியாமா ஜி)

உங்களின் மருத்துவப் படிப்பால் பிரபஞ்சத்தை அளந்துவிட முடியுமா? எனக் கேட்கிறார்.


ஒரு நாள் ஷியாமாஜியின் மகள் ஒரு அறையில் பிணமாகி இருக்கிறாள்...
இன்னொரு அறையில் ஷியாமாஜி சீடர்களுக்கு (ஆத்ம சாதகர்களுக்கு) கீதைப் பாடம் எடுக்கிறார்.
அழுகுரல் கேட்கிறது.
அப்போதும் எடுக்கிறார்.
நாம் நாளை வைத்துக் கொள்ளலாமே என சீடர்கள் கேட்கிறார்கள்..

அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும். நம் வேலையை நாம் பார்ப்போம் என்கிறார்.

உங்ளுக்கு உறவுப் பாசமே இல்லையா குருதேவா? எனக் கேட்கிறார்கள்.

உடல் என்றால் பிறக்கும் .. இறக்கும்.. பிறக்கும் இதற்கெல்லாம் நீங்கள் அழுது கொண்டிருந்தால் யோக நிலையில் எப்படி முன்னேறுவீர்கள்? என பதில் கேள்வி கேட்கிறார் ஷியாமாஜி.

இதுவே ஞான நிலை.
இதுவே யோக ஸித்தி.

இறைவன் சத்ய சாயி கிரஹம் அம்மாயி என தன் அவதாரத்திற்கு காரணமான தாயை அழைத்தது போல்..

மகான்கள் இறைவனை உணர்ந்த பிறகு இறை நிலையாக பிரகாசிக்கிறார்கள்.

பற்று அற்று இரு என்பதை எடுத்துக் காட்டவே இறைவன் சத்ய சாயி காவி உடை அணிகிறார் .
அதை வாழ்ந்தும் காட்டுகிறார்.

என்னை உணர்வதற்கு பற்றற்று இரு என அடையாள வடிவ... செயல் வடிவ உபதேசம் அருளினார் இறைவன் சத்ய சாயி.

ஷியாமா சரண் லாஹிரியை சிறு குழந்தையான பகவான் யோகானந்தா தனது பெற்றோர்களோடு தரிசிக்கிறார்.
மடி அமர்த்திய ஷியாமாஜி இவன் கண்கள் ஒளிர்கிறது..யோகத்தின் உச்ச நிலை அடைவான்.. இவனை வைத்து யாம் பல பணிகள் பிற்காலத்தில் செய்வோம் என்கிறார்.

ஷியாமாஜியிடம் தீட்சை பெற்று ஞான மகானாய் ஒளிர்ந்தவர் ஸ்ரீ யுக்தேஷ்வர்கிரி மகராஜ்...
பகவான் யோகானந்தாவின் குரு.

(ஆதாரம் : "புராண புருஷர் யோகிராஜ் ஸ்ரீ ஷியாமா சரண் லாஹிரி" புத்தகம். ஷியாமாஜியின் டைரிக் குறிப்புகள் அவரின் பேரனால் சேகரிக்கப்பட்டு 1981ல் புத்தகமாக வெளியிடப்பட்டது)

மகான்களும் இறைவன் சத்ய சாயியும்:

பரமஹம்ச யோகானந்தா 1935ம் ஆண்டு பரமஹம்ச எனும் பட்டத்தை அவரது குரு யுக்தேஷ்வர் வழங்குகிறார்.
1935ம் ஆண்டே அவர் அமெரிக்கா தேசம் விட்டு தனது குருவை தரிசிக்க வருகிறார்.
பகவான் ரமணரை தரிசிக்கிறார்.
காந்திஜியின் அகிம்சை நெறிமுறைகளை  அங்கீகரித்து அவரை சந்திக்கிறார்.
அன்று திங்கட் கிழமை காந்திஜி மௌன விரதம்..
இருவரும் சேர்ந்து எளிய உணவு உண்கிறார்கள்.

அடுத்த நாள்..  கிரியா யோக அப்பியாசம் மேற்கொள்ள வேண்டி காந்திஜி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவருக்கு தீட்சை அளிக்கிறார்.


நேதாஜி போல் காந்திஜியும் பாபாஜியின் கிரியாவை பயிற்சி செய்தவர்.

நேதாஜி அந்த விமான விபத்தில் தப்பித்தப் பிறகு கிரியா யோகப் பயிற்சியில் உள்முகமாய் முன்னேறி.. உச்சநிலை அடைகிறார்..

ஆன்மிகம் இன்றி வாழ்க்கையில் எந்த சாராம்சமும் இல்லை.. சுவாரஸ்யமும் இல்லை..
தேசத் தலைவர்கள் ஆன்மிகப் பயிற்சி மேற்கொள்ளாமல் தேச முன்னேற்றத்தை நோக்கி ஒரு அடி கூட நகர்த்த முடியாது.

மகான்கள் தவமியற்றிய மகா மலர்கள்.
அந்த தவ நிலையே இறைவன் சத்ய சாயி.
அந்த யோக மகா மலர்கள் சுவாமி எனும் இறை நிலையையே (இறை நிலை எனும் பிரபஞ்ச வியாகப நிலை) அனுபவித்தனர்.

🌸 ஸ்ரீ யுக்தேஷ்வர் கிரி மகராஜ்:




மே 10 -- 1855 ல் பிறக்கிறார்.
பெரிய மருத்துவர். ஆன்மிக நூல்களின் ஆராய்ச்சியாளர்.
சிறு வயதில் தந்தையை இழந்து தவிக்கிறார்.
திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகளிலேயே மனைவியையும் இழக்கிறார்.

உறவுகளின் ஒவ்வொரு இழப்பும் உள் திரும்பி ... உற்று நோக்கி ...ஆன்மிக சாதகராய்  ஆழ்ந்து போவதற்கான லாபங்கள்.

ஒவ்வொரு இழப்பும் ஒவ்வொரு வரவு.
ஒவ்வொரு வலியும் உள்முக ஒளி.
தியானிப்பவரால் மட்டுமே இதை உணர முடியும்.

மனம் விரக்தியாகிறார் யுக்தேஷ்வர். குரு ஷியாமா சரணை சரணடைகிறார்.

1894 ல் குருவின் குருவான பாபாஜியை தரிசிக்கிறார்.
அவர் உத்தரவின் பேரில் ஆன்மிக நூல்கள் பல  எழுதுகிறார்.

இறைவன் சத்ய சாயியை சுவாமி என அழைக்கிறோம்..
மகான்களை அழைப்பது போலவே சுவாமி என இறைவன் சத்ய சாயியை பக்தர்கள் அழைப்பதால் இறைவனும் மகான்களும் ஒன்றாகி விடுவார்களா?
இல்லை..

மகான்கள் இறை நிலையை அனுபவித்த மனிதர்களுக்கான சாட்சிகள். சத்திய இருப்புகள். ஆனால்
இறைவன் இறைவனே.

 இது மகான்களின் ராஜ்ஜிய பூமி...  இப்படியே அழைத்து பழக்கப்பட்டு விட்டது பாரத பண்பாடு.

இறைவனான கிருஷ்ணர் .. புத்தரையும் பகவான் என அழைக்கிறோம். ரமணர்... யோகி ராம் சுரத் குமார் போன்ற ரிஷிகள் .. யோகிகளையும் பகவான் என்றே அழைக்கிறோம்.

கிருஷ்ணரும் ரமணரும் ஒன்றா.
இல்லவே இல்லை.

இது மகான்களின் பூமி. இங்கே இறைவனே வந்தாலும் மகான்களை அழைப்பது போலவே அழைப்போம்.

காரணம் மகான்கள் நிறைய பேர்கள்.
இறைவனின் இறங்குதல் எப்போதோவது தான் காலத்தின் தேவை கருதி நிகழ்கிறது.
கிருஷ்ணர் -- புத்தர் -- ஷிர்டி சாயி -- சத்ய சாயி -- பிரேம சாயி போல்...

ஒரு கூட்டுக் குடும்ப மூத்த சகோதரரின் மனைவியால் வளர்க்கப்படும் இளைய சகோதரர்கள் அண்ணி என்று அழைப்பது தொடங்கி.. அவளுக்கு பிறக்கும் குழந்தைகளும் அதைப் பார்த்து வளர்வதால் அவர்களைப் போலவே அண்ணி என்றே தங்கள் அம்மாவை அழைக்கும் .. அது போலவே இறைவனையும் மகான்களை அழைப்பது போல் நாம் அழைப்பது.

பாபாஜி அவர்கள் யுக்தேஷ்வருக்கு சுவாமி எனும் பட்டம் வழங்குகிறார்.

யுக்தேஷ்வரின் சீடரே யோகானந்தர்.

🌸 பகவான் பரமஹம்ச யோகானந்தர்:



இவர் இன்னொரு விவேகானந்தர்..
முகுந்தலால் கோஷ் என்பது  இயற்பெயர்.
கோஷ் என்பது குடும்பப் பரம்பரை பெயர்.

இறைவன் சத்ய சாயியை முதலில் உணர்ந்து உரைத்த மகான் அரவிந்தரின் முழுப் பெயரும் அரவிந்த கோஷ் என்பதே.

ஸ்ரீ யுக்தேஷ்வர் சிறுவயதில் தனது தந்தையை இழந்தது போல் யோகானந்தரும் தாயை இழந்து தீரா வலி பெறுகிறார்.

தந்தைக்கு ரயில்வே பணி என்பதால் ஆசிரமம் ஆசிரமமாய் வலி தீர சுற்றி வருகிறார்.

பல மகான்களை தரிசனம் செய்கிறார். அந்தரத்தில் மிதக்கும் மகான்.. தூங்காத மகான்.. காலடியில் புலி  பூனைக் குட்டி போல் படுத்துக் கொண்டிருக்க யோக நிலையில் உச்சம் போன மகான்.. இரு உடல் எடுக்கும் மகான் பிரணவானந்தர் என அரிய அரிய மகான்களை தரிசிக்கும் பாக்கியம் மிகச் சிறுவயதிலேயே யோகானந்தருக்குக் கிடைக்கிறது.

தியானம் பற்றிக் கொண்டு உள்ளே எரிகிறது.


பள்ளிப் படிப்பை வலுகட்டாயமாய் .. அந்த துரதிர்ஷ்டங்களை தந்தையின் கட்டாயத்தால் முடித்து..

குப்பை அறிவுகளைக் கடந்து ஞானம் நோக்கிப் பறக்கிறது யோகானந்தம்.

ஒருவரின் வாழ்க்கைப் பாதை அவரின் பூர்வ கர்ம நிலைப்படியே தீர்மானிக்கப்படுகிறது.

"இறைவனே ஆட்டிப்படைக்கிறார். நாம் வெறும் பொம்மைகள்" என்கிறார் ஸ்ரீ யுக்தேஷ்வர் மகராஜ்.

மகான்களின் உபதேசமின்றி இறைவன் சத்ய சாயியை உணர்வதற்கான ஆத்ம சாதனை புரிதல் கடினம்.

சிலருக்கு இறைவன் சத்ய சாயியே நேரடியாய் ஆத்ம சாதனைக்கு வழியும் காட்டுகிறார்.

யாராருக்கு எவ்வகையோ அவ்வகையில் தெய்வத்  திருப்பம் நேர்கிறது.

காசியில் ஒரு ஆசிரமத்தில் தங்கி இருக்கும் யோகானந்தர் ஒரு நாள் தியான நிலையில் கண்ணீர் சொரிகிறார்..

 "உன் குருவை இன்று பார்ப்பாய்" என்ற குரல் தியானத்தில் அவருக்குக் கேட்கிறது..

வெளியே ஒரு சீடரால் பொருள் வாங்க அழைத்துச் செல்லப்படும் யோகானந்தர்.. ஒரு வளைவு சந்தில் தன் குருவை (யுக்தேஷ்வரை) தரிசிக்கிறார்.


ஒருமுறை ஆசிரமத்தில் குருவால் இதயம் தீண்டப் பெற்ற யோகானந்தர் பிரபஞ்ச வியாபக நிலை அடைகிறார்.

"நீ அதிகமாக பரவச நிலையிலேயே இருக்கக் கூடாது. நீ ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாய் உள்ளன" என்கிறார் அவரது குருதேவர்...

பிறகு யோகானந்தரின் அமெரிக்க விஜயம். அங்கே கிரியா யோக தீட்சைக்காக யோக சங்கம் நிறுவுகிறார்..

பல வெளிநாட்டவர்கள் ஆன்மிகப் பயிற்சி செய்ய வருகிறார்கள்.

அப்போது அங்கே கருப்பின வேறுபாடுகள் அதிகம்.
இவர் கருப்பு -- வெள்ளை வித்யாசமின்றி அனைவருக்கும் தீட்சை அளிக்கிறார்.

அதுவே முதல் வஞ்சம் அவரின் பால் வளர்க்கப்படுகிறது.

சில இந்தியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் பேரில் திருமணம் நடத்தி வைக்கிறார்..

இரண்டாம் வஞ்சம் வளர்க்கப்படுகிறது.

ஜீசஸ் இந்தியா வந்ததும்.. இமயத்தில் அவருக்கு பாபாஜி கிரியா யோக தீட்சை அளித்ததுமான சத்திய அனுபவம் பகிர்ந்து கொள்கிறார்.

மூன்றாம் வஞ்சம் வளர்க்கப்படுகிறது.

சத்தியம் எதைக் கண்டும் அஞ்சுவதில்லை.
சத்தியத்திற்கு சினமும் இல்லை.. எவர் மேலும் காழ்ப்புணர்ச்சியும் இல்லை..

சத்திய யோகி யோகானந்தர்.

அவர்களின் சீடர்கள் நிறைய வெளிநாட்டவர்கள். அவர்களில் டோனால்ட் வால்டர்ஸும் ஒருவர்.

சுவாமி கிரியானந்தா (டோனால்ட் வால்டர்ஸ்) 

விவேகானந்தரை விடவும் ஒரு பங்கு அதிகமாக அங்கேயே வாழ்ந்து பாரத கலாச்சார யோக கிரியா முறையை கற்பித்து ஞான தாகம் ஏற்படுத்திய முதல் மகான் யோகானந்தர்.

டோனால்ட் வால்டர்ஸ் ஆத்மார்த்த சீடர். சன்யாசியாக கிரியானந்தா எனும் நாமத்தில் உயர்ந்தார்.
ஆன்மிக சாதனையில் முன்னேறினார்.

"நீ எனக்கு மிகவும் விருப்பமான சீடன்.. உன் பணிகளும்.. பணிவிடைகளும் என்னை வெகுவாக மகிழ்வாக்குகின்றன" எனப் பலமுறை அனைவர் கேட்கும்படியும் சத்தியம் பேசுகிறார் யோகானந்தர்...
(அதுவே கிரியானந்தருக்கு பிற்காலத்தில் பிற சீடர்களின் பொறாமை எனும் கொடிய உள்ளக் கிருமியால் அவர் சங்கப் பணிக்கு வினையாக முடிகிறது..)

இவரையே யோக சங்கத்தின் தலைவராக்குகிறார் யோகானந்தர்.

சமாதி ஆவதற்கு சிலமணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டப் புகைப்படம்

சமாதி ஆவதற்கு சில நேரத்திற்கு முன் அன்று மலர்ந்த பாரிஜாதப் பூவாய் முகம் புத்துணர்வோடு இருக்கிறார்..
மரண கலை ஒரு எழுத்தைக் கூட யோகானந்தர் முகத்திலோ.. அகத்திலோ எழுதவில்லை...

சமாதியாகும் நேரம் வந்துவிட்டதென சொல்லியபடியே ... சில ஆன்மிக விஷயங்கள் பேசியபடியே தரையில் சரிகிறார்.

(ஆதாரம் : இன்னும் ஆழமாக இன்னும் சுவாரஸ்யமாக யோகானந்தரின் வாழ்வை புரிந்து கொள்ள அவரின் உலகப் பிரசித்தி புத்தகம் "ஒரு யோகியின் சுயசரிதம்" வாசியுங்கள். யூ‌-டியுபில் ஆடியோவாகவும் இருக்கிறது.)

கிரியா யோக மகான்களும்.. இறைவன் சத்ய சாயியும்..

இறை மெய்யுணர்வாளர்கள் கிரியா யோகப் பரம்பரை மகான்கள்..

மகான்களின் பரம்பரையே நிஜமான பரம்பரை..
ஒரே சத்திய தீபத்தையே தாங்கிப் பிடித்து வலம் வருபவர்கள்.

இல்லறப் பரம்பரைகள் பெரும்பாலும் ஒரே மன ஒத்திசைவோடு இயங்குவதில்லை.

இறைவன் சத்ய சாயிக்கும் கிரியா யோக மகான்களுக்குமான தூயத் தொடர்பு மிகுந்த ஆச்சர்யமும் .. சுவாரஸ்யமுமானவை...


அவர்களின் பின்புலமும் வாழ்க்கையும் அறியாமல் வெறும் தொடர்புகள் புரிவதால் அதில் ஆழமில்லை.. அது  மகிமைகளின் முழு விஸ்வரூபமுமில்லை..

1952 ம் ஆண்டு.. அந்த ஆண்டு துவக்கத்திலேயே யோகானந்தர் தனது சமாதி அரங்கேற்றம் பற்றிய சத்தியம் பேச ஆரம்பித்துவிடுகிறார்.

இது அவரின் வெளி நாட்டு அடியார்கள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது...

அந்த சமயத்தில் .. ஒரு வெளி நாட்டுப் பெண் சீடர் .. மிகுந்த வருத்தத்துடன் ..

"நீங்கள் சமாதி ஆவதாக இருந்தால் நான் தற்கொலை செய்து செய்து கொள்வேன் குருதேவ்" என்கிறார்

அதற்கு யோகானந்தர் "முட்டாளைப் போல் பேசாதே.. நான் உன் குரு மட்டுமே. கடவுள் அல்ல" என்கிறார்.

"இல்லை குருதேவ் நீங்கள் இல்லாமல் என்னால் வாழ இயலாது" என்கிறார்

அதற்கு யோகானந்தர் "கடவுள் தென் இந்தியாவில் தோன்றி இருக்கிறார். அவர் பெயர் "சாயிபாபா"
எனக்குப் பிறகான உன் மீதி நாட்களை நீ அவர் வசிப்பிடத்திலேயே வழப்போகிறாய்" என நடக்கப் போவதை முன் கூட்டியே அந்த சீடரிடம் சொல்கிறார்.

அதைப் போலவே அவரும் தன் மீதி ஆன்மிக வாழ்க்கையை புட்டபர்த்தியிலேயே வாழ்ந்து இறைவன் சத்ய சாயியை தரிசனம் செய்தபடி ஆன்ம சாதனை புரிகிறார்.

பரமஹம்சர் யோகானந்தரின் மேலான காழ்ப்புணர்ச்சி அவரின் ஆத்மார்த்த சீடரான கிரியானந்தரையும் விடவில்லை..

யோகானந்தர் அவருக்கு எதிரான எல்லா வழக்குகளையும் வெற்றி கண்டார்.

யோகானந்தர் இறைவன் சத்ய சாயி பற்றி மேற் சொன்ன சத்தியத்தை மறுத்தபடியும் ஒரு சில பேர் (பெயர் சொல்ல விரும்பவில்லை) கிரியானந்தருக்கு பல தொல்லைகள் தர ஆரம்பித்தனர்.


பதினான்கு ஆண்டுகள் தனது குருவுக்கு பணிவிடை செய்த அந்தத் தூயத் துறவி கிரியானந்தரை அவப்பெயர் சுமத்தி வெளியேற்றத் திட்டமிட்டு அதை வெற்றிகரமாக செய்தும் முடித்தனர்.

வேறொருவரை தலைமைப் பதிவியில் நியமிக்க ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சி அது.

அந்த கடினமான காலங்களில் கிரியானந்தருக்கு மிகுந்த ஆதரவும்.. இளைப்பாறுதலும் .. புத்தருளும் .. கிருபையும் புரிந்தது இறைவன் சத்ய சாயி ஒருவரே..

மாதா ஆனந்த மயி அம்மாவும் கிரியானந்தருக்கு ஆதரவளித்தார் என்பது கூடுதல் தகவல்.

இறைவன் சத்ய சாயி அவரை ஆதரித்து கடிதமே வரைந்திருக்கிறார்.

இறைவன் சத்ய சாயி எப்போதுமே சமரசமில்லாத சத்தியத்தின் பக்கமே நிற்பவர்.

யாரிடத்தும் குறை காணாதவர்.
ஆத்ம சாதகர்களின் குறை நீக்கி அவர்களை உள்முகமாய் முன்னேற்றுபவர்.

வீண்பழி சுமத்தப்படுபவர்களை என்றுமே கைவிடாதவர்.

அதே சமயத்தில்...
தவறான வழிகாட்டுதல்களை என்றும் ஆதரிக்காதவர்.

அகங்காரத்திற்கு சற்றும் வளைந்து போகாதவர்.

1970'களின் துவக்கத்தில் கிரியானந்தா சுவாமியை தரிசனம் செய்ய வருகிறார்.


அந்த மூன்று நாட்கள். கிரியானந்தருக்கு வரமான நாட்கள்..

நேர்காணல் அறை.

சுவாமி ஒரு பதக்கம் சிருஷ்டித்து .. "இதை அணிந்து கொள்.. இதை வைத்து நிறைய பேர்களை குணப்படுத்து .. கவலைப்படாதே.."

"எனக்கு உன்னைப் பற்றி எல்லாம் தெரியும்.. உன் குருவை நீ எவ்வளவோ மகிழ்வித்திருக்கிறாய்.
ஆன்மிக உலகத்திலும் இப்படிப்பட்ட சுயநலமும்.. பொறாமை இருக்கின்றன..
வருந்தாதே.. நீ உன் குரு வழியிலேயே நட" என்று ஆன்மிக அருவி போல் தெய்வீக ஆறுதல் பொழிகிறார்..


மௌனமாய் இறைவன் சத்ய சாயியின் முன் நின்றவர்..
சுவாமி சொல்லச் சொல்ல கண்ணில் நீர் கட்டிக் கொள்கிறது கிரியானந்தருக்கு..

நீ உன் குருவை மகிழ்வித்திருக்கிறாய் என்ற தன் குருவின் அதே பழைய வாக்கினை சுவாமி சொல்லக் கேட்டு கண்ணீர் விடுகிறார் அவர்.

ஒருவரைப் பற்றி நாம் குறை சொல்கிறோம் என்றால் அது நமக்குள் இருக்கும் குறைகளின் பிரதிபலிப்பே அன்றி வேறொன்றுமில்லை...

ஆன்மிக வாழ்க்கை வாழ்பவர்களோ..
ஆன்மிக சாதனை புரிபவர்களோ எவரைப் பற்றியும் .. எந்த நேரத்திலும்.. எந்தக் காரணத்திற்காகவும்.. குறைகளைச் சொல்லவே மாட்டார்கள் என்பதை வாசிப்பவர்கள் புரிந்துணர வேண்டும்.

பழி என்பது குழி அதை வெட்டுபவனே அதில் விழுகிறான்.

பிறகே கிரியானந்தா "ஆனந்தா" எனும் தன் தெய்வீக சங்கத்தை விரிவுபடுத்துகிறார்...

தன் சங்கத்தினருக்கு உங்கள் அருள் வேண்டும் சுவாமி எனக் கேட்க..

"ஓ.. அதற்காகவே நான் இங்கே இருக்கிறேன்" என சுவாமி திருவாய் மொழிகிறார். ஆசிர்வதிக்கிறார்.

அவரின் அடியார்கள் பலர்.
அவர்களில் ஒருவர்

சத்ய சாயி பாபா அவதாரமா? எனக் கேட்கிறார்.

அவர் சகல ஜீவராசிகளின் உள்ளுணர்வு. இதை அவரோடு இருக்கும் போது உணர்ந்து கொண்டேன்.
அந்த பதக்கத்தை அணிவிக்கும் போது அவரின் அருள் என்னுள் பரவுவதை உணர்ந்தேன்."
(பல்லாண்டு கிரியா யோக நெறிமுறைகள் புரியும் ஆத்ம சாதகர்களால் இந்த அருள் பிரவாகப் பொழிவை எளிதாய் உணர்ந்து அனுபவிக்க முடியும். உடல் அதற்கு தயாராகிவிடுகிறது என்பதால்...)

அவர் அவதாரமா? என்பதைப் பெரிய மகான்களே உரைப்பதற்கு தகுதி இருக்கிறது.. எனக்கந்த தகுதி இல்லை என்று மிகுந்த பணிவோடு தன் அடியார்களிடம் பேசுகிறார் கிரியானந்தா..

எத்தனை தன்னுணர்வு.
எத்தனை தன்னடக்கம்.

இதை கிரியானந்தா  "A Visits To The Saints of India" என்ற தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.


இவர் பல ஆன்மிகப் புத்தகங்கள் எழுதியவர்.

 "உன் சத் கர்மாவே காரணம் உன்னை உடனே என் சீடனாக்கியது" என்று யோகானந்தரும்..

"ஒரு யோக ஆசிரியராக இல்லாமல்.. உங்களின் சீடனாக இருப்பதொன்றே என் ஒரே விருப்பம்" என்று கிரியானந்தரும்..

"உன் மூலமே தியானமும் .. யோக தீட்சையும் பலருக்கு நிகழப்போகின்றது. உன்னை வைத்தே பல ஆன்மிகப் பணிகள் செய்வோம்" என்றும் யோகானந்தர் கூறியது இவரின் உன்னத நிலைக்கான உதாரணங்கள்.

மிகுந்த பணிவு பொதிந்த மகான் கிரியானந்தர்.

மகான்கள் தங்களை மகான்கள் என சொல்லிக் கொள்வதே இல்லை.
"நான்" "எனது" என்ற பதத்தைக் கூட அவர்கள் பயன்படுத்துவதில்லை.
ஆன்மிக சங்கங்களின் பதவி, பொறுப்புகளுக்குக் கூட அவர்கள் ஆசைப் படுவதில்லை...

பாபாஜியும் ... கடவுள் சுவாமியும்

2001'ல் அடியேன் 17 வயதில் முதல் சேவைக்காக மே மாதம் பர்த்தி சென்ற சமயம்.
அங்குள்ள சுவாமி மாணவர்கள் எவரைக் கண்டாலும் வணங்கி.. அவர்களிடம் சுவாமியின் அனுபவம் கேட்கும் பழக்கம் ஆரம்பித்தது.

அப்படி ஒரு சமயம் ... ஒரு சுவாமி மாணவரிடம் அனுபவம் கேட்க..
அவர்களில் சிலர் தாங்கள் கண்ட ஒரு அதிசய அனுபவத்தை மாணவர்களில் ஒருவர் பகிர்ந்து கொண்டார்..

ஒரு முறை பஜனை முடிந்து அனைத்து மாணவர்களும் விடைபெற.. இவரும் இவரின் சில நண்பர்களும் சற்று தாமதமாக எழுந்து  செல்வதற்கு எத்தனிக்க.. அந்தரத்தில் நடந்து ஜோதிப் பிழம்பாய் ஒருவர் குல்வந்த் ஹாலுக்குள் சுவாமி முன் வருகிறார்.
சுவாமியைப் பணிகிறார்..
இடுப்பில் ஒரு ஆடையும்.. தலை முடி நீளமாகவும் இருக்கிறது என்கிறார் அந்த மாணவர்...

அடியேனுக்கு ஆர்வம் தாங்கவில்லை..

வேறு யாரும் கவனித்தார்களா? என வினவ..

இல்லை .. கவனித்ததாகத் தெரியவில்லை.. நாங்கள் வேறெந்த திசையும் பார்க்கவில்லை என்கிறார்.

சுவாமி அவரை நேர்காணல் அறைக்கு கைகளைப் பிடித்து அழைத்துச் செல்கிறார்.

அவர் யார் என்று தெரியுமா? இது அடியேன்..

அந்த நிகழ்வின் போது தெரியாது. பின்னர் தெரிந்து கொண்டோம் என்கிறார்.

எப்படி? எனக் கேட்கிறேன்..

ஒருவர் பேசும் போது இடையிடையே பக்குவமின்றி பேசுவது அடியேனின் ஆரம்ப வழக்கம்..

நீங்கள் அந்தப் புத்தகம் படித்ததில்லையா..? எனக் கேள்வி கேட்ட அடியேனிடமே கேள்வி கேட்கிறார்..

எந்தப் புத்தகம்?

ஒரு யோகியின் சுயசரிதம்

ஓ.. தெரியாது சாய்ராம்..

படியுங்கள்.. சுவாரஸ்யமாக இருக்கும்.

அவர் பெயர் என்ன சாய்ராம்..

பாபாஜி...

ஓ என்று ஆச்சர்யப்பட்ட தருணம் இன்னும் அடியேனின் கண்முன் பசுமையாய் இருக்கிறது.

அந்த சுவாமி மாணவர் மூலமாக அறிமுகமான புத்தகமே அடியேனுக்கு
"ஒரு யோகியின் சுய சரிதம்"

இந்த அரிய அற்புத சம்பவமே அந்தப் புத்தகம் நோக்கியும்.. பாபாஜியை நோக்கியும் அடியேனுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது.

பத்ரிநாத் ஷேத்திரத்தில் வரையப்பட்ட பத்ரிநாதரின் உருவம் பாபாஜியைப் போன்றே இருக்கிறது. அதை தரிசிக்கும் பேறும் அடியேனுக்குக் கிடைத்திருக்கிறது.


மகான்கள் இறைவன் சத்ய சாயி உள்ளே அடக்கம்.. மகான்கள் இறைவன் சத்ய சாயி வெளிப்படுத்தும் தனது பேராற்றலின் வெளிச்சக் கீற்றுகளே.

இந்த நீள் பதிவு.. வாசிப்பவர்களை சத்ய சாயி என்பவர் சாட்சாத் இறைவனே எனும் பேருணர்வு அனுபவத்தை நோக்கி..
ஒரு யோகியின் சுய சரித புத்தகத்தை நோக்கி.. தியானம் செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வை நோக்கி... ஒரே ஒரு அடி நகர்த்தி இருந்தால் அது இறைவன் சத்ய சாயியின் சங்கல்பமே அன்றி இதில் மனித முயற்சி எதுவுமில்லை..

"நீ ஓர் கனவைப் போலவே இவ்வுலகத்தில் நடக்கிறாய். இவ்வுலகம் கனவுக்குள் கனவாக இருக்கிறது. இதனை நீ உணர்ந்து.  நீ இங்கிருப்பதற்கு ஒரே காரணம் கடவுளே உன் ஒரே இலக்கு, ஒரே நோக்கு என இருப்பதாகும். நீ அவனுக்காகவே இருக்கிறாய். அவனைக் கண்டடைய வேண்டும்" என்ற பகவான் பரமஹம்ச யோகானந்தரின் சத்திய உணர்வின் வாக்கினை இதயத்தில் வரித்து...

ஆத்ம சாதனைக்கு அதிக நேரம் செலவழித்து வாழ்க்கைக்கான கடவுள் சத்ய சாயி எனும் நிரந்தரப் பரம் பொருளை உங்களோடு இணைந்து அனுபவிக்க..

 பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக