தலைப்பு

புதன், 8 ஏப்ரல், 2020

செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் சாயி அனுபவங்கள்!


2003-ம் ஆண்டு FIDE  (World Chess Federation) உலக செஸ் கூட்டமைப்பு நடத்திய போட்டியில் வென்று `உலகின் அதிவேக சதுரங்க வீரர்' என்ற பட்டத்தை, 34 வயதுடைய வீரர் ஒருவர் பெறுகிறார். இந்திய நாட்டின் தெற்கு பிராந்தியத்தைச் சேர்ந்த அந்த வீரருக்கு விருது கிடைத்தது, பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிக அளவில் கோலோச்சிவந்த செஸ் விளையாட்டில், ரஷ்யர் அல்லாத ஒருவர் இத்தகைய சிறப்பை அடைந்ததன் ஆச்சர்யம் அது. 14 வயதில் இந்திய செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தான் அந்த வீரர்.
`புத்திக்கூர்மையுடைவர்களின் விளையாட்டு' எனச் சொல்லப்படும் செஸ் விளையாட்டுப் போட்டியில், தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்; செஸ் உலகின் எவர்கிரீன் ராஜா!

வாழ்க்கையே ஒரு விளையாட்டு வாழ்ந்திடு அதை விளையாடி.. எனக் கூறும் இறைவன் சத்ய சாயி..எப்போதும் கவனமாக இரு(A B C of life.. Always Be Careful) என்றும் கூறுகிறார்.

இது செஸ் விளையாட்டிற்கும் மிகவும் பொருந்தும். கவனத்துடன் கருத்தூன்றி விளையாடினால், செஸ் என்னும் சதுரங்கத்தில் வெற்றிபெற இயலும்.

செஸ் போர்டில் 64 கட்டங்கள். கருப்பு வெள்ளை.. மாறிமாறி..அது வாழ்வின் இன்ப துன்பங்கள் போல. மேலும் ஆய கலைகள் 64 என்றால் ஆண்டவர் சோம சுந்தரரின் திருவிளையாடல்களும் 64. அல்லவா?
கலைகள் கற்றால் பேரும் புகழும் கிட்டும்.. திருவிளையாடல் புராணம் படித்து மனம் உருகினால் வீடு பேறும்.. விண் உலகும் கிட்டும்.
செஸ் என்ற சதுரங்கம்  இந்தியா உலகிற்கு தந்த பெருமைமிகு விளையாட்டு. இதன் பெருமைக்கு பெருமை சேர்த்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இந்தியாவின் கிரேண்ட் மாஸ்டனான அவர் ஒன்பது முறை உலகப் போட்டிகளில் வென்றுள்ளார். இத்துடன் ராஜீவ் காந்தி கேல்ரத்னா மற்றும் பத்ம விபூஷண் விருதும் பெற்றுள்ளார். வித்யாசாகர் அறக்கட்டளையின்  நல்லெண்ணத் தூதுவராக இருந்து சமூக நற்பணியும் ஆற்றுகிறார்.

கேட்போர் மயங்கும் பஜன்.. மனமோகன சாயி சாம்ராஜ்ய திறவுகோல்:

விஸ்வநாதன் ஆனந்த் கூறுகிறார்.
அது 2007ம் ஆண்டு. சென்னையில் புதுவீட்டில் குடியேறினோம். அதன் அருகிலே சுந்தரம் சாயி மையம். பஜன் கேட்கும் ஆவலால் நானும் என் துணைவியாரும் ஓரடி எடுத்து உள்ளே சென்றோம்.


ஆவல் ஈர்ப்பாக மாறியது. பஜன் பாடல்களின் லயமான தியான ஒலி, சேவாதள தொண்டர்களின் கனிவான ஒழுங்கு மற்றும் புனிதமான சேவை இவை எங்களின் இதயத்தில் புகுந்தன.

பிரார்த்தனையின் பலன்.. பகவானின் அருட்காப்பு:

இவ்வாறு சுந்தரம் சாயி பஜனில் அடிக்கடி பங்கேற்றோம். பகவானின் அபூர்வ புகைப்படங்களை ஒருவர் எங்களுக்கு வழங்கினார். பஜன்களின் முடிவில் பரம பவித்ரமான விபூதிப் பிரசாதமும் கிடைத்தன. ஒரு சமயம் என் மனைவி அருணாவின் தகப்பனார் உடல் நலம் குன்றி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல்நிலை மிகவும் மோசமாகி கவலைக்கிடமானது. என் மனைவி அருள்மயமான சத்ய சாயி பாபாவின் திரு உருவப் படத்தை அனு தினமும் தன் தகப்பனாரின் தலைமாட்டில் வைத்து பிரார்த்திப்பார்.
சுவாமியின் கருணை வெள்ளம் பாய்ந்தது. அபாயநிலையைத் தாண்டிய  என் மாமனார் படிப்படியாக தேறிவந்தார். பிறகு என் மனைவி துணையுடன் புட்டபர்த்தி சென்றார். விழித்திரை நன்றியால் நனைந்து சுவாமி  தரிசனம் கிடைக்கப் பெற்ற அருணாவிற்கு... அவரிடம் கடிதம் கொடுக்கவோ முறையிடவோ கூட தோன்றவில்லை.

சோபியா( பல்கேரியா தலைநகர்) செஸ் போட்டியின் நினைவுகள்:

சோபியா நகரில் 2010ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை செஸ் போட்டி மறக்க இயலாத ஒன்று. போட்டி நடந்த இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல இயலுமோ என்ற கவலை. ஏனென்றால் செல்லும் சாலை எரிமலை சாம்பல் பரவி, வழி மறைக்கப்பட்டிருந்தது. எனக்கு மிக பதட்டமான மனநிலை. ஆனால் அருணா அமைதியே உருவாக திட நம்பிக்கையுடன் இருந்தார். அவர் தினமும் காலையில் ஒலிக்கவிடும் ஓம் ஜெய் ஜகதீச ஹரே.. சுவாமி ஹாரத்தி பாடலும் , விபூதி மந்திரமும் அவர் மனநிலையை சம நிலையாக்கி விட்டது போலும்.

சுவாமி அருளால் அந்த போட்டியில் நான் வென்றேன். எனது ரசிகர் "சாய்ராம். நீங்கள்தான் வெல்வீர்கள்" என்ற செய்தியை முன்கூட்டியே அருணாவின் கணிணிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியது சுவாமியின் சூசகமான செய்தி என நம்பினேன். அந்த ஆண்டு எங்கள் பர்த்தி யாத்திரையின் போது சுவாமியின் சாந்நித்யத்தை எங்கும் உணர முடிந்தது. சுவாமியை தனியாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யலாமா என வினவப்பட்டது. " நாங்கள் இங்கிருப்பதை சுவாமி அறிவார் அதுவே போதும்" எனக் கூறினோம்.


அந்த சந்தர்ப்பத்தில் சுவாமியின் அதி நவீன சிறப்பு மருத்தவமனையினை கண்ணுற்றோம். நவீன தொழில் நுட்பம், உலகத்தர மருத்துவக் கருவிகள், இதயம் கனிந்த மருத்துவ சேவை, அர்ப்பணிப்பான சேவாதள தொண்டர்களின் அன்புத் தொண்டு இவற்றுடன் கூடிய இலவச சிகிச்சை. சுவாமியுடைய கருணையின் வீச்சு பிரமிக்க வைத்தது.

சுவாமியின் பிரசாதமாக எங்களுக்கு பிறந்த குழந்தைக்கு 'சாய் அகில்' என பெயரிட்டுள்ளோம்.


"சுவாமியின் அற்புதங்கள் கண்டவர் அனேகர் உண்டு. சம்பாஷித்தவரும் பலர் உண்டு. அவரை தம் நண்பராக, உறவினராக காண்பவரும் உண்டு. ஆனால் சுவாமி எங்கள் ஹ்ருதயவாசி.. இதயத்தின் குரல்... எங்களுள் ஒலித்துக் கொண்டே இருக்கிற அவர் குரல் நாங்கள் பிரார்த்திக்கும் போது பதில் அளிக்கிறது."  இதுவே விஸ்வநாதன் ஆனந்த் அவர்களின் ஆணித்தரமான நம்பிக்கை.

மனித வாழ்க்கை ஒரு செஸ் விளையாட்டு.. மனிதர்கள் என்பவர்கள் செஸ் விளையாட்டுக் காய்கள்..
இறைவன் சத்ய சாயியின் சங்கல்ப விரல்களே எல்லோரையும் இயக்குகிறது.. எல்லா ஜீவராசிகளையும் ஆட்டுவிக்கிறது.

இறைவன் சத்ய சாயியை நம் இதயத்தில் நேருக்கு நேராய் அனுபவிப்பது என்பதே வாழ்க்கை எனும் சதுரங்க விளையாட்டின் செக் மேட்

🙏 ஓம் ஸ்ரீ சாயி சர்வஹ்ருத் வாசினே நமஹ 🙏


ஆதாரம்: The Prashanthi Reporter - The Swami in our Hearts - Chess Grandmaster Vishwanathan Anand

மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக