தலைப்பு

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

உலகத்தில் ஏற்படும் துன்பங்களுக்கு காரணம் என்ன?


பரமாத்மா ஆறுவித சிறப்பியல்புகளுடையவர். அவை முழுமையான ஞானம்,முழுமையான வைராக்கியம், முழுமையான அழகு, முழுமையான ஒளிமயமான சக்தி, குறையாத புகழ், அழியாத செல்வம் ஆகியவை.ஸத் (முழுமையான இருப்பு)சித் (முழுமையான அறிவு) ஆனந்தம் (முழுமையான) ஆகியவை அவரது இயல்புகள். இவை மனிதனிடமும் ஆத்மாவின் மூலம் இடம்பெற்றுள்ளன. ஆகவே மனித சமுதாயம் அனைத்துக்கும் இந்நிலையையும், சிறப்பியல்புகளையும் அறிந்து, உணர்ந்து, அனுபவிக்க உரிமை உண்டு. இவ்வுரிமையே, அதற்கு விதிக்கப்பட்ட கடமையும் கூட. மனிதன் இக்கடமையை நிறைவேற்றாதது தான், உலகத்தின் துன்பங்களுக்கெல்லாம் காரணம்.

சாதாரண மனிதன் அன்றாட வாழ்வில் கிரஹஸ்த தர்மத்துக்கு விரோதமாக நடக்கிறான். அவன் சாஸ்திரங்களிலும், மனுஸ்மிருதியிலும் கூறிய வழியைக் கடைப்பிடிப்பது இல்லை. அவனிடம் சிறிதுகூட உண்மையை கடைபிடிக்கும் தன்மை இல்லை. சத்தியம் மிகப் புனிதமான குணநலம். சாதாரண வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதன், சிறு துன்பம் வந்தாலும் மனம் தளர்ந்து, வாழ்க்கையின் தீர சாகஸத்தைக் கை விடுகிறான். போலியான சன்னியாசம் அல்லது துறவறம் பூண்டு கொள்கிறான்.குடும்ப வாழ்க்கையின் தர்மங்களை உணர்ந்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தால், அதை விட்டுக் காடு நோக்கிச் செல்ல வேண்டி இருக்காது. வாழ்க்கையில் அவரவர் கடமையைச் செய்து கொண்டே ஆண்டவனை அனுபவிக்கலாம். இத்தகைய வாழ்க்கைக்கு ஒரு பட்டமோ, பதவியோ, ஆடம்பரமோ தேவையில்லை. அத்தேவைகள் மனிதனைத் தவறான வழியில் தான் கொண்டு செலுத்தும். தார்மீக வழியின் மூலம்தான் மனமும் புத்தியும் கட்டுப்படும்; ஆத்ம வித்தை விருத்தி அடையும், மன உறுதி தூயதாகும்.


ஆத்மாவை அறிந்துணர, நற்பண்பாடு தேவை. அதாவது தீய நாட்டங்கள் அனைத்தையும் வேருடன் கிள்ளியெறியவேண்டும். தலைவனை இழந்த படை எவ்வாறு சரணடைகிறதோ, அதே போல அகங்காரம் அழிவுற்றவுடன், தீய குணங்கள் அனைத்தும் அடிபணிகின்றன.இவையெல்லாம் சினம் என்ற நாட்டின் குடிமக்கள். அந்நாட்டையே அழித்து விட்டால், படைவீரர்கள் யாரும் தலை எடுக்க முடியாது.தீய குணங்கள் எல்லாம் அழிந்த பிறகு எப்படி அகங்காரம் மட்டும் தலையெடுக்க முடியும்? ஆகவே கோபம் என்ற நிலப்பகுதியை அழிப்பதற்கான எல்லா முயற்சிகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், அகங்காரம் தீயகுணம் எதையும் கொண்டு செலுத்த இடம் இராது. ஒவ்வொரு சாதகனும் இத்தீய தலைவரும் படைவீரர்களும் வராமல் தடுத்து நிறுத்தி மனம் என்ற மாநிலத்தை அமைதியில் வைத்திருக்கட்டும். எப்போதும் ஆத்மாவின் புன்முறுவலில் ஒவ்வொரு சாதகனும் மலர்ந்திருக்கட்டும்.

ஆத்மா என்ற இவ்வரசனைக் காண்பதற்கு முன்னர், மனக்கொந்தளிப்புகளும், சலனங்களும் அழிந்திருக்கவேண்டும் என்பது நிபந்தனையாகும். ஆத்மாவின் தர்பாருக்குச் செல்ல, எட்டு கதவுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும்.அவை யமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதியாகும். இத்தகைய எட்டுவித ஒழுக்கக்கட்டுப்பாடுகளால் மனதைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் போது, மன உறுதியை வளர்ப்பது மிகவும் சுலபமாகிறது. இவ்வுறுதி ஆண்டவனின் இயல்பான ஆற்றல். இது அவரது கட்டளை என்றும் கூறலாம். இறைவன் தனது சங்கற்பத்தின் மூலமாக எதையும் சுலபமாகவும், உடனுக்குடனும் நிறைவேற்ற முடியும். ஆனால் மனிதன் முடிவெடுத்ததுமே உடனுக்குடன் நிறைவேற்றிக்கொள்ள முடியாது. இது முடிவறுதியின் (will) வலிமையைப் பொருத்தது.மனிதனிடமுள்ள உறுதி தடங்கல்களை வெற்றி கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றதல்ல. அத்தகைய சக்தியை அவன் பெறும் போது, அது ஆண்டவனின் சக்திக்கு ஈடாகிறது.லயம் அல்லது ஐக்கியம் என்பதன் பொருளும் இதுவேயாகும். இத்தகைய லயம், தியானத்தின் மூலம் சாத்தியமாகிறது. மேற்கூறிய எட்டுக்கதவுகளில் தியானம் ஏழாவதும் சமாதி எட்டாவதும் ஆகும். தியானம் சமாதியை அடைவதற்கான ராஜபாட்டை ஆகும்.

ஆதாரம்: தியான வாஹினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக