தலைப்பு

சனி, 18 ஏப்ரல், 2020

சித்ராவதி எனும் யமுனையில்.. சத்ய சாயி கிருஷ்ணா விநோதனங்கள்!


இறைவன் சத்ய சாயியின் இளவயதிலேயே அவரிடம் வந்து சேர்ந்த, பாக்கியம் நிறைந்த பக்தர்களுள் திருமதி. விஜயகுமாரியும்  ஒருவர். அந்த. காலத்தில் சுவாமியான இறைவன் சத்ய சாயியை காண மிகச் சில பக்தர்களே வருவர். சுவாமி அவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பார். அதிர்ஷ்டம் மிக்க அந்த பக்தர்கள் பெற்ற மறக்க முடியாத, ஆனந்தமான அனுபவங்கள் ஏராளம்!! அவற்றில் சிலவற்றை திருமதி. விஜயகுமாரி இங்கே பகிர்ந்து கொள்கிறார்:

சித்ராவதி நதிக்கரையில் இருந்த மலைமீது அமைந்த கல்பவிருக்ஷத்தின்(புளியமரம்) கீழ் ஒரு பெரிய பாறை இருந்தது. சுமார் இருநூறு பேர் தாராளமாக அமரும் வகையில் இருக்கும். சுவாமியுடன் நாங்கள் அமர்ந்திருக்கும் சமயத்தில், சுவாமியைப் பார்த்தால் பிருந்தாவனத்தில் பசுக்களையும், மேய்ப்பவர்களையும் காக்க மிகப்பெரிய கோவர்த்தன மலையை தன் சுண்டு விரலில் தூக்கிச் சுமந்த யசோதா பாலகனான அந்த கிருஷ்ணனே அமர்ந்திருந்திருப்பது போல் தோன்றும். சாயிநாதன் புளியமரத்திலிருந்து கைப்பிடி இலைகளைப் பறித்து,எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு இலையைக் கொடுத்துக் கைகளை மூடிக் கொள்ள சொல்வார்.சில நொடிகள் கழித்து அவர் சொற்படி திறந்து பார்த்தால், அனைவரது கைகளிலும் சர்க்கரை மிட்டாய், ருத்திராட்சம், பெப்பர்மின்ட் என விதவிதமாக காட்சியளிக்கும்!! மீண்டும் ஒருமுறை அவர் கூறியபடி கைகளை மூடித் திறந்தால், புளிய இலைகளே இருக்கும். அட கடவுளே!! நான் அப்பொழுதே அந்த மிட்டாயை தின்றிருக்க வேண்டும்! "என்ன ஆச்சரியம், எப்படி ஒரே சமயத்தில் இத்தனை பொருட்களை உருவாக்க முடியும்", என விழிகள் அகல அவரை நோக்கும் போது தன் கைகளைத் தட்டி எங்களை சுயநினைவிற்கு மீட்டு வருவார்.


பக்தர்கள் கேட்டதை  கொடுத்ததால் இந்த மரம் கல்பவிருட்சம்(புராணத்தில் விருப்பத்தை நிறைவேற்றும் மரம்- கல்பவிருக்ஷ்மாகும்) என்றே அழைக்கப்பட்டது. சிலசமயம், "இந்த மலையை,யார் முதலில் மூன்று முறை சுற்றி வருகிறோம், என்று பார்ப்போமா?" , என்பார். உடனே நான், எனது மூத்த சகோதரர், டாக்டர்.ஜெயலக்ஷ்மி, கிண்டி லீலாம்மா ஆகியோர் தயாராகி விடுவோம்.


"சரி,ஓடுங்கள்", என்று சொல்லிவிட்டு, நாங்கள்  முதல் இரண்டு சுற்றுகள் ஓடும்வரை, சுவாமி ராஜாவைப்போல் கம்பீரமாக அமர்ந்திருப்பார் மூன்றாவது சுற்றில் எங்களுடன் சேர்ந்து கொண்டு, நாங்கள் முடிக்கும் முன், மூன்று முறை ஓடி முடித்துவிட்டு  பழையபடி தன் இடத்தில் அமர்ந்திருப்பார்.வெற்றி அவருக்கே!!எப்படி இது சாத்தியம்?!! சுற்றியிருக்கும் பிள்ளைகள் கைகளை பலமாகத் தட்டியபடி,தங்கள் தலைவரை தோள்களில் சுமந்து ஆர்ப்பரிப்பர்.

அவரது சக்தி அபரிமிதமானது:

 நினைத்து கூட பார்க்க முடியாத, வார்த்தைகளாலும் விவரிக்க முடியாத அந்த காட்சியை நேரில் காணப் பெற்றது மிகவும் இனிமையான ஒருநிகழ்வாகும். மலையை விட்டு கீழிறங்கியதும், சித்ராவதி நதிக்கரையில் பக்தர்கள் தேர்ந்தெடுத்த ஒரு இடத்தில் மீண்டும் கூடுவோம்.

சிறிது நேரம் பாடுவதிலும், கிருஷ்ண லீலைகளைப் பற்றியும்,சில பக்தர்களின் கதைகளைப் பற்றியும் சுவாமி கூறும் பேச்சைக் கேட்டும் முடித்துவிட்டு, நாங்கள் பசியுடன் இருப்பதால் சுவாமியிடம் எங்களுக்கு  ஏதாவது உண்பதற்கு கொடுக்கும்படி வற்புறுத்துவோம்.அவர் மண் குவியலுக்கிடையே கைகளை விட்டு துழாவி எடுப்பதற்கு முன்பாகவே, மைசூர்பாக்கின் மணம் கமழும். (கடலை மாவு,சர்க்கரை, நெய் முதலியவற்றைக் கொண்டு செய்யும் இனிப்பு பண்டம்) நெய் வழியும் அப்பண்டம் சூடாகவும் இருக்கும். உடனே அத்துண்டுகளை ஒரு தட்டில்  வைத்து , தன் கைகளாலேயே எங்கள்  அனைவருக்கும் பரிமாறுவார்.


 மிகமிக அற்புதமான அந்த சுவையை எப்படி விவரிப்பது!! எத்தனை பேர் இருப்பினும்,சுவாமி கொடுத்து கொண்டே இருக்க, அத்துண்டுகளின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகும்!!


அந்த இனிப்பை உண்டவுடன்,"சுவாமி, அதிகமாக சுவைத்ததால்  திகட்டிவிட்டது. சிறிது காரம் கொடுங்கள், "என்று கேட்போம். அன்பே உருவான நமது சுவாமி, மண்ணில் இருந்து வடையை எடுத்து கொடுப்பார். (எண்ணெயில் பொரிக்கப்பட்ட  ஒரு தின்பண்டம்). அது தேனை விட, தயிரின் சுவையைக் காட்டிலும், சொல்ல முடியாத அளவு சுவையுடன் இருந்தது. அந்த வடைக்கு முன் எதுவும் சுவை குன்றி போகும்.அவர் மண்ணிலிருந்து எண்ணெய் ஒழுக, சுடச்சுட வடைகளை எடுத்த போதும்,சிறு மண்துகள் கூட ஒட்டியிருக்கவில்லை. எப்படி முடியும்?  இவ்வதிசயத்தை எதனாலும் விளக்க முடியாது.மீண்டும் அவர் மண்ணிலிருந்து ருத்திராட்சங்கள், விக்ரகங்கள், டாலர்கள்  மற்றும் புத்தகங்களை எடுத்து யார்யாருக்கு  சேர வேண்டுமோ, அவரவருக்கு வழங்குவார்.

தமிழாக்கம் : திருமதி. கல்யாணி சாய்ராம்

இறைவன் சத்யசாயியால் முடியாதது தான் என்ன! கொடுத்து வைத்த பக்தர்கள் இவர்கள். முன் ஜென்மத்து கோபிகைகள். ஆகவே தான் இப் பெரும் பேறு. இதை வாசித்து மனக் கண்ணில் காட்சியைப் பார்த்து வியப்பது கூட நமக்கான அரும் பெரும் பாக்கியம் அல்லவா.


English interview PART-1


English interview PART-2


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக