தலைப்பு

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | கணேஷ்புரி பகவான் நித்யானந்தா


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

கணேஷ்புரி பகவான் நித்யானந்தா:

மகான்கள் பேரானந்த நிலையை அடைந்தவர்கள். மகான்களின் நிலை மனிதர்களின் நிலையை விட மேன்மையானது.

அந்த பேரானந்த நிலையே இறைவன் சத்ய சாயியாக மனித வடிவம் எடுத்து கீழ் இறங்கி வந்தது.
இதைப் புரிந்து கொள்வது கடினம் .

மகான்களைப் புரிந்து கொள்வதே கடினம். இறைவன் சத்ய சாயியை புரிந்து கொள்வது அதை விட கடினம்.

சரணாகதி அடைந்து இறைவன் சத்ய சாயியை அனுபவிப்பதொன்றே ஒரே வழி.

பகவான் நித்யானந்தா ஒரு பேரற்புத மகான். இவர் பிறந்த தேதி எதுவென எவரும் அறியவில்லை.

இவர் ஒரு பெரிய அவதூதர்...

இறைவன் அனுப்பிடும் தூதுவர்களே அவதூதர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

பாரத பூமி எத்தனையோ அவதூதர்களையும் தன்னகத்தே வைத்து ஆன்மிக அருளாட்சி நடத்துகிறது.

"கோலார் தங்க வயல் எங்கிருக்கிறதோ அங்கே தான் அதை எடுப்பதற்கான சுரங்கப் பொறியாளர்களும் , வேதியல் வல்லுனர்களும் தேவைப்படுகிறார்கள். அதைப் போலவே பாரதத்தில் தான் ஆன்மிகச் சுரங்கம் இருக்கிறது. அதை எடுத்து வழங்கவே மகான்கள் தோன்றுகிறார்கள். ஆன்மத் தேடல் உள்ளவர்களுக்காக உருவாகிறார்கள். அதை அறுவடை செய்ய மிக கவனம் தேவை" என இறைவன் சத்ய சாயியே மொழிந்த சத்திய வாசகம். (சாய் ஸ்மரண் -- பக்கம் 102. ஆசிரியர் - டாக்டர் காடியா)

பகவான் நித்யானந்தா எவர் வயிற்றிலும் பிறக்கவில்லை.. ஞானாநந்த சுவாமிகள் போல இவரும் கண்டெடுக்கப்பட்டார்.
இவர் கிடைக்கப் பெற்ற ஆண்டு 1897.
கிடைத்த ஊர் கோழிகோட் கேரளா.
எடுத்து வளர்த்த தம்பதிகளின் பெயர் சாத்து -- உன்னியம்மா.

ராமன் எனப் பெயரிட்டு வளர்த்தனர்.

தியானம் என்பது இவருக்கு சுவாசம்.
சின்னஞ்சிறு வயதிலேயே இவர் வளர்ப்பு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.


வீடுபேறு பெற வீட்டை விட்டுப் பெயர்ந்தார்.

பரிவ் ராஜக (ஒரே இடத்தில் நிலைபெறாத) யோகியாய் பிஞ்சுப் பருவத்திலேயே தேசாந்தரமாக (தேசம் விட்டு தேசம் சுற்றுவது) வட மாநிலங்கள் சுற்றி வந்தார்.

ஒரு நாடோடியைப் போலவே உடல் அலைந்தாலும்.. உள்ளம் அதே சச்சிதானந்த சத்ய சாயி ஸ்திதி(நிலை)யில் நிலைத்திருந்தது.

ஒரு கூட்டுப் புழு பட்டாம்பூச்சியானால் பறந்துவிடும். பறந்து பூவை அடையும். அது போலவே‌..

இமாலயம் சென்று தவத்தில் ஆழ்ந்தார். பல யோக ஸித்திகள் அடைந்தார்.

1920'ல் கேரளா காஞ்சன்காட் எனும் இடத்தில் ஆசிரமம் அமைத்து தீராத நோய்களுக்கு தனது மகிமைகளால் குணப்படுத்தினார்.

ஊர் மக்கள் திரண்டனர். போற்றினர்.

பிறகு 1923'ல் மகாராஷ்டிர மாநிலத்தில் டான்ஸா நதிக்கரையில் மகிமைகள் புரிய ஆரம்பித்தார்...

தனது வழியாக நடக்கும் மகிமைகளுக்கு தான் ஒரு காரணம் என அவர் ஒருபோதும் சொல்லிக் கொண்டதே இல்லை.

"நடப்பது அதுவாக நடக்கிறது. எல்லாம் இறைவன் சங்கல்பம்" என்கிறார்.

இறைவன் சத்ய சாயியோ
"நானே அந்த இக்கட்டிலிருந்து உன்னைக் காப்பாற்றியது.. நானே அன்று வந்து உன்னை குணப்படுத்தியது" எனச் சொல்வார்.

மகான்கள் இறைவனே காரணம் என்பர்.
இறைவனோ தானே காரணம் என்கிறார்.

இறைவன் சத்ய சாயிக்கும் .. அவரின் தெய்வீகக் கருவிகளான மகான்களுக்கும் இதுவே வித்தியாசம்.

பகவான் நித்யானந்தா எவருக்கெல்லாம் ஸ்பரிச தீட்சை கொடுத்தாரோ (தொட்டாரோ) அவர்கள் எல்லாம் பெரிய மகானாயினர்.

சுவாமி விமலானந்தா... சுவாமி ஷ்ரதானந்தா.. ஸ்வாமி முக்தானந்தா... எனப் பலர்...

கணேஷ்புரி வந்தடைந்த பகவான் நித்யானந்தா அங்கேயே ஆசிரமம் அமைத்து அருள் பாலித்தார்.

சுவாமி முக்தானந்தா இறைவன் சத்ய சாயியை வரவேற்று கட்டிப் பிடித்து எடுத்தப் புகைப்படம் இன்றளவும் கண்கொள்ளா சாட்சிய காட்சி.

குரு நித்யானந்தாவுடன்.. சீடர் முக்தானந்தா | சுவாமிஜி முக்தானந்தாவுடன்... இறைவன் சத்ய சாயி

பகவான் நித்யானந்தா வழி நிகழாத மகிமைகளே இல்லை.

ஒரு பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறார். பேருந்து நடத்துனர் உருவம் பார்த்து ஏற்ற மறுக்கிறார்.

பகவான் ரமணரைப் போல் நித்தியானந்தாவும் கௌபீனம் மட்டுமே அணிபவர்‌.

பேருந்து எந்த நிறுத்தத்தில் எல்லாம் நிற்கிறதோ அங்கே எல்லாம் தோன்றி நிற்கிறார் பகவான் நித்யானந்தா.

அதிர்ச்சியும் .. ஆச்சர்யமும் அடைந்த பேருந்து நடத்துனர் ஏற்றிக் கொள்கிறார்.

ஒரு முறை ரயிலில் பரிசோதகர் பயணச் சீட்டை சரிபார்க்க வர.. பயணச் சீட்டு என்றால் என்ன எனக் கேட்டு .. சரி சரி என்று ஐம்பது பயணச் சீட்டை எடுத்து நீட்டுகிறார்.
பரிசோதகர் வியப்படைகிறார்.

ஒரு சாலை வழி நடந்து கொண்டிருந்த பெண்ணின் இதயம் தீண்டி வேகமாய்ச் செல்கிறார் .. பார்த்தவர்கள் தவறான தீண்டுதல் என பகவானை விரட்ட.. "குணமாயிடுச்சு குணமாயிடுச்சு " எனக் கூக்குரல் இட்டு ஓடுகிறார்.

அந்தப் பெண் ஒரு மார்பக புற்றுநோயாளி.

அவரோ அந்த ஒரே ஸ்பரிசத்தில்  குணமடைந்துவிடுகிறார்.

இப்படி எண்ணற்ற மகிமைகள்.

கணேஷ்புரி நகரில் இருக்கும் 64 குகையிலும் பகவான் தவமிருந்து ஆத்ம சாதகர்களுக்கு அதைக் கண்டெடுத்துத் தருகிறார்.


இவர் ஆன்மிக சொற்பொழிவு என எதையும் ஆற்றியதில்லை.
இவர் உடம்பிலிருந்து வெளியேறிய ஆன்மிக உயர் அதிர்வலைகள் பக்தர்களுக்கும்.. ஆன்மிக சாதகர்களுக்கும் ஆன்ம சாதனையில் ஆழம் போக உறுதுணையாக இருந்திருக்கிறது. (இன்னமும் அவர் சமாதியோ பேசும் அதிர்வலைகளால் ஆன்ம சாதனையை அடியார்க்கு விதைத்துக் கொண்டிருக்கிறது)

1920 களில் பக்தை துளசியம்மா கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்கையில்.. "தான் எதையும் பேசவில்லை... சிதாகாசத்திலிருந்து வார்த்தைகள் எல்லாம் வருகிறது!" என மொழிகிறார்.

அதைத் தொகுத்து "சிதாகாச கீதை" என பிற்காலத்தில் புத்தகமாக வெளியிடுகிறார் துளசியம்மா.

பகவான் நித்யானந்தாவுக்கு தமிழ் தொடங்கி மராட்டி என இந்திய மொழிகள் எல்லாம் தெரியும்.

குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவர்களோடு குழந்தை போல் விளையாடுவார்.
கணேஷ்புரி (மகாராஷ்ட்ரா) சார்ந்த கிராமக் குழந்தைகளுக்கு காலை இலவசமாய் அவரது ஆசிரமத்தில் பால போஜன் என இன்றளவும் உணவு வழங்கப்படுகிறது.


சில நேரம் பகவான் நித்யானந்தா கம்பிளி போர்த்தி இருப்பார்.

ஒவ்வொரு சீடர்களும் அவரின் ஒவ்வொரு ஆசிரமத்திற்கும் பொறுப்பேற்று நடத்தி வருகின்றனர்.

மகான்கள் உடலோடு இருக்கும் போது மட்டுமே இறைவன் சத்ய சாயி யார் என்பதைப் பற்றிய அனுபவம் சொன்னார்கள் .. அவரை நோக்கி ஒரு சிலரை வழிகாட்டினார்கள் என வாசிப்பவர்கள் நினைக்கலாம்.

அது தான் இல்லை.

மகான்கள் தங்களின் சமாதிக்குப் பிறகும் சூட்ச்சும ரூபத்தில் தங்களது சீடர்களை இறைவன் சத்ய சாயியை நோக்கி வழிகாட்டி இருக்கின்றனர்.

அதற்கான பெரிய உதாரணம் பகவான் நித்யானந்தா.

 தலையாய சீடர்களில் ஒருவரான சுவாமி ஷ்ரதானந்தாவை இறைவன் சத்ய சாயியை நோக்கி ஆற்றுப்படுத்தியது பகவான் நித்யானந்தாவே.

1961ல் சமாதி ஆகிறார் பகவான் நித்யானந்தா.

1962ல் ஒரு நாள் பகவான் நித்யானந்தா ஆசிரமக் கிளைகளின் ஒன்றில் (வஜ்ரேஸ்வரி ஆசிரமம்) தியானத்தில் ஆழ்ந்திருந்த சுவாமி ஷ்ரதானந்தாவிடம் "உனக்கு மோட்சம் வேண்டுமென்றால் சத்ய சாயி பாபாவை பார்" என தியானத்தில் பேசுகிறார்.


சுவாமி ஷ்ரதானந்தாவுக்கு பேராச்சர்யமும்...
மோட்சம் கொடுக்கக் கூடிய அளவிற்கு சத்ய சாயி பாபா என்ன இறைவனா எனும் சந்தேகமும்...

டாக்டர் காடியாவை தேடி அவர் நடத்தும் பஜனையில் கலந்து கொண்டு நடந்ததைச் சொல்கிறார்.

அடுத்த நாளே அதிகாலை இறைவன் சத்ய சாயியை நோக்கிய பக்திப் பயணம்.
சுவாமிகளுக்கு அது முக்திப் பயணம்.

சுவாமியை தரிசிக்கிறார் டாக்டர் காடியா "உன்னுடன் அந்த மகான் வந்திருக்கிறார் தானே?" என நம் சுவாமி கேட்கிறார்.

பிறகு அனைவருக்கும் சுவாமியின் நேர்காணல்.

ஷ்ரதானந்த சுவாமிகளை உற்றுப் பார்த்து சுவாமி தனது கைகளைச் சுற்றி அசைக்கிறார்.

உடனே சுவாமியின் கையைத் தடுத்தபடி ஷ்ரதானந்தா  "நீங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுக்கும் அந்த பெப்பர்மின்ட் களுக்காக உங்களைத் தேடி வரவில்லை. வந்த காரணம் மிக மிக முக்கியமானது" எனக் கையைப் பிடித்தபடியே பேசுகிறார்.

டாக்டர் காடியாவுக்கு அதிர்ச்சி. இப்படி சுவாமி விபூதி தருவதை தடுத்துவிட்டாரே என...

பொறுமையே வடிவான இறைவன் சத்ய சாயி.. புன்னகைத்தபடி..
"உன் குரு என்னிடம் உன்னை அனுப்பிய காரணம் தெரியும். நீ காயத்ரி மந்திரத்தை தீவிரமாக சாதகம் செய்து வருபவன். விரைவில் உனக்கு மோட்சம் தருவேன்" என்கிறார்.

பொதுவாக ஆன்மிக சாதகர்கள் என்ன மந்திரம் மானசீகமாய் ஜபிக்கிறார்கள் என்பதை வெளியே சொல்ல அனுமதியே இல்லை.


சில ஆன்மிக சாதகர்களிடம் இறைவன் மொழியும் ஆழமான உரையாடலும் ரகசியமானவையே.

பிரளயம் வரப்போகிறது. நான் தோன்றப் போகிறேன். அது நடக்கப் போகிறது. இது நடக்கப்போகிறது . இதை அனைவருக்கும் சொல் என ஒரு போதும் இறைவன் சத்ய சாயி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கச் சொல்வதே இல்லை.

ரகசியமாகவே சுவாமி பிரபஞ்ச நிகழ்வுகளை எல்லாம்  நடத்துகிறார்.
அது நிகழும் போதே மக்கள் அதை சந்திப்பர்.

ஆன்மிக சாதகர்களுக்கு தங்களின் சாதனைகள் ஆழம் பெற மட்டுமே சில முக்கிய ஆன்மிகக் குறிப்புகளை அவர் அளிக்கிறார்.

அதைத் தாண்டி சில உலகக் குறிப்புகள் வழங்கினாலும்... இரண்டையும் வெளியே சொல்ல சுவாமி அனுமதிப்பதில்லை.

மக்களுக்கே ரகசியங்கள் தெரியாதே தவிற. ஆத்ம சாதகர்களின் சாதனை முறைகள் இறைவனுக்கு தெரியாமல் இருக்குமா?

அனைத்தும் அறிந்த இறைவன் சத்ய சாயி.

உணர்ந்த ஷ்ரதானந்த சுவாமிகள் அழுகிறார்.

 சுவாமியின்
கையைத் தடுத்ததற்காக மன்னிப்பும் கேட்கிறார்.

இப்போது இந்த குழந்தைகளுக்கு பெப்பர்மென்ட் கொடுக்கலாமல்லவா என சிரித்தபடி சுவாமி கேட்கிறார்.

டாக்டர் காடியா மற்றும் அவருடன் வந்திருந்த அனைவருக்கும் சுவாமியுடன் நேர்காணல் நிகழ்கிறது.

டாக்டர் காடியாவிடம் "அந்த மகானுக்கு நிச்சயாக மோட்சம் கொடுப்பேன். கவலைப்படச் சொல்லாதே. அவர் இப்போது என்னை உணர்ந்து கொள்வார். அவரை வரச் சொல்" என்ற சுவாமி டாக்டர் காடியாவை வெளியே அனுப்புகிறார்.

நேர்காணல் அறை.
இறைவனும் அந்த மகானும் மட்டுமே நேருக்கு நேராய் நிற்கின்றனர்.

சுவாமி தனது சட்டையின் பொத்தான்களைக் கழட்டி மார்பைத் திறந்து ஷ்ரதானந்த சுவாமிகளுக்கு காட்டுகிறார்.



ஒரே வெளிச்ச வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
அதில் தனது குருவான பகவான் நித்யானந்தாவை தரிசனம் செய்கிறார் ஷ்ரதானந்தா.

"ஓ பகவானே நீங்கள் இங்கே தான் இருக்கிறீர்களா! என்னை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்" என
இறைவன் சத்ய சாயியின் இரு பாதங்களிலும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறார் சுவாமிகள்.

பிறகு டாக்டர் காடியா குழுவினர் உள்ளே அழைக்கப்படுகிறார்கள்.

சுவாமி டாக்டர் காடியாவுக்கு ஒரு பதக்கம் சிருஷ்டி செய்து இதில் என்ன தெரிகிறது என்கிறார்.


பகவான் சத்ய நாராயணா..

"அவரின் இதயத்தில்?" இது சுவாமி

"ஷிர்டி பாபா..."  இது காடியா

"அவரின் இதயத்தில்?"

"நீங்கள் தான் சுவாமி!"

"எனது இதயத்தில்?"

டாக்டர் காடியா சுவாமியின் மார்பைப் பார்க்கிறார்.

"இங்கே இல்லை. அந்தப் பதக்கத்தில்..."
என சுவாமி சிரிக்கிறார்.

"எனக்கு தெரியவில்லை சுவாமி மன்னியுங்கள்" என்கிறார்.

"உங்களுக்கு தெரிகிறதா?" இது சுவாமி

அழுத கண்ணீரைத் துடைத்தபடி

"எனக்கு நீங்கள் தான் தெரிகிறீர்கள் இறைவனே" என ஷ்ரதானந்த சுவாமிகள் பதில் மொழிகிறார்.

சத்ய சாயியே இறைவன் என பகவான் நித்யானந்தாவின் தலையாய சீடர் உணர்ந்து கொள்கிற உன்னத தருணம் அது.

சுவாமியே "அது கருப்பு மலர்.. தென்னகத்தில் மலரும்.. நீ பார்த்திருக்கிறாயா.?" என காடியாவிடம் கேட்கிறார்.

"ஆம் சுவாமி"

அந்தப் பையன் நான் தான்.
பிரேம சாயி பாபா.

இந்தப் பதக்கத்தைத் தலைகீழாகப் பார்.

திருப்பிக் காட்டுகிறார்.


"எனது கேசம் கருப்பு மலராகவும். அந்தக் கருப்பு மலர் எனது கேசமாகவும் தோற்றமளிக்கிறதல்லவா?" எனக் காவியம் பேசுகிறார் கடவுள்.

(ஆதாரம் : (விரிவாக -- "சாய் ஸ்மரண்" பக்கம் 98. ஆசிரியர் டாக்டர் காடியா.) சுருக்கமாக : Sadhana -- Inward path Sai Spiritual Showers )

கருப்பு மலர் மீது இறைவன் பிரேம சாயி வீற்றிருப்பது .. கருப்பு நிறக் குறியீடான இருட்டுக் கலியின் அட்டகாசங்களை பேரன்பு வெளிச்சத்தால் மாற்ற அவதரிக்கும் நுட்பப் படிமமாகவே அடியேனுக்கு அந்த அற்புதப் பதக்கம் தோன்றியது.

நேர்காணல் முடிந்து வெளிவருகையில் தனது குருவான பகவான் நித்யானந்தாவின் தரிசனம் குறித்து டாக்டர் காடியாவிடம் பகிர்ந்து சத்ய சாயி சாட்சாத் இறைவனே என தானுணர்ந்த சத்யப் பேரனுபவத்தைப் பேசுகிறார்.

பகவான் நித்யானந்தா இப்படி தனது சீடர்களை வழிநடத்துவாரா? என அவரின் வாழ்க்கைக் குறிப்புகளில் ஆழம் போன போது ...
சுவாமி சங்கல்பத்தில் ஆச்சர்யப்பட வைத்தது இந்த வரிகள்...


"இதைச் செய்.. அதைச் செய்.. இதைச் சாப்பிடு.. அதைச் சாப்பிடு.... இங்கே போ.. அங்கே போ" என்பதாக மட்டுமே சீடர்களுக்கான அவரது வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் அமைந்தன...
ஒரு சில வேளையில் தான் தன்னையும் மீறி சில ஆன்மிக நுட்பக் குறிப்புகள் மொழிவார்" என்கிறார் துளசியம்மா.

இது அவரது இணையதளத்திலேயே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. (www.nithyandatradition.org)

தனது சீடர்களில் ஒருவரான விமலானந்தாவை மூகாம்பிகை ஷேத்திரம் போய்த் தங்கச் சொல்கிறார்.
அவரோ குருவைப் பிரிய மனமின்றி மறுக்கிறார்.
கம்பளியை வீசி எறிந்து இதுவும் நானே எடுத்துச் செல் என்கிறார் பகவான் நித்யானந்தா ...

இப்படியே அவரின் வழிகாட்டுதல்கள் தொடர்கின்றன...

"எப்படி சிறு சிறு நதிகள் கடலில் கலந்து போக கவனமாகச் செல்கிறதோ..அதைப் போல் நாம் உள்மூச்சில் கவனம் கொண்டு பரம்பொருளோடு கலக்க வேண்டும்" (சிதாகாச கீதை -- 58)

"எவன் ஒருவன் வேண்டுதலோடு தவம் செய்கிறனோ ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவன் எதுவும் அடைவதில்லை. எவன் ஒருவன் வேண்டுதலோ.. எதிர்பார்ப்போ இன்றி ஒரு நாழிகை தவம் செய்தாலும் அவன் இறைவனோடு ஒன்றிப் போய்விடுகிறான்" (சிதாகாச கீதை -- 66)

"யார் சத் சித் ஆனந்தமாய் இருக்கிறாரோ .. யார் பேரமைதியின் விருட்சமாக திகழ்கிறாரோ... அவரே சுவாமி. அந்த மர நிழலில் நாம் அடைக்கலமாக வேண்டும்"
 (சிதாகாச கீதை -- 77)

பகவான் நித்யானந்தா மேற்சொன்ன கீதையின் வழியிலேயே தனது சீடர் ஷ்ரதானந்தாவை நம் சுவாமியிடம் ஆற்றுப்படுத்தினார் என உணர முடிகிறது.

நித்தியமான ஆனந்தம் அடைய.. எந்தவித வேண்டுதலுமின்றி ஆன்ம சாதனை புரிந்து பகவான் நித்யானந்தாவைப் போற்றியபடி அவரின் வழிகாட்டுதலின் பேரில் நம் சுவாமியான ஒரே இறைவன் சத்ய சாயி எனும் பேரனுபவம் எய்தி முக்தி அடைய...

 பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக