தலைப்பு

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

சர்வாந்தர்யாமி இறைவன் ஸ்ரீ சத்ய சாயி - திரு கே. சுரேஷ் (Alumnus, SSSIHL, Prasanthi Campus)


நான் எங்கும் நிறைந்திருப்பவன் - ஸ்ரீ சத்ய சாயி
(நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடு மனிதர்களுக்குத் தானே அன்றி பரம்பொருளுக்கு அல்ல.)

அது 1990 ஆம் ஆண்டு மழைக்காலத்தின்  அமைதியானதொரு மாலைப்பொழுது. பகவான் சத்திய சாயி பக்தர்களுக்கென தனது வழக்கமான தரிசனத்தை தந்து விட்டு சில பக்தர்களை தனது நேர்காணல் அறைக்குள் அனுப்பி வைத்தார். அங்கிருந்த மாணவர்கள் ஸ்வாமி வெளியில் வந்து தங்களுடன் சில நேரம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அப்போது ஆச்சரியப்படும் வகையில் திடீரென அங்கே வீசிய குளிர் தென்றல் மழைச்சாரலின் வருகையை அறிவித்தது.


அது சாய் குல்வந்த் ஹால் இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத சமயம். வெய்யிலின் தாக்கத்தில் அவதிப்பட்டவர்கள் அந்த மழைச் சாரலை தங்களுக்கு கிடைத்த நிவாரணமாக வரவேற்றனர். ஆனால் அதுவே மாணவர்களுக்கு மந்திரின் முகப்பு வாசலுக்கு விரைந்து சென்று இடத்தை பிடிக்கத் தூண்டியது. அந்த இடம் சுவாமியின் நேர்காணல் அறையின் கதவிற்கு மிகவும் அருகில் இருந்ததால், சுவாமி தன் அறையை விட்டு வெளியே வரும்போது அவரது பார்வை நம்மீது நிச்சயம் படும் என்ற உத்தரவாதமும் இருந்தது. நான் அப்போது எம்பிஏ இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் என் அருகிலிருந்த சகோதரருக்கும் நல்லதொரு இடம் கிடைத்தது. அங்கிருந்து  நாங்கள் பஜன் ஹாலில் இருந்த சுவாமியின் சிம்மாசனத்தை நன்றாகப் பார்க்கும் வண்ணம் இருந்தது.


மழை நிற்பதாக தெரியவில்லை. எனவே நானும் சுவாமி ஆப்பிரிக்கா நாட்டில் நிகழ்த்திய அற்புதத்தை விவரிக்கும் புத்தகம் ஒன்றைப்  படிக்க ஆரம்பித்தேன். அதில் குறிப்பாக ஒரு சம்பவம் என் கவனத்தை ஈர்த்தது. பக்தர்கள் இருவர் காரில் துரித வழித்தடத்தில் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் கார் ஓரிடத்தில் பெருத்த விபத்துக்கு உள்ளாகியது. காரில் இருந்த இரு பக்தர்களும் வெளியில் இருந்த புதர் ஒன்றில் தூக்கி எறியப்பட்டனர். கார் கூழாகிப் போனது. அத்தகைய விபத்திலிருந்து அந்தக் காரில் பிரயாணித்த இருவரும் உயிரோடு இருப்பதற்கான வாய்ப்புகளே கிடையாது. இருப்பினும் ஆபத்திலிருந்து காப்பாற்ற வேண்டி கடைசி நேரத்தில் இருவரது உதடுகளும் நம் சுவாமியின் பெயரை உச்சரித்தது. சாய்ராம் என்னும் நாம மகிமையால் இருவரும் அந்த விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டனர். பக்தர்கள் இருவரும் மௌனமாக தங்களது நன்றியை அங்கே உடனடியாக பிரத்யக்ஷமான சுவாமிக்கு தெரிவித்தனர். இந்த அற்புதத்தில் நான் நெக்குருகி என் மகிழ்ச்சியை அருகில் அமர்ந்திருந்த சகோதரனிடம் பகிர்ந்து கொண்டேன். "இதைப் படித்தாயா...நம் ஸ்வாமி ஆப்பிரிக்காவிலும் இருக்கிறார்" என்று அடக்க முடியாமல் கூறிவிட்டேன்.


சிறிது நேரம் கழித்து சுவாமியின் நேர்காணல் அறையின் கதவுகள் திறந்தன. ஸ்வாமியும் வெளியே வந்து முகப்பு வாசலுக்கு மேலே இருக்கும் வராண்டாவில் நின்று கொண்டார். பின்னர் எங்களைக் கடந்து செல்லும் போது என்னையும் என் சகோதரனையும் சில வினாடிகள் பார்த்தார். ஸ்வாமியை நான் மிகுந்த மரியாதையோடு பார்த்தேன். திடீரென ஸ்வாமி எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் அவர் நடந்து செல்ல வழி விடுமாறு சொன்னார். அவ்வாறே அனைவரும் நெரிசலாக அமர்ந்திருந்த அந்த வராண்டாவில் அவர் நடப்பதற்கு வசதியாக சற்று வழிவிட்டனர். நான் சற்று சுதாரித்து கொள்வதற்குள் ஸ்வாமி என்னிடம் நேராக வந்து என்னை தாண்டியும் சென்றார். அச்சமயம் என் கண்களை கூர்ந்து பார்த்து "எரும மாடு !! வராண்டாவில் உட்கார்ந்து கொண்டு நீ பேசற".


பின் சிறு இடைவெளி விட்டு பேசத் தொடங்கினார்... நான் இங்கேயும் இருக்கேன். ஆப்பிரிக்காவிலும் இருக்கிறேன். எங்கும் இருக்கிறேன். இப்படி சொல்லி விட்டு தான் எதுவுமே சொல்லாதது போல மேற் கொண்டு சென்று விட்டார்.

இதற்கு மேலும் எனக்கு எதுவும் பேசத் தான் முடியுமோ?!!

ஆதாரம்: http://media.radiosai.org/journals/Vol_04/01FEB06/Sweet-memories.htm
மொழிமாற்றம்: R. வரலட்சுமி, குரோம்பேட்டை, சென்னை. 

1 கருத்து: