தலைப்பு

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

வங்காள ராய் தம்பதியரின் சாயி அனுபவங்களும்... திடீர் திருப்பம் நிறைந்த பயணங்களும்!

வங்காளத்தை சேர்ந்த ஒரு தம்பதியரை எவ்வாறு சுவாமி அருகழைத்துக் கொண்டார் என்பதும் .. அவர்கள் சாட்சியாக இருந்தபடி எத்தனை மகிமைகளையும், ஞானத்தையும் அடைந்தார்கள் என்பதும் சுவாரஸ்ய திருப்பங்களாய் இதோ...


சென்னையில் சுவாமியை தரிசித்துவிட்டு வந்த ஹரிஹரன் தம்பதிகள் மூலம் சுவாமியின் மகிமைகளை கேள்விப்பட்டு தாங்களும் தரிசிக்க வேண்டும் எனும் ஆவல் பெறுகிறார்கள் இந்த ராய் தம்பதிகள். ஹரிஹரன் கொடுத்த சுவாமி புகைப்படத்தையும் வாங்கி வீட்டை அலங்கரிக்கிறார்கள். சுவாமி வழிபாட்டை அருகிலிருக்கும் இடங்களிலும் தொடர்கிறார்கள். தரிசன ஆவல் பெருகுகிறது. அங்கே கஸ்தூரி இருக்கிறார் அவரிடம் எழுதி கேட்டு விட்டு தரிசிக்க செல்லுங்கள் என ஹரிஹரன் அறிவுரை கேட்டு நடக்கிறார்கள். சுவாமி செப்டம்பர் மாதம் இருப்பார்.. 

நீங்கள் வரலாம் என தந்தி வருகிறது. மகிழ்கிறார்கள். பயண ஏற்பாட்டுக்கான ஆயத்தப்படுகிறார்கள். சார் தந்தி என மீண்டும் பர்த்தி ஓலை... ராய் தம்பதியரில் மனைவி ரீட்டா தந்தியை பிரிக்கிறார்.. "பாபா பிராயணத்திற்கு கிளம்பிவிட்டார்" எனும் செய்தியில் நிராசையாகிறார்கள் இருவரும்... பிரசாந்திக்கு ஃபோன் செய்தும் பலன் இல்லை... 2 வாரங்கள் கடக்கின்றன... 

        செப்டம்பர் 22 ஆம் தேதி ஒரு சாயி அன்பர் சொல்லி கிளம்பிவிடுகிறார்கள். ரயில் பயணம். இருவர் அமரும் கூப்பே. சுவாமி படம் வைத்து ஊதுபத்தி ஏற்றி பஜனையை ஆரம்பிக்கிறார்கள்.ராய்க்கு கடும் இருமல் தொற்று ஏற்படுகிறது... டிடிஆர் மருந்து கிடைப்பது கடினம் என்கிறார்.. ஒரு நிறுத்தத்தில் இளைஞன் ஒருவன் மருந்து கொடுத்து விட்டு இவர்களின் நன்றியை கூட பெறாமல் ஓடிப் போகிறான்... அந்த மருந்து இவர்கள் அந்த இருமலுக்கு வாங்கும் அதே மருந்து.. 

ஒரு வேளைக்கு இருக்கிறது. அதிகாலை சென்னை வந்திறங்கியதும்.. பெங்களூர் செல்வதற்கு முன் மருந்து கடை தேடுகிறார்கள்.. அந்த அதிகாலை யார் திறப்பார்கள் என்கிறார் அழைக்க வந்தவர்.. ஒரு மருந்து கடை திறந்திருந்தது.. உள்ளே கேட்க விரைந்தால்.. இன்னும் பத்து நிமிடம் கடந்து வந்திருந்தால் சாற்றியிருப்பேன்.. வேறு விஷயமாக இப்போதே திறந்தேன் என்கிறார்.. மருந்து வாங்கி பறந்து போகிறார்கள் பெங்களூர்.. அங்கிருந்து பர்த்தி.. சுவாமி மருந்தை தந்ததோடு மருந்து கடையையும் திறக்க வைத்தது ராய் தம்பதியினருக்கு மெல்ல மெல்ல புரிகிறது!

பர்த்தியில் சாந்தி பவன் ஹோட்டல்.. சாணியால் மெழுகிய மண் தரை தான்.. சொகுசை அனுபவிக்க நினைத்தால் சுவாமியை எவ்வாறு அனுபவிப்பது? கதவுக்கு பூட்டு கூட இல்லை.. சுவாமி பார்த்துக் கொள்வார் என தரிசனத்திற்கு விரைகிறார்கள்... பூட்டாத இதயத்தை சுவாமி பாதுகாக்கின்ற போது பூட்டாத அறையை சுவாமி பாதுகாக்க மாட்டாரா?!...

தரிசன கூட்டம். நிசப்த அமைதி. இவர்களுக்கு முன்னே நிறைய பேர் நிரம்பி வழிகிறார்கள். அந்த பேரமைதியை கலைக்கிறது பேரிரைச்சல் தரும் அதே இருமல். பக்தர்களுக்கு தொந்தரவாக இருக்குமே என நீட்டா கவலைப்படுகிறார்.

சுவாமி வருகிறார். நீட்டாவை நோக்கி நெருங்குகிறார்... கண்குளிர தரிசிக்கிறார். பின் பஜனையில் கலந்து கொண்டு ஆரத்தி ஏற்கிறார் சுவாமி. மறுநாள் கஸ்தூரியிடம் கேட்கிறார்கள்.. அவரோ நவராத்திரி முடியும்வரை தனிப் பேட்டி இருக்காது.. மற்றபடி சுவாமி சங்கல்பம் என்கிறார். காலை தரிசனம் முடிகிறது. சுவாமி அழைக்கவில்லை...இவர்களோ வினாக்குறியோடு நிற்க.. சிறிது நேரத்தில் கஸ்தூரி குஜராத்தி மற்றும் வங்காள தம்பதியரை அழைக்கிறார் என கூப்பிடுகிறார். எதிர்பாரா நேரத்தில் அருள்வதே சுவாமி மகிமை. 

                 கட்டுக்கடங்கா ஆவல். அது நேர்காணல் அறை. சுவாமி கேட்கிறார்.. "எப்போது கிளம்புகிறீர்கள்? நாளை கிளம்பலாம்" என்கிறார். நம் திரும்பும் திட்டம் சுவாமிக்கு தெரிந்திருக்கிறதே என வியக்கின்றனர்... சுவாமி தாங்கள் கிளம்பச் சொல்லும் போது கிளம்புகிறோம் என்கிறார் பவ்யமாக.. ராய் சுவாமிக்காக காலியான ஒரு புது சந்தனப் பெட்டி வாங்கி வந்து மறைத்து வைத்திருக்கிறார்.. நீட்டாவோ எதுவும் சுவாமி தரமாட்டாரா என காத்திருக்கிறார். சுவாமி அந்த சந்தனப்பெட்டியை நீட்டாவிடம் கொடு என்கிறார்.. ராய் தருகின்ற போது.. பெட்டியின் உள்ளே விபூதி நிரம்பி இருக்கிறது.. இருவருக்கு ஆச்சர்ய ஆனந்தம்..பேச முடியவில்லை.. நீர் கண்களை முகாமிடுகிறது..  

             சுவாமியோ "என்னிடம் எதுவும் சொல்ல வேண்டாம்.. எனக்கு எல்லாம் தெரியும்... நீங்கள் நோயினால் பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள்.. உனக்கு குழந்தை இல்லை.. அப்படித் தானே ... குழந்தை பிறக்கும்" என இருவரையும் பார்த்து அவர்களின் இதயத்து உதடாய் பேசுகிறார்.

 நீட்டா நெடிதாய் கண் கலங்குகிறாள். நீங்கள் நாளை வரலாம் என வழி அனுப்புகிறார்...பிறகு கஸ்தூரி அவர்கள் தனது வீட்டிற்கு அழைக்கிறார்.. வீட்டிற்கு அவர்கள் சென்ற அடுத்த நொடி சுவாமியிடம் சாற்றப்பட்ட பூமாலை இரண்டு பக்கத்திலும் அறுந்து விழுகிறது.. சுவாமியின் தெய்வீக இருப்பு என்கிறார் கஸ்தூரி.. பரவசமாகிறார்கள் இருவரும்...

 மணல் சூழ்ந்த பிரசாந்தி.. மாலை தரிசனம்.. சுவாமி நிழலுக்கு செல்லுங்கள் என கருணையோடு சொல்கிறார்... அதில் இவர்களும் இருக்கிறார்கள்.. சாயி கீதா சுவாமி மேல் பேரன்பை கண்ணால் தரிசிக்கிறார்கள்... தரிசித்த பிறகு அறைக்கு வருகிறார்கள்... தினமும் காலையில் எழுந்து படி என்பதோடு மட்டுமல்லாமல் தினந்தோறும் கதவு தட்டி எழுப்புகிறார் சுவாமி எனும் அனுபவத்தை பக்கத்து அறையில் வசிக்கும் மங்களூர் காமத் எனும் எளிய விவசாயி... தனது மகனுக்கு நடந்த அனுபவத்தை பகிர்கிறார்.. பரவசப்படுகிறார்கள் ராய் தம்பதிகள்... ஐந்து நாள் தங்கியிருப்பதாக வந்திருக்க.. வேறொரு வேலை நிமித்தமாக முன்பே கிளம்பிவிட திட்டமிடுகிறார் ராய்.. கஸ்தூரியிடம் கடிதம் தருகிறார்.. சுவாமி அதை வாங்காமலேயே இன்னும் அவர்கள் தங்கட்டுமே... ஏன் அவசரப்படுகிறாய்? என தடுக்கிறார்... நாலாவது நாள் முடிகிறது.. சுவாமி விடை கொடுக்கிறார். மனதை பிரசாந்தியில் விட்டுவிட்டு பிரிய மனமின்றிப் பிரிகிறார்கள். பசுவைப் பிரியும் கன்றாய்.. கண்களைப் பிரியும் கண்ணீராய் விலகுகிறார்கள்..

பெங்களூரிலிருந்து மைசூர். காவேரி இரண்டாம் பாலத்தில் ஓர் குடில். அதில் இறங்குகிறார்கள். முன் வாசல் பூட்டியிருக்கிறது. வேறு வழியாக ஒருவர் அழைத்து செல்கிறார். அங்கே நாடி வைத்த ஹால்கப்பா இருக்கிறார்.. அவரே தன் குடிலுக்குள் அழைத்துச் செல்ல சுவாமி அற்புதம் நிகழும் அறையை காட்டுகிறார்.. மழை விபூதி யாக குங்குமமாக பொழிந்திருக்கிறது.. தேன் அமிர்தம் போன்றவை வழிந்திருக்கிறது. எப்போதுமே சுவாமி புகைப்படம் புகைப்படமே அல்ல .. அது சுவாமி தான் எனும் சத்தியம் உணர்கிறார்கள் ராய் தம்பதிகள். அவர்கள் தம்மைப் பற்றி சொல்ல... ஹால்கப்பா தன்னைப் பற்றி சொல்கிறார்..

இந்த இதே சுவாமி புகைப்படம் என காட்டிய படி பேச ஆரம்பிக்கிறார் அவர்.. அதை எடுத்துக் கொண்டு கையெழுத்திட்டு தாருங்கள் என சுவாமியிடம் கேட்டிருக்கிறார் அவர்.. சுவாமி அதை உற்றுப் பார்த்து சிரித்தபடி நகர்ந்திருக்கிறார்.. பிறகு சுவாமி கையெழுத்து இடாத அந்தப் படத்தை ஃபிரேம் செய்து வைக்க.. ஓரிரு நாட்களில் புகைப்பட ஃபிரேமுக்குள் சுவாமி கையெழுத்து தோன்றியதை இவர்களுக்கு காட்டுகிறார்.. சுவாமி படத்தை பரவச கண்ணீருடன் தொட்டு தொட்டு வணங்குகிறார்கள்..

பிறகு ஒருமுறை நவராத்திரிக்கு சுவாமி தரிசனம். ராய் தம்பதிகள். பர்த்தி விஜயம். காளி பூஜை வங்காளிகளுக்கு மாத்திரம் அல்ல அனைவரும் கலந்து கொள்ளலாம் என சுவாமி அழைக்கிறார்.. நீட்டாவோ சுவாமி ஹஸ்பெண்ட் அங்கே மணலில் அமர்ந்திருக்கிறார்.. அவரையும் அழைக்கவா ? என கேட்க.. சுவாமி முதுகு வளைத்து சிரித்தபடி "பெண்ட்"டா? (Bend) என கேட்க.. அது பாண்ட் (bond) என திருத்துகிறார்.. அந்த திருத்தம் இந்தக் காலக்கட்டத்திலும் தேவைப்படுகிறது.

  ஒருவரிடம் பேசும் போது.. ஷீத்தல் என்றால் என்ன சுவாமி அருகிருந்த நீட்டா வை கேட்க சுவாமி "குளிர்ச்சி" என்கிறார்.. தினந்தோறும் கங்கையையும் யமுனையையும் நினைத்து குளிக்கச் சொல் உடல் எரிச்சல் தணியும் என ஒரு பெண்ணியின் கணவருக்கு சொல்வது.. அனைவருக்கும் பெரிய வைத்தியக் குறிப்பாகிறது,!

  இப்படி தரிசன வரிசையில் இருப்பவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார். பக்தி என்றால் என்ன ? என கேட்கிறார்.. ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்ல.. முழுமையான அன்பு தான் பக்தி.. அந்த பக்தி நிபந்தனை அற்றது! என்கிறது..

  ஒருவரைப் பார்த்து உன் பெயர் என்ன? எனக் கேட்கிறார்.. தேஜேந்தர் என அவர் சொல்ல.. நல்ல பெயர்.. தேஜஸ் என்றால் தெய்வீக ஒளி என்கிறார்.. உன் மனைவியின் பெயர் என்ன? என சுவாமி கேட்க... திருமணம் ஆகாத அவனுக்கு வெட்கமாகப் போய்விடுகிறது.. உனக்கு அழகான பெண் மனைவியாக வருவாள். அவளிடம் அதிக அளவு அன்பு செலுத்துவாய்.. இப்படித்தான் என ஒரு சம்பவ கீதை பகிர்கிறார் சுவாமி... கல்யாணம் ஆன புதிதில் மனைவியின் கால்களில் முள் குத்தினால் முள்ளுக்கே திட்டு விழும்.. காலம் போகப் போக அதே முள் மீண்டும் அதே மனைவியை குத்தினால் முள்ளுக்கு பதிலாக மனைவிக்கே திட்டு விழும்.. இவ்வளவு தான் மோகமும்.. காமமும்...அலுத்துப் போகும் என்கிறார் சுவாமி. 

  தான் எப்போதும் தங்களையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என ஒரு பக்தர் சொல்ல.. என்ன நல்ல காரியம் செய்கிறாய்? என‌ சுவாமி கேட்டு ... நல்ல காரியத்தோடு கூடிய பக்தியே மேன்மை தரும் என்கிறார். 

  ஒரு படிக்கும் மாணவியிடம்.. உன் கடமை என்ன ? என சுவாமி கேட்க.. ஒழுங்காக படிப்பது! என பதில் சொல்ல.. அது மட்டுமல்ல என..

  "மாத்ரு தேவோ பவா

  பித்ரு தேவோ பவா

  ஆச்சார்ய தேவோ பவா" இதுவே மிகுந்த முக்கியம் என்கிறார் சுவாமி.. 

  இவை அனைத்தையும் அருகிருந்து கண்டு கேட்கும் கொடுப்பினை பெறுகிறார் ராய். கீதையாவது அர்ஜுனனுக்கு மட்டுமே சுவாமி உபதேசித்தார்.. ஆனால் இந்த முறை அதே கீதையை யுகத்திற்கு தகுந்தாற் போல் எளிமைப்படுத்தி அதை அனைவருக்குமானதாகி விட்டார்!

சுவாமி உங்கள் பாதத்தை பூஜிக்க வேண்டும்?

ஏன்?

எனக்கு பிறந்த நாள் வருகிறது சுவாமி.. அன்றைய நாளில்...

உனக்கு பிறப்பு ஏது? இறப்பு ஏது.. நீ அனாதியான ஆன்மா.. என்கிறார் சுவாமி..

இது ராய்க்கு சாய் அளித்த கீதோபதேசம்!

பர்த்தியிலிருந்து கிளம்ப வேண்டிய நேரம் வருகிறது.. ராய் தம்பதியினரையும் சுவாமி நேர்காணலுக்கு அழைக்கிறார்...

நீட்டா வை பார்த்து "அம்மா.. உன் கணவனுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது..ஆகவே இங்கு வந்தான்.. கஷ்டம் வந்தால் தான் மனிதன் கடவுளையே நினைக்கிறான்.. இப்போது இங்கே தங்கிய நாள்வரை அவன் மருந்தே எடுத்துக் கொள்ளவில்லை.. சரியாகிவிடும்.. உடல் மேல் உறவு மேல் பற்று இருக்கிறது.. ஆகவே தான் அவன் அவதிப்படுகிறான்.." என்கிறார் சுவாமி.

பிறகு நீட்டா வின் தலை மேல் கை வைத்து "உனக்கு தூய்மையான மனம் இருக்கிறது.. அதை கவலைகளால் நிரப்பாதே! இதயம் எனக்கான நெய்வேத்யப் பொருள்.. அது குப்பைத்தொட்டி அல்ல" என உயர் ஞானம் போதிக்கிறார் சுவாமி.

நாங்கள் கிளம்பலாமா? என ராய் கேட்க..

இது எனது இடமல்ல.. உங்கள் இடம்.. தாய்வீடு... நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. போகலாம் என சுவாமி வாத்ஸல்யம் பேசுகிறார்.

அன்றைய மாலை தரிசனத்தில் மணலில் அமர்ந்தபடி ராய் தனது கைவிரலால் தாமரையை வரைந்து "சுவாமி இதில் நீ வந்து நின்றால்.. என் பக்தியை ஏற்றுக் கொண்டாய் என புரிந்து கொள்கிறேன்" என மானசீக வேண்டுதல் விடுக்க... தரிசனம் கொடுக்க வந்த சுவாமி தனது முதல் வேலையாக அந்த தாமரையில் எழுந்தருள்கிறார்... தாமரைத் தடாகமே இதயத்தில் சரிந்தது போல் ராய்க்கு பரவச உணர்வு.. புன்னகை செய்து திரும்புகிறார் சுவாமி.. அன்று புண்டரீகன் விட்டெறிந்த செங்கல் மேல் நின்றவர் தானே சுவாமி.. இந்த மணல் கோலத்தில் நிற்காமலா போயிருப்பார்?! 

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 84 -- 106/ ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


சுவாமி சங்கல்பம் என்பது வஜ்ர சங்கல்பம்.. அதுவே பக்தர்களை காப்பாற்றி பிறவாமை எனும் கரை சேர்க்கிறது! நாம் செய்ய வேண்டியதெல்லாம் சுவாமியிடம் முழுமையான சரணாகதி மட்டுமே!!

  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக