பக்தர் கேட்டவை பாபா அருளியவை
பாபா: தர்மம் என்ற சொல் கடமையை குறிப்பதல்ல. கடமையை செய்வதில் சுதந்திரம் என்பதில்லை. அறிவைப் பயன்படுத்தும்போது அதில் சுதந்திரம் இருக்கிறது; மதம் சார்ந்த செயல்களில், விவேக விளக்கம் கூடிய கடமை இருக்கிறது.தர்மம் என்பது மதச் சார்புடன் கூடிய செயல்களை குறிக்கும். அந்த சொல்லிலேயே, கடமை மற்றும் விவேக விளக்கம் என்ற ஒருங்கிணைந்த உட்பொருள் இருக்கின்றன.
பக்தர்: இறைவனின் இரண்டு வெவ்வேறான வெளிப்பாடுகளுக்கு நாம் மரியாதை செலுத்துவதென்பதில், சில கஷ்டங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஸ்ரீ அரவிந்தரின் ஆசிரமத்திலிருக்கும் அன்னையையும், இங்கு சுவாமியையும் சொல்லலாம்.
பாபா: இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று, இறைவனை எங்கும் எதிலும் காண்பது; இதனால் வேறுபாடு என்ற பிரச்சினைக்கு இடமே இல்லை. மற்றவழி, ஒருவன் ஒரு குறிப்பிட்டவரின் மீது தீவிர பக்தி செலுத்தி, அந்த பக்தியினால் ஆனந்தமடைவது. இந்த இரண்டாவது வழியில், ஒருவன் தீவிர கட்டுப்பாட்டுடன், அந்த குருவைப் பற்றிக் கொண்டு, மற்ற குருக்களிடம் எதுவும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது.
ஒருவன் ஒரு காரிய சித்திக்காக உழைக்கும் பொழுது, அந்த உழைப்பிலேயே முழு கவனமும், முழு முயற்சியும் செலுத்த வேண்டும். அப்படி உழைக்கையில் இறைவனைப் பற்றியும் கூட நினைத்துக் கொண்டிருக்க தேவையில்லை. இதில் பொதிந்துள்ள உண்மை என்னவென்றால், எதையுமே இறைவனுக்காக அர்ப்பணிக்கும் மனோநிலையும், காரியம் செய்வதென்பது அதன் பலனை அடைவதற்காக அல்லாமல் அக்காரியம் செய்வது நம் கடமை என்றறிந்து, அதை செவ்வனே செய்வதாகும்.
பாபா: ஆன்மீகத் தேடலில், நம் படகை காற்று வீசும் திசையில் செலுத்தும் பொழுது, மிகத் துரிதமான முன்னேற்றம் ஏற்படுகிறது. காற்று வீசும் திசைக்கு எதிராக நம் படகு பயணித்தால், முன்னேற்றம் மந்தமாகவே இருக்கும்.
பக்தர்: நல்லது சுவாமி. இதில் சிக்கல் என்னவென்றால், காற்று எத்திசையில் வீசுகிறது என்பது நமக்கு புரியாதது தான்.
பாபா: அது உண்மையில் மிகவும் எளிய காரியம். விடாமல் பழகியபின், கார் ஓட்டுவதை நன்றாக கற்ற சாமர்த்தியசாலி யான ஒரு டிரைவர், அகண்ட வீதியானாலும், குறுகிய தெருவானாலும், எவ்வித வித்தியாசமும் இன்றி, இரண்டிலுமே ஒத்த தன்மையுடன் காரை செலுத்துகிறான். இம்மாதிரியே, ஆன்மீகம் என்னும் கடலில் வீசும் சாதகமான காற்றின் திசையை கண்டறிய, நமக்கு ஒரு குரு தேவையாகிறது. இதில் பிரச்சினை என்னவென்றால், இக்காலத்தில் ஒரு குருவைத் தேடிக் கண்டுபிடிப்பதென்பது சிரமமான செயல். துவராடையை உடுத்திய உடனே ஒருவன் தன்னை ஒரு குருவாக பாவித்துக் கொண்டு, மக்களுக்கு போதனை செய்ய விரும்புகிறான். ஒரு குரு உண்மையானவரா இல்லையா என்று கண்டறிய சிறந்த வழி, அவருடைய உபதேசங்கள் ஞானம் பொதிந்தவையா, மற்றும் அவர் தன் வாழ்க்கையை தன்னுடைய உபதேசங்களுக்கு ஒப்ப நடத்திச் செல்கிறாரா என்று கண்டறிவதே. அந்த குருவானவர் ஞானம் அடையாமலேயே ஞானம் பொதிந்த உபதேசங்களைச் செய்தால், அவற்றால் யாதொரு பலனும் இருக்காது. அவை உபயோகமற்றவையே. இக்காலத்தில் மக்கள் ஞானம் சித்திக்காமலேயே, ஞான உபதேசங்கள் சுலபமாக செய்கிறார்கள். இன்று மிகச் சிறந்த குரு இறைவன்தான். ஆன்மீக உலகில், குரு என்பவர் ஒரு வைத்தியருக்கு ஒப்பானவர். சாதகனின் உடல் உஷ்ணத்தை அளந்து, அதிலிருந்து அவன் நிலையைக் கண்டறிந்து, அவனுக்கு எது நன்மை பயக்கும் என்று கண்டறிபவர். ஆனால் குருவுக்கே உடல் உஷ்ணம் அதிகமாயிருக்கும் பொழுது, சாதகனின் உடல் உஷ்ணம், குருவின் உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டு, உண்மை நிலையை கண்டு பிடிக்க முடியாமல் ஆகிறது. ஆகையால் இக்காலத்தில் சிறந்த குரு இறைவனேதான்.
ஆதாரம்: பகவானுடன் உரையாடல்...என்ற புத்தகத்திலிருந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக