தலைப்பு

சனி, 28 ஆகஸ்ட், 2021

லக்ஷ்மணனுக்கு கீதை சொன்ன சாயி கிருஷ்ணர்!


இந்திய கிரிக்கெட் வானில்  V.V.S. லக்ஷ்மண் அவர்கள் ஒரு ஒளிவிடும் தாரகை. ஹைதராபாத் நகரத்தில் பிறந்த அவர் 1992ல்  கிரிக்கெட் விளையாட்டில் நுழைந்து 1996ல் டெஸ்ட் கிரிக்கெட்டராக பரிமளிக்கத் தொடங்கினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 281 ரன்கள் குவித்து பிரபலமானார். 2012ம் ஆண்டு கிரிக்கெட் ஆடுவதிலிருந்து ஓய்வு பெற்று, V.V.S.அறக்கட்டளையை நிறுவி  சமூக சேவை ஆற்றுகிறார். பாபாவின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான இவர் பாபா எவ்வாறு தன் வாழ்வில் ஒளி விளக்காக வழி காட்டுகிறார் என்பதை பக்தியுடன் நினைவு கூறுகிறார்.

திரு.V V.S. லக்ஷ்மண் அவர்கள் உலக இளைஞர் திருவிழா மாநாட்டில் (12.7.2017) அன்று புட்டபர்த்தியில் ஆற்றிய உரையின் சாரம்:

எனது குரு..எனது பரமேஸ்வரன்..எனது விஷ்ணு..எனது பிரம்மா..அனைத்தும் இணைந்த பகவான் ஸ்ரீ சத்ய சாயி அவர்களின் பொற்பாதங்களில் என் நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் பிரவேசத்திற்கும், இப்போது உங்களிடையே பேச அழைக்கப் பட்டதற்கும் அவரது அருளே காரணம்.


நான் பிறந்து வளர்ந்தது ஹைதராபாத் நகரத்தில். என் பெற்றோர் இருவருமே அங்கு பிரபலமான டாக்டர்கள். எனக்கும் ,என் சகோதரரருக்கும் மிகச் சிறந்த கல்வியை அளித்த அவர்கள் நல் ஒழுக்கத்தையும் கூடவே கற்பித்தனர். தவிர ,எனது பாட்டனார் ஒரு பகவத்கீதை விற்பன்னராகவும் அதை கற்பிக்கும் ஆசானாகவும் விளங்கினார். அவரிடம் நாங்கள் பகவத் கீதை பயின்றோம். கீதையின் 12வது அத்தியாயமான பக்தி யோகத்தை நாங்கள் அப்போது கற்றோம். பிறகு எனது வாழ்வில் அது மிகவும் பயனுள்ள போதனை ஆனது. கீதையின் பக்தியோகத்தில் 17 மற்றும் 18 வது ஸ்லோகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறும்.. "இன்பத்தில் மகிழாமல் , துன்பத்தில் துவளாமல் நண்பர்களையும்  எதிரிகளையும் ஒரே மாதிரி பாவித்து மரியாதை அவமரியாதை மற்றும் புகழ்ச்சி, இகழ்ச்சிகளை சமமாக ஏற்க வேண்டும்" என்ற போதனை என் வாழ்வின் வழி காட்டியானது.


🌹கிரிக்கெட் மட்டையா.. ஸ்டதாஸ்கோப்பா:

எனக்கு அப்போது 17 வயது. பள்ளிப் படிப்பு முடிந்தது. மேற்கொண்டு என்ன செய்வது என்ற குழப்பம். டாக்டருக்கு படிக்க வைக்க பெற்றோர் நினைத்தனர். கிரிக்கெட் உலகில் கால் பதித்து டெஸ்ட் கிரிக்கட்டராகப் புகழ் பெற வேண்டும் என்பது என் ஆசை. ஏற்கெனவே மாவட்ட,  மாநில அளவில் கிரிக்கெட்டில் தேர்ச்சி பெற்றிருந்தேன். இந்திய அளவில் 19 வயதுக்கு உட்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தேன். இதயத்திற்கும் அறிவுக்கும் இடையே போராட்டம். இறுதியில் இதயம் சொன்னபடி கிரிக்கெட்டை என் வாழ்க்கையாகத் தேர்ந்தெடுத்தேன்.ரசிகர்களின் பாராட்டையும் பெற்றேன்.


1996ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 281 ரன்கள் எடுத்தது என் கிரிக்கெட் சரித்திரத்தின் மணிமகுடம். ஆனால் அந்த சாதனைக்கு முன்னால் ஒரு சோதனை ஏற்பட்டது.போட்டி தொடங்குவதற்கு சிலநாள் முன்னால் எனக்கு மிகக் கடுமையான முதுகுவலி ஏற்பட்டது. முதுகுத் தண்டில் ஏதோ ஒரு பிரச்சனை. போட்டியில் ஆட முடியாது என்ற நிலைமை. என் அப்பா கூறினார் "கவலைப்படாதே. பாபா இருக்கிறார். அவர்மீது நம்பிக்கை வை." அன்றிரவு முழுவதும் பாபா பஜன் பாடல்களை ஒலிக்கவிட்டு தரையில் கேட்டபடி படுத்திருந்தேன். ஸ்வாமியின் அருளால்  என் முதுகுவலி  குறைந்து அந்த போட்டியில் பங்கு பெற்று 281 ரன்களும் எடுத்தேன்.

ஆனால் 1996க்குப் பிறகு பல காரணங்களால் எனது கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவாக சோபிக்கவில்லை. இந்நிலையில் 1997ல் பாபா புட்டபர்த்தியில்  மிகச்சிறந்த கிரிக்கெட் ஸ்டேடியம்  ஓன்றை அமைத்து Unity  Cup என்ற போட்டியை நடத்தினார்.இந்த போட்டியில் பங்கேற்கும் நல்வாய்ப்பு கிட்டியது. ஆட்டம் முடிந்ததும் பாபாவின் இண்டர்வியூ கிடைக்கப் பெற்றோம். காலையில் என்னைப் பாராமலிருந்த பாபா , எங்கே லக்ஷ்மண் என்று கேட்க நான் கை கூப்பியபடி  பாபாவை பார்த்தேன். " உன் மனம் சஞ்சலத்தில் உள்ளது. உன் தாத்தா கற்பித்த கீதை உபதேசம் நினைவில்லையா. ஒரு செயலை செய்து முடித்த பின் பலனை  பற்றி நினைத்து வருந்தலாமா." பாரதப் போரில் அன்று மனச்சஞ்சலம் அடைந்த அர்ஜுனன் நிலையில் இருந்தேன். பாபா கீதை உபதேசித்த கிருஷ்ணராகவே தோன்றினார்.இந்த உபதேசத்திற்கு பிறகு நான்  மன சஞ்சலம் நீங்கி தெளிவடைந்தேன்.


2012 ம் ஆண்டு என் கிரிக்கெட் ஆட்ட ஓய்வினை அறிவித்தபோது , நண்பர்களின் அறிவுரைகளையும் மீறி, திடமான மனநிலையுடன் என் முடிவில் நிலையாக நின்றேன். இன்னும் ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.1998ல் பெங்களுரில் ஆஸ்த்ரேலியாவுக்கு எதிரான போட்டி. நான்,  சச்சின் டெண்டுஸ்கர் மற்றும் சில கிரிக்கெட் வீரர்களும் பாபா தரிசனம் பெற புட்டபர்த்தி சென்றோம். அப்போது சச்சின் பாபாவிடம் ஒரு கேள்வி கேட்டார். "பாபா மனதை எவ்வாறு ஒருமுகப்படுத்துவது." பாபா கூறினார். "பங்காரு.. மனம் ஒரு குரங்கு. அதை அடக்க முடியாது. அதில் நேர்மறை எண்ணங்களை நிரப்பு.  எதிர் மறை எண்ணங்களை அது விரட்டிவிடும்." இந்த உபதேசம் அருமருந்தாக வேலை செய்தது. சச்சின் அந்த போட்டியில் சதம் அடித்தார்.


எனக்கு 2004 லில் திருமணம் நடந்தது. அப்போது என் மனைவிக்கு பாபாவின் மீதான நம்பிக்கை துளிர் விடவில்லை. அதன்பின் பாபாவின் இண்டர்வியூ அவருக்கு கிடைத்தது. அதன்பின் அவர் பாபாவின் பரம பக்தையாக மாறிவிட்டார். என் மகனுக்கு பெயர் சூட்ட பாபாவிடம் சென்றோம். தன் மடியில் அவனை கிடத்தி சர்வஜித் என்று பெயரிட்டார். அடுத்து என் மகளுக்கும் அசிந்தயா என்று பெயர் சூட்டினார்.
 

🌹இன்றும் மகிமை புரியும் சாயி இறைவன்:

சுவாமி எங்கும் போகவில்லை.. அவர் இறங்கவும் .. ஏறவும் வேண்டியதில்லை.. எல்லா இடத்திலும் அவரே நீக்கமற நிறைந்திருக்கிறார்.
மகா சமாதி என்பது இறைவன் சத்ய சாயி அரங்கேற்றிய லீலை  (தெய்வீக நாடகம்)(Divine Play) அதற்குப் பிறகும் அவரின் சாந்தித்யம் சற்றும் குறையாமல் நிதர்சனமாய் நிகழ்கிறது. அதற்கு ஒரு அற்புதத்தை உதாரணமாக இதோ சொல்கிறேன்..


சுவாமியின் மகா சமாதி லீலைக்கு பிறகும் உயிர்க் காப்பாற்றப்படும் ஒரு சாயி தம்பதிகளைப் பற்றியது.. அவர்கள் தான் சங்கர் நாராயணன் பிளாஞ்சுரி மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி.  அவர்களும் நானும் ஹைதராபாத்தில் ஒரு அடுக்கு மாடி குடி இருப்பில் அடுத்தடுத்து வசித்து வந்தோம். பாபாவின் பரம பக்தர்களான அவர்கள் வீட்டில் திரும்பிய இடமெல்லாம் பாபாவின் புகைப்படங்கள் தென்படும். அவைகளில் பாபாவின் பரம பவித்ரமான விபூதி உற்பத்தியாகி பொழிந்து கொண்டிருக்கும். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ராஜலட்சுமி அவர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டது. அதை அடுத்து சங்கர் நாராயணன் அவர்களுக்கும் இரைப்பை புற்று நோய் தாக்கியது. இருவரின் ஆயுட்காலம் ஒருசில மாதங்களே என டாக்டர்கள் கணித்தனர். ஆனால் பாபா என்கிற வைத்தியநாதர் அவர்களை ரட்சித்து காப்பாற்றுகிறார். தினசரி சாயி ஸ்மரணம் வெளிநாட்டு பயணம் என்று அவர்கள் இன்றும் தம் வாழ்நாளைக் கழிக்கின்றனர். பாபாவை நம்பினோர் கைவிடப்படார். யாம் இருக்க பயமேன் என்று அபய ஹஸ்தம் காட்டும் பாபாவின் அருளுக்கு இதைவிட வேறு எடுத்துக் காட்டு வேண்டுமோ?

பாபாவின் உபதேசங்களின் சாரமாக மூன்றினை நான் காண்கிறேன்.
LOVE ALL  ..SERVE ALL
HELP EVER..HURT NEVER
SEE GOOD..DO GOOD.
2005 ம் ஆண்டிற்கு பிறகு என் மனதில் பாபாவிடம் எதுவும் கேட்கும் அவா நீங்கிவிட்டது. அவரது தரிசனம்  தவிர மற்ற ஆசைகள் தலைதூக்கவில்லை.  இதுவே பாபாவின் அனுக்கிரகம்.

மொழிமாற்றம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக