தலைப்பு

புதன், 4 ஆகஸ்ட், 2021

கேலி பேசியவரை காலடியில் கண்ணீரால் பேச வைத்த கடவுள் பாபா!

சுவாமியின் தோற்றத்தை எள்ளி நகையாடிவர் எவ்வாறு சுவாமியிடம் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி பக்தரானார்.. அவரை எவ்வாறு சுவாமி அரவணைத்தார் என்பதை குறிப்பிடும்  சுவாரஸ்ய பதிவு இதோ...

இறைவன் அவதாரம் எடுத்து யுகம்தோறும் வருகையில் அவருக்கான விமர்சனமும் சேர்ந்தே வருகிறது. அவதாரம் என்பது இறைவனின் கருணை... விமர்சனம் என்பது மனிதனின் அறியாமை. ஸ்ரீராமரும் ஸ்ரீ கிருஷ்ணரும் விமர்சிக்கப்பட்டவர்கள் தான். சிலபேர் விமர்ச்னத்திலிருந்தே மனம் திருந்தி விமோச்சனத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சிசுபாலன் அதற்கோர் பெரிய உதாரணம். புறத்தோற்றங்களை கணக்கிட்டு அகத் தோற்றங்களை அறியாமல் எள்ளல் நிகழ்கின்றன... அப்படி சுவாமியின் தோற்றத்தை ஒருவர் அவரது மனைவியிடம் எள்ளி நகையாடுகிறார். அவரின் மனைவி சுவாமி பக்தை... தன் மனைவி சுவாமியை வழிபடுவது அவருக்கு அறவே பிடிக்கவில்லை. என்னை பரிசோதித்த பின் கூட ஏற்றுக் கொள் எனச் சொல்லும் கருணாசாகரம் சுவாமி. இப்படி ஒரு இறைவன் எங்கேயும் இல்லை. நம்மையும் பொறுத்து காத்து சுவாமி கருணை செலுத்துகிறாரே ... அவருக்கிருக்கும் பொறுமை பூமாதேவிக்கு கூட இல்லை.

அந்த நபரின் மனைவி சுவாமியை வழிபடுவதால் தொடர்ந்து சுவாமியின் தோற்றத்தை குறித்து விமர்சித்துக் கொண்டே வருகிறார். 

        "அந்தக் கரடி முடி தலையரிடம் உனக்கு ஏன் அவ்வளவு பக்தி?" என அவர் தனது மனைவியைப் பார்த்து கேட்கிறார். மனைவியோ மிகவும் வருந்துகிறாள். இவர் புரியாமல் ஏதேதோ பேசுகிறாரே .. இவரை மன்னித்துவிடு சுவாமி என மனதிற்குள் வேண்டுகிறார். மன்னிப்பதற்கே மண்ணில் உதித்த பரிபூரண அவதாரம் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி. மன்னிக்காமல் இருப்பாரா!! இவ்வாறே நாட்கள் கழிகின்றன... இந்த எள்ளல் மொழி மட்டும் நிற்கவே இல்லை. ஒருநாள் அவரது மனைவி "நீங்கள் என்னோடு அவரை தரிசிக்க வாருங்கள் ... ஒரே ஒரு முறை தான் .. அதன் பிறகு உங்களை வற்புறுத்தவே மாட்டேன்... அதற்கு பிறகும் நீங்கள் இவ்வாறே விமர்சிப்பீர்கள் என்றால் நான் உங்களை தடுக்கவே மாட்டேன்" என பிடிவாதமாகப் பேசி.. மிகவும் மன்றாடி...கெஞ்சி சுவாமி தரிசனத்திற்கு அழைக்கிறாள். அவர் முதலில் பிகு செய்தாலும்.. அடம் பிடித்தாலும்... அதுவெல்லாம் எனக்கு ஒத்துவராது எனச் சொன்னாலும்.. சரி.. போய்தான் பார்ப்போமே.. என்ன நடந்து விடும் என வருவதற்கு ஒப்புக் கொள்கிறார். மனைவிக்கு மனமகிழ்ச்சி ஏற்படுகிறது. தரிசனத்திற்கு வருகிறார்கள் இருவரும். ஒரே அமைதி. ஊசி விழும் சப்தம் கூட இல்லை. அங்கிருந்த அனைவரும் பயபக்தியோடு சுவாமியின் தரிசன வருகைக்காக கை கூப்பிக் காத்திருக்கிறார்கள். இவரோ கையை கூப்பவும் இல்லை.. ஏதோ மனைவி வம்படியாக இழுத்து வந்திருக்கிறாள் ஆகவே வந்திருக்கிறோம் என்ற பாவனையில் சுற்றும் முற்றும் ஆர்வமில்லாதவராய் அமர்ந்திருக்கிறார். போயும் போயும் இவரை பார்க்கவா இத்தனை கூட்டம்.. இந்த மக்கள் திருந்தவே மாட்டார்கள்.. முட்டாள்கள் என பல்வேறு எண்ண ஓட்டங்கள் அவருக்குள் வந்து போகின்றன...


புதியதொரு விடியலாய் சூரியனுக்கே வெளிச்ச இரவல் தருவது போன்ற தேஜோ மய ரூபத்தில் சுவாமி பிரசாந்தியாய்.. மானஸரோவரின் பிரம்ம வெண் கமலமாய் புன்னகை வதனத்தோடு பூத்து வருகிறார். சுவாமியின் ஒவ்வொரு அசைவிலும் பேரன்பு அலையலையாய் ததும்பி ஓடுகிறது.. சுவாமியை தரிசித்த அந்த நொடி அவர் தன்னையே மறக்கிறார். கை தானாக வழிபட குவிகிறது.. மழை வரும் ஓசை மனதிற்குள்.. கண்களோ தன் கண்ணீர் கடிதங்களை கன்னங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன... சுவாமி மெது மெதுவாய் இவரின் அருகே வருகிறார். 

தீக்குள்ளே விரலை வைத்தால் நந்தலாலா போல சுவாமியை அருகே தரிசிக்கையில் தன்னையும் அறியாமல் சுவாமியின் பாதத்தை இறுக்கமாய்ப் பிடிக்கிறார்...

அப்போது சுவாமி "இந்தக் கரடி முடி தலையரிடம் உனக்கு ஏன் அவ்வளவு பக்தி?" என அவரிடம் கேட்கிறார். அப்படியே விழுந்தவர் ஓவென அழுகிறார்.. உடல் குலுங்குகிறது.. உள்ளே ஓராயிரம் விண்மீன்கள் வெடித்துச் சிதறுவது போன்ற நூதன அனுபவம்.. இடம் பொருள் காலத்தை மறக்கிறார்... சுவாமியின் காலடியில் கரைந்து காணாமல் போகிறார். அங்கே அழுவதை தவிற எதையும் அப்போது பேசிவிட பாஷையின்றி பூரணமாய் பரிபூரணத்தோடு நிறைகிறார். மெழுகுவர்த்தியை விமர்சித்த ஒரு விட்டில்பூச்சி.. அதிலேயே சென்று.. அதையே தொட்டு பட்டாம்பூச்சி ஆனதைப் போல அவரின் நிலை மாறுகிறது... 

அது கரடி முடி அல்ல.. அது தான் கலியின் பாரங்களை சுமக்கும் கருணை மடி என உணர்ந்து தெளிகிறார்.

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் --44 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்) 


சுவாமியே சகல ஜீவனுக்கும் தாய். சுவாமியால் மட்டுமே இந்த பூமி இத்தனை அக்கரமங்களிலும் இம்மி அளவு கூட சிதறிப் போகாமல் தாக்குபிடிக்கிறது. ஒவ்வொரு நொடி அசைவையும் சுவாமியே நிகழ்த்துகிறார் எனும் சத்தியம் தெளியத் தெளிய சுவாமியிடம் நமக்குள் சட்டென்று சரணாகதி நிகழ்ந்துவிடுகிறது!


பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக