தலைப்பு

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

விவசாயத்துறை விஞ்ஞானி இதயத்தில் ஆன்மீக அறுவடை புரிந்த விசித்திர இறைவன் சாயி!!


விவசாயத் துறையை  சேர்ந்த ஒரு விஞ்ஞானி எவ்வாறு சுவாமியை உணர்ந்து கொள்கிறார்.. சுவாமியின் மகிமைகளை எவ்வாறு ஆச்சர்யகரமாய் நினைந்து மனதில் இறுத்துகிறார் என்பதை விவரிக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...


விவசாயத்துறை நிபுணர் ஒருவரை இந்திராதேவி அம்மையார் சந்திக்க நேர்கிறது. இந்தியா விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக பணியாற்றுகிறார் இவர். நீங்கள் எவ்வாறு சுவாமி பக்தரானீர்கள் என அம்மையார் கேள்வி கேட்க.. ஆச்சர்யகரமான அனுபவங்கள் அடுக்கடுக்காய் அரங்கேறி இருப்பதை வியப்புடன் விவரிக்கிறார்..

1962 ம் ஆண்டு ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு சிக்கலான பிரச்சனைக்கு விடையே கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.. அப்போது இவர் எதிரே ஒரு உருவம் தோன்றியது... இவருக்கு விடையும் கிடைக்கிறது... விஞ்ஞானி என்பதால் தனக்கு எதிரே தோன்றிய உருவம் பிரமையோ என்று தான் இவருக்கு நினைக்க தோன்றியது.. இந்த அனுபவத்தை தனது சக விஞ்ஞானியான பகவந்தத்தோடு பகிர்கிற போது.. அந்த உருவ அடையாளங்களை வைத்து அது சுவாமி தான் என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார்! "நான் அடுத்த வாரம் ஹைதராபாத் செல்கிறேன்... நீ என்னுடன் வா.. உனக்கு அவரது தரிசனம் கிடைக்கலாம்"என்கிறார்... இருவரும் சுவாமி தரிசனம் செய்கின்றனர். சுவாமியோ இந்த விஞ்ஞானியிடம் "பங்காரு... நீ ஏற்கனவே புட்டபர்த்தி வந்திருக்கிறாயே" என்கிறார்... இல்லையே என இவர் முழித்தபோது... "நீ உன் கனவில் வந்திருக்கிறாய்.. நான் உன்னை ஆசீர்வதித்திருக்கிறேன்... இது 25 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது" என சுவாமி விவரிக்க...இவருக்கு அது நினைவுக்கு வருகிறது... கர்னூலில் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார்  அப்போது... புட்டபர்த்தி சேவைகளை கேள்விப்படுகிறார்... ஆவல் பிறக்கிறது.. ஆனால் நேரில் தரிசிக்க இயலாத காலக்கட்டத்தை சுவாமி நினைவுபடுத்த எல்லாம் மனக் கண்முன் வந்து போகிறது!


இவருக்கு மனம் மகிழ்வடைகிறது! சுவாமிக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறதே! என இவரின் அகம் குளிர்கிறது!! சுவாமியோ மிகவும் கருணையோடு... " பயப்படாதே... உனக்கு சங்கடம் தோன்றும் போதெல்லாம் நான் அங்கே வந்து உனக்கு உதவி செய்து காப்பாற்றுவேன். அது போதும்! அங்கே நான் வந்து விடுவேன்" என்கிறார்!

         அதைப் போல் ஒரு ஆச்சர்யகர அனுபவம் நிகழ்கிறது!! அங்காராவில் நடை பெற்ற அனைத்துலக மகாநாட்டில் கலந்து கொள்ள இந்த விவசாய விஞ்ஞானி சென்றிருந்த போது திடீரென இவரை பேச அழைக்கிறார்கள்.. இவர் பேசுவதற்கென்று தயாராகப் போகவே இல்லை... உடல் வேர்த்துப் போகிறது! சுவாமியை நினைத்துக் கொண்டு தலைவர் நாற்காலியில் அமர்ந்து கொள்கிறார்... தலைமை உரை வேறு ஆற்ற வேண்டும். திக் திக் நொடிகள் அவை... பேச அழைக்கிறார்கள்.. உள்ளே பயம் ஒரு புறம்.. சுவாமியின் அபயத்திற்கான ஆழமான வேண்டுதல் மறு புறம்.. அடிமேல் அடி எடுத்து வைத்து மைக் முன் நிற்கிறார்... 

அந்த மைக்'கில் சுவாமியின் முகம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.. பிரமை இல்லை... புரிகிறது இவருக்கு... புன்னகையோடு சுவாமி கையை உயர்த்தி ஆசீர்வதிக்கிறார்... பயத்தால் நடுங்கிய உடம்பு இப்போது பரவசத்தில்  சிலிர்க்கிறது ... அந்த அனுபவம் இவர் பேசுவதற்கான குறிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக மனதில் தோற்றிய படி இருக்கிறது... பேசி முடித்து விட்டு தன் இடத்தில் வந்து அமர்கிறார்.. இன்னும் அந்த அதிசய அனுபவம் அவரின் இதயத்தை விட்டு அகலவில்லை... ஒரே கைத்தட்டல் குவிகிறது... சக விஞ்ஞானிகள் இவரிடம் பாராட்டு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்...  "இவ்வளவு அருமையாகவும் கோர்வையாகவும் எவ்வாறு உங்களால் பேச முடிந்தது" என இவரிடம் கேட்கிற போது... இவர் "நான் பேசவில்லை... பாபாவே பேச வைத்தார்" என்கிறார்...

இதை இவரிடமே கேட்டறிகிற போது இந்திராதேவி அம்மையாருக்கும் உடல் சிலிர்க்கிறது.. சுவாமி அனைத்தையும் இயக்குகிறார் என்ற சத்தியம் அம்மையாருக்கு புரிகிறது !!

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 144 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)


"சுவாமி அண்டசராசரம் அனைத்தையும் இயக்குபவர்!! நம் வாழ்க்கையையும் இயக்குபவர் சுவாமியே!! ஒவ்வொரு நிதர்சன அனுபவமும் இந்தப் பேருண்மையையே தங்கத் தாம்பாளத்தில் தாங்கிய படி நம் இதயத்தில் ரத்தின கம்பளம் விரித்து நடந்து வந்து மனித புத்தியில் நித்திய சத்திய கீதையை உரைத்துக் கொண்டு வருகிறது!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக