தலைப்பு

புதன், 25 ஆகஸ்ட், 2021

சிவானந்த ஆசிரமத்தில் சுவாமிக்கு காரியதரிசியாக 24/7 கூடவே இருந்த சதா சிவானந்தாவின் பரவச அனுபவங்கள்!

🎙️பகிர்கிறார் :- சுவாமிஜி சதாசிவானந்த சரஸ்வதி சிஷ்யை சுவாமினி பாலானந்த சரஸ்வதி (மாதாஜி)

சுவாமியின் ரிஷிகேஷ் பயணத்தில் சிவானந்த ஆசிரம விஜயத்தின் போது காரியதரிசியாக 24/7 கூடவே இருந்து எவ்வாறெல்லாம் சுவாமிஜி சதாசிவானந்த சரஸ்வதி சுவாமிக்கு சேவையாற்றினார் என்பதும்‌... அவருக்கு நிகழ்ந்த பரவச அனுபவம் என்ன? அவர் சுவாமியை பற்றி என்ன பகிர்ந்திருக்கிறார்? என்பதை பரவசமாய் அனுபவிக்கப் போகிறோம் இதோ...


அதிகாலை.. விழிகள் வெறித்து வீட்டின் திண்ணையில் அமர்ந்திருப்பேன்.. அது மகாதானபுரம் அக்ரஹாரம். கன்னியாகுமரி தேவி தன்னுடைய சுவாசத்தை பலமான காற்றாக அனுப்பிக் கொண்டே இருக்கும் புண்ணிய தலம் அது.. "கோந்தே பூஸ்ட் குடிடா " என பாட்டி அழைப்பதற்குள்... வீட்டின் எதிர்ப்புற வீட்டில் ஆஜானு பாகுவாய் காவி நிறத்தில் ஒரு துறவி எழுந்து வாக்கிங் செல்வார்... அவரோடு அவரது சிஷ்யையும் (மாதாஜி) உடன் செல்வார்.. குட் மார்னிங் சுவாமிஜி என்பேன்.. ஆசிர்வாதம் காட்டி புன்னகைத்து குட் மார்னிங் என்பார். கன்ஷூ (கணேஷ் என்பது எனது பழைய பெயர்) குளிக்கலியா ... ஸ்கூலுக்கு போக வேண்டாமா? என தாயன்போடு புன்னகைப்பார் மாதாஜி... இந்த ஸ்கூல்... இந்த படிப்பு .. இதையெல்லாம் விட்டுவிட்டு இவர்கள் பின்னாடியே செல்ல மாட்டோமா என மனம் ஏங்கி இருக்கிறது... இப்படியே 25 ஆண்டுகள் கடந்து விட்டன...

நவநீத சந்தான கோபால கிருஷ்ணர், கன்னியாகுமரி 


இப்போதும் அதே தாயன்பு மாதாஜிக்கு.. எப்போது அக்ரஹாரம் சென்றாலும் அடியேன் தரிசிக்கும் மூன்று மூர்த்திகள்.. ஒன்று நவநீத சந்தான கோபால கிருஷ்ணர் (கோவில்)... இன்னொன்று மகான் ராகவேந்த்ர மிருத்திகா பிருந்தாவனம்.. மூன்றாவது மாதாஜி ஆசிரமம்... சிறுவயதிலேயே அடியேன் சுவாமி பக்தன் என்பதால் நம் சுவாமிஜிக்கு பாபா சிருஷ்டி மோதிரம் வழங்கி இருக்கிறார் என மாதாஜி சிறுவயதிலேயே அடியேனிடம் சொல்லி இருக்கிறார்... இந்த முறை பரவச அனுபவம் ஒன்று சொன்னார்.. சிலிர்த்துப் போனேன்...

கவிஞர் வைரபாரதி மாதாஜியுடன்... 

எல்லா அனுபவ விபரங்களையும் கேட்டறிய வேண்டும் என நாள் கேட்டேன்.. பூஜை, ஜபம், தியானம், சிஷ்ய கோடிகள் என மாதாஜியும் படு பிஸி. அந்த அற்புத திவ்ய சந்திப்பு நம் சத்யசாயி யுகத்திற்காக ஒரு வியாழக் கிழமை நிகழ்ந்தது!! இதுவரை எந்த புத்தகத்திலும் வெளியே வராத பரவச அனுபவங்கள்.. அதற்கு முன் மிக சுருக்கமாக எப்படி கிருஷ்ணசுவாமி சுவாமிஜி சதாசிவானந்தாவானார்?

10 ஏப்ரல் 1930 தில் பௌர்ணமி ஒன்றில் பிறந்தவர் கிருஷ்ண சுவாமி. வேதபுரி கிராமம் (மயிலாடுதுறை). சிறுவயதில் 17 முறை எம்.எஸ் அம்மா நடித்த மீரா திரைப்படம் பார்த்து கிருஷ்ணர் மேல் பக்தி ஏற்பட்டு ஆன்மீக ஈடுபாடு தொடங்கி.. 25 பைசாவிற்கு சுவாமி சிவானந்தா புத்தகம் வாசித்து 1950'ல் ரிஷிகேஷ் பறந்தவர் இவர்.. அதுவரை வங்கியில் பணியாற்றுகிறார். அப்போது வயது 20.

சுவாமிஜி சதாசிவானந்தா

 யாரும் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் வந்தால் சுவாமி சிவானந்தா அந்தந்த இளைஞரின் பெற்றோரை அவர்களுக்கே தெரியாமல் வரவழைத்து உண்மை தன்மையை எடைபோட்டு அவர்களிடமே அனுப்பிவிடுவாராம். ஆனால் இவரின் நிலை வேறு. பெற்றோருக்கும் சம்மதம் என்பதால் தன்னோடு ஆறு வருடம் தங்க வைத்துக் கொள்கிறார்.. யோகா / சங்கீதம்/ லலிதா நவாவரண பூஜை என அனைத்தும் கற்க உதவுகிறார்.. 1956 ல் சிவராத்திரி அன்று கிருஷ்ணசுவாமி சுவாமிஜி சதாசிவானந்த சரஸ்வதியாக தீட்சை பெறுகிறார் ! அப்போது வயது 26. 

சுவாமிஜி சதாசிவானந்தாவின் சங்கீத ஞானம் 

ஆறே மாதத்தில் (உலகில் யாருமே 6 மாதத்தில் கற்றதில்லை) சங்கீதானந்தா மூலமாக அரங்கேற்றம் செய்யும் அளவிற்கு இசை ஞானம் பெறுகிறார். இவர் அதிகாலை பூஜை செய்ய கங்கையிலிருந்து நீர் எடுத்து வருகையில் இவரின் பின்னால் கங்கா மாதா வெள்ளை உடையணிந்து துணைக்கு வருவதை பல சன்யாசிகள் தரிசித்திருக்கிறார்கள். தீட்சைக்கு முன் கங்கா மாதாவை கடப்பது போல் இக்கரைக்கு அக்கரை நீந்துவார் சுவாமிஜி... அதைக் கண்டு இமயம் பிதா -- கங்கா மாதா ஆகவே இனி அப்படி செய்யாதே ! என சத்தியம் வாங்குகிறார் சுவாமி சிவானந்தா. கங்கா மாதா வெறும் நதி மட்டுமல்ல என்பதற்காக இதை விவரிக்கிறேன். இவர் பாடலோடு தான் ஒவ்வொரு நாள் சத்சங்கத்தையும் சுவாமி சிவானந்தா நிறைவு செய்வார்.. 17 வருடம் சுவாமி சிவானந்தாவோடு ஆசிரமத்தில் சிஷ்யராக சேவை புரிகிறார்.. அவரின் சமாதிக்கு பிறகும் 13 வருடம் ரிஷிகேச ஆசிரமத்திலேயே தொடர்கிறார்!

சுவாமிஜி சதா சிவானந்தா சிவானந்தருடன்... 

ஒவ்வொரு ஆண்டும் சிவானந்த ஆசிரமத்திற்கு துறவிகள் / மகான்கள் வருவார்கள். டாக்டர் குப்புசாமி என்கிற சுவாமி சிவானந்தாவுக்கு ஒருமுறை கூட கோபமே வந்ததில்லை என சொல்லியிருக்கிறார் சுவாமிஜி சதாசிவானந்த சரஸ்வதி. அத்தனை கருணை வாய்ந்த மகான் அவர். சீடர்களை எழுப்புவதிலிருந்து தாயைப் போல் ஒவ்வொன்றையும் கவனித்து கவனித்து போஷிப்பார். ஒருமுறை கிருஷ்ண பக்தரான சுவாமி சிவானந்தரை நாடி ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரே விஜயம் புரிகிறார். நேர்மையான பக்தன் கடவுளை தேட வேண்டியதில்லை.. கடவுளே அவனை தேடி வருகிறார் என்பதற்கான சான்று இது..!!!


சுவாமி தங்கிய அத்தனை நாளும் சுவாமி சிவானந்தாவின் சீடரான சதாசிவானந்த சரஸ்வதியே நம் சுவாமியை கவனித்துக் கொள்கிறார். குரு உத்தரவு அது!! சுவாமி தினந்தோறும் மாலை சத்சங்கத்தில் பேசுகிறார்.. அந்தப் பேச்சுக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தது சுவாமிஜி சதாசிவானந்தாவே!! சுவாமியின் சுந்தர தெலுங்கை சுடர் மிகு இந்தியிலும்.. ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துச் சொல்வார்.. சுவாமிக்கு பிற மொழிகள் தெரியாதா என்ன?;.. சுவாமிக்கு தெரியாத மொழி ஏது! அப்படி மொழி பெயர்ப்பதன் மூலம் அவர்களுக்கும் ஒரு சேவையை சுவாமி கனிவுடன் அருள்கிறார். சுவாமிக்கு தினசரி உணவு படைப்பதில் இருந்து தங்கும் வசதி... இடத்தை சுற்றிப் பார்க்கையில் உடன் செல்வது.. இப்படி பல பாக்கியம் பெற்றிருக்கிறார் சுவாமிஜி. அதுமட்டுமல்ல இன்று இறைவன் ஸ்ரீ சத்ய சாயியோடு சுவாமி சிவானந்த சரஸ்வதி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நாம் தரிசிக்கிறோம்.. அவற்றை எல்லாம் எடுத்தது சதாசிவானந்த சரஸ்வதி சுவாமிஜியே... வசிஷ்ட குகையில் சுவாமியோடு புருஷோத்தமானந்தா எடுத்துக் கொண்ட படமும் இவர் எடுத்ததே!


சுவாமிஜி 4 வருடம் ஆசிரம கேஷியராகவும்.. 2 வருடம் யோக ஆசிரியராகவும்.. 6 வருடம் புகைப்படம் எடுக்கும் சேவைகளையும் ஆற்றி இருக்கிறார். இவரே எடுத்து.. இவரே டெவலப் செய்து.. பிரின்ட்டும் போடுவார்.. கூடுதலாக கலரிங்'கும் செய்வார். 24/7 சுவாமியின் தேவைகளை கவனித்துக் கொண்டது ரிஷிகேஷ் சிவானந்த ஆசிரிமத்தில் சுவாமிஜி சதாசிவானந்தாவே.. அந்த பெரும் பாக்கியத்துக்காகவே அவரின் ரிஷிமூலம் ஆராயப்பட்டது! புண்ணிய காரணங்கள் புரிய வேண்டும் என்பதற்காகவே பகிர்ந்தேன்.. வைராக்கிய சன்யாசம் இவருடையது! மிக அசாதாரணமானவை! 

சுவாமிஜியின் யோக ஞானம்


சிவானந்த ஆசிரமத்தில் யோக ஆசன செய்முறை விளக்கம் அரங்கேறுகிறது.. சதாசிவானந்தா தலைமை ஏற்று செய்து காட்டுகிறார்.. சுவாமி முன்னிலையில்.. சுவாமி அதனை வெகுவாக ரசிக்கிறார்.. நிகழ்வின் இறுதியில் சுவாமி சிருஷ்டி செய்து மோதிரம் ஒன்றை சதாசிவானந்தாவுக்கு வழங்குகிறார். பரவசப்பட்டுப் போகிறார் சுவாமிஜி.. அதனை சிறுவயதில் அடியேன் தொட்டு வணங்கியது நினைவில் இருக்கிறது! துறவி என்பதால் சுவாமியின் சிருஷ்டி மோதிரத்தை விரல்களில் அணியாமல் டாலராக அணிந்து கொள்கிறார்.. ஒருமுறை ஒரு ஆஸ்திரேலிய பக்தை எத்தனை லட்சம் வேண்டுமானாலும் தருகிறேன் சுவாமிஜி.. அந்த மோதிரத்தை கொடுத்துவிடுங்கள் எனக் கட்டாயப்படுத்திக் கேட்கிறார்... அதற்கு சுவாமிஜியோ "இது வியாபாரப் பொருள் அல்ல... சுவாமி எனக்கு கொடுத்த ஆசீர்வாதம் ... ஆசீர்வாதம் விற்பனைக்கு அல்ல" என சொல்லிவிடுகிறார். சுவாமிஜி எப்போதும் கறாராகவே இருப்பார். ரொம்ப ஸ்டிரிக்ட். Perfection to the core.. சிறு வயது அனுபவம் அடியேனுக்கு குமரிக் கடலாய் அலையோடுகின்றன... அந்த சிருஷ்டி மோதிரத்தை தனது சமாதி வரை சுவாமிஜி கூடவே வைத்திருந்தார்.

சுவாமிஜி சதாசிவானந்தா தேஜோ மயானந்தா உடன்.. 


சுவாமியின் சிவானந்த ஆசிரம தங்குதலில் ஒருமுறை சதாசிவானந்தா உடன் இருக்க.. தேஜோ மயானந்தா சுவாமியிடம் விளையாட்டாய் "நீங்கள் கை அசைவிலேயே எல்லாம் வரவழைப்பீர்களே‌.. எனக்கு ஏதாவது தரக் கூடாதா?" எனக் கேட்கிறார்... "என்ன வேண்டும்?" எனக் கேட்கிறார் சுவாமி கனிவுடன்... அவரோ "நெய் அப்பம்" என்று சொல்ல... 


சுவாமி கைகளை தட்டுகிறார்.. இவர்கள் நிற்கும் மரத்திலிருந்து நெய் அப்பம் தொப் தொப் என சரிந்து விழுகின்றன... தேஜோமயானந்தாவால் தொடக் கூட முடியவில்லை.. ஆவி பறக்கும் சூடு... ஊதி ஊதி அதுவரை சாப்பிடாத ருசியில் இரண்டு துறவியும் சாப்பிடுகிறார்கள். எப்பேர்ப்பட்ட பாக்கியம்!! சுவாமியால் எந்த மரத்தையும் கற்பக மரமாக்க முடியும்... எந்த மலட்டு பசுவையும் காமதேனுவாக்க முடியும்!


தனது குரு சுவாமிஜி சதாசிவானந்தாவோடு சுவாமினி பாலானந்த சரஸ்வதி(மாதாஜி)

20/5/1953 இல் மங்களாம்பிகையாக பிறந்து 23/2/1978 இல் சுவாமினி பாலானந்த சரஸ்வதியாக சுவாமிஜியிடம் சன்யாச தீட்சை பெறுகிறார். 25தே வயது. எத்தனை வைராக்கியம்!! சாக்த தீட்சை அளிக்கிற சுவாமிஜியிடம் சன்யாச தீட்சை கேட்கிறார் மாதாஜி.. தான் பெண்களுக்கு தரமாட்டேன் என்கிறார்... காஞ்சி மகாப் பெரியவர் கலவையில் ஏகாதசி அன்று மௌனத்தில் இருக்கிறார்.. அவரிடம் இதனை சொல்கையில் தனது காவி வஸ்திரத்தை பிடித்தபடி "அவளுக்கு இத கொடு" என சைகை செய்து ஆசி வழங்குகிறார்... ஆகவே சுவாமிஜியும் தீட்சை வழங்குகிறார்... மாதாஜி சுவாமிஜி பற்றி பேசினாலே கண் கலங்குவார். அத்தனை குரு பக்தி! எனக்கு மாதா பிதா எல்லாம் அவர் தான் என்கிறார். இங்கே இறைவனே நமக்கு குருவாக திகழ்கிற போது நாம் எத்தனை பக்தியாக இருக்க வேண்டும் என அடியேன் சுவாமியை உள்ளே நினைத்து உருகினேன்.. அடியேனின் ஆரம்ப கால பக்தி நிலத்தில் விதை ஊன்றியவர்கள் சுவாமி சிவானந்தரின் இந்த சிஷ்ய பரம்பரைகள் தான்.. மேலும் அடியேனின் பாட்டி (அம்மாவின் அம்மா) மிக முக்கிய காரணம். சுவாமிஜி சதாசிவானந்தா புட்டபர்த்தியிலும் , வொயிட் ஃபீல்டிலும் சுவாமியை பலமுறை தரிசனம் செய்திருக்கிறார். படாடோபம்.. ஜபர்தஸ்து.. இவை எல்லாம் காட்டாமல்... தரிசன சலுகை எதையும் எதிர்பார்க்காமல் சராசரியாய் கூட்டத்தோடு கூட்டமாய் அமர்வார்! *சுவாமிஜி எந்த தரிசன வரிசையில் அமர்ந்தாலும் சுவாமி இவரை அருகே அழைத்து விபூதி சிருஷ்டித்து இவரின் நெற்றியில் இட்டு தனதருகே அமர்த்திக் கொள்வார்!!* இதனை மாதாஜி பெரும் வியப்போடு பகிர்ந்து கொள்கிறார்.. பாபாவை இதுவரை நான் தரிசித்த தில்லை.. பர்த்தி தரிசனம் ஆயிருக்கு.. சுவாமியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றதில்லை என்றார் மாதா ஜி.. சுவாமி எனும் பரம்பொருள் ஸ்ரீ சத்ய சாயி ரூபம் மட்டுமில்லை... மாதா ஜி தினசரி வழிபடும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ரூபமும்... ஸ்ரீ கிருஷ்ணரின் ரூபமும்... வரப்போகின்ற சக்தி அம்சமான ஸ்ரீ பிரேம சுவாமி ரூபமும்...


நம் சுவாமி சிவானந்த ஆசிரமத்தில் தங்கி சென்ற பிறகு ஒரு சிறுவன் சுவாமியை போலவே சுருள் முடி வைத்துக் கொண்டு நான் தான் சாயிபாபா வந்திருக்கிறேன் என்றிருக்கிறான்...

அதற்கு சுவாமிஜி அப்படி எல்லாம் பேசாதே.. அவர் அவதாரம்.. அசல் அசல் தான்.. அவரை போல் சுருள் முடி வைத்திருந்தால் நீ அவராக முடியாது என்றிருக்கிறார். அவனும் விடாப்பிடியாக அவரைத் தான் ஃபோட்டோ எடுப்பீர்களா? நீங்கள் என்னையும் ஃபோட்டோ எடுங்கள் என்று சொல்ல... ஒன்றல்ல இரண்டல்ல மூன்று முறை சுவாமிஜி எடுத்த ஃபோட்டோவில் மூன்று முறையும் அவன் அணிந்திருந்த காவி உடை அப்படியே பிரதிபலித்திருந்தும்.. அவனின் தலை மட்டும் மொட்டை தலையாக ஃபோட்டோவில் விழுந்திருக்கிறது.. வாயடைத்துப் போய் வந்த வழியே திரும்பிச் செல்கிறான் அவன்... இதனை சுவாமிஜி மாதா ஜியுடன் பரவசமாய் பகிர்ந்திருக்கிறார்! 

 ரிஷிகேஷத்தில் இருக்கையில் ஒரு சிறு பெண் குழந்தை இவர் முன் தோன்றி இவரின் கையைத் தொட்டு விளையாடி எங்கிட்ட வா என அழைக்கிறது.. பாயாசம் தருகிறார்.. உண்கிறது.. உன் பேர் என்ன? எங்கிருந்து வர ? என சுவாமிஜி கேட்க...சொல்லமாட்டேன் எனச் சொல்லி ஒரு நாள் மணித்வீபம் என்று கூறி கண் முன் அந்த பெண் குழந்தை மறைந்திருக்கிறது.. பிறகு அது கன்னியாகுமரி என கண்டுபிடித்து அங்கேயே ஐக்கியமாகிறார்! அந்தக் குழந்தை சாட்சாத் குமரி தேவி தான்.. இப்போது தரிசிக்கும் கன்னியாகுமரி அம்மன் கோவில் ஆதி கோவில் அல்ல..‌நிஜமான கோவில் கடலிலிருந்து 20 கி.மீ உள்ளே கடலுக்கடியில் இருக்கிறது என்றார் மாதா ஜி. இப்போதும் மீனவர்கள் கடலடி கோவில் கோபுரத்தை தரிசிக்கிறார்கள். முன்பு ஒருமுறை சுவாமி மாணவர் ஒருவர் கன்னியாகுமரி அம்பாள் கடலிலிருந்து எழுந்து நடந்து வந்ததை தரிசித்திருக்கிறார். சமுத்திர ராஜன் மகளே குமரி தேவி. மாதா ஜி பகிரும் போது புல்லரித்துப் போனேன்!! 

சுவாமிஜி சதாசிவானந்தா(1930-2000)


தனது சமாதி தேதியை சுவாமிஜி சதாசிவானந்தா முன்பே உணர்ந்திருந்தார்.. மாதா ஜி யின் சன்யாச தீட்சை நாளும் வந்தது (2000).. அன்று சுவாமி ஜி நீ அக்ரஹாரத்தில் வள்ளியூர் மாமிக்கு மட்டும் வெற்றிலை பாக்கு பழம் வைத்து கொடு என்றிருக்கிறார். அந்த வள்ளியூர் மாமியே சுவாமிஜியை ஆரம்பம் முதலே மதித்து... துதித்து.. வணங்கி... தேநீர் தந்து .. நிறைய சேவை புரிந்திருக்கிறார்... அவர்களும் வந்து வணங்கி சுவாமிஜியை ஆசீர்வாதம் பெறுகிறார். அந்த வாரத்திலேயே சுவாமிஜி உடல் நலக் குறைவால் சமாதி ஆகிறார்.. சுவாமிஜி இறுதியாக ஆசி வழங்கியது வள்ளியூர் மாமிக்கு.. அந்த வள்ளியூர் மாமி வேறு யாருமல்ல.. அடியேனின் பாட்டி தான் ( லட்சுமி பாட்டி)!!

சுவாமியை பற்றி சுவாமிஜி மாதா ஜி யிடம் சொல்கிற போதெல்லாம்.. "சுவாமி ஒரு மாபெரும் அவதாரம்.. அவரை சராசரிகள் புரிந்து கொள்ளவே முடியாது.. அவரின் சிருஷ்டி அற்புதங்களை மட்டுமே கவனித்து கொண்டிருக்காமல்... சுவாமியின் போதனைகளை நாம் பின்பற்றியே ஆக வேண்டும்.. நம்மை நல்வழிப்படுத்தவே அந்த அவதாரம் வந்திருக்கிறது. இதனை புரிந்து கொண்டால் மட்டும் போதும்!" என்றிருக்கிறார்.. மாதாஜியோ "அவா அவதாரம் எடுத்து வர்றதே நமக்காகத் தான் ... எத்தன சேவ பண்ணிருக்கா.. அதுவும் சென்னைக்கு தண்ணி கொடுத்தது.. அவா அனுகிரகம் இருந்தா போதும்.. பாபாவ கட்டியா பிடிச்சுக்கோ கன்ஷு" என்று அடியேனிடம் சொல்லி தீர்த்த பால் பிரசாதம் கொடுக்கும் போது.. பூஜை அறையிலிருந்து அம்பாளிடம் செம்பருத்தி பூ விழுந்து சுவாமியின் இருப்பை இதயத்தில் உணர்த்தியது!!

சுவாமியை கட்டியாக பிடித்துக் கொள்ளும் அளவிற்கு அடியேனுக்கு பக்தி இருக்கிறதா தெரியவில்லை... ஆனால் அடியேனை சுவாமியே கட்டியாக பிடித்துக் கொள்ளும் அளவிற்கு சுவாமிக்கு மகா கருணை இருக்கிறது!!


  பக்தியுடன்

வைரபாரதி

2 கருத்துகள்:

  1. மெய்சிலிர்க்க வைக்கும்..தெய்வீக அனுபவம்..!இதைப்பற்றி படிக்கக்கூட புண்ணயம் செய்திருக்க வேண்டும்! நமஸ்காரம்!

    பதிலளிநீக்கு