ஒரு திருடனின் மனதை திருடி அவரை திருந்த வைத்து எவ்வாறு சுவாமி நல்ல பாதையில் மாற்றி... ஆன்மீகத்தில் எழ வைத்தார் என்பதன் பரவச அனுபவம் சுவாரஸ்யமாய் இதோ...!
சுவாமி ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்ததில் இருந்தே உள்ளம் கவர் கள்வர் தான்!! அந்த இதய வசீகரம் இரு அவதாரத்திற்கு மட்டுமே மிகவும் பொருந்தி இருக்கிறது... ஒன்று ஸ்ரீ கிருஷ்ணர்... மற்றொன்று ஸ்ரீ சத்ய சாயி. கவர்ந்திழுக்கும் தோற்றமும்.. கவர்ந்திழுக்கும் பேரன்பும் பல கோடி மக்களை இன்றளவும் ஈர்த்துக் கொண்டு வருகிறது!! தினந்தோறும் பல்லாயிரம் பேர் சுவாமியிடம் சூழ்ந்திருப்பர். சாதா மலர்களிடமே சூழ்கிற போது பக்த வண்டுகள் தேவ லோக பாரிஜாத மலரிடம் சூழாமல் போகுமா!! அப்படி ஒரு முறை பக்தர்கள் சுவாமியை சூழ்ந்திருக்கையில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு பிக்பாக்கெட் திருடனும் யாருக்குமே தெரியாமல் அங்கே அமர்ந்திருக்கிறான்... பேரண்டத்தையே தனது பேரன்பால் கொள்ளை கொண்டிருக்கிற உள்ளம் கவர் கள்வரானவர் சுவாமி என்பது அதுவரை அந்த திருடனுக்கு தெரிய வாய்ப்பே இல்லை... சுவாமிக்கு யாரார் எப்படி எப்படி என நன்கு தெரியும்.. அப்பெரும் கூட்டத்திலும் அப்பெரும் திருடனை கண்டுபிடித்து அழைக்கிறார்.. அவனுக்கோ கை கால் நடுங்குகிறது..
"இந்த கொடிய தொழிலை நீ உடனே கைவிடு... உனக்கேற்ற வேலை ஒன்றை கிடைக்கச் செய்கிறேன்! அதில் சேர்ந்து நீ நியாயமாக தொழில் செய்ய வேண்டும்" என்கிறார் சுவாமி. இந்த ஒரு வார்த்தை... ஒரே வார்த்தை.. வெறும் வார்த்தை அல்ல.. சுவாமி கொடுத்த வாழ்க்கை. புனர் ஜென்மம். அந்த திருடனும் அன்று முதல் சுவாமியின் கட்டளையை ஏற்று தன்னுடைய வாழ்வை மாற்றிக் கொள்கிறான்.ஆகையால் "திருடன்" என்ற பெயரில் உள்ள இரண்டு எழுத்தான "டன்" விலகி மதிப்பு கூடுகிறது.. டன் கணக்கில் செய்த பாவங்கள் எல்லாம் இவனது மன வருந்துதலால் கரைந்து போகிறது. சுவாமியின் போதனைகளை வாழ்க்கையில் கடைபிடித்தால் மட்டுமே சுவாமி நமக்கான அனுகிரகத்தை தொடர்ந்து வழங்குவார் என்பதும் இதனால் உணர முடிகிறது!
ஹலகப்பாவை பற்றி விபரங்கள் தெரிவித்த பிரேம சுவாமியின் தாயாகும் பேறு பெற்ற பக்தர்களில் உத்தமரான கஸ்தூரியே பிரபல மேற்கத்திய யோகினியான இந்திராதேவி அம்மையாரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார். ஹலகப்பாவோ அம்மையாரை வணங்கி தனது கைகளில் வைத்திருந்த விபூதி டப்பிவிலிருந்து அங்குள்ளவர்களுக்கு விபூதியை வழங்கிக் கொண்டு வருகிறார்! திடீரென விபூதி தீர்ந்து போகிறது.. டப்பாவை மூடி தன் கண்களையும் மூடி சுவாமியிடம் வேண்டுகிறார் துரௌபதி அட்சய பாத்திரத்தை கைகளில் வைத்து வேண்டியதைப் போல்... விழியைத் திறந்து மூடியையும் திறக்கிறார்.. விபூதி பொங்கி வழிந்திருக்கிறது.. அதை எடுத்து அனைவருக்கும் வழங்குகிறார்...
மாலையிலும் இந்த விபூதி விநியோகம் நடைபெறுகிறது.. இந்திராதேவி அம்மையாரோ அந்த திவ்ய விபூதியை எடுத்து சிறிது வாயில் இடுகிறார்.. அது தேனாய் இனிக்கிறது! ஆச்சர்யப்படுகிறார்.. அதற்கு ஹலகப்பா தனது வீட்டின் சுவாமி படங்களில் பொழிகின்ற விபூதி மழையை சேகரித்து அனைவருக்கும் விநியோகிக்கும் முன் சர்க்கரையை சேர்த்து கொடுப்பார்.. பலர் இவரது வீட்டில் வந்து விபூதி பிரசாதம் பெற்றுக் கொண்டு போவர். ஒரு சமயம் இவரின் மனைவியோ "சர்க்கரை விலை அதிகம்.. நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள்?.. நாளை வெறும் விபூதி மட்டும் கொடுங்கள். போதும்" என சண்டை போடுகிறார். உலகத்தில் பற்பலர் சுவாமியின் வார்த்தையை விட சம்சாரத்தின் வார்த்தையையே கீதையாக ஏற்று பின்பற்றி வருகிறார்கள். சுவாமிக்காக யாரும் சம்சாரத்தை துறப்பதில்லை.. ஆனால் சம்சாரத்திற்காக பலர் சுவாமியையே துறந்த சம்பவங்கள் பல... மனைவிக்கு சரி என்று தலையாட்டிய போதும் உள்ளம் உறுத்திய படி உறங்கிப் போகிறார் ஹலகப்பா...காலை எழுந்து குளித்து சுவாமி படத்தின் முன் நின்று வழிபடும் போது ... வழக்கம் போல் விபூதி பொகிறது.. அதை வாயில் இடுகிறார்.. அதே இனிப்பு ... தெய்வீக தித்திப்பு... புளகாங்கிதம் அடைகிறார் ஹலகப்பா...
இவ்வாறு நிகழ்ந்ததை அம்மையாரிடம் தெரிவித்து.. அங்குள்ள அனைவருக்கும் விபூதி விநியோகிக்கிறார். பலர் பணம் தர முன்வருகின்றனர். இவர் எந்த நயா பைசாவையும் எவரிடமும் வாங்காமல் கை எடுத்து கும்பிடுகிறார்... அது தான் சுவாமி மகிமை... அடுத்தவரின் பணத்தை அபகரிக்கும் மனம் எப்படி பக்குவப்பட்டிருக்கிறது பாருங்கள்!! நாம் என்னவாக இருந்தோம் என்பது முக்கியமே இல்லை...சுவாமி பக்தரான பிறகு நாம் என்னவாக இருக்கிறோம் என்பதே முக்கியம்!! பிடிவாதக்காரராக.. அகந்தை உள்ளவராக... கோபம் கொப்பளிப்பவராக...தீவிர பற்று மற்றும் எதிர்பார்ப்பு நிறைந்தவராக... பேராசைப்படுபவராக இப்படி நாம் எப்படி இருந்த போதும்.. சுவாமியை வழிபட வழிபட பக்குவமடைகிறோம் அல்லவா .. அதுவே ஆன்மீகம் என்பது எல்லாம்!! குணமாற்றமே நம்மை சுவாமி பக்தர் என அடையாளப்படுத்துகிறது. தலை கீழாக இருந்த ஹலகப்பா அப்படியே மாறிப்போய் விடுகிறார்.. அக முன்னேற்றத்தால் மட்டுமே அம்மாற்றம் வருகிறது.
ஹலகப்பா அவர்கள் அளித்த சுவாமி உருவம் பதித்த பிளாஸ்டிக் மோதிரத்தை மட்டும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்.ஒரு ஜாடிக்குள் வைத்து தூங்கிப் போய்விடுகிறார்.. பக்திக்கு கட்டுப்படும் சுவாமி அந்த ஜாடிக்குள் சமர்த்தாக இருக்கிறார். விடிகிறது... ஜாடி முழுவதும் அமிர்தம் நிறைந்திருக்கிறது..
பரவசப்படும் ஹலகப்பா இந்த நிகழ்வை இந்திராதேவி அம்மையார் உட்பட அனைவரோடும் பகிர்ந்து கொண்டு தன் நன் நடத்தையை சுவாமி அங்கீகரித்ததாக உணர்ந்து கொள்கிறார்! சொட்டு சொட்டாக அந்த சுவாமி மோதிரத்தில் வழிந்து கொண்டிருந்த அமிர்த தாரைகள் ஹல்கப்பாவின் தன்னலமில்லா பக்தியை ஆம் ஆம் என்று ஆமோதிப்பதைப் போலவே இருந்தது!!
(ஆதாரம்: பகவான் பாபா / பக்கம் : 147 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)
ஒரு தவறை ஒரு சரியால் சமன்படுத்த முடியாது. சரிக்கான புண்ணியத்தையும், தவறுக்கான பாவத்தையும் மனிதன் தனித்தனியாக அனுபவித்தே ஆக வேண்டும்! சுவாமியிடம் பக்தி எழுந்து இதயம் பக்குவப்பட எல்லா நிகழ்வையும் சுவாமி சங்கல்பம் என்றே ஏற்றுக் கொள்ளும் தன்மை வளர்கிறது.. அதுவே சரணாகதியை நோக்கி நம்மை கைபிடித்து அழைத்துச் செல்கிறது!!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக