தலைப்பு

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

போதை மாத்திரை உண்டு சீரழிந்த அமெரிக்கரை நல்வழியில் கரையேற்றிய சாயி தெய்வம்!

பரவசம் கிடைக்கும் என தவறான வழிகாட்டுதலால் போதைக்கு அடிமையாகி.. வேறு பல இன்னலிலும் சிக்கிய அமெரிக்க நபரை சுவாமி எவ்வாறு நல்வழிப்படுத்துகிறார்...? அவரின் கோப தாபங்களை எவ்வாறு தணிக்கிறார்? என்பதை சுவை பட கூறும் சுவாரஸ்ய பதிவு இதோ...

பூமி இடது வலதாக சுற்றுகிறது... கால் தரையில் இல்லை.. உடல் எடை லேசாகிறது.. சுற்றி இருக்கும் காட்சிகள் மெதுவான கதியில் ரிவைன்ட் மோடில் செயல்படுகிறது.. பூமியோடு சேர்ந்து தலையே பூமியாகி கிறங்குகிறது.. ஆஹா இது தான் மோட்சம்.. இது தான் பரவசம்.. இது தான் தெய்வ பதம்.. என தவறாக உணர்ந்தபடி எல்.எஸ்.டி மாத்திரை டோஸ் நன்றாக வேலை செய்கிறது இந்த அமெரிக்கருக்கு... இவர் பெயர் தால்ப்ரூக். குமாஸ்தா வேலையை விட்டு சுதந்திரமாக தன் சுயத்தை உணர வேண்டி மாத்திரையின் மாத் திரையில் மறைத்து தன்னையே சிறை வைத்துக் கொண்டவர்.. ஆனந்தம் ஒரே ஒரு மாத்திரையில் வந்துவிட்டால் பிறகு அந்த ஆனந்தத்திற்கு தான் என்ன மதிப்பு? தெரியவில்லை அவருக்கு! ஆனாலும் நாள்பட நாள்பட அது நிரந்தரமான இன்பத்தை தரவில்லை என புரிந்து கொள்கிறார். உள்ளே தொலைத்துவிட்டு ஆனந்தத்தை வெளியே வெளிச்சமிட்டு தேடினாலும் கிடைக்குமா? மெல்ல மெல்ல புரிகிறது. எல்லா மாத்திரைகளுக்கும் பின் விளைவுகள் உண்டு. எல்.எஸ்.டிக்கு கொஞ்சம் அதிகமே.. மனம் சோர்வாகிறது... நரம்பு தளர்கிறது.. ஆகவே இது வழியில்லை என உணர்கிறார் இந்த அமெரிக்கர். 

1966 ஒருநாள் லைப்ரரியில் சுவாமி சிரத்தானந்தா எழுதிய ராமகிருஷ்ணரின் 'என் குரு' எனும் புத்தகம். 1000 பக்கம். வாசிக்கிறார். இன்னும் சில புத்தகங்கள். மனம் இந்தியாவிற்கு திரும்புகிறது. ரிஷியின் தேசமான ரிஷிகேசம் செல்ல வேண்டும் என ஆவல். சுவாமியின் காலடி பட்டு தெய்வீகம் பொங்கிடும் ஆன்மீகப் பிரதேசமது. மகரிஷி மகேஷ் யோகியின் ஆசிரமத்தில் இடம் கிடைக்கிறது. அங்கே குரு தீட்சை பெற்று  ஜபம் பழகுகிறார்... ஜபம் இறைவனை நோக்கியே இழுத்துச் செல்லும்... மனம் லேசாக அடங்க ஆரம்பிக்கிறது இவருக்கு... இன்னும் ஆன்ம விரிவடைய விரும்புகிறார் இந்த அமெரிக்கர். 

1970 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனந்தப்பூர் விஜயம். நேரம் நெருங்க நெருங்க கடவுளை தரிசிக்கும் நேரம் வந்தே தீரும்..!  இவருக்கு அது நெருங்கியது. ஐம்பது பேர் அமர்ந்திருக்க அவர்களோடு தரிசனத்திற்கு அமர்ந்து கொள்கிறார். சுவாமி செந்நிற சூரியனாய்.. விடியலை விழிகள் தாங்கிய படி..‌கோடிக்கணக்கானவரின் கண்ணீரை துடைக்கும் அச்சிறு சித்திர விரல்களை அசைத்தபடி புன்சிரிப்பு பூங்கொத்தாய் மிதந்து வருகிறார்!

அனைவருடைய கைகளும் கூப்பின‌.. இந்த அமெரிக்கர் தால்ப்ரூக் தன்னை அறியாமல் கைகளை கூப்புகிறார்.. தலையை உயர்த்தி... உணர்ச்சிப் பிழம்பாய் உறைகிறார்...காரில் இறங்கி வருகையில் சுவாமிக்காக பக்தர் எழுந்து நிற்க.. சுவாமி பக்தரை சாந்தி படுத்த.. தான் கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்க்கிறார் இவர்.. அசாந்தியோடு தான் பிரசாந்திக்கு வந்து சேர்ந்திருக்கிறார் தால்ப்ரூக்.. கோவாவில் ஒரு குழாமோடு இரவு தங்க.. அதிகாலை அந்தக் குழாமில் ஒரு பெண் கோவா கடற்கரையில் பிணமாகி இருக்க..போலீஸ் தன்னையும் சந்தேகப்படுவார்களோ என அங்கிருந்து தப்பிக்க கிளம்பியதும்.. ஒரு டாலருக்கு அதிக விலை தருவதாக.. இவர் வைத்திருந்த அனைத்து டாலருக்கும் 800 ரூபாய் தருவதாக ஏமாற்றிய ஒருவரையும் இவர் நினைத்துப் பார்ப்பதும்... சுவாமி மேடையை விட்டு கீழே இறங்கி வருவதும் சரியாக இருக்கிறது.. எப்போதுமே சுவாமி துல்லியம். சுவாமி எது செய்கிறபோதும் சரியான நேரத்திற்கு செய்வார்.. சுவாமி அவ்வாறு வர.. சிலருக்கு விபூதி தர... தால்ப்ரூக் அருகே வந்து தலையைத் தொட்டு "போக்கிரி" என்று சொல்லி சுவாமி சிரித்தபடி.. "உன்னை எனக்கு தெரியும்! உனக்கு நடந்தவைகளும் எனக்கு தெரியும்!" என்று சொல்லிவிட்டு நகர்ந்து செல்கிறார்.. 

பஜனை தொடகுகிறது. சுவாமியின் நயனம் மூடி இருக்கிறது. இந்த அமெரிக்கரின் மனதில் இனம் புரியா அமைதி அப்பிக் கொள்கிறது! அனைவரும் பின்பாடல்  பாடுகிறார்கள்.‌ அப்போது "சுவாமி மற்றவர் போல் அல்ல.. பணமோ புகழோ விரும்பாதவர்.. தன் பக்தருக்கு ராமராய், கிருஷ்ணராய், ஏசுநாதராய் காட்சிதரும் கடவுள் அவர்" என புது டெல்லியிலிருந்து ஒரு பக்தர் சொல்வது இவரின் காதுக்கு விழுகிறது... அமுதம் வந்து பாய்கிறது காதிலும் ... சுவாமியின் தரிசனத்தால் கண்களிலும்...

அன்று மாலை தால்ப்ரூக் அனந்தப்பூர் திரும்பிவிடுகிறார். விடுதி அறையில் இரவு கார உணவு சில உபத்திரவம் கொடுத்தாலும் நன்றாக தூங்குகிறார். அமெரிக்காவில் இருந்தவரை போதையில் தள்ளுதலால் படுக்கையில் உறங்கியவர்... இப்போது ஆனந்த பரவசத்தின் உந்துதலால் ஆழ்ந்த நித்திரை கொள்கிறார். அடுத்தநாள் காலை...சுவாமியின் பெயரால் கட்டப்படவிருக்கும் பள்ளிக்கூட அடிக்கல் நாட்டு வைபவம். அங்கே நிகழ்கிறது. தால்ப்ரூக் வேடிக்கை பார்க்கிறார். திடீரென அழைப்பு.. சுவாமி அழைப்பு தன் காரில் ஏறச் சொல்லி...இவர் திக்கு முக்காடுகிறார். காரில் ஏறிய உடனே சுவாமியே "வயிறு சரியாக இல்லை அப்படித்தானே" என்கிறார். "ஆம் சுவாமி.. நேற்றைய உணவு சரியில்லை... ஆகையால் ஒத்துக் கொள்ளவில்லை..." 

"உன் மனமும் சரியாக இல்லை" என்கிறார் சுவாமி. சுவாமிக்கு எப்படி தெரியும்? என வியக்கிறார்! "கோவாவில் பஞ்சிம் நகரில் நடந்ததும் ..‌பம்பாய் ஓட்டலில் நடந்ததும் உன் மனதை வாட்டுகின்றன...அந்த நினைவுகள் எங்கு போனாலும் தொடர்கின்றன.. சரிதானே !" என சுவாமி சொல்ல.. நேரில் பார்த்தது போல் சுவாமி சொல்கிறாரே எனவும் மற்ற பக்தர்கள் சொன்னது போல் சுவாமி கடவுள் தான் என்பது புரிந்து போக... இவரால் பேசமுடியவில்லை... எந்த தேசத்தினர் ஆயினும் தொழுகை வேறாக இருப்பினும் அழுகை ஒன்றாகவே இருக்கிறது.. அனைவரின் கண்ணீர்த் துளிகளும் சங்கமிப்பது சுவாமியின் திருவடிகளிலே...

கண்ணீர் உதிர்க்கிறார் தல்ப்ரூக்.

"இப்போது புரிகிறதா .. நான் உன்னை முதல் தடவை பார்த்தபோது ஏன் "போக்கிரி" என்று சொன்னேன் என்பது..." என சுவாமி தெரிவித்து.. மிகுந்த கருணையோடு "பரவாயில்லை நீ திருந்தி விடுவாய்" என்கிறார்... எப்பேர்ப்பட்ட விடியல் விதைகளை அந்த அமெரிக்கர் இதயத்தில் தூவுகிறார்... அந்த இருட்டு விதைகளை (எல்.எஸ்.டி போதை மாத்திரைகள்) தவிர்த்த இந்த அமெரிக்கர் இப்போது விடியல் விதைகளை விழியால் விழுங்குகிறார்!

ஆசிரமத்தில் இந்த அமெரிக்கர் பல பக்தர்களை சந்திக்கிறார்... அவர்களின் சுவாமி அனுபவங்களை கேட்கிறார்.. பரவசப்படுக்கிறார்.. இவருக்கு தங்கும் வசதி .. உண்ணும் வசதி என பக்தர்களே ஏற்பாடு செய்கிறார்கள். அப்படி செய்தவர் கொரையா எனும் இஸ்லாமிய வாலிபன். பிறகு இந்த அமெரிக்கர் ஒரு ஜெர்மானிய நாட்டு நீச்சல் வீரரை சந்திக்கிறார்.

      "சுவாமியின் பக்தர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள்...  கோவன், சார்லஸ்டீன், இந்திராதேவி , மர்ஃபெட் என எவ்வளோ பேர்! அந்த பெருங்கூட்டத்தில் நானும் ஒருவன்" என்று ஆரம்பிக்கிறார் அவர்..

      சுவாமியை இவர் தரிசித்த போது "நீ இங்கே வருவாய் என எனக்கு நன்கு தெரியும்.. நீ முற்பிறவியில் இந்தியாவில் பிறந்தவன்... யோகியாக வாழ்ந்தவன்... ஆனால் முழுமையாக ஸித்தி அடையும் பேறு இல்லை.. அதனால் உன் தவம் வீணாகிவிட்டது!" என்று சுவாமி சொல்லி.. மீண்டும் கருணையோடு அவரின் ஆன்ம தவத்தை துவக்கி வைக்கிறார்.. வேறு எந்த ஆன்மீக பயிற்சியும் நெடுநாட்களாய் சுவாமி அவருக்கு தரவில்லை ஆகையால் பொறுமை இழக்கிறார். பொறுமையே தவத்தின் முதல் படி.... அதை உணராமல் ஜெர்மனிக்கே திரும்ப தீர்மானிக்கிறார்... சுவாமியோ "உன் விருப்பப்படி போய் வா.. நீ நிச்சயம் இங்கு தான் திரும்பி வருவாய்.. அப்படி வரும்போது தலைகுனிந்தவனாய் அமைதியற்றவனாய் திரும்பி வருவாய்" என்கிறார். கடவுளின் சத்தியத் திரு வார்த்தைகள் ஆரம்பத்தில் பலருக்கு புரிவதில்லை.. இவர் அதை பொருட்படுத்தாமல் செல்கிறார்.. இரண்டு வருடம்...வேறு தொழில்.. பெரிய நஷ்டம்.. அவமானம்... சுவாமியிடமே தஞ்சம் அடைகிறார்.. அப்போதும் சுவாமி மிகுந்த கருணையோடு "உனக்காகத் தான் காத்துக் கொண்டிருந்தேன்.. முதலில் பொறுமையாக இருக்கக் கற்றுக் கொள்! பேசுவதற்கு முன் என்ன பேசுகிறாய் என சிந்தித்துப் பார்... உனக்கு வழி புரியும்.. மெல்ல மெல்ல நான் வழி காட்டுவேன்..." என்கிறார். இது அவருக்குமானது மட்டுமல்ல நம் எல்லோருக்குமான எளிய கீதையே!! 

சுற்றி இருப்பவரின் அனுபவங்களில் சுடர் பெறுகிறார் இந்த அமெரிக்கர் தால்ப்ரூக். பஜனை ஆரம்பிக்கிறது..‌சுவாமியின் காவி உடையிலிருந்து ஒளி வெள்ளம் தால்ப்ரூக்'கை தழுவுகிறது.. அப்படியே உறைந்து போகிறார் ... இப்போதும் பூமி சுற்றுவது நின்று போகிறது.. காட்சி நகர்வு மெதுவாகிறது.. ஆனால் மனம் சோர்வாக வில்லை.. நரம்பு தளரவில்லை.. காரணம் சுவாமி எனும் வியன் இறைவனின் இருவிழியான விசித்திர கருப்பு வெள்ளை மாத்திரைகளை விழுங்கிய இதயம்.. இது தான் இது தான் ஆனந்தம் என  பரவசத்தைப் பாடி முடிக்கையில் "ஓம் ஜெய் ஜெகதீச ஹரே" ஆரத்தி பாடல் ஆரம்பிக்கிறது... அந்த கற்பூர ஆரத்தியில் இந்த அமெரிக்க தால்ப்ருக்'கின் பயமும், பாதுகாப்பின்மை உணர்வும் கரைந்து காற்றில் காணாமல் போய்விடுகிறது!!

(ஆதாரம் : பகவான் பாபா/ பக்கம் : 107 -- 123/ ஆசிரியர்: எஸ். லட்சுமி சுப்ரமண்யம்)


உலகின் எல்லாவற்றுக்குமான இறைவனும்... எல்லா உலகின் இறைவனும் சுவாமியே..! இதை இதயம் உணர்ந்து அனுபவிக்க பேரானந்த ஊற்று புறப்படுகிறது.. தானும் ஆனந்தமாகி அது வழிந்தோடும் வாசஸ்தலம் எல்லாம் ஆனந்தமயமாக்குகிறது!

  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக