தலைப்பு

சனி, 7 ஆகஸ்ட், 2021

பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவியின் முதல் சாயி அனுபவம்!


யோக கலையை மேற்கத்திய நாடுகளுக்கு முதன்முதலாக பரப்பி.. 'Mother of Western Yoga' என போற்றப்படும் மாதா இந்திராதேவி எவ்வாறு சுவாமியை முதன்முதலில் தரிசனம் செய்தார்.. அப்போது அவருக்கு நேர்ந்த சுவாரஸ்ய சுவாமி அனுபவம் இதோ...

மனதையும் உடம்பையும் ஆன்மாவின் நேர்க்கோட்டில் இணைப்பது யோகம். அதற்கான உள் சூழ்நிலையை ஏற்படுத்துவது தியானம். இந்தக் கலையை கற்றுத்தரும் இந்திராதேவி அம்மையாரை அறியாத சுவாமி பக்தர்கள் இல்லை. இவர் சுவாமியின் பழம் பெரும் பக்தை. 

ஒருநாள் லாஸ் ஏஞ்சல்ஸில் அவர் கிளாரா ஷஃப் என்ற ஆரூடம் சொல்பவரை சந்திக்கிறார். "நீங்கள் விரைவில் இந்தியாவுக்கு போகப் போகிறீர்கள்... அங்கே உங்களது குருவை சந்திக்கப் போகிறீர்கள்" என்கிறார். இவரால் அதனை நம்பமுடியவில்லை. சுவாமியின் முதல் அசரீரி அழைப்பு இது.. யாரையும் சுவாமி தன் கருவியாகப் பயன்படுத்தி தன்னோடு தன் பக்தர்களை இழுத்துக் கொள்ள முடியும்.. அப்படிப்பட்டதான முதல் அரைகூவல் இது...

          அதே போல் அவர் இந்தியாவுக்கு வந்து இறங்குகிறார்.. அந்த ஜோதிடம் சொன்னதற்காக அல்ல.. இந்திராதேவி அம்மையாருக்கு அப்போது அது நினைவில் கூட இல்லை... சென்னை அடையாற்றில் மர்ஃபெட் எனும் ஆஸ்திரேலியரை எதேர்ச்சையாக சந்திக்கிறார்.. உண்மையில் எதேர்ச்சை என்பது எதுவுமில்லை.. எல்லாமே சுவாமியின் சங்கல்ப ஏற்பாடுகளே. அந்த ஆஸ்திரேலிய மர்ஃபெட்'டே சுவாமி குறித்த புத்தகமான "Man of Miracles " சின் ஆசிரியர். அவரே இந்த அம்மையாருக்கு சுவாமியை பற்றி பகிர்கிறார்.. எவ்வாறு அந்தப் புத்தகச் சிறகின் வழி சுவாமியின் மகிமையை வெளிநாட்டிற்கு பரவச் செய்வதற்கு அவர் ஒரு கருவியாகப் பயன்பட்டாரோ‌.. அதே போல் அவரே இந்த அம்மையாருக்கு ஸ்ரீ சத்ய சாயி எனும் பரப்பிரம்ம விதையை நடுவதற்கான காரணமாக்கினார் சுவாமி...

          "நீங்கள் வடநாட்டிற்கு போகும் முன்னே.. கட்டாயமாக பகவானை தரிசிக்க வேண்டும்" என்கிறார். 

          "யார் அவர்?" எனக் கேட்கிறார் இந்திரா தேவி. ஜோதிடம் சொன்ன எதிர்கால புதிருக்கான ஏகவிடை இது. 

  "ஸ்ரீ சத்ய சாயி பாபா... ஷிர்டி சாயியின் மறு அவதாரம்... பல லட்சம் பக்தர்கள் இவரை கடவுள் அவதாரம் எனக் கொண்டாடுகிறார்கள் "* எனும் சத்தியம் பேசுகிறார். அந்த ஜோதிடத்தையும் இந்த ஜோதி இடத்தையும் இணைத்துப் பார்க்கிறார். ஓரளவிற்குப் புரிகிறது. ஆயினும் இந்திராதேவி அம்மையார் செய்கோனுக்கு மீண்டும் திரும்பி விடுகிறார். அங்கு சுவாமியின் பக்தர் பலரை சந்திக்க.. அவர்களின் சுவாமி அனுபவம் கேட்க கேட்க மனம் இந்தியாவிற்கு திரும்புகிறது.. தரிசனத்துக்கான ஏக்கம் வானத்தில் சுற்றிகிறது.. இருப்பு கொள்ளாமல் இந்தியா நோக்கி பறக்கிறது இந்த யோகப் பறவை. வழியில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத் துணை வேந்தரான டாக்டர் ஸென்னும்... பெங்களூர் தொழிற்கல்வி நிலையத்தின் தலைவரான பானர்ஜியும் இந்திரா தேவியை சந்தித்தனர். அவரின் காரில் உள்நுழைந்த அம்மையார் இதுவரை நுகராத வாசனை ஒன்று புறப்பட்டு வருவதை எண்ணி.. மனதிற்கு ரம்மியமான தெய்வீக வாசனையில் தோய்ந்து.. ஏதிந்த வாசனை ? என்ன பொருளில் இருந்து வருகிறது? என வினவுகிறார்...

          இது வெறும் பொருளில் இருந்தல்ல.. பரம் பொருளில் இருந்து என்பதனை ..

          "எந்தப் பொருளும் இல்லை இது" என்கிறார்கள்..

          "இல்லை.. மல்லிகைப்பூப் போன்ற வாசனை வருகிறதே " என மீண்டும் இவர் கேட்கையில்.. 

          "ஆம்.. பகவான் பாபா எங்களோடு இருப்பதை உணர்த்தும் வாசனை இது.." எங்கும் நிறைந்த அவரின் தெய்வீக இருப்பு இப்படி தூய வாசனையைப் பரப்புகிறது என்பதைப் புரியும் போது இந்திராதேவி அம்மையாருக்கு சுவாமியை தரிசிக்கும் ஆவல் இரட்டிப்பாகிறது. 

          "எனக்கும் அவரை தரிசிக்க வேண்டுமே" என ஏக்கத்தோடு கேட்கிறார்.

          "புட்டபர்த்தி சென்று பாருங்கள்.. உங்களுக்கு திரும்பிச் செல்லவே மனம் வராது" என்கிறார் ஸென்.

ஜோதி விளக்கில் ஊற்றப்பட்ட எண்ணெய் எப்படி மீண்டும் செக்கில் திரும்பும்?


கப்ரீலா என்ற ஸ்விட்சர்லாந்து ஆசிரியை ஒருவருடன் புட்டபர்த்திக்கு பயணமானார் இந்திராதேவி அம்மையார். அவர் சரியாக வந்திறங்கிய போது சுவாமி பால்கனியில் பால் முகத்தில் கனிந்த புன்னகையால் தரிசனம் அளித்துக் கொண்டிருக்கிறார். வானமே நிமிர்ந்து பார்க்கும் சுவாமியை நிமிர்ந்து பார்க்கிறார் இந்திராதேவி. அவர் உடல் முழுவதும் மின்சாரம் பாய்கிறது. 

"கப்ரீலா.. பாபா என்னை அழைக்கிறார்" என்கிறார் இந்திராதேவியார். ஏற்கனவே யோகம் பயின்றவர் இவர்.. *யோகம் தெய்வீக அதிர்வலைகளை உள்ளிழுக்கும் ஆற்றலை வழங்குகிறது..சுவாமியை தேக்கரண்டியில் அனுபவிப்பவர்கள் .. தியானம் / யோகம் செய்கிற போது குடம் குடமாய் அனுபவிப்பார்கள்.* அவ்வாறு அனுபவிக்கிறார் இந்திராதேவி.  கப்ரீலாவால் இந்திராதேவியின் வார்த்தையை நம்பமுடியவில்லை. ஆனால் கண்ணீரே அதற்கு சாட்சியாகிறது.. கண்கள் சித்ராவதி நதியாகின்றன‌.. கால் தரையிலில்லை.. உடம்பு சமன்பாடு இழந்து இறகாய் பூமியில் சரிகிறது. கபீரிலா இல்லை என்றால் ஒரே களேபரம் நிகழ்ந்திருக்கும். தாங்கிப் பிடிக்கிறார் அவர். தன்னை மறக்கிறார் இவர்.

ஒரு சில விநாடிகளிலேயே இந்திரா தேவி பெயர் சொல்லி அழைப்பு வருகிறது... 

       எத்தனை ஜென்மத்து புண்ணியமே... எத்தனை ஜென்மத்து வேண்டுதலோ...

எத்தனை ஜென்மத்து தவமோ...

சுவாமி எதிரே நிற்க இந்திராதேவி தனது இறைவனை தரிசிக்கிறார்..

"இங்கு ஏன் வந்தேன் என்று தெரியவில்லை.. எனக்கு எதுவுமே தேவையில்லை... இந்தியா விட்டு திரும்பிச் சென்றவள்.. மறுபடியும் புறப்பட்டு உங்களை தரிசிக்க  வந்திருக்கிறேன்" என்கிறார் இதயம் உருக...

எல்லாம் அறிந்த ஏக இறைவன் சாயி கேட்கிறார் " நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" என

"அமெரிக்காவில் கலிஃபோர்னியாவின் எல்லையில்... அது ஒரு பெரிய பயிர்ப்பண்ணை... நீங்கள் அங்கே கட்டாயம் வர வேண்டும்" என அழைப்பு விடுக்கிறார் கைகூப்பிய படி இந்திரா தேவி அம்மையார். 

அதற்கு சுவாமியோ " நான் எங்கும் இருக்கிறேன்... அங்கும் இருப்பேன்... எப்போதும் உங்கள் இதயத்தில் நான் இருப்பதை உணர்வீர்கள் " எனும் பரம சத்தியம் பகர்கிறார். 

"உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்?" என சுவாமி பரம கருணையோடு கேட்க... 

இந்திரா தேவியால் எதுவும் பேச முடியவில்லை... பக்தியின் உச்ச நிலையில் இருப்பவர்க்கு பாஷை பிடிபடுவதில்லை... கண்ணீரே அப்போது மொழியாகிறது.


சுவாமியோ மிகவும் கனிவுடன் " சரி.. இதை பூஜையில் வைத்துக் கொள்ளுங்கள்" என கை அசைவில் சுவாமி உருவம் பதித்த பதக்கம் அருள்கிறார். ஈரமான கையோடு அதனை வாங்கிக் கொள்கிறார். அதை தொடும் போது புல்லரிக்கிறது இந்திராதேவி அம்மையாருக்கு...

"நீங்கள் எங்கிருந்தாலும் என்னை அழைக்கலாம்...நான் வந்து உதவி செய்வேன்... எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் சரி... உங்களுக்கு  என் ஆசி உண்டு" என சுவாமி உத்தரவாதம் தர.. உருகுகிறார் அம்மையார்...

பம்பாய்க்கு திரும்பி தனது அமெரிக்க பயணத்திற்காக தயாராகிக் கொள்கிறார். கடைத்தெருவுக்கு தன் தோழி ஏனாட்சியுடன் செல்கிறார். 15 நிமிடமாக டாக்ஸி வரவில்லை... விமானத்திற்கு நேரமாகிறது. இன்னும் வரவில்லை.. திடீரென உணர்வு மயமாகி.. கண்கலங்குகிறார்.. உன்னை விட்டு அமெரிக்கா செல்ல விரும்பவில்லை என்கிறார்.. ஏனாட்சி என்னாச்சி என கேட்கிறார். "நீ எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நான் உன் கூட இருக்கிறேன்" என சுவாமி சொன்ன சொல் சுள் என வெய்யிலாய் இதயத்தில் இறங்கி கதகதப்பு தருகிறது... 

மின்னல் வேகத்தில் டாக்ஸி வந்து எங்கே போக வேண்டும் என கேட்க.. ஏனாட்சிக்கு எதுவும் புரியவில்லை... இறைவனாகிய சுவாமியே சத்குருவாக வந்தபிறகு தனது வாழ்க்கையையும் அவரே நிகழ்த்தி கவனித்துக் கொள்கிறார் எனும் சத்தியம் இந்திராதேவி அம்மையாருக்கு விளங்க.. அதை மூன்று முறை ஆமோதித்தது டாக்ஸியின் ஹாரன் ஒலி...


 பக்தியுடன்

வைரபாரதி


ஆதாரம்: Sai Baba and Sai Yoga by Indra Devi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக