தலைப்பு

புதன், 25 ஆகஸ்ட், 2021

பாபா அமராமல் தனியே வந்த காருக்கு கரம் குவித்த பக்தர்கள்!

சிலருக்கு தனியான சிறப்புகள் இருக்காது. ஆனால் அவர்கள் சேருமிடத்தால் சிறப்பிக்கப்படுவர். சிவன் கழுத்தில் மாலையாகவும், திருமாலுக்கு படுக்கையாகவும், விநாயகருக்கு இடுப்பிலும் இருப்பதால் நாம் அக்கடவுளர்களுடன் பாம்பையும் சேர்த்து வணங்குகிறோம். பகவான் பாபாவை சுமந்த மெர்சிடஸ் பென்ஸ் காருக்கும் அத்தகைய கௌரவம் ஒரு சமயம் கிடைத்தது... 


பாபா கோடைக் காலங்களில் மாணவர்களுடன் கொடைக்கானல் வருவதுண்டு. அங்கே ஸ்ருதி மாளிகையில் தங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். அவ்வாறு ஒருசமயம், மதுரை விமான நிலையம் வந்தபின்,  பாபா ஒரு அன்னையின் அன்புடனும், குதூகலத்துடனும் மாணவர்களுடன் கொடைக்கானலுக்கு, பஸ்ஸில் பயணம் செய்ய முடிவு செய்தார். ஆகவே அவரது மெர்சிடஸ் பென்ஸ் கார், பாபா அமராமலே கொடைக்கானலுக்கு ஓட்டி செல்லப்பட்டது. கொடைக்கானலில் உள்ள கண்கவர் லேக் அருகில் உள்ள பிரதான சாலையை பாபாவின் கார் சமீபித்தது. மலர்களை மொய்க்கும் வண்டுகள் போல், பாபாவின் வருகையை பக்தர்கள் எப்படியோ உணர்ந்து விடுவர். அதுவே அவரது ஆகர்ஷண சக்தியாகும். அப்போது அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்த மக்கள் பாபாவின் காரை அடையாளம் கண்டு, சாலையின் இருபுறமும் நின்று கரம் குவித்தனர். பிறகுதான் பாபா அந்த காரில் பயணிக்கவில்லை  என  தெரிந்தது. மாணவர்களுடன் பஸ்ஸில் பயணித்த பாபா வேடிக்கையாக ஒரு நீதியை  அவர்களுக்குபோதித்தார்.


"பார்த்தீர்களா அந்த காருக்கு கிடைத்த வணக்கங்களை. அது கடவுளுடன் அது கொண்ட நெருக்கமான இணைப்பினால் தான். நான்  அதில் அமராவிட்டாலும் பக்தர்கள் தங்கள் வணக்கங்களைத்  அதற்குத் தெரிவிக்கின்றனர். ஆகவே ஒருவருடைய மதிப்பு, அவரது கூட்டாளியின்   நற்செய்கையை வைத்தே அளவிடப்படுகிறது." இதைக் கூறிவிட்டு கல கல என நகைத்த பாபா, நகைச்சுவையாக கூறியதாவது. "பாருங்கள் உங்களுடன் வந்ததால் இன்று எனக்கு ஒரு வணக்கம்கூட கிடைக்கவில்லை."

🌻மாணவர்கள்  மீது வற்றாத  பரிவும், பாசமும் கொண்டிருந்த பாபா , அவர்களிடையே ஒரு நண்பனாய் பழகி, தமது உபதேசங்களையும் செவ்வனே இணைத்து வழி நடத்தியதை நாம் இதன்முலம் அறிந்து, பகவானின் அளப்பறிய கருணையை வியந்து பணியலாம்.🌻


ஆதாரம்: Extracts from Sai Humour, by Peggy Mason, Sandra Levy and Dr. M. Veeravahu

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக