தலைப்பு

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

100 கோடி ராமநாமத்தின் தெய்வீக அதிர்வுகளுடன் பர்த்தியில் அருள் புரியும் ஸ்ரீராமர்!

ராம நாமமே ஜென்ம ரட்சக மந்த்ரம். இதன் மகிமை அளவற்றது. ராம நாமத்தை தினமும் ஜெபிக்காத சாயி பக்தர்களே இல்லை. சாயிராம் சாயிராம் என நாம் ஒருவரை ஒருவர் எத்தனை முறை அழைத்துப் பேசுகிறோம். பகவான் நம் ஒவ்வொருவருக்கும் அளித்த அற்புத மந்த்ர உபதேசம் இது அல்லவா...


நாம் இப்போது பிரசாந்திக்கு செல்கிறோம். கணேஷ் கேட்டுக்கு வெளியில் நின்று கஜமுகனை தரிசித்து, வளையும் மதில்களுடன் நடந்து திரும்பினால் கோபுரம் கேட் காணலாம். அதற்கு பின்னால், சாயி குல்வந்த் ஹாலின் முகப்பில் ஸ்ரீராமர் -சீதா லட்மண, பக்த ஆஞ்சனேயருடன்  திருக்கோயில் கொண்டு, நம்மை ஆசீர்வதிப்பதைக் காணலாம். பர்த்தியில் ஸ்ரீராமரின் இந்த திருக்கோயில் எப்படி உருவானது. வாருங்கள் காண்போம்.


🌹லிகித நாம யக்ஞம்:

பகவானின் திவ்ய சரிதமும் , பக்தர்களின் பக்தி சரிதமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை, வெவ்வேறு அல்ல. தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதல்லவா? மதுரை ஸ்ரீசுப்ரமண்ய செட்டியார் அவர்களை அறியாதவர் யார்.? பகவானின் பரம பக்தராக விளங்கி, பாதுகா டிரஸ்டின் மூலம்,  உலகம் அறிந்த  அன்பர் அல்லவா?  அவர் ஆரம்பித்ததுதான் லிகித யக்ஞம் என்கிற ராமநாமம் எழுதும் இயக்கம்.

 இதில் அவரது ஈடுபாடும், உற்சாகமும் அளவிட இயலாதவை. அவரே அனைவருக்கும்  லிகித ஜெப நோட்டுப் புத்தகங்கள் வினியோகித்து, எழுதப்பட்ட நோட்டுகளை திரும்பப் பெற்று, அந்த இமாலய சேவையை ஐயனின் அருளால் இனிதாகசெய்து முடித்தார். உலகெங்கும் உள்ள சாயி பக்தர்கள் எழுதிய டன் கணக்கான நோட்டு புத்தகங்களை, டிரக் மூலம் 2000ம் ஆண்டு, புட்டபர்த்திக்கு கொண்டுவந்து சேர்த்தார். அந்த நோட்டு புத்தகங்கள், அளவிடமுடியாத பொக்கிஷங்களாக 108 கோடி ராம நாமத்தை தாங்கி ஒளிர்ந்தன.

பரம கருணாமூர்த்தியான பாபா, பக்தர்களின் பராதீனன் அல்லவா?

இந்த 108  கோடி ராமநாமம் என்னும் பொக்கிஷத்தை பாதுகாக்க , ஒரு நிலவரையை ( underground concrete cell) நிறுவி அதில் லிகித ஜெப நோட்டு புத்தகங்கள் அனைத்தையும்,  வேத கோஷங்கள் முழக்கத்துடனும், பஜன் பாடல்களின் இசையுடனும், பத்திரமாக வைத்து அருளினார். அந்த நிலவரைமீது ராம பக்த ஆஞ்சனேயர் திருவுருவச் சிலை ஒன்றையும் பிரதிஷ்டை செய்தார்.


🌹108 கோடி ராமநாம நல் அதிர்வுடன்... அமைந்த ஸ்ரீராமர் திருக்கோயில்:


அது 2002 ம் ஆண்டு. சாயி குல்வந்த் ஹாலின் அலங்காரப்பணிகளும், விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வந்த சமயம். விரிவாக்கத்திற்காக இரண்டு பெரிய மரங்களை வெட்ட வேண்டி இருந்தது. அதில் ஒரு மரத்தை வெட்டும்போது, அது இடி விழுந்ததைப் போன்ற பெருத்த சப்தத்துடன் விழவே, அனைவரும் பயந்தனர். அப்போது பகவான் பெங்களுர் த்ரையீ பிருந்தாவனத்தில் இருந்தார். அவரிடம் இந்த செய்தி கூறப்பட்டது. அதன்பின் பாபா,குல்வந்த் ஹாலின் விரிவு ஆக்கத்தில் சிறிது மாற்றம் செய்து, இரண்டாவது மரத்தை வெட்டவேண்டாம் எனக் கூறினார் . அங்கு வைக்கப் பட்டிருந்த ஹனுமான் சிலையும் தற்காலிகமாக எடுத்து வைக்கப்பட்டது. பிறகு அந்த இடத்தில் ஸ்ரீராமர் சீதை, லக்ஷ்மணர் மற்றும் ராமபக்த ஆஞ்சனேயர் சகிதம் ஒரு திருக்கோயில் எழுப்ப பாபா அருட் கடாட்சம் செய்தார்.


பகவான் இது பற்றி கூறியதாவது. நிலவரையில் வைக்கப்பட்டிருந்த 108  கோடி ராமநாம லிகிதங்களின் அதிர்வு அங்கிருந்த ஆஞ்சனேயரால் கிரஹிக்கபட்டதுடன், மேலும் மேலும் எழுந்து , அந்த இரண்டு மரங்களிலும் வியாபித்தது.அதுவே மரத்தை வெட்டும்போது பெரும் சப்தமாக வெளிப்பட்டது. இனி ஸ்ரீராமர் மட்டுமே அந்த திவ்ய அதிர்வைத் தாங்க இயலும் என ஸ்வாமி சங்கல்பித்து, இந்த இடத்தில் ஸ்ரீராமர் கோயிலை நான் ஸ்தாபனம் செய்தேன்.

ஆதாரம்: Sri Sathya Sai Digvijayam (1986-2005)

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


🌻 கலியுக ராமனால் உருவிக்கப்பட்ட இந்த த்ரேதாயுக ராமனின் புனித திருக் கோயிலை  நாம் பர்த்தி சென்று  தரிசிக்கும்போது, நாமும் அந்த 108 கோடி ராமநாம திவ்ய அதிர்வுகளில் மூழ்கி பிரும்மானந்தம் அடைவோமாக... 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக