தலைப்பு

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

கர்மாவைப் பற்றி ஸ்ரீ சத்ய சாயியின் கீதை!

 

கர்மாவை பற்றிய கீழ்காணும்  இந்த பதிவு ஜுலை 12, 1995 அன்று ஸ்ரீ சத்ய சாய்பாபா பிரசாந்தி நிலையத்தில் ஆற்றிய  உரையின் ஆதாரமாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது...!!


கர்மா தியரி என்றால் என்ன?? எந்த செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு என்பதாகும். இவை தவிர்க்க முடியாத விதிகளாக இருக்கின்றன...

பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்களினுள் சைதன்யம் என்ற எங்கும் நிறைந்த வியாபகம் அடக்கம். இவை ஒன்று சேர்ந்து தான் லோக வாழ்வு.  எனவே ஒன்றுக்கு இருக்கின்ற நியதி,  தர்மம் இன்னொன்றுக்கும் இருக்கத்தான் வேண்டும்.

மனிதனின் ஒவ்வொரு கர்மாவிற்கு விளைவாக ஒரு பலனும் உண்டாகித் தான் தீர வேண்டும் என்பதே கர்மா தியரி. பாப கர்மா செய்தால் அதற்கான தண்டனையை மனுஷன் அனுபவிக்க வேண்டும். புண்ணிய கர்மா செய்தால் அதற்கான நற்பலன் இவனை வந்து அடையும்!!

பாரதம் நற்கர்மங்கள் பற்பல நிகழ்ந்த பெரும் புண்ணிய பூமி!!
இப்பூமியில் பிறப்பதற்கே நாம் அனைவரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட இந்தப் புண்ணிய பூமியில் நம் அனைவருக்காகவும் அவதரித்த பகவான் ஸ்ரீ ஸ்ரீ சத்ய சாய் பாபாவை தவிர யாரும்  கர்மா கொள்கை பற்றி விளக்கமாக கூற முடியாது. காரணம் அந்தக் கர்மா தியரியின் இயக்குநரே சுவாமி தான்!!

கர்மா எத்தனை வகைப்படும்?? அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டு வரலாம் என்பதை அவர் மிக அழகாக விவரிக்கிறார்.

3️⃣ கர்மாவை மூன்று வகையாக பிரித்து வைத்துள்ளார்கள். அவை சுகர்மா விகர்மா மற்றும் அகர்மா.

▶️ இவற்றில் முதன்மையாக வருவது சுகர்மா. இது மனிதர்கள் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை வாரி வழங்கும்.

▶️ விகர்மா என்பது மனிதர்கள் செய்யும் தீய வினைகளுக்கு ஏற்ப தீய பலன்களை கொண்டு வந்து சேர்க்கும். ஆனால் அகர்மா என்பது மனிதர்களின் முற்பிறவியில் வினைப் பயனை இப்பிறவியில் கொண்டு வந்து சேர்ப்பதாகும்.


நம்மிடையே தெய்வீக அம்சத்தோடு வாழ்ந்த சீதா பிராட்டியார் அரிச்சந்திரன் நளன் மற்றும் தமயந்தி இவர்களது வாழ்க்கையில் சந்தித்த சோதனைகள் எதுவும் இப் பிறவியில் அவர்கள் செய்த வினையினால் அல்ல. முற்பிறவியின் பலன்களே!!

அதுபோலவே வாழ்க்கையில் துன்பத்தில் சிக்கியிருக்கும் மனிதர்கள் இப்பிறவியில் எந்த தீவினையும் செய்யவில்லை என்றாலும் அவர்கள் முன்ஜென்மத்தில் செய்த தீய வினையின் பலன்களை இப்பிறவியில் அறுவடை செய்கிறார்கள்.

முற்பிறவியின் தீய பலன்களை இறைவனின் கருணையோடு நம்மால் பெருமளவு தடுக்க முடியும்,  குறைக்க முடியும். அத்தகைய தெய்வீக அனுக்கிரகத்தை ஒருவர்  பெறுவதற்கு  ஒரே வழி சத்தியம், அறநெறி, அன்பு, கருணை மற்றும் பொறுமை இவைகளை விதைப்பதே ஆகும்.

இத்தகைய குணங்களை ஒரு மனிதன் தன்னுள்  வளர்த்துக் கொண்டால் அவனுடைய வாழ்க்கையே என்றென்றும் நறுமணம் வீசும் அழகிய நந்தவனமாக ஆகிவிடும். ஆனால் எந்த மனிதன் தன்னுள் கெட்ட எண்ணங்களும் தீய செயல்களையும் நிரப்பி வைத்துள்ளானோ அவனுடைய வாழ்க்கை  கிரேக்க புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் இருண்ட துர்நாற்றம் வீசும் வைதாரணி நதியை போல ஆகி விடும்.

உண்மையில் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை தானே தீர்மானித்துக் கொள்கிறான்.  தன்னுடைய ஒவ்வொரு செயல்களுக்கும் அவனே ஒரு சாட்சியாகிறான். வெளிப்புற தோற்றத்தில் ஒரு தீயவன் நல்லவனை போல காணப்பட்டாலும் அந்தரங்கத்தில் தன்னுடைய உண்மை நிலையை அவன்  நன்றாக அறிவான்.

பலர் இறைவனை வணங்குவதாலும், கோயில் உண்டியலில் காசைப் போடுவதாலும் கெட்ட கர்மாக்களைக் கழித்து விடலாம் என்று தவறாகக் கணக்கிட்டு விடுகிறார்கள். அந்த சிந்தனை உள்ளவர்கள் திருந்தவும் முனைவதில்லை. அவர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு விலை நிர்ணயித்து இறைவனிடமே தந்திரமாக நடந்து கொள்கிறார்கள். இதில் எல்லாம் கர்மா  கழிவதில்லை. ’உன்னைப் புகழ்கிறேன், உனக்கு வேண்டியதைச் செய்கிறேன். என்னைக் கண்டு கொள்ளாதே’  என்பது போன்ற லஞ்சத்தில் இறைவன் ஏமாறுவது இல்லை. ஏமாறுவது அவர்கள் தான்.

பரம்பொருள் என்பவர் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்

மூலம் : Sri Sathya Sai Speaks Volume 28 (1995)
தமிழ் மொழியாக்கம் :  ரா. வரலட்சுமி,  குரோம்பேட்டை


🌻சுவாமி உணர்த்துகிற இந்த கர்ம கீதை நம் ஒவ்வொருவருக்குமானது! இதை பின்பற்றுவதனால் நமக்கான இப்பிறவி மட்டுமல்ல வருகின்ற எப்பிறவியும் புனிதமடைந்து பிறவிகளில்லா பெருவாழ்வுக்கு வாசல் திறந்து வரவேற்கும்!! 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக