தலைப்பு

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

இகழ்ந்து பேசியவரின் இதயத்தை உருக வைத்த இமய இறைவன் சாயி!

சுவாமியின் ஒரு தீவிரமான பக்தரின் நண்பர் சுவாமியை மிக இகழ்வாக பேசுகிறார்.. அவரை சுவாமியிடம் அழைத்துப் போகிறார் அந்த பக்தர்.. பிறகு என்ன நேர்கிறது? என்பதை விளக்கும் சுவாரஸ்ய பதிவு இதோ...


யாரையும் இகழ்ந்து பேசிவிடலாம் அதற்கு இமைப் பொழுதே ஆகும்...ஆனால் அந்த சொல்லம்புகள் பூமராங் போல் நம்மையே திரும்ப தாக்கும் என்கிறார் சுவாமி. ஆகவே தான் இதமாகப் பேச வேண்டும் .. புறம் பேசக் கூடாது என சுவாமி சொல்வதன் காரணம் வேண்டாத தீய கர்ம மூட்டைகளை பக்தர்கள் சுமக்க வேண்டாம் எனும் கருணை அடிப்படையிலேயே...

இறைவனை இகழ்வது என்பது இதிகாச காலம் தொட்டே நிகழ்கிறது... கண் மூடி கற்பனையே நிஜம் என வாய் மூடாத போது நிகழ்கிறது இகழ்வு. மனம் பக்குவப் பட பக்குவப் பட சுவாமி நம் வாழ்வில் நிகழ்த்துவதெல்லாம் நம் கர்ம கரைப்புக்காகவே.. அது நன்மை என உணர்கிறபோது நாம் சுவாமிக்கு நன்றியே சொல்கிறோம்!!

சுவாமியின் தீவிரமான பக்தர்களில் ஒருவரான சுந்தர் ராவ் ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்...  அது 1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம். சுவாமியின் அவதார மாதம். இவருடன் சேர்ந்து பயணம் செய்த இவரின் நண்பர்.  மிகுந்த அறிவாளி. எதற்கும் தர்க்கம் செய்பவர். அறிவு தர்க்கம் செய்யும். ஞானம் மௌனமாகி தன்னுள் தானாய் நிறையும். அறிவு ஆயிரம் கேள்விகள் கேட்கும்... ஞானம் தானே விடை என தன்னுள் மூழ்கிவிடும். அறிவு என்பது தகவல். ஞானம் என்பது அனுபவம். இவ்வாறு இருக்க ஆத்மார்த்த பக்தரும்... அறிவாளியான நண்பரும் பேசிக் கொள்கிறார்கள். உரையாடல் சுவாமியின் பக்கம் திரும்புகிறது. சுந்தர் ராவ் கூறியதை அந்த நண்பர் ஏற்றுக் கொள்ளவில்லை. உலகின் பிரச்சனைக்கு முதல் காரணம் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளாமையே!


"பாபாவின் அதிசய சக்தியை இடம், தேதி, நேரம், இவற்றோடு நீங்கள் நிரூபிக்க வேண்டும்... விஞ்ஞான பூர்வமாக இதை ஆதாரமாக்க வேண்டும்.. அப்போது தான் ஒப்புக் கொள்வேன்" என்கிறார்.

வலியையும், பசியையும் எப்படி நிரூபிப்பது? வெளிச்சம் போட்டு காட்டுவது? வாய் மொழி அல்லது உடல் மொழியால் மட்டுமே உணர்த்த முடியும். அது போல் இறைவன் தரும் அனுபவத்திற்கு இதயமே சாட்சியாக இருக்கின்றது. ஒளியை சிற்பம் வடிக்க முயற்சிப்பது போல் இறைவனாகிய சுவாமியை சோதிக்க முற்படுவது!

அந்த நண்பருக்கு ஒரு வியாதியின் உபத்திரவமும் இருந்தது. சுந்தர்ராவ் இதனை நன்கு அறிந்தவர். ஆகவே "நீங்கள் ஒருமுறை புட்டபர்த்தி சென்று வாருங்கள்... அப்போதே நான் சொல்வது புரியும்" என்று சுவாமியின் பிரசாதத்தை அளிக்க முன் வருகிறார்.. அந்த அறிவாளி நண்பரோ அதை ஏற்க மறுக்கிறார். அறிவு புறக்கணிக்கும்... ஞானம் அரவணைக்கும்.. அறிவு காய்.. ஞானம் பழம்... அந்த நண்பரும் பழுக்க வேண்டிய சமய சந்தர்ப்பம் வராமலா போய்விடும்!? . ரயில் நிற்கிறது. சுவாமி மேலான இகழுரையை சுமந்தபடி தனியே நடக்கிறார் சுந்தர்ராவ். ஒருநாள் தனது நண்பர் தீவிர சுவாமி பக்தர் ஆகப் போகிறார் என்பதை அறியாமல் தான் தூக்கிய சுமையை விட இதயம் கனத்தபடி நடந்து போகிறார். இந்த ரயில் நிகழ்வை அதன் பிறகு மறந்தே போய்விடுகிறார்.. காலம் எனும் பரம மருத்துவம் மறதி எனும் மருந்து கலந்த காற்றை தூது அனுப்பியே காயங்களை குணமாக்குகிறான்.


1965 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்பன்று பிரசாந்தி ஆசிரமத்தில் ஏக கூட்டம். சுந்தர் ராவும் வந்திருக்கிறார். அப்போது அங்கே அந்த நண்பரை பார்த்து ஆச்சர்யப்படுகிறார். எதிர்பாரா சந்திப்பு அது.. நீங்கள் எங்கே இங்கே? என கேட்கிறார். தான் அப்போது அழைத்ததை மறந்தே போய்விடுகிறார். "நீங்கள் சொன்னபடி வந்திருக்கிறேன்... பாபாவின் சக்திகளை சோதனை செய்ய வேண்டும். என்னை அவரிடம் அழைத்துப் போங்கள்" என்கிறார். 

அறிவு எனும் கூட்டுப் புழு ஞானப் பட்டாம்பூச்சியாக மாறப்போகிற தருணம் வந்துவிட்டது. இருவருமாக சுவாமியை சந்திக்க காத்திருக்கிறார்கள். சுவாமி நேர்காணல் அறைக்கு அழைக்கிறார். இருவரும் உள்ளே நுழையும் போதே.. சுந்தர ராவின் நண்பரை சுவாமி பெயர் சொல்லி அழைத்து கூப்பிடுகிறார். அந்த அறிவாளி நண்பர் ஆச்சர்யப்படுகிறார். இதயத்திலிருந்த கேள்விகள் கண்களிலிருந்து நீராய் பெருகுகிறது.. கேள்விக் குறிகள் எனும் கொக்கிகள் எல்லாம் கண்ணீர் எனும் முற்றுப்புள்ளிகளாக உதிர்கின்றன...


"பங்காரு.. நீங்கள் அன்று ரயிலில் என்னைப் பற்றி பேசியவற்றை எல்லாம் கூறட்டுமா?" என சுவாமி கேட்க... கை கால் உதறுகிறது அவருக்கு... சுவாமி மேலும் அவர் பேசியதை அதே பாவனையோடு அதே கை மற்றும் முக அசைவோடு பேசிக் காட்டுகிறார்... சுனாமியிடம் மாட்டிய நீர்க்குமிழி என்ன செய்யும்..?!  இதயவாசி எனும் சுவாமி தன்னுடைய கருணையால்  கடைசியில் அவரை ஆற்றும் விதமாக "இதற்காக நான் வருந்தவில்லை.. நம்புகிறவர்கள் போல் சந்தேகப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இது சகஜம். இரு பாலரையுமே நான் ஒரே விதமாகத் தான் பார்க்கிறேன்... உங்களை நீங்களே புரிந்து கொள்ளும் போது.. என்னையும் புரிந்து கொள்வீர்கள்" என்கிறார் சுவாமி. அதே விநாடி அந்த அறிவு கரைந்து இறைவனின் காலடியில் அபிஷேகமாகிறது... சில நாட்களில் அவரை பிடித்திருந்த நோயும் குணமாகிவிடுகிறது. சுவாமியின் கருணா சிகிச்சையை உணர்கிறார் அந்த நண்பர். அவரும் சுவாமியின் தீவிரமான பக்தராக மாறுகிறார். அன்று ரயில் நிறுத்தத்தில் பெருமூச்சு விட்ட சுந்தர ராவ் இப்போது தனது நண்பரை எண்ணி ஆனந்த மூச்சுவிடுகிறார்.

(ஆதாரம்: பகவான் பாபா/ பக்கம் : 64/ ஆசிரியர்: எஸ். லட்சுமி சுப்ரமண்யம்) 

அறிவு என்பது அதை வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறுவதற்கே மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கடலின் மேல் எழுகின்ற நீர்க்குமிழிகள் மனிதர்கள். அந்த கடலே சுவாமி. சந்தேகப்படும் நேரத்தில் சுவாமியிடம் சரணாகதி அடைந்துவிடுவோமானால் நேர விரயம் தடுக்கப்படுகிறது... அதோடு இளமை காலத்திலேயே இறைவன் ஸ்ரீ சத்ய சாயியை அனுபவிக்கும் பாக்கியத்தையும் இதயம் பெறுகிறது. 


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக