தலைப்பு

சனி, 21 ஆகஸ்ட், 2021

பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவியை கொடும் விபத்திலிருந்து காப்பாற்றிய பகவான் பாபா!


அமெரிக்க மாகாணமான லாஸ் ஏஞ்ஜல்ஸ்'சில் ஏற்பட்ட கொடும் விபத்திலிருந்து தனது பக்தையான இந்திரா தேவியை எவ்வாறு சுவாமி காப்பாற்றினார் என்பதும்... சாயி யோகா என இந்திராதேவி அம்மையார் நடத்திவந்த யோக கலைக்கு எவ்வாறு பெயர் வந்தது என்பதும் சுவாரஸ்ய பதிவாய் இதோ... 

 

"Mother of Western Yoga" எனப் போற்றப்படும் அம்மையார் ஒருமுறை பிரசாந்தி நிலைய ஆசிரமத்தில் தசரா பூஜையின் போது சுவாமி அனுமதியோடு மேடையில் ஏறி தனக்கு நிகழ்ந்த ஓர் பரவச அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்...

ஒருமுறை லாஸ் ஏஞ்ஜல்ஸ்'சில் வரிசை வரிசையாக ஆறு பிரிவுகளாய் உருவாக்கப்பட்டிருந்த சாலைகளில் கார்கள் வந்தும் போய்க் கொண்டுமிருந்தன... முன்னும் பின்னும் பக்கத்திலுமாக ஓடிக் கொண்டிருந்தன... 'படார் ' என இவரது காரின் முன்புறம் டயர் வெடிக்கிறது.. என்ன நிகழ்கிறதென்றே இவர்களுக்கு புரியவில்லை... கார் நின்ற இடத்திலேயே பம்பர சுழற்சியாய் சுற்றுகிறது! வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என கணநேரத்தில் உணர்கிறார்... இனி அடுத்த நொடி என்ன? என்ன விதம் அது நிகழும் எனும் பிரக்ஞை இல்லை‌... தனது கண்களை இறுக்கமாய் மூடி "சாயிராம்" என உரத்த குரலில் கத்துகிறார்.. அந்தக் குரல் சுவாமியை தவிர ஒருவருக்கும் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை.. காரணம் பெருஞ்சத்தம் விளைவித்து சுற்றி சுழல்கிறது கார் விபத்து... வேறு ஒருவராலும் தன்னை காப்பாற்றவே இயலாது என உணர்ந்ததால் எழுந்த ஓலம் அந்த 'சாயிராம்'. 

பொதுவாக பலருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அய்யய்யோ என அலறுவதே அதிகமாக நிகழ்கிறது. ஆபத்தான அந்த நொடியில் சுவாமியை அழைக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு ஒரு சிலருக்கே வருகிறது. ஏற்கனவே தியானப் பயிற்சியில் ஊறிய இந்திராதேவி அம்மையார் பக்திக்கும் பெரும் சான்றாகி... உள்ளுணர்வை வலிமையாக்கி இருந்ததால் நாபி கமலத்திலிருந்து எழுந்த அந்த 'சாயிராம்' நாமம்.. புயலை விட விரைவாய் சுவாமியின் செவிகளில் எட்டி இருப்பது ஆச்சர்யமே இல்லை! சுவாமிக்கு தன் பக்தர்கள் அழுவது பிடிக்காது.. ஏது நிகழ்ந்தாலும் சுவாமி கூடவே இருக்கிறார் என்ற மனோ திடத்தோடு நிமிர்ந்து வலிமையாய்.. இதய பவ்யமாய் திகழ்வதே பக்தர்களிடம் சுவாமிக்கு மிகவும் பிடித்தமான குணம்! அப்பேர்ப்பட்ட இந்திராதேவி அம்மையார் இறுக்கமாய் மூடிய கண்களை மெதுவாய் திறக்கிறார்.. திறந்த கண்களால் பார்க்கும் அவரால் தன்னையே நம்ப முடியவில்லை.. எதுவுமே நிகழவில்லை..." மற்ற கார்களை உராய்வது போல் மிக அருகில் கடந்து போய் ஒரு புல்வெளி மேடையில் ஏறி நின்று கொண்டிருக்கிறது.. பக்கத்திலிருந்த காரிலிருந்து நூற்றுக்கணக்கான பேர் என்ன ஆனதோ? ஏதானதோ? என பதறி அடித்து இவரது காரின் அருகில் விரைகிறார்கள்... இந்திராதேவி அம்மையாருக்கு வருகின்ற எவரின் முகங்களும் தெரியவே இல்லை.. எல்லோருடைய தோற்றத்திலும் சுவாமியே தெரிந்து கொண்டிருக்கிறார்... போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு சுவாமி விஸ்வரூபம் கொடுத்தது போல்... விபத்தான களத்தில் சுவாமி ஒரே நேரத்தில் பன்முக தரிசனங்கள் கொடுத்த வண்ணம் இருக்கிறார்! இதனை இந்திராதேவி அம்மையார் மேடையில் பகிர்கிற போது தாரை தாரையாக கண்ணீர் வடிக்கிறார்.. சிறு சிராய்ப்பு கூட அப்போது உருவாகவில்லை.. சிறிதான சுளுக்கு கூட இல்லை.. சுவாமி எனும் கருணை மகா சமுத்திரத்திற்கு கரைகளே இல்லை என்பதை உணர்த்துகிறது மாலை மாலையாய் விழுந்த அந்த ஆனந்தத் துளிகள். அதை ஆச்சர்யமாய் பார்க்கிறார் இவரின் தோழியான மிச்சல்.

வேறொரு முறை கலிஃபோர்னியாவில் தனது யோகப் பள்ளியில் பாடங்களை கற்று தந்து கொண்டிருக்கிறார் இந்திரா தேவி அம்மையார்... யோக முத்திரையை விரல்களில் அணியப் போகும் மாணவ மாணவிகள் இவர்களையே கவனித்துக் கொண்டிருக்க... அந்த முத்திரையின் மூலம் அவர்கள் உணரப்போகும் அனுபவத்தை நுட்பமாய் விளக்கிக் கொண்டிருக்கிறார். சட்டென இவரது குரலில் உத்வேகமும் துடிப்பும் உள்ளாழ்ந்த உணர்வும் உள்ளிருந்து எழ இவர்களே அறியாமல் வார்த்தைகளும் ... வர்ணனைகளும் ஜீவ ஊற்றாய் கிளம்பி வருகின்றன... யாவும் சொல்லழகுடன் சுடர்ந்தன‌... மாணவ மாணவிகள் அனைவரும் கண்கொட்டாமல் அம்மையார் பேசுவதையே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேசி முடித்த பிறகு மெய் மறந்து நிற்கிறார் இந்த மதர் ஆஃப் வெஸ்டர்ன் யோகா. 

மாதாஜி! இது போன்ற சொற்பொழிவுகளை நாங்கள் இதுவரை கேட்டதே இல்லை.. இது என்ன? எனக் கேட்கிறார் யோகக் கலை பயிலும் ஒரு மாணவி.

"சாயி யோகம்" என தன்னை மீறி அதே உள்ளுணர்வோடு வார்த்தை பீறிட்டு வெளிவருகிறது. அதனை எப்படி சொன்னேன் என்று கூட எனக்கு தெரியாது என இதயத்து ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். 

உங்களை ஏதோ ஓர் உணர்வு ஆட்கொண்டு பேச வைத்திருக்கிறது.. அப்படி இயக்கியவர் யார்? என மேலும் ஆவலாய்.. மிக புதிராய் கேட்கிறார்கள் மாணவச் செல்வங்கள்.

"பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா" என விடை அளிக்கிறார்.

அவர் உங்களுக்கு  சொல்லிக் கொடுத்தாரா? எங்கே? எப்போது? இது மாணவர்.

"இங்கே! இப்போது!! இந்த இடத்தில் இந்நொடியில் நாம் அறியாமலேயே அவர் பிரசன்னமாகி இருக்கிறார்... அவர் தான் சொல்லி கொடுத்தார்... என்னுள் இயங்கிய சக்தி அவரே! இங்கு பேசியதும்... பேச வைத்ததும் அவரே!" என்கிறார் இந்திரா தேவி அம்மையார்.

(ஆதாரம் : Sai Baba and Sai Yoga by Indra Devi)


சுவாமி திடீரென எங்கேயும் பிரசன்னமாவதில்லை.. அவர் எல்லா நேரத்திலும்... எல்லா இடங்களிலும் இருந்து கொண்டே இருக்கிறார். ஆகவே தான் சுவாமி இறைவன்.. ஆண்டவன் என்ற வார்த்தை கூட கடந்த காலத்தையே குறிப்பது.. சுவாமி எப்போதுமே நிகழ் காலம்.. ஆங்கில இலக்கணத்தில் "Present Continues" என்பார்கள். அது தான் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி. இந்திராதேவி அம்மையார் யோகத்தில் சிறந்தவர்.. தூய்மையில் தோய்ந்தவர்.. சுவாமியிடமே எந்த எதிர்பார்ப்புமற்றவர்.. ஆகவே தான் சுவாமி அவரின் உட்குரலாய் வெளிவந்து யோகத்தை இயக்கினார். அயல்தேசத்தினரின் ஆன்மீகத்திற்கு வழிகாட்டினார்.‌ யோகியர்க்கு மட்டுமே  சுவாமி இவ்வாறு உட்குரலாய் வழிகாட்டுகிறார்!

ஆகவே தான் சுவாமி

"ஓம் ஸ்ரீ சாயி யோகீஷ்வராய நமக"

"ஓம் ஸ்ரீ சாயி யோகீந்த்ர வந்திதாய நமக"


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக