தலைப்பு

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

ராஜ்புட் மகாராணி பல்பீர் கௌரின் தீவிர புற்றுநோயை போக்கியது பத்திரிகையில் வந்த சுவாமியின் சிறுபடம்!

மூன்றாவது அறுவை  சிகிச்சைக்கு தயாராகிக் கொண்டிருந்த மகாராணியாரின் முற்றிய நிலை புற்றுநோயை சுவாமி எவ்வாறு குணப்படுத்தினார் என்பதும் சுவாமி அந்த மகாராணியார் பரம்பரைக்கே தனது பேரன்பை எவ்வாறு பொழிந்தார் என்பதும் சுவாரஸ்ய பதிவாய் இதோ...

சுதந்திர இந்தியாவுக்கு முன் ராஜபுத்திர வம்சத்தினர் மேற்கு, மத்திய மற்றும் வடக்கு திசை பாரதத்தை ஆண்டு கொண்டிருந்தனர்.. அதில் அப்போது பிரிக்கப்படாத பாக்கிஸ்தான் தேசமும் அடக்கம்.. அத்தகைய வீரதீர ராஜபுத்திரர்களை ராஜ்புட் என அழைப்பர். அவர்களின் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தில்  தன்கர்ப்பூர் (Dungarpur) எனும் குறுநிலத்தை ஆண்ட அரச பரம்பரையில் ஒரு மகாராணியார் தான் பல்பீர் கௌரி .

மகாராணி பல்பீருக்கு புற்று நோய் உண்டாயிற்று. இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்த பிறகும் புண் ஆறவில்லை... தொடர்ந்து ரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது.. அந்த வேதனை மரண வேதனையை விட மிக கொடூரமானதாக இருக்கிறது... அந்த மோசமான நிலையிலேயே மூன்றாம் கட்ட அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி இருக்கிறது. மருத்துவர்களுக்கே என்ன செய்வதென்று தெரியவில்லை..‌ குழம்புகின்றனர்.. மருத்துவத்தால் செய்ய முடியாததையும் சுவாமி தன் மகத்துவத்தால் கருணை புரிகிறார்! அந்த நிலையில் மூன்றாவது அறுவை சிகிச்சை செய்யாவிட்டாலும் மகாராணியார் பிழைக்க மாட்டார்... எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை என அமெரிக்க டாக்டர்கள் கையைப் பிசைய‌... சுவாமியை இதுவரையில் மகாராணியார் தரிசித்ததில்லை... பத்திரிகையில் வெளிவந்த சுவாமியின் சிறுபடத்தை மட்டும் கத்தரித்து தன் முன் வைத்துக் கொள்கிறார்... நினைவிழக்கும் அந்த சூழ்நிலையிலும் பிரார்த்தனையை தொடர்கிறார்... மருத்துவர்கள் சிகிச்சை எதுவும் புரியவில்லை... 

இவரின் பிரார்த்தனையோ தொடர்ந்த வண்ணம் இருக்கிறது... இரண்டு மணி நேரத்தில் புண்ணில் வழிந்த ரத்தம் நின்றுவிடுகிறது...எக்ஸ் ரே எடுத்துப் பார்த்த போது இன்னொரு சிகிச்சைக்கு அவசியம் இல்லை என தெரிகிறது. டாக்டர்களுக்கு இந்த மாறுதலுக்கு காரணம் ஏதும் விளங்கவில்லை... "பாபா... என்னை காப்பாற்றி விட்டார்" என்று நினைவு திரும்பிய மகாராணி கண்களில் நீர்மல்க கூறுகிற போது ஏதோ ஒரு அதிசயம் நடந்தது என சுற்றி உள்ளவர் ஆச்சர்யப்படுகின்றனர்.. 

மகாராணியார் இந்தியாவுக்கு திரும்புகிறார்.. தனது மகள் வயிற்று பேத்தியான ரத்தன் என்பவளோடு சுவாமியை தரிசிக்க வருகிறார்.. அவளுக்கு திருமணம் ஆகி வேண்டி இருந்தது... அதற்கான ஆசிகள் வேண்டியும் வந்த போது.. சுவாமி ரத்தனிடம் தனது கையெழுத்திட்ட புகைப்படம் ஒன்றை தருகிறார்... தந்து "உனது கணவர் பெயர் என்ன?" என்று சுவாமி கேட்க... ரத்தன் தன்னை மணக்கப்போகும் பையனின் பெயரை கூறுகிறாள். அதற்கு சுவாமி மிகுந்த கிருஷ்ண குறும்போடு "அந்தப் பையனை நீ இன்னும் மணக்கவில்லையே.. அவன் எப்படி உன் கணவராக முடியும்?" எனக் கேட்கிறார்... அவள் முகம் செவ்வந்தியாய் சிவந்து போகிறது... "உனக்கு திருமணம் நிகழப்போகிறது என்பது எனக்கு தெரியும்! உனக்கு தந்தை இல்லை அப்படித்தானே!! " எனக் கேட்க.. தனக்கு தந்தை இல்லாதது சுவாமிக்கு எப்படி தெரியும் என ஆச்சர்யப்படுகிறார்... 

 கையை சுழட்டுகிறார்.. சுவாமியின் சிறுவிரல் காற்றை வட்டமிடுகின்றன.. சட்டென கண்களைப் பறிக்கும் வைரங்கள் முத்துக்களோடு கூடிய சிருஷ்டி மாலை ஒன்றை ரத்தனிடம் கொடுத்து.. "உன் தந்தையின் ஸ்தானத்தில் நான் இருந்து உனக்கிதை திருமணப் பரிசாக வழங்குகிறேன்" எனக் கூறுகிறார்.. சுவாமிக்கு என்ன ஒரு கருணை...!!! அவரின் கருணைக்கு முன் இயற்கையின் கருணையே பலமுறை தோற்றுப் போகிறது!

 எங்கிருந்து எழுந்தது இந்த ஆரம் (மாலை)... நட்சத்திரங்களாய் கண்களைப் பறிக்கின்றதே வைரங்கள்... அந்த வைரங்கள் எங்கிருந்து உதிர்ந்தன... ஒருவேளை நட்சத்திரங்களையே பறித்து தந்துவிட்டாரோ சுவாமி என வியந்தனர்..

        "என்னாலேயே இவ்வளவு விலை உயர்ந்த பரிசை கொடுத்திருக்க முடியாது!" என்கிறார் மகாராணி ... அதற்கு சுவாமி ஏதும் சொல்லாமல் புன்னகைத்து விட்டு ஆசீர்வாதம் புரிந்து நகர்ந்து விடுகிறார்...

வரும் வழியில் அந்த மாலையில் ஒரு பெரிய முத்து நழுவி எங்கேயோ மறைந்து விடுகிறது... மகாராணியார் குழம்பிப் போய் சுவாமியிடம் கேட்கிறார்.. சுவாமியோ "பரவாயில்லை.. அது இல்லாமலேயே இது அழகாய் இருக்கிறது" என அனுப்பி விடுகிறார்... மகாராணிக்கு ஏதும் புரியவில்லை... இந்த நிகழ்வை பிரபல மேற்கத்திய யோக நிபுணர் இந்திராதேவி அம்மையாரிடம் பகிர்ந்து கொள்கிறார்.. இந்திராதேவி அம்மையாருக்கு ஒருமுறை சுவாமி நேர்காணல் வழங்கிய போது .. அப்போது பில்.எக்ஸ் என்ற வாலிபன் அருகிருக்க... "உனக்கு என்ன வேண்டும் ? நீ ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவன் அல்லவா!" என்று சொல்லி... பிரம்மித்துப் போன அவனுக்கு அருட் பிரசாதமாக மலர்களை வழங்குகிறார். அதை அவன் பிரித்துப் பார்க்கையில் மலர்களிடையே சிலுவை கண்சிமிட்டிக் கொண்டிருந்தது... அவனுடைய மனைவிக்கும் மலர்கள் கிடைத்தது.. அதை பிரித்துப் பார்க்கையில் சுவாமி பதக்கம் ஜொலித்தது! இப்படி யாருக்கு என்னென்ன தரவேண்டும் என்பது சுவாமிக்கு நன்கு தெரியும் எனவும்.. எங்கேயும் கற்காமலேயே சுவாமி வழிபாட்டு முறை சுவாமி ஏற்படுத்துகிற உள்ளுணர்வால் புரியும் இந்திராதேவி அம்மையார் மகாராணியார் விவரித்த நிகழ்வை சட்டென புரிந்து கொள்கிறார்.

"அந்த சிருஷ்டி மாலை பிரசாதத்தை விலை உயர்ந்தது என்றீர்கள் அல்லவா?" அதனால் தான் அதில் ஒரு முத்தை சுவாமி காணாமல் போக வைத்துவிட்டார்... சுவாமியின் கருணையை விலையால் அளந்தீர்கள் ஆகவே தான் அவ்வாறு செய்திருக்கிறார் என்கிறார் இந்திரா தேவியார்...அதற்கு ஒரு அனுபவத்தை அவர் பகிர்ந்து கொள்கிறார்...

ஒரு முறை சுவாமி ஒரு பக்தருக்கு ஷிர்டி சுவாமி லாக்கட் பதித்த தங்கத்தாலான சிருஷ்டி சங்கிலியை வழங்குகிறார்.. பிரம்மித்து ஏற்றுக் கொண்ட அந்த பக்தர் எதிர்வருகிற நபர்களிடம் எல்லாம் இது எவ்வளவு கிராம் தங்கம்..? எவ்வளவு தேறும்? என கேட்டிருக்கிறார்.. பெருமிதப்பட்டும் பேசியிருக்கிறார்.. தனது வீட்டிற்குள் வந்து பெட்டிக்குள் அதனை பூட்டி வைத்து அதிகாலை திறந்து பார்க்கையில் அந்த சுவாமி சிருஷ்டி பிரசாதம் காணாமல் போகவே ... சுவாமியிடமே முறையிடுகிறார்.. சுவாமி அதற்கு மிகத் தெளிவாக "அது காணாமல் போகவில்லை ... உனக்கு அது பிரசாதமாக கண்களுக்கு தோன்றாமல் வெறும் தங்கச் சங்கிலியாலகவே தோன்றியதால் ... அதனை நானே எடுத்துக் கொண்டு விட்டேன்" என்கிறார்... பக்தர் தனது தவறை உணர்ந்து சுவாமியின் கால்களில் விழுந்து கதறி அழுகிறார்... பரம்பொருள் ஸ்ரீ சத்ய சாயி தருவதெல்லாம் பரம்பொருளே... வெறும் பொருளல்ல.. பூரணத்தில் இருந்து வருவதெல்லாம் பூரணமே என்பது வேத வாக்கியம்... இந்த பரம சத்தியத்தை இந்திராதேவியார் எடுத்துரைக்க.. மகாராணியார் தான் விலையுயர்ந்த என்ற வார்த்தையை சுவாமி வழங்கிய சிருஷ்டி பிரசாதத்தோடு ஒப்பிட்டதை எண்ணி தனது தவறை உணர்கிறார்! 

இந்திராதேவி அம்மையார்

 

இந்திராதேவி அம்மையார் இவ்வாறு பல அனுபவங்களை உணர்ந்தவர்... அதை அவர்களின் வாயிலாக உணர்ந்து கொண்டது மகாராணியார் பாக்கியம். எத்தனையோ பேர்களுக்கு உணவு சமைத்து பரிமாறுகிறீர்களே.. எப்படி சாத்தியம் என ஆசிரம சமையல் சேவாதளர்களை இந்திராதேவியார் விசாரித்த போது.. நாங்கள் ஒரு கணக்குப்படி சமைப்போம்.. பிறகு அதை சுவாமி தொட்டு ஆசீர்வதிப்பார்.. பிறகு நாங்கள் சமைத்த அளவிற்கும் அதிகமாகவே பந்தி நிகழும்.. உணவு பாத்திரங்கள் காலியானதே இல்லை என்பதை அவர்கள் விளக்க சுவாமியின் சிருஷ்டி மகிமைக்கு அளவுகோல் இல்லை என்பது தெள்ளத்தெளிவாக உணர்ந்து கொள்கிறார்!

 ஒரு பால்வெளிக்கு கூட எல்லை உண்டு.. ஆனால் சுவாமியின் பரிவுக்கு எல்லை என்பதே இல்லை!!

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 133 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்)    


 வெளியே நாம் எவ்வாறு காட்டிக் கொள்கிறோம் என்பதை சுவாமி பார்ப்பதே இல்லை.. உள்ளே எவ்வாறு உணர்கிறோம் என்பதையே கவனிக்கிறார். வெளியே பவ்யமாய் நடித்து உள்ளே கர்வமாய் இருந்தால் சுவாமி அதனை ஏற்றுக் கொள்வதே இல்லை... ஸ்படிக இதயம் பெறுவதற்கு ஆன்ம சாதனை மிக முக்கியம். அந்த இதயமே சுவாமிக்கான நெய்வேத்யம்! பக்தி மட்டுமே உள் மையத்தை தூய்மைப்படுத்தி சுவாமியிடம் சரணாகதியை அரங்கேற்றுகிறது!  


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக