தலைப்பு

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

சவனூர் சமஸ்தான இளவரசர் மெஹர்பான் நவாப் சாஹேப் உயிரை காப்பாற்றி உன்னதமளித்த பாபா!

ஒரு சமஸ்தானத்தின் இளவரசரின் உயிரையே காப்பாற்றி எப்படி அவரை சுவாமி  நல்வழிக்கு திருப்பினார் என்பதை சுவாரஸ்ய திருப்பங்களோடு இதோ...


சுதந்திரத்திற்கு முன் பாரதம் பலவித சமஸ்தானங்களை கொண்டிருந்தது... அந்தந்த சமஸ்தானங்களை அந்தந்த அரசர்கள் ஆண்டு கொண்டிருந்தார்கள். பலரும் இறை நம்பிக்கை உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பல சமஸ்தானங்களுக்கு நல்வழிக் காட்டியிருக்கிறார்... அவர்களின் தூய பக்திக்கு துக்கங்களை எல்லாம் துடைத்திருக்கிறார். அப்படி அனுகிரகம் பெற்ற சமஸ்தானங்களில் ஒன்று சவனூர் சமஸ்தானம். இது 1947 முன்பு பம்பாய் பிரசிடன்ஸியில் இருந்தது...பிறகு மைசூர் கர்நாடகா ஆளுமையில் வருகிறது...

அதன் இளவரசர் மெஹர்பான் நவாப் சாஹேப். இது அரசர்களுக்கு கொடுக்கின்ற பட்டம். இவரின் நிஜப் பெயர் அப்துல் ரஷீத் கான் பகதூர் (1954-- 1993). இவரின்  பெற்றோர்களான அரசரும் அரசியும் சுவாமியிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள். ஒரு இஸ்லாமிய சமூகத்தை சார்ந்தும் சுவாமியே அல்லா என உணர்ந்து கொண்டு இந்த அரச குடும்பம் செய்து வந்த பக்தி அசாத்தியமானது..  இந்த இளவரசருக்கும் அவ்வகை பக்தி உதிக்க வேண்டிய காலகட்டம் நெருங்குகிறது...


இளவரசர்  மெஹர்பான் நவாப் அவர்களுக்கு திடீரென இதய நோய் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகி விடுகிறார். சந்தூர் அரச தம்பதியர் அதைக் கேட்டு கையில் சுவாமி விபூதியோடு ஓடி வருகின்றனர்.. அந்த சந்தூர் சமஸ்தானத்தினரும் சுவாமி பக்தர்களே! சந்தூர் மதராஸ் பிரசிடன்ஸியின் கீழ் இருந்தது. அந்த சமஸ்தான அரண்மனைக்கும் சுவாமி விஜயம் புரிந்திருக்கிறார். அவ்வகை பாக்கியம் பெற்ற அரச குடும்பம் தான் கொண்டு வந்த சுவாமி விபூதியை நெற்றியில் இடுகின்றனர்.. இட்டதுமே பட்டென மாறுதல் ஏற்பட சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது. முடியாத உடம்பிலும்  ஆவலாய் கேட்கிறார் இளவரசர். புட்டபர்த்தி வரை செல்வது கடினமாகையில் பெங்களூரிலேயே சிகிச்சையை தொடர்கிறார். சுவாமியின் சங்கல்ப அழைப்பு இருந்தால் தானே அவரை தரிசிக்க முடியும்!!


1973 ம் ஆண்டு நவம்பர் மாதம் சுவாமியின் அவதார வைபவம். சந்தூர் அரசியும் வந்திருக்க.. நூற்றுக் கணக்கான பக்தர்களோடு நிற்கிறார்... சுவாமி அருகில் வர தனது நண்பர் சவனூர் இளவரசரின் உடல்நிலை பற்றி பகிர.. "எனக்கு எல்லாம் தெரியுமே... நான் ஒயிட்ஃபீல்டில் டிசம்பர் இருப்பேன்.. அங்கே என்னை சந்திக்க சொல்" என்று சிருஷ்டி விபூதி அளிக்கிறார் சுவாமி. வரும் வழியில் கார் பழுதாக.. சுவாமி சங்கல்பம் என உணர்ந்து.. தனது நண்பரான இளவரசரை சந்தித்து.. விபூதி பிரசாதம் அளித்து சுவாமி சொன்னதையும் பகிர்கிறார் சந்தூர் இளவரசி. ஆறுதலடைகிறார் இவர்.

 அந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி இன்னும் இவரின் உடல்நிலை மோசமாகிறது. குடும்ப டாக்டர் இவரை காரில் அழைத்துச் செல்வதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இவர் குடும்பத்தினர் சிலர் எப்படியாவது சுவாமியை இவர் தரிசித்திட வேண்டும் என பிடிவாதமாக இருக்கின்றனர். அவ்வளவு பக்தி அவர்களுக்கு! சிலரோ இந்த உடல்நிலையோடு பயணம் செய்தால் ஆபத்து என்கிறார்கள். மனம் அப்படியும் பேசும்.. இப்படியும் பேசும்.. ஆனால் பக்தி இதயமோ உடும்புப் பிடியாக சுவாமியிடமே நிலைத்து நிற்கும்! அப்போது நம்பிக்கை நட்சத்திரமாய் உள்ளே நுழைந்து தைரியம் சொல்லி அழைத்துப் போகிறார் சந்தூர் இளவரசி. 

தெய்வீக அரவணைப்பில் சந்தூர் ராஜ குடும்பம் 

கார் பிருந்தாவனத்தை அடைகிறது. சுவாமியின் அனுமதி பெற உள்ளே நுழைகிறார் அரசி. சுவாமி தரிசன நடையில் வெளியே வருகிறார். இளவரசர் எழுவதற்கு முன்னே சுவாமியே காரின் அருகில் பரம கருணேயோடு வருகிறார்... அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து... நெற்றியில் சிருஷ்டி விபூதி இடுகிறார்.. வாயிலும் விபூதி சாரல் தூவுகிறார்... தமது சுந்தர சிற்பக் கரங்கள் எனும் வரங்களால் இவருடைய கைகளை தொடுகிறார்.. தெய்வீக மின்சாரம் இவரின் உடம்பெல்லாம் பாய்கிறது! கண்கள் நன்றியை திரவமாய்ப் பேசுகின்றன... "பங்காரு...பயப்படாதே... நான் உன்னோடு இருக்கிறேன்... உன்னிடம் இருக்கிறேன்... கவலை வேண்டாம்" என அருட் சத்துணவு மொழி அளிக்கிறார்! 


சவனூர் இளவரசரின் இதயத்துக்கு அருகே உள்ள நரம்பு ஒன்று பாதிக்கப்பட்டிருப்பதால்.. மருத்துவர் அறுவை சிகிச்சை தேவையென்றும்... இந்த உடல்நிலையில் அபாயகரம் என்றும்.. வெளிநாட்டிற்கு சென்று வைத்தியம் செய்ய வேண்டும் என்று நிபுணர்களும் சொன்னதை இவர் அறிய வேறு யாரும் அறியாத ரகசியத்தை சுவாமி திறந்து பேசி "உன் இதயத்திற்கு அருகில் உள்ள நரம்பு பாதிக்கப்பட்டிருப்பது  குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.. அறுவை சிகிச்சை தேவையில்லை.. சரியாகிவிடும்.. பயப்பட வேண்டாம்" என்கிறார் தீர்க்கமாய் ...

"உன் மகன் சிறுகுழந்தை என்னைப் பார்க்க வேண்டும் என அடம் பிடித்தானே.. ஏன் அழைத்துவரவில்லை?" என சுவாமி கேட்டபோது... வீட்டில் இவர் குழந்தை அடம்பிடித்தது நினைவுக்கு வருகிறது.. சுவாமிக்கு அனைத்தும் தெரியும் என்ற சத்தியம் உணர்கிறார் இளவரசர். மகிழ்வோடு வீட்டிற்கு வருகிறார்.. டாக்டர் ஓய்வு எடுக்கச் சொல்லியும்.. சுவாமி சொன்ன வார்த்தையில் மிகுந்த நம்பிக்கையுடன் "எனக்கொன்றுமில்லை... என் உடம்பு குணமாகி விடும்" என்கிறார். அன்று இரவு சுவாமியும் கனவில் தோன்றி இன்னும் இரண்டு நாளில் சரியாகிவிடும் என்கிறார்.. ரோஜாப்பூ நிறத்தில் விபூதி அளித்து உடலெங்கும் தடவி விடுகிறார்.. இந்த அற்புத செய்தியை சாண்டூர் அரச குடும்பத்துடன் தெரிவிக்க .. அவர்களும் மகிழ்கிறார்கள்!


1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சவனூர் இளவரசர் சுவாமியை தரிசிக்க வேண்டி சந்தூர் அரசிக்கு தொலைபேசி செய்து சுவாமியிடம் தேதி கேட்கச் சொல்கிறார். அரசி சுவாமியின் தரிசன வரிசையில் அமர்ந்திருக்கிறார். சுவாமி இரண்டு நாள் அவரை கண்டுகொள்ளவே இல்லை.. புரியாமல் குழம்பி நிற்க.. சரி வெறும் தரிசனத்துக்காகவாவது இளவரசரை அழைக்கலாம் என தொலைபேசியில் பேச.. அவரும் ஒப்புக் கொள்கிறார்... மறுநாள் வேறு வேலை வர இயலாது என்கிறார். அரசி அதே நாள் தரிசனத்துக்கு வருகிறார்.. இளவரசருக்காக தேதி கேட்கும் போது சுவாமி "வியாழன் கூட்டமாக இருக்கும் பங்காரு .. நீ இரண்டு நாள் கழித்து அழைத்து வா" என்கிறார். இதை கூறுவதற்காக அரசி இளவரசரை காண செல்ல..சுவாமியின் இருநாள் பாராமுகத்தை அரசி விவரிக்க... இரண்டு நாளின் ஏராள நிகழ்வை கண்கலங்கி சொல்கிறார் இளவரசர்...

 தனக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகவும்... அதை மருத்துவரே கண்டித்ததாகவும்... உயிரே போனாலும் இந்த ஒரு பாட்டிலை கவிழ்த்தலாம் என மது அருந்த ஆரம்பித்த  இவரின் எதிரே உள்ள சுவற்றில் மின்னல் ஒளி தோன்றியபடி  காட்சி தருகிறார்.. அதைப் பார்த்து மிரண்டு கை நடுங்க உதட்டிற்கு சென்ற மதுக் கோப்பையை டேபிளில் வைத்துவிடுகிறார். சுவாமி நம்மை கண்காணிக்கிறார் என்ற சத்தியம் புரிகிறது.. தன்னுடைய இந்த தவறால் தான் சந்தூர் அரசியிடம் இரண்டு நாள் சுவாமி பேசவில்லை என உண்மை அவருக்குப் புரிகிறது. மீண்டும் அரசியோடு சுவாமியை தரிசனம் செய்கிறார்.. "நான் உன் கூடவே இருக்கிறேன்..‌ கலக்கம் வேண்டாம்.. மனம் லேசாக வில்லை என்றால்  ஞாயிற்று கிழமையும் வா" என்கிறார் சுவாமி.. மீண்டும் இளவரசர் வருகிறார்.. "உன் வீட்டிற்கு நான் வருவேன்... நீ வந்து அழைத்துப் போக வேண்டாம்.. உணர்ச்சிவசப்பட்டு விடுவாய்... நானே வருகிறேன்" என்கிறார் சுவாமி.

 

சுவாமி தன் வாக்கை காப்பாற்றுபவர்.. சுவாமி ஒன்று புரிகிறார் என்றால் அது தனக்காக அல்ல.. பக்தர்க்காகவே.. இளவரசர் அரண்மனை சுவாமி விஜயத்தில்... இளவரசர் மகளின் சொல்லொண்ணா துயரத்தை சுவாமியே "உன் குழந்தையின் பிரச்சனை பற்றி ஏன் நினைக்கிறாய்.. நான் பார்த்துக் கொள்கிறேன்..." என்கிறார்.. நான்கு நாள் சரியாக சாப்பிடாத தன் குழந்தையை பற்றி அவள் எண்ணிய துயரம் தணிகிறது. 

இளவரசருக்கு சூடாமணியோடு கூடிய சிருஷ்டி மோதிரத்தை அளிக்கிறார்.. நான் உன் கைகளிலேயே இருக்கிறேன் என்கிறார் சுவாமி." ஒரு நாள் அந்த சூடாமணி கல் தொலைந்து போகிறது.. சுவாமியை அடுத்து இளவரசர் தரிசிக்கையில்.. "எங்கே அந்த கல்?" என விபரம் தெரிந்தே கேட்கிறார். சுவாமி அதை நீங்கள் மறைய வைத்துவிட்டீர்கள் " என்கிறார் இளவரசர். "நீ தான் மீண்டும் மது அருந்தினாயே" என சுவாமி சொல்ல.. கால்களில் விழுந்து கதறி அழுகிறார் இளவரசர். சரி! நான் என் பூர்வ அவதாரம் பதித்த மோதிரமாக மாற்றி அணிவிக்கிறேன்.. இனிமேலாவது மது அருந்தாமல் இரு" எனச் சொல்லி சூடாமணி இன்றி ஓட்டை விழுந்த மோதிரத்தை சுவாமி ஊதுகிறார்.. அது ஷிர்டி சாயி உருவம் பதித்த லேமினேட் டாக உருமாறுகிறது... சுவாமி மோதிரத்தை இளவரசருக்கு அணிவிக்கிறார்...

அன்றிலிருந்து இளவரசரின் அந்த மோதிர விரல் தாங்கிய கை மது ராட்சசனை தொடக் கூட இல்லை!

(ஆதாரம் : பகவான் பாபா / பக்கம் : 66 -- 75/ ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம் )


சுவாமி ஒருவரே ஜென்மம் தோறும் தொடர்பவர்.. அருள்பவர்.. அரவணைப்பவர்.. மீட்பவர்.. நம் வாழ்க்கை என்ற வாகனம் எத்தனையோ பேர்களை ஏற்றியும் இறக்கியும் விடுகிறது..‌ஆனால் இறுதிவரை ஓட்டுனரும் நடத்துனருமான சுவாமி தன் இயக்கத்தையும் வழிகாட்டுதலையும் நிறுத்துவதே இல்லை.. சுவாமி தான் இலக்கு என உணர்கின்ற பயணம் வீணாக ஊர் சுற்றுவதில்லை!


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக