தலைப்பு

வியாழன், 10 டிசம்பர், 2020

பாண்டியன் வங்கி ஸ்தாபகர் SNK சுந்தரத்தின் சகோதரருக்கு சுவாமி அளித்த சிகிச்சை!

தனியார் வங்கியான பாண்டியன் வங்கியை 1946'ல் துவக்கியவர் தான் மதுரை தொழிலதிபர் திரு SNK சுந்தரம் அவர்கள். இந்த வங்கியே முதன்முதலாக பெண் ஊழியரைக் கொண்ட வங்கியாக.. பெண்களும் சேமிக்க உதவும் வகையில் தன் சேவையை திறம்பட செயல்படுத்தியது. பிற்காலத்தில் (1963) அது கனரா வங்கியோடு இணைக்கப்பட்டது. அதை தோற்றுவித்த சுந்தரம் அவர்களின் சகோதரருக்கு சுவாமி ஆற்றிய கருணை சிகிச்சை இந்தப் பதிவில்...


பகவான் கருணையோடு திரு. SNK சுந்தரம் அவர்களின் வீட்டிற்கு வர ஒப்புக் கொண்டார். அதற்கு முன்பாக அவரது சகோதரர் கால் எலும்புகள் உடைந்து சிகிச்சை செய்யப்பட்டும் இன்னும் எழுந்து நடக்க முடியாமல் இருப்பது சாயிக்கு ஞானத்தில் தெரிந்துவிட்டது! சுந்தரம் அவர்களும் இதை பகவானிடம் கூற மறந்து இருந்தார்.


சுந்தரம் அவர்களின் வீட்டில் அனைத்து பக்தர்களும் பஜன் ஹாலில் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தனர். நுழைவாயிலில் சுந்தரம் அவர்களின் சகோதரர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். (அனந்து என்பவர்). பார்ப்பவர்களுக்கு இவர் கால்களில் பாதிப்பு இருப்பது தெரியாது. ஒருவரும் அறியாமல் நம் சுவாமி அனந்து அவர்களிடம் சென்று, "இன்னும் கால் சரியாகவில்லையா"? என்று கேட்க, "ஆம் ஸ்வாமி" என்று கூற விபூதி வரவழைத்து நெற்றியில் ஒரு கீற்று இட்டுவிட்டு, காலில் கொஞ்சம் பூசி, மீதியை நீரில் கரைத்து குடிக்கச் சொன்னார். மீண்டும் சுவாமி பஜனைக்கு வந்தார். அப்பொழுதுதான் சுந்தரம் அவர்களுக்கு சுவாமி உள்ளே சென்று வந்தது தெரிந்தது.

சுந்தரம் ஸ்வாமியை நெருங்கியபோது அவர் முதுகில் தட்டி "உன் பிரதருக்கு கால் சரி பண்ணி விட்டேன்" என்றார். நன்றி உணர்வும், மகிழ்ச்சியும், ஆச்சரியமும், சுந்தரத்திடம் பொங்கின! மூன்று நாட்களில் வீட்டிற்குள் நடக்க ஆரம்பித்தவர், ஒரு மாதத்தில் பாதிப்பு ஏற்பட்ட சுவடே இல்லாமல் குணமானார்.

ஆதாரம்: Sanathana Sarathy,1969, P 83

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.  


🌻 இதய வங்கியில் பக்தியையே பிரதானமாக நாம் சேமிக்க வேண்டும். ஜென்ம ஜென்மமாய் அது மட்டுமே வளரக் கூடியதும் / தொடரக் கூடியதும். நாம் கற்றறிந்தவை கூட அடுத்த ஜென்மத்தில் தொடர்வதில்லை. ஆனால் பக்தியே தொடர்கிறது. அந்த பக்தியையே சுவாமிக்கும் மிகப் பிடித்தமான சேமிப்புக் கணக்கு.. அந்த சேமிப்புக் கணக்கே நம் கர்மக் கணக்கை கரைக்க உதவுகிறது. வேறெதுவுமில்லை. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக