தலைப்பு

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

துப்பாக்கி முனையிலிருந்து சுவாமியின் கருணையால் உயிர் தப்பிய டாக்டர் கிஷன் காடியா!


உயிர் தருவதும்.. உயிரை மீட்டு தருவதும் .. மனித உயிரில் உறைந்திருப்பதும் சுவாமியே.. ஒரு விஷயம் சுவாமி சொல்கிறார் எனில் அது நிகழ்ந்தே தீரும். அவரின் சொல்படி நடக்கும் ஜீவன்கள் பாதுகாக்கப்படும் என்ற உன்னத சத்தியத்தை உணர்த்தும் பதிவு இதோ... 


1969ல் ஸ்வாமி கிழக்கு ஆப்பிரிக்கா சென்றிருந்த பொழுது, அங்குள்ள சில இந்திய பக்தர்களைப் பார்த்து , உகாண்டாவானது மிகவும் மோசமான வருங்காலத்தை உடையதாக இருக்கும் என கூறினார். கம்பாலாவிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டாக்டர் கிஷன் காடியாவின் வீட்டிற்கு சுவாமி சென்று, உடனே குடும்பத்தினருடன் பிரிட்டன் சென்று விடுமாறு கூறினார்.

தனது சொந்த வீட்டை விற்றுவிட்டு பணத்தை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றபடியால் 30 ஆண்டுகள் அப்படியே உருண்டோடின. 2004ல் மாணவர்களிடையே உரையாற்றுமாறு கிஷன் காடியாவை பகவான் பணிக்க, தான் ஆப்பிரிக்காவில் காப்பாற்றப்பட்ட விதத்தை விவரித்தார்... 


சுவாமியை தரிசிக்க 1965'ல் புட்டபர்த்தி செல்லும் டாக்டர் காடியாவுக்கு தன் விசிட்டிங் கார்டை சிருஷ்டித்து இதை எப்போதுமே சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொள் எனச் சொல்லி தருகிறார். அதன் மகத்துவம் புரியாமல் இவரும் வைத்துக் கொண்டே அப்போது தான் தங்கியிருந்த ஆப்பிரிக்கா தேசத்திற்கு சொல்கிறார். சுவாமி முன்பு சொல்லியது போலவே நீண்ட நெடுங்குழப்பம்.. அரசியல் பதற்றம்.. வன்முறை வெடிப்பு.. தீவிரவாத ஆளுமை என உகாண்டாவே அபாயத்தின் பிரதேசமானது.

 அந்த துரதிஷ்டமான சூழலில் டாக்டர் காடியா பயணித்த காரை வழி மறித்து கலவரம் செய்பவர்களில் ஒரு ராணுவ வீரன் இவரை காரை விட்டு கீழே இறங்கி முட்டி போடச் சொல்கிறான்..

 தான் ஒரு அவசர சிகிச்சைக்காக செல்வதாகச் சொல்லியும் அந்த இரக்கமில்லாத காதுகளுக்கு இந்த பரிதாபமான வார்த்தைகள் விழவே இல்லை.

பின்னால் வருகின்ற காரின் நபரும் என்ன விஷயம் என விசாரிக்க .. அவரை அதட்டி அனுப்புகிறான் கொல்வதையே தனது தோள்களில் சுமந்திருந்த எமதூதனான ஆப்ரிக்கா நாட்டு ராணுவ வீரன்.

 உங்களால் தான் எங்களால் வாழ முடியவில்லை என்கிறான்.

 அதற்கு காடியாவோ அதற்கு காரணம் தான் அல்ல .. அது பிரிட்டன் அரசோடு நீங்கள் பேச வேண்டியது .. தான் ஒரு சாதாரண மருத்துவர் தான் என்கிறார்.

 ஆத்திரமடைந்த விழிகளுக்கு வெளிச்சம் கூட இருட்டாகவே தெரியும்.

 உன்னை கொல்லப் போகிறேன் என பாசக்கயிறுக்கு பதிலாக துப்பாக்கியை வைத்திருந்த அந்த தீமைக் கைகள் அதட்டிப் பேசியது.. நெற்றியில் துப்பாக்கி முனை அழுத்தப்பட்டது...


உயிரை அந்த தோட்டாக்களில் எந்த தோட்டா பறிக்குமோ என காடியா உள்மனம் பதறிக் கொண்டிருந்தது.

 உனக்கு இரண்டு வாய்ப்பு தருகிறேன்.. 

 ஒன்று புகைப்பிடித்து கொள்ளலாம் இல்லை பிரார்த்தனை செய்து கொள்ளலாம் என உறுதியாகச் சொல்கிறது தோட்டக்களால் பாய்வதற்கு முன் அந்த ராணுவப் புலி.

 அப்போது தான் சுவாமி தன்னிடம் கொடுத்த விசிட்டிங் கார்டு நினைவுக்கு வர அதை எடுத்துப் பார்த்தபடி ஓவென அழுகிறார் டாக்டர் கிஷன் காடியா.


 அந்த அழுகுரல் வானைப் பிளந்தது.

 அந்த ஓசைகளால் திசை திரும்பிய ராணுவ வீரன் "யார் உன் கடவுள்" எனக் கேட்கிறான்.

 "இதோ இவர் தான் என் கடவுள்.. சாய்பாபா" என்கிறார் டாக்டர்.

அந்த நேரத்தில் பாபாவின் விசிட்டிங் கார்டை பார்த்த அந்த ராணுவ வீரன் "நீ போகலாம்" என்கிறான்.

ஆச்சர்யத்தோடும் புதிரோடும் புறப்படுகிறார் டாக்டர். அந்த நொடியிலிருந்து அந்த ராணுவ வீரன் சுவாமியின் புகைப்படத்தை தேடுகிறான். அது அவனுக்கு கம்பாலா எனும் இடத்தில் கிடைக்கிறது. அதை தினம்தோறும் வைத்து பிரார்த்தனை செய்கிறான். பிரார்த்தனை செய்யச் செய்ய அவனுடைய வன்முறை உணர்வு தோலுறிய ஆரம்பிக்கிறது. துப்பாக்கிகளை துறக்கிறான். மிகவும் மென்மையாகிறான்.


ஒருமுறை தன் வீட்டில் சுவாமியின் புகைப்படத்தின் முன் கண்களை மூடிக் கொண்டிருந்தவனுக்கு ஒரு சிரிப்பு சத்தம் கேட்கிறது. திடுக்கென கண்களை திறக்கிறான். அப்போது புகைப்படத்திலிருந்து சுவாமி வெளியே வருவதைப் பார்த்து உறைந்து போகிறான். சுவாமி அருகே வந்து "நான் தான் சிரித்தேன்.. நீ உடனே புட்டபர்த்திக்கு வா" என்கிறார். 

  அதற்கு முன் கொடூரமானவனாக, பல கொலைகளை செய்திருக்கும் மாஜி ராணுவ வீரன் பிறகு புட்டபர்த்தி வந்து பகவான் தரிசனத்திற்கு பிறகு (மணலில் அமர்ந்து காத்திருந்து தரிசனம் செய்தான்) முற்றிலும் நல்லவனாக மாறினான்‌ ஸ்வாமி அன்பின் அடையாளமாக தனது காவிநிற அங்கி ஒன்றை அன்புப் பரிசாக கொடுக்கிறார். அந்நொடி அதே நொடி வாலி என்ற பெயருடைய அவன் வால்மீகியாக மாறி விட்டிருந்தான். 

  டாக்டர் கிஷன் காடியா தனது அனுபவத்தை சொல்கையில் சுவாமி அதை ஆமோதித்து ..

  "ஆம் ! நான் தான் அந்த நேரத்தில் .. அவன் என்னுடைய விசிட்டிங் கார்டை பார்க்கிற போது.. அவனது மனதை உள்ளிருந்து மாற்றினேன்" எனச் சொன்னதும் டாக்டரிடமிருந்து வெளியான கண்ணீர்த் துளிகள் ஆயிரம் மருந்துத் துளிகளை விட ஆரோக்கியமானதாக அமைந்தது!

ஆதாரம்: Directly taken from kishan gadhiya Souljourns inteview

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.  


🌻 எவ்வளவு கொடூர எண்ணமும் சுவாமியின் கருணையால் கரைந்தோடிப் போகிறது.எவ்வளவு பெரிய வன்முறையும் சுவாமியின் கிருபையால் மனமாற்றம் அடைகிறது.. எவ்வளவு அக மாற்றம் சுவாமியால் ஒருவருக்கு நிகழ்கிறதோ அவ்வளவு நன்றிக்கடன் பெற்றிருக்கிறார் அவர். நன்றியோடு நெஞ்சம் நிறைந்து போவதே நிதர்சன ஆன்மீகம்!!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக