தலைப்பு

புதன், 2 டிசம்பர், 2020

திரு. ராமானந்தன் அவர்களின் 'திக்திக்' சாயி அனுபவங்கள்!


ஸ்ரீ சத்ய சாயி பகவானின் மீது முழுமையான நம்பிக்கை இருந்தால் அவர் எந்த சூழ்நிலையில் இருந்தும், எந்த பிரச்சினைகளில் இருந்தும் நம்மை காப்பாற்றுவார் என்பதற்கு இந்த கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த திரு ராமானந்தன் அவர்களின் அனுபவம் நமக்கு எல்லாம் ஒரு உதாரணம். 

சாயி சகோதரர் கோபிசெட்டிபாளையம் திரு. ராமானந்தன் அவர்களின் சுவாமி அனுபவம் இது...

எளிமையாக பழகும் தன்மை... பக்குவ சாகரம்...கனிந்த இதயம் கொண்ட உத்தம சுவாமி பக்தர் ராமானந்தன். இன்ஜினியர்...
தன் வீட்டின் முன் பகுதி முழுக்க சுவாமியின் சமிதிக்காக வழங்கி இருக்கிறது அந்த பக்குவ பக்தி மனசு...
எத்தனைப் பேர் தன் சொந்த இடத்தை சுவாமிக்கு விட்டுத் தருவார்கள்..?


அப்படித் தந்திருக்கின்ற .. தருகின்ற உத்தம பக்தர்களை சுவாமி எப்படி விட்டுத் தருவார்?
ஸ்ரீ சாயி கிருஷ்ணாலயா எனும் கோவிலும் தனது சங்கல்பத்தால் சுவாமி தன் அருட்சுவடை கருங்கரடு எனும் வயல் பிரதேசத்தில் பரவசப் பிரவேசமாய் அமைத்துக் கொண்டு வருகிறார் அங்கே...

அழகாக வேதமும் உச்சாடனம் செய்கிறார் பக்தர் ராமானந்தன்...
சுவாமி கேசட்டுகளை சி.டியாக மாற்றம் செய்கின்ற சேவையில் (2000ம் ஆண்டு) இருந்தே சுவாமி பற்றிய அறிமுகமும் .. சுவாமியின் கருணைத் துறைமுகமும் இவருக்கு வரமாக கிடைத்திருக்கிறது. 

வெளிநாடுகளில் வேலைப் பார்த்தவர். சுவாமியின் வட்டத்திற்குள் வருவதற்கு முன்னமே சுவாமி இவரைத் தன் அருட் பாதுகாப்பில் வைத்திருக்கிறார்.
பிரச்சனையான நாடுகளைப் பார்த்தே வேலைக்குப் போயிருக்கிறார்.. எந்த நாடுகளில் எல்லாம் போர் நடந்ததோ அங்கெல்லாம் சுவாமியை இதயத்தில் ஏந்திய இந்த சமாதானப் புறாப் போய் பாதுகாப்பாக வந்திருக்கிறது.


🌷எல்லாம் பாபாவின் அருள். கடைசி நிமிஷத்தில் நான் தப்பினேன்: 

நான் ஜூன் 1990 இல் குவைத் எண்ணெய் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தேன். நான் பணிபுரிந்த இடம் குவைத் ஈராக் எல்லைப் பகுதி ஆகும். இந்த பகுதி வழியாகத்தான் ஈராக் படையினர் குண்டு மாரி பொழிந்து குவைத் நாட்டுக்குள் 1990 ஆகஸ்ட் 2ந்தேதி அன்று நுழைந்தனர்.

ஏற்கனவே கூறியது போல் நான் குவைத்தில் 1990 ஜூன் மாதத்தில் பணியில் சேர்ந்தேன். பணியில் சேர்ந்த உடனே  இந்தியாவில் வேலை பார்த்த கம்பெனியில் சில விடுபட்ட அவசர வேலைகளைக் கவனிக்க வேண்டி , குவைத் கம்பெனியில் விடுப்பு கோரினேன். கம்பெனி விதிப்படி வேலைக்கு சேர்ந்த 100 நாட்களுக்குள் விடுப்பு எடுக்க இயலாது. ஆனால் கடவுளின் அருளாசியினால் இந்தவிதி தளர்த்தப்பட்டு 50 நாட்களாக ஸ்பெஷலாக எனக்காக குறைக்கப்பட்டது. சென்னை வந்தடைந்த நான் குவைத் திரும்ப இருந்ததேதி இந்த ஆகஸ்ட் 2 தான். ஆனால் நான் பிரயாணம் செய்ய இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஈராக் படையினரால் சிறை பிடிக்கப்பட்டதால் என் பிரயாணமும் தடைபட்டு நானும் தப்பினேன். இந்நிகழ்ச்சி நான் பாபாவின் அன்புக்கரங்களில் அடைக்கலமாவதற்கு முன்பே நடைபெற்றிருந்தது. ஆனாலும் இது பாபாவின் அருட்காப்பால் நிகழ்ந்ததாக நம்புகிறேன்.

திரு ராமானந்தன் அவர்களின் வார்த்தைகளையே  வழங்குகிறேன்.

அவர் சென்னையில் இருந்து திரும்ப செல்ல வேண்டிய பயணத்தை சுவாமி தடுத்திருக்கிறார்..
குறிப்பாக லிபியா..
விபரங்களைக் கேட்டு வியந்து போனேன்..
இவரின் அலுவலக ஜன்னல்களிலிருந்து சாதாரணமாக எட்டிப் பார்த்தால் கூட மனிதக் கசாப்புக் கடையாக போர்க்கோலம் காட்சி அளிக்கும்...
தினந்தோறும் திகில் தீபாவளி தான்..
சாவு சாலையில் நடந்து போகும்...
ரத்தங்கள் வீதிகளில் தன் முத்தங்களைச் சிந்தும்..


போரால் மனிதர் சாவது ஒருபுறம்.. அங்கே
பயத்தால் உயிரோடிப்பவர் செத்து கொண்டிருப்பர் ஒவ்வொரு நொடியும்...
ஒரு ஆச்சர்யம் சொல்கிறேன்..
வியப்பீர்கள்..

இவர் நம் சுவாமி பக்தரானதே அந்தப் போர் நாடுகளில் வேலைப் பார்த்த போது தான்..

இவரின் வேலைக்கு நடுவே சுவாமியின் லீலை நடந்தது ...
போர் போட்டால் தண்ணீர் வரும்..
இவர் அலுவல் செய்த நாடுகளில் போர் போட்டால் மண்டை ஓடுகள் தான் முளைக்கும்..
அபாயமுள்ள நாடுகளில் இவர் வேலைக்கு ஏன் செல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்...
அவருக்கு எப்படி தெரியும் இத்தனை ஆபத்தையும் அந்தந்த நாடுகள் ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுக்கப் போகிறதென ...
நாம் தலைவலிக்கே நம் தெய்வ சுவாமியை அலுத்து கொள்கிறோம்..
இவரோ மரணத்தை நம் சுவாமியின் சரணத்தில் இட்டு இந்தியக் கரை ஒதுங்கியவர்..
நம் சுவாமி ஆபத்பாந்தவன் என்பதற்கு இவரும் முக்கிய சாட்சி..
மனிதனுக்கு எப்போதெல்லாம் புத்தி பேதளிக்கிறதோ அப்போதெல்லாம் யுத்தம் செய்கிறான்..
இது பைத்தியக்கார உலகமல்ல..
பல பைத்தியங்களிடம் மாட்டிக் கொண்டு அல்லாடுகிற அகிலமிது..

கீழ் தளத்தில் துப்பாக்கிச் சப்தங்கள் அமைதியின் மௌனக் குரல்வளையைக் கடித்து குதறுகிற நேரம்.. மேல் தளத்தில் இவர் சுவாமி பஜனையைக் கேட்டுக் கொண்டும்...
அதை சுவாமி மேல் பக்தி இல்லா சக பணியாளர்களுக்கு அந்த பஜனைப் பாடல்களைக் கேட்க வைத்து கவலை வேண்டாம் சுவாமி காப்பாற்றுவார் என ஆறுதல் சொல்லியும் இருக்கிறார்.. நிலையாமை தன் நீள்சோக வரலாறை எழுதிக் கொண்டிருந்த நிமிடங்கள் அவை.

நிர்மல பக்தியில் ராமானந்தன் தோய்ந்திருக்கிறார்..
உயிரை அவர் கையில் பிடிக்கவில்லை..
உயிரை அவர் சுவாமியின் கருணையிடம் பிடிக்கச் சொல்லியேக் கேட்டிருக்கிறார்..
கடாஃபியை வீழ்த்த நடந்த போரின் பயங்கரங்களையும் .. அதில் எப்படி மீண்டார் என்பதையும்...


🌷லிபியா அனுபவம்:

பிறகு 2011ல் லிபியாவில் பணியாற்றச் சென்றேன். மார்ச் 19, 2011 அன்று கடாபியை அகற்றுவதற்காக பல தேசியப் படைகள் லிபியாவில் குண்டுவீச்சு நடத்தத் தொடங்கின. அன்று நான் நம் பகவானை தரிசிப்பதற்காக பிரசாந்தி நிலையம் வந்திருந்தேன். இந்த சம்பவம் எல்லாம் நடக்கும் என்று பகவான் முன்கூட்டியே தெரிந்து கொண்டுதான் என்னை லிபியாவிலிருந்து புட்டபர்த்தி வர வைத்திருக்கிறார் என்பதை அந்த சம்பவத்தை கேள்விப்படும்போது தான் அறிந்து கொண்டேன்.  இந்நிலையில் பகவான் பாபாவின் அருளால் எனக்கு ஒரு தீங்கும் விளையவில்லை. எப்படி என விளக்குகிறேன். எனது கம்பெனியின் விதிப்படி நான் 42 நாட்கள் வேலை செய்தால் அடுத்த 21 நாட்கள் விடுமுறை கிடைக்கும். விடுமுறையில் நான் இந்தியா வரும்போது லிபியாவில் போர் நடக்கும், வேலைக்கு அங்கு திரும்பும்போது போர் இருக்காது. எல்லாம் பாபா திருவருள்.



2012ல் லிபியாவில் நடந்த மற்றும் ஒரு சம்பவம். பயங்கரவாதிகளின் இரு கோஷ்டிகளுக்கிடையே யுத்தம் வெடித்தது நான் லிபியாவில் தங்கியிருந்த ரடிஸ்ஸோன் ப்ளூ ஓட்டலின் கீழ் தளத்தில். 14வது தளத்திலிருந்த எனது அறையில் சில நண்பர்களுடன் பாபா தரிசன வீடியோவை போட்டு பாபாவை பிரார்த்தித்தேன். எங்களுக்கு ஒரு தீங்கும் நேரவில்லை.
ரடிஸ்ஸோன் ப்ளூ ஹோட்டல், திரிப்பொலி, லிபியா

அவசரகால சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்று எங்களுக்குச் சொல்ல எண்ணெய் நிறுவனம் ஒரு பாதுகாப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. பின்னர் நான் லிபியாவை விட்டு வெளியேற முடிவு செய்தேன். நான் ஜூலை 19 அன்று லிபியாவின் திரிப்போலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டேன்.  ஒரு மாதத்திற்குள் இந்த விமான நிலையம் போராளிகளால் முழுவதும் அழிக்கப்பட்டது!



தாக்குதலுக்குப் பின் திரிப்பொலி  சர்வதேச விமான நிலையம், லிபியா.

அந்த அழிவுக்கு பின்னர் ,  2012 ஆகஸ்ட் 23 அன்று, எங்கள் அலுவலகம் குண்டு வீசப்பட்டு முற்றிலும் தகர்க்கப்பட்டது. எனது தனிப்பட்ட உடைமைகளைத் தவிர்த்து நான் மீண்டும் காப்பாற்றப்பட்டேன். அப்போதிருந்து, நான் சாயி சேவைக்காக இந்தியாவில் இருக்கிறேன்.


ஏன் அவர் பேசிய மொழியிலேயே பகிர வேண்டும் என்பது சுவாமி ஆக்ஞை.
அவரவர் வலிகளை அவரவர் மொழியில் வெளியிடுவது ஒரு சாட்சியம். ஒரு ஒப்புதல் வாக்குமூலம். வான உயர கட்டிடங்கள் எல்லாம் சீட்டுக் கட்டு மாளிகைப் போல் சரிந்து விழுந்து கொண்டிருந்த நரக நொடிகள் அவை..
ஆனால்  சுவாமி மேல் வைத்த பக்தி ராமானந்தருக்குச் சரியவே இல்லை...
வெளியே வந்து பார்க்கிறார்கள் ...
சுடுகாட்டு நிசப்தம் நகர் முழுதும்..

சுற்றி எல்லாக் கட்டிடங்களும் சுடச் சுட சுக்கல் நூறான புழுதியைக் கிழித்து வெளியே பார்த்த ராமானந்தரும் அவரின் சக பணியாளர்களும் வியந்தார்கள்.. இவர்களின் அலுவலகக் கட்டிடம் மட்டும் ஆஜானுபாகுவாய் அதே விஸ்வரூபத்தோடு..


வாழ்க்கையைக் கரையேற்ற வந்த சுவாமி காப்பாற்றினார்..

ஒருமுறை இவரின் விமானம் சில மணி நேரம் தாமதம்.. அதற்குள் இவர் செல்லவிருந்த
சதாம் உசேனின் நகரமே தூள் தூளானது.. சதாம் உசேன் உயிரும் தூக்கில் போனது..

வெளியூர் சென்று வீட்டுக்கு வருகிறீர்கள்..
வந்து பார்க்கையில் அங்கே உங்களின் வீட்டுக்குப் பதிலாக காலியான ஒரு மைதானம் இருந்தால் எப்படி இருக்கும்..?


இவர் அலுவலுக்காக சென்றுவந்த நாடுகளில் இவரின் அலுவலகம் எல்லாம் இப்படி ஆகியிருக்கிறது..

சுவாமி பக்தர்களை என்றும்  சுவாமி கைவிடுவதே இல்லை எந்த சந்தர்ப்பத்திலும்.. எந்த சூழலிலும்..
அது தான் சுவாமி...

கூட்டு கர்மா என்ற ஒரு சத்திய செயல்வடிவம் உண்டு..
விபத்தில் சிலபேர் சேர்ந்து சாவார்கள்.. போரிலும் கூட...
அந்தக் கூட்டு கர்மாவிலும் தன் பக்தனைக் காப்பாற்றும் பேராற்றல் நம் சுவாமிக்கு மட்டுமே உண்டு...
அதற்கான அனுபவ சான்றுகளில் ராமானந்தரின் வாழ்க்கைச் சம்பவமும் ஓர் அரிய உதாரணம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக