தலைப்பு

வெள்ளி, 25 டிசம்பர், 2020

மயங்கி விழுந்த பக்தைக்கு சுடச் சுட பிளாஸ்கில் பால் கொண்டு வந்த பாசத் தாய் பர்த்தி சாய்!


தன் பக்தர்களை கண் போல் காப்பாற்றி வருபவர் சுவாமி... பக்தர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடி வந்து களைபவர்.. எல்லா ரூபமும் அவர் ரூபமே என்ற படியால் நமக்கு நெருங்கியவர்களின் ரூபம் எடுத்தும் நமக்கு ஓடோடி வந்து உதவுபவர் சுவாமி.. இதற்கான சிறந்த உதாரண அனுபவம் இதோ...


சகுந்தலா என்னும் பெண்மணி வெய்யிலில் வெளியே சென்று மிகவும் சோர்வுடன் வீடு திருப்பினார். கொளுத்தும் வெய்யில் தலையை அழுத்தியது.. வேர்வை சித்ராவதி நதியாய் வெளியேறியது... தன் வீட்டின் உள்ளே நுழைந்ததும் நிலை தடுமாறி.. செய்வதறியாது மயங்கி விட்டார்! வீட்டில் அவர்களுக்கென உதவ அப்போது யாருமில்லை. சகுந்தலா தன்னிலையும் இல்லை... சுருண்ட பாயாய்ப் படுத்திருந்தார். திடீரென கண்களைத் திறந்த பொழுது பக்கத்து வீட்டு கண்ணம்மா தன் அருகில் அமர்ந்து ஃபிளாஸ்கில் இருந்து பாலை ஊற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். மனதுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருந்தது சகுந்தலாவுக்கு... இக்கட்டான நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரியாவது வந்தாளே என அசதி உள்ளம் சமாதானம் அடைந்தது.. அந்தப் பாலை வாங்கிக் குடித்தாள்.. குடிக்கக் குடிக்க அது தொண்டைக்குள் இதத்தையும்.. உடம்பில் சற்று தெம்பையும் ஏற்படுத்தியது. பிறகு பாலைப் பருகி அமர்ந்த சகுந்தலாவிடம், மீண்டும் மாலை 4.30 மணிக்கு வந்து பார்ப்பதாக கூறினாள் கண்ணம்மா! வாராது வந்த மாமணி போல் ஆறுதல் சொல்லி தன் இல்லம் சென்றாள் அவள்.    

மீண்டூம் 4.30 க்கு உள்ளே வந்த கண்ணம்மாவிடம் “மதியம் நீ வந்து எனக்கு பால் கொடுக்காமல் இருந்திருந்தால் நான் மயக்கமாகவே இருந்திருப்பேன்“ என்று சகுந்தலா கூற, கண்ணம்மா ஆச்சரியமடைந்து, நான் அதிகாலையில் சென்றவள் இப்பொழுது தான் திரும்பி வருகிறேன்.. என் வீட்டுக்குப் போகும் முன்பு உன்னைப் பார்த்துவிட்டுப் போகலாம் என வந்தேன். ”நான் பிளாஸ்கில் பால் கொண்டு வரவே இல்லையே” என்றார்!

சகுந்தலா பிரம்மித்தாள்.. அப்போது நரம்பும் சதையும் உயிர் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தது கண்ணம்மாவே இல்லையா... அது கனவும் இல்லையே... உணர்ச்சி வார்த்தைகளைக் கடந்த பேரனுபவத்தை வழங்கியது...

வந்தது சுவாமியா..!!


தனிமையில் மயங்கிய தனக்கு துணையாக வந்து தன் தளர்வை தடுத்து ஊட்டம் அளித்தது தெய்வமா!! ஒரு நிமிடம் சகுந்தலா இந்த உலகத்திலேயே இல்லை.

கடவுளின் கருணைக்கு பாத்திரமாகிறவர்களால் அந்த காருண்யத்தை எந்த வார்த்தையில் நிரப்பி அந்த பேரருளை விளக்க முடியும்!!

கண்ணீர் மொழியை தவிர எந்த மொழியால் சுவாமி பக்தர்களுக்கு பொழியும் கருணை ஒளி பற்றி விவரிக்க இயலும்!!

ஆச்சரியம் அடைந்த இருவரும் இது பகவானின் லீலை எனப் புரிந்து கண்டனர்! புரிந்து சுவாமியின் திருவுருவப் படத்தின் முன் விழுந்து பரவசமுடன் வணங்கினர்.

சுவாமிக்கு நன்றியாய் வாழ்தலை அன்றி.. அவர் உபதேசத்தை வாழ்க்கையாக்குவது அன்றி வேறென்ன பக்தர்களால் சுவாமிக்கு காணிக்கையாக தரமுடியும்!!

ஆதாரம்: SRI SATHYA SAI MIRACLES & SPIRITUALITY –II By Mrs., Sarojini Palanivelu, P-170

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 


🌻 சுவாமி பக்தர்கள் யாரும் தனியாக இல்லை. சுவாமி கவனித்துக் கொண்டே இருக்கிறார்.  அதை நம்மால் கவனிக்க முடியாவிட்டாலும்.. சுவாமியின் கவனிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது வெறும் சமாதான வார்த்தை அல்ல.. ஆறுதல் மொழியல்ல.. அனுபவப் பூர்வமான சத்தியம்.. சுவாமியின் காவல் இந்த நொடி வரை பக்தர்களுக்காக தொடர்கிறது! அவர்களை பாதுகாக்கிறது..பராமரிக்கிறது... சுவாமியிடம் சரணாகதி அடைந்தவர்கள் இந்த உலகம் குறித்தும் தனது வாழ்க்கை குறித்தும் எந்தவித பயமும் அடைய வேண்டிய அவசியமே இல்லை!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக