தலைப்பு

செவ்வாய், 15 டிசம்பர், 2020

பிறந்தநாள் பரிசாக சுவாமியிடம் மரணத்தையே விரும்பிக் கேட்ட அபூர்வ பக்தை ராஜமாதா!


சுவாமியோடு வாழ்வது என்பது சுவாமியின் சொல்லை நடைமுறைப்படுத்துவதே. வழிபட்டு விட்டால் மட்டும் அதிலேயே சுவாமி திருப்தி அடைவதில்லை. அது ஆன்மீக வாழ்வும் அல்ல... எந்த ஆத்மார்த்த பக்தரும் சுவாமி பக்தராகிவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல அவர்களின் மரணமும் மிக அமைதியோடு.. மிக அழகாக.. எப்படி ஒரு வெள்ளரிப் பழம் கொடிக்கும் தனக்கும் வலிக்காமல் கீழே விழுவது போல் நிகழும்.. அப்படி பூரண சாயியிடம் பூரணப்பட்ட ஒரு பக்தையின் கடைசி நிமிடங்கள் இதோ... 


குஜராத் மாநிலத்து ஜம்நகரை ஆட்சி செய்த மன்னர் தான் திக் விஜய் சிங்.. இவரின் மனைவியை ராஜமாதா என மக்கள் அழைப்பர். இருவரும் சுவாமியின் பரமாத்ம பக்தர்கள். ஒருமுறை காஷ்மீரை பாக்கிஸ்தான் ஆளுமைப்படுத்த 1965 ல் குஜராத் மாநிலத்தின் ஜம் நகரில் தான் குண்டுகள் வீசப்பட்டன.. சுவாமியிடம் ஆழ்ந்த பிரார்த்தனையில் ஈடுபட்ட இருவரும் தாங்களும் தங்கள் மக்களும் காப்பாற்றப்படுவதை அணு அணுவை சுவாமியின் பாதுகாவலை அனுபவித்து சிலிர்த்தனர். முகலாய படையெடுப்பால் சிதிலமடைந்த சோம்நாத் கோவிலை புத்துயிர் பெற வைத்த அமரர் திக் விஜய் சிங் மன்னரின் இதய நிறைவுக்காக சுவாமி அங்கே அன்போடு அழைக்கப்பட்டார். சுவாமியும் வருகை தந்து அந்த நுழைவாயிலுக்கு திக் விஜய் சிங் துவார் என பெயரளித்து ஆசி வழங்கி சுவாமி திறந்து வைத்தது சோம்நாத சாயியே சோம்நாத கோவிலை திறந்தளித்ததைப் போல் நெஞ்சம் நிறைந்தது..

ஸ்ரீ சத்ய சாய் திறந்து வைத்த சோம்நாத் கோவிலின் 'திக்விஜய் த்வார்' நுழைவாயில்

ஒரு சமயத்தில் பெங்களூர் ப்ருந்தாவன் ஆசிரமம் அருகில் ’காடுகோடி’ என்னும் இடத்தில்; தேவிநிவாஸ் என்னும் ஒரு பங்களாவில் வசித்து வந்த ஜாம்நகர் மகாராணியான ராஜமாதாவை பகவான் சென்று சந்தித்தார். அன்றைய தினம் செப்டம்பர் 26 அன்றுதான் ராஜமாதாவின் பிறந்தநாள்! அதற்குத்தான் சுவாமி ஹாப்பி பர்த்டே டூ யூ ராஜ்மாதா என்று பாடுகிறார். அதைக் கேட்டவுடன்.. பக்தி உரிமையோடு ஸ்வாமி பாடுவதைப் போலவே ராஜமாதா பாடிக் காட்டினார் விளையாட்டாக...

”உனக்கு வேண்டியதை கேள்” என்று ஸ்வாமி கூறினார். ஸ்வாமிக்குத் தெரியும்! என்ன கேட்பார்  ராஜ்மாதா  என்று! சுவாமி நீங்கள் உறுதியாக தருகிறேன் என வாக்கு தந்தால் மட்டுமே தனக்கு என்ன பரிசு வேண்டும் எனக் கேட்பேன்' என்றார். அப்போது சுவாமி 'சரி! தருகிறேன் .. இப்போது கேள்.. என்ன வேண்டும் ? என...' என்றார். 

Sri Sathya Sai with Smt. Gulab Kunwarba - the Rajmata of Jamnagar

தனக்கு அவளின் வேண்டுதல் தெரிந்திருந்தும் கூட அது தன் பக்தையின் வாய்மொழியால் கேட்க வேண்டும் என்பதே சுவாமியின் சங்கல்பம். அந்த வேளையில் ராஜமாதா 'சுவாமி என் பிறந்தநாளுக்கு நீங்கள் எனக்கு மரணத்தையே பரிசாக தரவேண்டும்' என்றார்.

எவ்வளவு அபூர்வ பக்தி!

எவ்வளவு ஆசையற்ற அகம்!

எவ்வளவு திடமான நம்பிக்கை.

சுவாமியும் சரி தருகிறேன் என்கிறார்.

மரணம் என்பது பொதுவாக அவரவர் விதிப்படியே நிகழ்வது. அதை மகான்களால் கூட தர முடியாது என்பதே ஆன்மீக சத்தியம்.

மரணத்தை தான் விரும்பிய போது யாராலும் அதை உடனே ஏற்க முடியாது. அதை தருபவர் ஐந்தொழில் செய்துவரும் இறைவனான சத்யசாயி மட்டுமே!

அந்த நெகிழ்வான நிமிடங்களில் சுவாமி ராஜமாதாவின் உச்சந் தலையில் ஐந்து நிமிடம் கைகளை வைத்தபடி இருந்தார். அந்த உன்னத நிமிடங்களில் தான் இறுதியில் எதை எல்லாம் தரிசிக்க வேண்டுமோ அதை எல்லாம் தரிசிக்கிறார் ராஜமாதா.


துவாபர யுகத்தில் பீஷ்மருக்கு பிறகு கலியுகத்தில் தனக்கு விருப்பமான நாளில் மரணித்தது ராஜமாதாவே.. அதையும் இதையும் அற்புதமாய் நிகழ்த்தியது சத்யசாயி கிருஷ்ணரே! 

ராஜமாதா பிறகு தன் மகளிடம் "சுவாமி சாட்சாத் கடவுள்" என்ற சத்தியத்தைச் சொல்லி...தனக்கு எதை கடைசியில் பார்க்க வேண்டுமோ அதை எல்லாம் சுவாமி 5 நிமிடங்களில் காண்பித்து விட்டார் என்றார். 

பிறகு மிக அமைதியாக .. முகத்தில் ஆழமான புன்முறுவலோடு 6 நாட்கள் கழித்து காலை 4 மணிக்கு தன் உடலை நீத்தார். அதுவும் ஒரு டேப் ரெக்கார்டரில் ஸ்வாமி பாடிய பாடல்களை கேட்டவாறே! தன் மகள், பேரன், பேத்தியிடம் தன்னுடன் வந்து யாரும் பேச வேண்டாம், ஸ்வாமியின் பாடல்களை மட்டுமே கேட்க விரும்புவதாகவும் கூறி... 

சுவாமியின் குரல் கடலோடு அந்த பக்த நதி ஐக்கியமாகிப் போகிறது!

 பொழுது விடிந்து ஸ்வாமி தேவிநிவாஸிற்கு வந்து ராஜ்மாதாவின் உடலைப் பார்த்து, ”இனி யார் வந்து என்னுடன் சண்டை போடுவார்கள்?” என்கிறார் உருக்கமாக!


ராஜ்மாதாவின் வித்தியாசமான பக்திமார்க்கம், பகவானுடன் ஏதாவது விவாதித்துக் கொண்டே இருப்பது! விளையாட்டாக! அவரை அவ்வாறு பேசுவதற்கு பாபா அனுமதித்திருந்தார்! பகவானின் எண்ணற்ற பக்தர்களில் ராஜமாதா மட்டுமே இப்படி ஒரு வித்தியாசமாக இருந்திருக்கிறார்! 

சுவாமியிடம் பக்தை கேட்டது யாரும் கேட்பதற்கு துணிவே இல்லாத வரம்... அதையும் கடவுளிடமே கேட்பது இருக்கிறதே.. அதுவே தவம்..

உலகத்தில் எவராலும் எந்த தேவர்களாலும்/ மகான்களாலும் தர இயலாத இயற்கையின் நியதியை இயற்கையை ஆட்டிப்படைப்பவரிடம் கேட்டதற்கும் .. அதே நாளில் அவர் மௌன மரணத்தோடு சங்கமமானதும் சுவாமி கடவுளே என்பதற்கும்.. சுவாமி கடவுள் தான் என்ற பக்தையின் பேருணர்வுக்கும் இதுவே இதுவே பெரிய இறவா சான்றாகிறது!!                           

ஆதாரம்: SATHYAM SIVAM SUNDARAM Vol5, P223 

🌻 எப்படி மரணம் அடைகிறோமோ அப்படியே வாழ்ந்திருக்கிறோம் எனப் பொருள். அதிக ஏக்கத்தோடும் .. அதிகப் போராட்டத்தோடும் மரணம் நேர்ந்தால் வாழ்க்கையும் போராட்டமாகவே இருந்திருக்கிறது எனப் பொருள். மனம் அடங்கி இருக்கிறதா..? இல்லையா?  என்பது மரணப் படுக்கையில் தான் புரியவரும். ஆனால் சுவாமியின் உண்மையான பக்தர்களுக்கு சுகமான வாழ்க்கை மட்டுமல்ல சுவாமியின் பாதத்தில் கலந்து போவதற்கான சுகமான மரணமும் நிகழும்! 

பந்தபாசம் மரணத்திற்கு முன்பே அறுபடுவதே நிறைந்த மோனத்தையும் அழகான மரணத்தையும் தரும்... ஆன்மீக வாழ்க்கை என்பது எல்லாம் அதை நோக்கித் தான் நகர வைத்துக் கொண்டிருக்கிறது.!🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக