தலைப்பு

வெள்ளி, 11 டிசம்பர், 2020

மருத்துவரால் வெட்டி எடுக்கப்பட வேண்டிய கால் மகத்துவ சாயியால் குணமாக்கப்பட்டது!

விபரீதமான சூழ்நிலையிலும் விரைந்து வந்து அருள் பாலிக்கக் கூடியது சுவாமியின் பெருங்கருணை... எந்த ஒரு ஆபத்துமின்றி பக்தரை தன் அருட் அரவணைப்பால் காப்பாற்றி தனது பக்தரின் திட நம்பிக்கையையும் ... ஆழமான பக்தியையும் பெருகச் செய்பவர் சுவாமி எனும் சத்தியமான அனுபவம் இதோ இந்த மெய் சிலிர்க்கும் பதிவில்...


2003ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடுவில் மகரசங்கராந்தி சமயத்தில் இச்சம்பவம் நடந்தது. திருநெல்வேலியில், சிதம்பர கிருஷ்ணன் தனது மகன் வீட்டின் தோட்டத்தில் நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்; திடீரென எதிர்பாராத விதமாக 8 அடி பள்ளத்தில் விழுந்தார். அங்கு முழுவதும் தண்ணீர், மற்றும் குழாய்கள் அங்குமிங்குமாக நீட்டிக் கொண்டிருந்தன. பயங்கரமான காயங்கள், எலும்பு முறிவுகள்! எப்படியோ தோட்டத்திலிருந்து மகனின் வீட்டிற்கு ஒரு ஆட்டோ ரிக்க்ஷாவில் சென்று அடைந்தார். மகன் அதிர்ச்சி அடைந்து ஒரு எலும்பு நிபுணரிடம் காட்டியதில், தனக்கு வைத்தியம் செய்ய இயலாத நிலை என்று கூறிவிட்டார். மெட்ராஸ் வந்து மருத்துவர்களிடம் காட்டியதில், காலை வெட்டி எடுக்க வேண்டும் என்றனர். சிதம்பர கிருஷ்ணன் அதற்கு மறுத்து விட்டார். அவர் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தன் மகனை அனுப்பி விட்டு, நர்சிங் ஹோமில் இருந்து வெளியேறி ஒரு ஆட்டோ ரிக்ஷா மூலமாக ஸ்டேட் பஸ் ஸ்டாண்டிற்கு சென்றார். மணி 4:30. கையில் 375 ரூபாய் மட்டுமே இருந்தது. அவர் புட்டபர்த்திக்கு இரவு பஸ்ஸில் ஏறி விட்டார். எப்படியோ தங்கும் விடுதியில் 26ஆம் நம்பர் அறை கிடைக்கப்பெற்று தங்கிவிட்டார். வலி தாங்க முடியவில்லை. 3 நாட்கள் ஓடி விட்டன. கூட தங்கி இருந்தவர்கள், இவரை ஹாஸ்பிட்டலுக்கு போக வற்புறுத்தினர். அங்கிருந்த சேவாதள இளைஞரும், இவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், சுவாமிக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக, மறுநாள் கட்டாயம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வோம் என்றனர். சிதம்பர கிருஷ்ணன் தீவிரமாக பிரார்த்தனை செய்தார். மறுநாள் காலை விடிவதற்குள் குணமாகாவிட்டால் சித்ராவதி நதி சென்று ஒரு மூலையில் தனது வாழ்வை முடித்துக் கொள்வதாக தீர்மானித்து, இதே நினைப்பில் தூங்கிவிட்டார்!


விடியற்காலை 3:30 மணிக்கு எழுந்து பார்த்தால் ஆச்சரியத்தக்க வகையில் வீக்கம் நன்கு வடிந்து, பாதியாக குறைந்துவிட்டது. சேவாதள் இளைஞரிடம் காண்பித்தார். அவர் நம்ப முடியாமல் ஸ்தம்பித்துவிட்டார். எந்த மருந்தும் போடாமல் வெறும் விபூதி மட்டும் போடப்பட்டிருந்தது. இன்னும் ஒரு நாள் பார்ப்போம் - இது தற்காலிகமாக வடிந்து உள்ளதா என அறிந்து கொண்டு, முடிவு செய்வோம் என!! அதுவரை விடுதியிலேயே இருக்கச் சொன்னார்கள். மெல்ல மெல்ல சுவாமியை தரிசிக்க சென்று, தொலைவில் இருந்து தான் பார்க்க முடிந்தது! மறுநாள் முழுவதுமாக வீக்கம் வடிந்து, 5ஆம் நாள் கால் சகஜ நிலைக்கு வந்து, சிதம்பர கிருஷ்ணன் பரிபூர்ண குணமாகி மெட்ராஸ் வந்து சேர்ந்தார்.

ஆதாரம்: Sai Mahimas by Chidambara Krishnan P 70-77

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.  


🌻 எந்த ஒரு பிரச்சனை என்றாலும் சுவாமியிடம் ஒப்படைத்து சாந்தமாக இருக்கச் செய்வது பக்தி ஒன்றே!! ஒப்படைத்த பிறகும் படபடப்பாக மனம் இருந்தால் ஒப்புடைப்பு உணர்வு பூரணமாகவில்லை என்று பொருள். உடல்/மனம்/ ஆன்மா சார்ந்த ரோகம் எல்லாம் சுவாமியால் மட்டுமே குணமாக்க முடியும். சரணாகதி என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்வதல்ல.. அது முழுதுமாய்.. ஒரேயடியாய் நிகழ்கிற பேருணர்வு.. பேரனுபவம்.. அது நிகழ்வதில் தான் ஆன்மீகத்தின் சாரமே அடங்கியிருக்கிறது!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக