தலைப்பு

செவ்வாய், 22 டிசம்பர், 2020

மும்பை பெருவெள்ளத்தில் இருந்து தன் பக்தரின் குடும்பத்தை காப்பாற்றி கரை சேர்த்த சாயி கிருபை!



தன்னை சரணாகதி அடைந்தவர்களை பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி கைவிடுவதே இல்லை.. அவரின் கருணை அவசரப்படுவதும் இல்லை.. தாமதப்படுவதும் இல்லை.. மிக மிக சரியான நேரத்தில் நிகழக் கூடியது என்பதே சர்வ சத்தியம். அந்த சத்தியத்தின் ஒரு ஒளிக்கீற்று இந்த அனுபவம்.. சுவாமி தன் கரங்களை தேன்த்துளியாய் நீட்டி எவ்வாறு ஒரு பக்தரின் குடும்பத்தையே காப்பாற்றி கரை சேர்த்து வாழ்வை இனிக்க வைத்தார் என்பதற்கான மெய்சிலிர்க்கும் அனுபவம் இதோ...


2005 ஆம் ஆண்டு July 26ம் தேதி, மும்பையே வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்தது.. போக்குவரத்து நெரிசலில் எப்போதும் சிக்கிப் புழுங்கும் மும்பை .. அப்போது மழை நீர் நெரிசலில் ஸ்தம்பித்தே போனது... மும்பாய் வெள்ள அபாயத்தில் இருப்பதை உணர்ந்த திரு. குமார் அகலேகர், அந்ததேதியில் வீட்டிற்கு விரைந்து, தன் குழந்தைகளை மேல் மாடிக்கு அனுப்பிவிட்டு தானும் மனைவியும் தங்களது வீட்டில் இருந்தனர். 


நீர் மட்டம் உயர உயர, டெலிவிஷன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை மேலே ஏற்றினர், தெருக்களில் ஏற்கனவே 5 அடிக்குத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. தெருக்கள் வழிந்தோடின... ஜனங்கள் வீட்டில் தஞ்சமடைந்தனர்.. தாழ்வானப் பகுதியில் வசித்தவர்களின் வீடே படகானது.. 

மௌனமாக எந்த மழையும் பெய்வதில்லை.. கும்பகர்ணன் எழுந்திருப்பது போல் பேரிடி சப்தத்தோடே பாய்ந்து பொங்கியது! தனது மனைவி ஷீதலுடன் இரவு முழுவதும் சமையலறை மேடையில் சாயி காயத்ரியை ஜபித்த வண்ணம் அமர்ந்திருந்தார். அந்த ஜப அதிர்வலைகள் வீடு முழுதும் நிறைந்தபடி இருந்தன..  தனது கார் மூழ்கிவிட்டிருந்ததை கவனித்துவிட்டார். குடியிருப்புக்களில் 3 அடி உயரத்திற்கு நீர் புகுந்து விட்டது. அடி மேல் அடி எடுத்த மழை ஒவ்வொரு அடியாக உயர்ந்து கொண்டிருந்தது. 

மெல்ல  சுவரில் மாட்டி இருந்த ஸ்வாமியின் ஃபோட்டாவை பாதிக்காதவாறு மழை நீர் மட்டம் உயராமல் இருக்க வேண்டும்மென ஷீதல் பதட்டம் அடைந்தார், அது ஸ்வாமியின் முழு உயர படம் அவர்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில், படத்தின் கீழ் 3 அங்குல உயரம் இருக்கும் பொழுது நீர் மட்டம் நின்று விட்டது!!! சுவாமி நேரில் மட்டுமில்லை.. நிழல் படத்திலும் அவரே இருக்கிறார் என்பதே இந்த நிகழ்வு தெள்ளத் தெளிவாய் உணர்த்துகிறது! அதே கட்டிடத்தில் பக்கத்து வீட்டில் 5 அடி உயரம் நீர் வந்து விட்டது! ஆனால் இவர்களின் குடும்பம் மட்டும் பெருஞ் சேதமின்றி.. பெரிய சேதாரம் ஏதுமின்றி.. உயிரும் மூழ்காதவாறு ... மொத்த குடும்பமுமே காப்பாற்றப்பட்டது!!


மழை நின்ற பின் அகலேகர் குடும்பம் இரண்டு நாட்கள் தொடர்ந்து வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி இருந்தது, மூன்றாம் நாள் “நான் உங்களுடன் தான் இருக்கிறேன்“ என்று கூறுவது போல படத்திலிருந்து தேன் துளிகள் தோன்றலாயின!!

அந்தத் தேன்துளிகளால் தன் இனிய குரல் எடுத்து தானே இவர்களை காப்பாற்றியது என சுவாமி மௌனமாக மொழிய இவர்களின் இதயம் சொல்லால் விவரிக்க முடியாத பேருணர்வை அடைந்தது!  

ஆதாரம்: Gems Of Sai Garland P 82. 83.

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 


🌻 வாசிப்பவர்களுக்கு ஒன்று தோன்றலாம்.. ஏன் சுவாமி மும்பை வாசிகள் அனைவரையுமே சேதாரமின்றி காப்பாற்றவில்லை என... பகவத் கீதையில் சுவாமி ஏற்கனவே உணர்த்தியபடி யாரெல்லாம் சரணாகதி அடைகிறார்களோ.. அவர்களை மட்டுமே காப்பாற்றி கரை சேர்ப்பார். பகடை விளையாட்டில் தர்மன் அழைக்கவில்லை என்பதால் சுவாமி வரவில்லை.. நஷ்டம் பஞ்சபாண்டவர்களுக்கே ஏற்பட்டது.. துரௌபதி சரணாகதி அடைந்து அழைத்தாள் என்பதால் சுவாமி வந்தார். அவள் மானம் காக்கப்பட்டது. லாபம் துரௌபதிக்கே. சரணாகதி மகத்துவமானது. மலிவானதல்ல.. சரண் அடைந்தவர்களை மட்டுமே சுவாமி யுகம் யுகமாக காப்பாற்றி வருகிறார்!! 

1 கருத்து:

  1. அருமையான பதிவு. பதிப்பாசிரியர் Jaykas அவர்களின் கைவண்ணம் வெகு சிறப்பு.

    பதிலளிநீக்கு