தலைப்பு

செவ்வாய், 1 டிசம்பர், 2020

நம் சுவாமியை யாராவது ஏதாவது தவறாகப் பேசினால் கோபம் வருகிறதே? மன அமைதி போகிறது ? என்ன செய்வது?


இந்த விஷயத்தில் இரு வகையாக கோபம் வரும் . ஒன்று சுவாமியை யாராவது தவறாகப் பேசுவது.. மற்றொன்று நமக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு அதற்க்காக சுவாமியிடமே நாம் கோபம் கொள்வது. இரண்டுமே தவறு.

D என்கிற Devil இணைவதில் Anger is Danger என்கிறார் சுவாமி. அதுவே ரத்த கொதிப்பிற்கும்.. சர்க்கரை வியாதிக்கும் அஸ்திவாரம் இடுகிறது. கோபம் என்பது கைப்பிடி இல்லாத கத்தி அதை வைத்து தாக்கினால் இருவருக்குமே காயம் ஏற்படுகிறது. ஒருவர் கோபம் கொள்கிறவர்.. மற்றொருவர் அந்த கோபக் கனலை வாங்குகிறவர்.

எல்லா யுகத்திலும் இறைவனை பழிப்பது நேர்ந்திருக்கிறது. ஹிரண்ய கசிபு.. சிசுபாலன்... என இந்த கலியிலும் தொடர்கிறது.பூர்வ ஜென்ம தீய வினையே அப்படி பேச வைக்கிறது. அந்த தீய கர்மாவே தெய்வத்தை நிந்தனை செய்யும்.. தீயதை வந்தனை செய்யும்.

 

இறைவன் சத்ய சாயி யாரையும் வெறுத்ததில்லை. நம்மையும் வெறுக்கச் சொல்வதில்லை. காரணம் நாம் கோபம் கொண்டு வெறுத்தால் நமது கர்ம மூட்டையின் சுமை அதிகமாகிறது. சுவாமியின் தாரக மந்திரமே "Hurt never" தான். அதை சுவாமி பக்தர்களாகிய நாம் அனுதினம் கடைபிடிக்க வேண்டும்.

கோபப்படுவது என்பது கடந்தகாலத்தில் வாழ்வது. ஆன்மீகம் என்பது நிகழ்காலத்தில் வாழ்வது. புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் சத்ய சாயி பிரேம ஸ்மரணா (அன்பால் போற்றுதல்)... துவேஷ ஸ்மரணா ( வசை பாடல்) இரண்டும் வித்யை (ஞானம்).. அவித்யை (அறியாமை) என தத்தம் குறிப்பிடப்படுகிறது. 

கரையான்பூச்சிக்கு பொன்னாடையானால் என்ன.. பருத்தி ஆடையானால் என்ன...எனக் கேட்கிறார் சுவாமி. எல்லாம் அதற்கு ஒன்றே. 


குறை சொல்பவர்களின் பழக்கமே சதா குறை சொல்வது தான். கடைசியில் அவர்கள் பஸ்மாசுரன் போல் தன் தலையில் தானே கைவைத்து அழிவர் என்கிறார்.

நல்லவர்கள்/ ஆன்மீக சாதகர்கள்/ பக்தர்கள் அப்படி குறை சொல்பவரோடு பழக்கம் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிறார் சுவாமி.

(ஆதாரம் : சந்தேக நிவாரணி/ பிரச்னோத்ர வாஹினி - பக்கம் 14. ஆசிரியர் ஸ்ரீமான் கஸ்தூரி)

அவர்களின் குறை எனும் தீய வாசனை நம்மிடம் ஒட்டாமல். நம்மைப் பற்றியோ அல்லது நம் சுவாமியைப் பற்றியோ யாராவது குறை சொன்னால் நம் மனம் கூட கசப்படையாத படி .. அவர்களிடம் நம்மையோ / சுவாமியையோ நிரூபிக்க வேண்டும் என்று அவர்களோடு வாக்குவாதம் செய்யாமல் ஒரு மெல்லிய புன்னகையோடு அவர்களை கடந்துவிட வேண்டும். இது ஆன்மீக சாதனையில் ஓர் சிறந்த அம்சம்.

சுவாமி பக்தர்களாகிய நாம் அனைவரும் புகையில்லாத சுடராய் சத்ய சாயி விளக்கில் சுடர்விடுவோம்!

அதுவே சாத்வீகம்

அதுவே ஆன்மீகம்

அதுவே தெய்வீகம்

  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக