தலைப்பு

வெள்ளி, 18 டிசம்பர், 2020

சுவாமி கொடுத்த கவருக்குள் பாம்பு இருக்குமோ என பயந்த மாணவனுக்கு காத்திருந்தது அதிசயம்!!!


இறைவன் சத்யசாயியின் கருணை அளப்பரியது.. அதிசயம் நிறைந்தது.. பேரன்பு நிரம்பியது. அவர் பேரன்பு வடிவம் என்பதற்கு அவரின் சொல்/செயல்/அசைவே சாட்சி. பலர் ஆன்மீகப் போர்வையில் பிறர் மேல் பொறாமைப்பட்டு வசைபாடுகிறார்கள். சுவாமி ஒருவரை குறித்தும் / ஒன்றை குறித்தும் வசைபாடியதே இல்லை.. நம்மையும் வசைபாடச் சொன்னதில்லை. காரணம் கடவுள் அவரே என்பதால் தான் அத்தகைய பேரன்பு! எல்லோரும் அவரின் குழந்தைகளே என்ற சாயி வாத்ஸல்யம். அத்தகைய பேரன்பு தன் பிரியமான மாணவனிடம் ஆற்றிய பெருங்கருணை இதோ...


பிரசாந்தி நிலையம் சாய் குல்வந்த் ஹாலில் சுவாமி தரிசனம் கொடுக்கும்போது பக்தர்களுடன் மாணவர்களும் அமர்வது வழக்கம்.  அப்படி ஒரு மாலை தரிசனத்தின் போது கடைசி வரிசையில் ஒரு மாணவன் சோகமாக அமர்ந்து இருந்தான். பரம்பொருள் சத்யசாயிக்கு தெரியாத விஷயம் தான் என்ன.. ஆயிரம் மாணவர்கள் அமர்ந்து இருந்தாலும் அவர்களின் ஒவ்வொருவரின் எண்ண ஓட்டங்கள் சுவாமிக்கு மட்டுமே நன்கு தெரியும். 


தரிசனத்திற்கு வந்த சுவாமி சற்றும் யாரும் எதிர்பார்க்காத விதமாக கடைசி வரிசையில் உட்கார்ந்து இருந்த மாணவனை நோக்கி நடந்து சென்றார். அந்த மாணவனிடம் சுவாமி "நீ சரியில்லை , என்னாயிற்று? ஏன் வருத்தமாக இருக்கிறாய்?" என்று கேட்டார். 

அதற்கு அந்த மாணவன் பதில் ஏதும் கூறாமல் தலைகுனிந்தான். சுவாமியே, ”நீ உன் தந்தையை பணம் அனுப்புமாறு கேட்டாய்! அவர் அனுப்பவில்லை! அது தானே! இந்தா – இந்த கவர்களில் ஒன்றை எடு” என, தான் வைத்திருந்த கவர் கற்றையை நீட்டினார். அந்த மாணவன் எடுக்க தயங்கவே, பயப்படாதே! கவருக்குள் பாம்பு ஒன்றும் இல்லை! இருந்தாலும் நான் கடிக்க விடமாட்டேன் என்றார். கடைசியில் அந்த மாணவன் ஒரு கவரை எடுத்து பிரித்தான். உள்ளே புத்தம்புது 500 ரூபாய் நோட்டு இருந்தது ”இதானே உன் தந்தையிடம் கேட்டாய், எடுத்துக்கொள்! நீ இன்னும் அதிகம் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்” என்றார். பையன் வாயடைத்துப் போய் நின்றான்! இதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் எவ்வளவு பணம் கேட்டு அதற்காக காத்திருந்தானோ அதே அளவு பணம் ஈரேழுலகத்தின் தந்தையான சுவாமியே வழங்கி விட்டார். ஒருவருக்கு என்ன வேண்டுமென்பது மட்டுமல்ல! சரியான நேரத்தில் அதைக் கொடுத்து காப்பாற்றுவார்!!! அது தான் இறைவனின் குணம்!!! பிரபஞ்ச இறைவன் சத்யசாயி யாரையும் ஒருபோதும் கைவிடுவதில்லை!!  

ஆதாரம்: Vidyagiri Divine vision- P 143

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 


🌻 பாம்பு ஒன்றும் இல்லை என்று சொல்லி.. அப்படியே இருந்தாலும் அதை கடிக்க விடமாட்டேன் என்கிறார் சுவாமி. அண்ட சராசர ஜீவன்களின் அசைவுகளை சுவாமியே கட்டுப்படுத்துகிறார் என்பது இதன் வழியே உணரலாம். சுவாமியால் புரிய முடியாத செயலேதும் இல்லை என்பதே நிரந்தர சத்தியம். நமது நம்பிக்கையால் அவர் இறைவனல்ல.. நாம் நம்பாது போயினும் சத்யசாயியே இறைவன் !!! இந்த பிரபஞ்ச மெய்யுணர்வை அவரின் பெருங்கருணை இருந்தால் மட்டுமே தன்னை உணர்ந்த ஞானிகளால் கூட சுவாமியை உணர முடியும். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக