தலைப்பு

வியாழன், 31 டிசம்பர், 2020

ஒரு வண்டின் வடிவத்தில் வந்து தன் புகைப்படத்தை ஆசிரியர் தம்பிராஜுவுக்கு தந்தருளிய சாயி!


எது நியாயமான தேவையோ அதை நேர தாமதம் இன்றி தரும் இறைவன் சத்யசாயி. சத்தியமான இந்த இறைவன் பேராசைகளுக்கு செவி சாய்ப்பதில்லை. நமது கோரிக்கைகள் அத்தியாவசியமானதா? இல்லை ஆசைகளால் உருவாக்கப்பட்டவையா? என்பதை நாமே பரிசீலிப்பது அத்தியாவசியம். ஆசைகள் நிறைவேறவில்லை என அவரை எண்ணி வருந்துவது அறிவீனம். தேவைகள் பர்த்தி பரமாத்மாவால் மட்டுமே பூர்த்தியாகும்.. அப்படியொரு ஏக்கம் அளித்த தேவை எவ்வாறு ஆச்சர்யகரமான வகையில் சுவாமி தீர்த்து அருளினார் என்பதை இந்தப் பதிவில் அணுஅணுவாய் அனுபவிக்கலாம்!

உரவக்கொண்டாவில் படித்துக்கொண்டிருந்த பொழுது, பாபா ஒரு ஆசிரியரை தனது ஞானத்தால் மிகவும் கவர்ந்து விட்டார். மகான்களுக்கு ஞானம் நெடும் தவத்தால் மட்டுமே கிடைக்கிறது.. பூர்வ ஜென்ங்களின் தவம் பொருத்தே இந்த ஜென்மத்தில் எத்தனை ஆண்டுகளில் ஆத்ம ஞானம் சித்திக்கும் என்பது ஒவ்வொரு தனி மகான்களின் வாழ்க்கையிலேயே அறிந்து கொள்ளலாம். ஆனால் இறைவன் அவதாரம் எடுக்கையில் பூரண ஞானத்தோடே பூமிக்கு வருகிறார். எப்போதும் ஆத்ம ஞானத்தையே பேரன்போடு வெளிப்படுத்துகிறார். காரணம் அந்த பிரேம ஞான ரூபமே அவர் தான். அது ஒவ்வொருவருக்கும் தன் கர்ம வினைக்கு ஏற்ப ஒவ்வொரு காலக்கட்டத்தில் புரிய வருகிறது. 

அப்படி புரிந்து கொண்டவர் இந்த பள்ளி ஆசிரியர். அந்த ஆசிரியர் தம்பிராஜு அவர்கள் தான். பாபாவிடம் உபநிஷத்து போன்ற பெரிய விஷயங்களில் எல்லாம் சந்தேகம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்வார் ஆசிரியர். எல்லா சாஸ்திர சாரங்களாகவும் விளங்குவது சதுர் வேத வடிவினரான இறைவன் சத்யசாயியே! அவர் அறியாதது ஏதும் இல்லை.  


திடீரென உரவகொண்டாவை விட்டு புட்டபர்த்தி சென்று விட்டார் மாணவனாய் இருந்த பாபா! தம்பிராஜு அவர்கள் தான் பாபாவிடம், அவருடைய போட்டோ ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளாமல் விட்டோமே என்று ஏங்கினார்! அந்த காலத்தில் சுவாமி புகைப்படம் கிடைப்பது அரிதிலும் அரிதே... டிஜிட்டல் யுகமான இந்த காலத்தில் எல்லோருக்கும் ஏராளமான சுவாமி படங்கள் கைகளிலேயே குடிகொண்டிருக்கிறது.

ஒரு சுவாமி படத்திற்காக அந்த காலத்தில் ஏங்கியவர்கள் அதிகம். பேப்பரில் ஒரு சிறு சுவாமி படம் தென்பட்டாலும் அதை கத்தரித்து சுவற்றிலோ.. பீரோவிலோ ஒட்டி வைத்திருந்தவர்கள் ஏராளம்.. அந்த கால பக்தியும்.. தவிப்பும் .. சிறு சுவாமி புகைப்படம் பார்த்து ஆச்சர்யப்பட்டு மகிழ்ந்ததெல்லாம் அனுபவித்தவர்களுக்கே அதன் அருமை புரியும். இந்த கால இளைய இதயங்களிடம் அந்த தெய்வ தவிப்பும்.. சிறு படத்தை அடைவதில் ஏற்படும் மகிழ்வெல்லாம் அவ்வளவாக இல்லை என்பதே நிதர்சனம்.

அத்தகைய ஏக்கம் அந்த கால பக்தரான இந்த ஆசிரியருக்கு இருந்ததில்லை வியப்பில்லை. அவர் ஏக்கம் கொண்ட அதே சமயம் ஜன்னல் வழியே ஒரு பெரிய வண்டு பறந்து வந்து, அறையினுள் எதையோ போட்டு விட்டு சென்றது! அது பாபாவின் சிறிய போட்டோ. எவ்வளவு மகிழ்ந்திருப்பார் அந்த பக்த ஆசிரியர் என்பது அப்படி நிகழ்ந்தவர்கள் அனைவருக்கும் புரியும்!

சுவாமி தன் பக்தர்களின் உள்ளங்களில் வசிப்பதினால் அவர்களின் எண்ண ஓட்டங்களை மிக எளிதாக படம் பிடித்து விடுவார். அவரவர்களின் மெய்யான பக்திக்கு தகுந்தாற்போல் அவரவரின் ஆழமான ஏக்கங்களை தக்க சமயத்தில் தணிக்கிறார். எந்த வடிவத்தையும் இறைவன் சத்யசாயியால் எடுக்க முடியும். எல்லா வடிவங்களும் அவர் படைப்பே! சத்யசாயி இறைவன் எனும் சத்தியத்தை உணர்ந்து கொண்டவர்களால் இந்த வண்டு நிகழ்வையும் உணர முடியும்.

அதோடு மட்டுமல்ல! மறுநாள் ஒரு குரங்கு வந்து, ஒரு கடிதத்தையும், ஒரு லட்டுவையும் போட்டுவிட்டுச் சென்றது! கடிதத்தில் தான் ஃபோட்டோ அனுப்பியதும், லட்டு அனுப்பியதையும் எழுதியிருந்தார் பாபா! 

ஆசிரியர் தம்பிராஜு மகிழ்ச்சி வெள்ளத்தில் திகைக்கலானார்!!! உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி தன் உள்ளத்தில் பூரண சரணாகதி உணர்வை இதன் வழியாக அவர் ஏற்படுத்திக் கொண்டார் என்பதில் வியப்பேதுமில்லை.

ஆதாரம்: Baba Sathyasai, Part 1, P 130, 131


🌻 சிறு படத்திலும் சுவாமி இருக்கிறார். அவரின் சாந்நித்யம் அதாவது பேரருள் இருப்பு முழுதாய் அதில் நிறைந்திருக்கிறது. இது ஏகதேசம் அனைவரும் அனுபவித்து வரும் ஒன்றே! சுவாமி நம்மோடு இருப்பதும்.. சுவாமி படம் நம்மோடு இருப்பதும் ஒன்றே! சுவாமியை ஆராதிப்பதும்... சுவாமி படத்தை ஆராதிப்பதும் ஒன்றே! தவ நிலையில்.. தியான நிலையில் பக்தர்கள் மேலெழ சுவாமி படங்கள் உதவி செய்கின்றன.. அதே சமயம் அதுவே இகபர ஆறுதல் அளிக்கின்றன.. மனபாரங்களை தன் மேல் சுமக்கும் சுமை தாங்கிக் கற்களாகவும் ... வேர்க்கும் மனதிற்கு சாமரம் வீசும் ஆனந்த மயிலிறகாகவும் சுவாமி படங்கள் அமைகின்றன... நமக்கு ஞானக் கண் திறந்து கொண்டால் சுவாமி படம் நம்மோடு பேசுவதையும் உணரந்து கொள்ளலாம்! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக