தலைப்பு

செவ்வாய், 29 டிசம்பர், 2020

ஷிர்டி சாயி பக்தர் சுப்பராவின் சந்தேக நோயை தீர்க்க வீட்டின் பூஜையறைக்கே வந்து பிரசாதம் ஏற்ற சத்யசாயி இறைவன்!

மனிதனின் முக்கியமான நோய் சந்தேகப்படுவது.. அதுவும் சத்தியத்தை சந்தேகப்படுவது கலியுகம் பரப்பி வருகிற விசேஷமான மனோ வைரஸ். அதை அழித்தொழிப்பது இறைவனால் மட்டுமே முடியும். வெகு ஆண்டுகளுக்கு முன்பே பக்தர்கள் தன் மேல் கொண்ட சந்தேகத்தை எவ்வாறெல்லாம் தீர்த்து வைத்தார் சுவாமி என்பதை உணர்த்தும் ஓர் அனுபவப்பூர்வ பதிவு இதோ...


ஒருமுறை புக்கபட்டினத்தில் வாழ்ந்து வந்த யடவப்பு ராஜம்மா என்பவர், தன் வீட்டு பூஜைக்கு திப்பம்மாவை அழைத்தார். பூஜைக்கு பாபாவும் வருவதால், அவரை தரிசிக்கும் பொருட்டு அழைத்தார். திப்பம்மா என்பவர் அந்த ஊரின் கர்ணம்/ எழுத்தராக இருக்கும் சுப்பராவின் மனைவி ஆவார். பூஜைக்கு வந்த திப்பம்மாவை பார்த்த பாபா, *"நீ உனது காணாமல் போன இரு பிள்ளைகளை பற்றி கவலைப்படுகிறாய். அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் பற்றி கவலை வேண்டாம்"* என்றார்.


திப்பம்மா ஆச்சர்யமடைந்தார். தன் மனதின் அடி ஆழத்தில் எரிமலைக் குழம்பாய் அடங்கியபடி இருக்கும் மனக் கொதிப்பை சுவாமி எவ்வாறு அறிந்தார் என யோசித்தபடி வியந்தார். வீட்டிற்கு சென்ற திப்பம்மா மகிழ்ச்சியுடன் தன் கணவரிடம் ஷிர்டி பாபாவே சத்யசாயியாக மறு அவதாரம் எடுத்திருப்பதாக  நடந்ததை கூற சுப்பராவோ யார் அந்த சிறுவனா என ஏளனமாகப் பேசி நம்ப மறுத்து விடுகிறார்!

பலருக்கும் நேரடியாக அனுபவம் கிடைக்காத வரை நம்ப மறுப்பர். அது பூர்வ கர்மாவின் அழுக்கால் ஏற்படுவதே..
கற்பூரம் உடனே பற்றிக் கொள்ளும்..
விறகு சிறிது நேரம் கழித்துப் பற்றும்..ஆனால் ஈர விறகை வெய்யிலில் காய வைத்த பிறகே பற்றும்..நெருப்பு என்னவோ ஒன்றுதான்.. ஆனால் பற்றும் பொருட்களின் வித்தியாசத்தில் நெருப்பு பிடிப்பதன் நேரமும் கூடியும் குறைந்தும் காணப்படுகிறது. அதுபோலவே இறைவன் ஸ்ரீ சத்யசாயி மேல் ஏற்படுகிற பக்தியும்... 


அவர் சீரடி பாபாவின் மறு அவதாரமாக இருந்தால் நம் வீட்டு வாசல் வழியே ஊர்வலம் செல்லும் பொழுது, நம் வீட்டின் உள்ளே வந்து, நமது பூஜை அறையில் உள்ள பிரசாதத்தை உண்ணவேண்டும்! அப்பொழுதுதான் நம்புவேன் என்றார்.

சுப்பராவ் அவ்வாறு சொன்னாரே அன்றி அவருக்கு சுவாமி வருவார் என துளியும் நம்பிக்கையே இல்லை.
அந்த அவநம்பிக்கையை தொடர்ந்து திப்பம்மாவோ மனதார சுவாமியை வீட்டிற்கு வரவேண்டும் என மனதிற்குள் உருகி கண்மூடி வேண்டிக் கொண்டிருக்கிறார்.


அந்த பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பது போல் ஆச்சரியப்படும் வகையில், பாபா வாசலில் ஊர்வலம் வந்தவர்  உள்ளே வந்தேவிட்டார். உள்ளே சாமி அலமாரியிலிருந்து பிரசாதத்தையும் உண்டுவிட்டு, சுப்பராவ் கைகளில் தீர்த்தம் வழங்கிய படி "நான் தான் ஷிர்டி சாய்பாபாவின் மறுஅவதாரம்... இப்போது சந்தேகம் தீர்ந்ததா?"*என சுப்பராவைப் பார்த்து கேட்டார்.

அந்த நேரத்தில் சுப்பராவால் என்ன செய்திருக்க முடியும்.. தான் வீட்டில் பேசியது இவருக்கு எப்படி தெரியும் என்ற அதிர்ச்சி ஒருபுறம்.. உண்மையான இறைவனை உதாசீனப்படுத்தினோம் என்ற குற்றவுணர்ச்சி மறுபுறம்...
அதிர்ச்சியில் சுப்பராவ் மயங்கி விழுந்தார். பாபா ஒரு கிண்ணம் விபூதி வரவழைத்து, அவரது புருவங்களில் பூச, சுப்பராவ் கண் திறந்தார். பாபாவின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரினார்.
அவரின் கண்ணீர் மலர்கள் சுவாமியின் கால்களில் பாதபூஜை புரிந்தன.. விபூதியை கொடுத்த பாபா தொடர்ந்து ஊர்வலத்தில் செல்லலானார்! பிறகு சுப்பராவ் சுவாமியை தான் தினசரி வழிபடும் ராதா கிருஷ்ணர் இவரே இப்போது சாயி கிருஷ்ணராக அவதரித்திருக்கிறார் என்பதை அந்த மெய் சிலிர்க்கும் நிகழ்விலிருந்து உளமாற உணர்கிறார்.


சுப்பராவும், திப்பம்மாவும் தீவிர பக்தர்களாகி விட்டனர் என கூறவும் வேண்டுமா? சுவாமியின் எந்த ஒரு சிறு அசைவுக்கும் ஆழமான அர்த்தம் இருக்கவே செய்கிறது என்பதை அணு அணுவாக உணர்ந்தனர் அந்த பக்த தம்பதியர்.

ஆதாரம்: Bhakthodhaaraka Sri Sathya Sai P 38,39
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம்.

🌻 கார்மேகம் சூரியனை மறைத்துக் கொண்டிருப்பதால் மட்டும் சூரியனின் ஒளியை அதனால் குடித்துவிட முடியுமா?
சுவாமி இறைவன் எனும் சத்தியத்தை சந்தேகப்படுவதால் இறைவன் சத்யசாயியின் இறையாண்மை எதுவும் ஆகிவிடுவதில்லை.
அண்ணார்ந்து பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் ஆகாய வெட்டவெளி அப்படியே ஆழமாய் விரிந்திருக்கிறது... அப்படியே சுவாமியும்!!
பக்தி என்பதை சுவாமியே அருள வேண்டும். அதுவே ஜென்மந்தோறும் தொடர்கிற ஒரே துணை. மற்றவை மாயையே!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக