தலைப்பு

புதன், 23 டிசம்பர், 2020

ஆஷாவின் குருடான கண்களின் மேல் இமையை சுவாமி தீண்டிய உடனே பளீச் என பார்வை வந்தது!


பார்வையற்றவர்களுக்கு பார்வையாகிறார் பகவான் சத்ய சாயி.. பார்வை பார்த்து அவர்களுக்கு பார்வை தந்து அவர்களின் பார்வையில் நிறைந்துவிடுகிறார் பரம்பொருள் சாயி.. அத்தகைய அனுபவம் மெய்சிலிர்க்கும் படி இதோ..‌

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஆஷா ஜோஷிபுராவின் தந்தை டாக்டர் காடியாவிற்கு, தனது மகள் முற்றிலும் பார்வையிழந்து குருடாக இருப்பதாவும் சத்யசாயி பகவான் குணமாக்குவாரா? என வினவி கடிதம் எழுதினார். 


பார்வையிழந்த மகளை நினைத்து உருகிய தந்தைக்கு வாழ்க்கையே திசை தெரியா வனாந்தரமாக காட்சி அளித்தது. உள்ளம் கசந்தது. தனது மகளின் எதிர்காலம் நினைத்து உயிரை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருந்தார்.. அவரின் ஒரே நம்பிக்கை டாக்டர் காடியாவாக இருந்தது.. 

பரம பக்தரான டாக்டர் காடியாவோ அதற்கு... சத்யசாயி சாட்சாத் இறைவன், ஆகவே அவர் கட்டாயம் செய்வார் எனவும்,  புட்டப்பர்த்திக்கு வந்து தரிசிக்கும்படி கூறி இவ்விஷயத்தை மற்றவர்களுக்கும் பரப்பினார்.   

குஜராத்தில் ஜகன்னாத் என்னும் இடத்திலிருந்து புட்டப்பர்த்திக்கு தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தார் ஜோஷி. என்ன ஆகுமோ... ஏதாகுமோ என்ற பரபரப்பு உள்ளத்தில் புயலாய் மையம் கொண்டிருந்தது... அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியங்களின் பலனாக... நேர்காணலும் சாயியின் கருணையால் கிடைத்தது. சுவாமி ஆசீர்வதித்து விபூதிப் பொட்டலங்கள் கொடுத்து தினசரி ஒவ்வொரு சிட்டிகை உட்கொள்ளச் சொன்னார். அவர்களும் பூரண நம்பிக்கையோடு வாழ்க்கையில் கிடைத்த சுவாமி என்ற ஒரே இறுதி பிடிமானத்தோடு அவ்வாறே இறைவன் சொல்லியபடி செய்தனர்.


பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் புட்டபர்த்திக்கு தந்தையும் மகளும் வந்தனர். சுவாமி அவர்களை  இன்டர்வ்யூ அறைக்கு அழைத்து ஆஷாவின் கண்களில் இமையின் மேல், சுவாமி தனது இரு உள்ளங்கைகளையும்  வைத்தார் பிறகு கண்களைத் திறந்ததும்……..!  அடடா பார்வை வந்துவிட்டது!!! 

தந்தைக்கு உயிரே வந்துவிட்டது.. பூரித்தார்.. கண் கலங்கினார்.. இருளாக இருந்த மகளின் கண்கள் ஒளியில் நிறைந்து போனதை கண்டு தந்தையின் கண்கள் குளமாகிப் போனது... இறைவனே மருத்துவராகி வைத்தியம் செய்து விட்டார்!!! 

ஆதாரம்: ஆதாரம்: Sai Smaran – P217

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம். 


🌻 புறப் பார்வை மட்டுமல்ல சுவாமியே அகப்பார்வையும் தருகிறார். புறப் பார்வை உலகத்தை பக்குவத்தோடு நோக்குவதற்கானது.. அகப் பார்வையோ வாழ்க்கையை பக்குவத்தோடு நோக்குவதானது.. இரு பார்வை பெற்ற ஒருவரின் பார்வையே முழுமையாகிறது.. அதுவே பிறவிப் பெருங்கடலை கடப்பதற்கான சாயி சரணாகதியை தந்தருள்கிறது!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக