இறந்த குழந்தையால் மனம் ஒடிந்த தாய் , பாபாவை வசைபாட, அதை தம்மைத் துதிக்கும் இசையாக ஏற்ற பகவான், குழந்தையை உயிர்ப்பிக்க, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற தாய், தன் உணர்ச்சிப் பெருக்கில் பகவானைத் துதித்த உண்மை சம்பவம்...
அவதார அறிவிப்புக்குப் பிறகு தமது அன்னையின் கோரிக்கையை ஏற்று பாபா பர்த்தி வந்தது அனைவரும் அறிந்ததே. சிலநாட்கள் தமது வீட்டிலும் , பிறகு தம் தாயின் சகோதரர் வீட்டிலும் வசித்த பாபா, அதன்பின் ஐந்தாண்டு காலம் கர்ணம் சுப்பம்மாவின் வீட்டில் தங்கினார். வம்பர்களின் வாயடைக்க அங்கிருந்து கிளம்பி அருகிலுள்ள மலைக் குகைகளில் வசிக்கலானார். இந்நிலையில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. பாபா அனைவரையும் அன்புடன் அரவணைத்து ஆன்மீகப் பாதையில் வழி நடத்தினார்
பஜன்களும், அற்புதங்களும் நிகழ்த்தி பரவசப்படுத்தினார். நீண்ட தூரத்திலிருந்து வந்த பக்தர்கள் தங்கவும், உணவு உட்கொள்ளவும் வசதிகள் செய்ய வேண்டி, கர்ணம் சுப்பம்மா, கமலம்மா இருவரும் ஊருக்குள் ஒரு இடத்தை பாபாவுக்கு அளிக்க, மற்ற சில பக்தர்கள் மங்களூர் ஓட்டிலான மண் கட்டிடம் கட்டி தகரக் கூறை வேய்ந்தனர். இது பழைய மந்திரம் என பெயர்பெற்றது.
இதில் பாபா 8×6 அளவுள்ள சிறிய எளிமையான அறையில் வசிக்க, பக்கத்தில் ஒரு சிறிய ஹாலில் பஜன்கள் நிகழ்த்தப்பட்டன.
🌷தெர்மா மீட்டரை கடித்து பாதரசம் விழுங்கி... சுவாமி சந்நதியில் இறந்த குழந்தை:
அது பழைய மந்திரில் பஜனை நேரம். இப்போது மாதிரி இல்லாமல், பஜன்கள் கீர்த்தனங்களாகவும், நீண்ட நேரமும் பாடட்படும். பாபாவும் இடை இடையே பஜனில் பங்கேற்பார். பழைய மந்திரத்தில் பூஜாரியாக, ஹாரத்தி சேவையில் நீண்டகாலம் பணியாற்றியவர் சேஷகிரிராவ் அவர்கள். ஒரு நாள் மாலை நேரம். அவரது மகள் தனது பச்சிளங்குழந்தையை மடியில் கிடத்தியவாறே பஜன் பாடல் ஒன்றை பாடிக் கொண்டிருந்தாள். குழந்தை பஜன் சமயத்தில் தொந்தரவு செய்யாதிருக்க, விளையாட்டு சாதனமாக, அதன் விளைவு தெரியாமல், ஒரு தெர்மாமீட்டரை தர, குழந்தை அதை கையில் வைத்துக் கொண்டு, இப்படியும் அப்படியும் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தைகளின் இயல்பான குணம் - கையில் இருக்கும் எதையும் சுவைத்துப் பார்க்க முற்படும். அது போலவே இந்தக் குழந்தையும் தர்மா மீட்டரை வாயில் வைத்து கடித்ததில், அது உடைந்து அதிலிருந்த பாதரசம் அதன் உடலில் செல்லவே, அதன் விஷத்தன்மையால் குழந்தை இறந்து விட்டது. இதைக்கண்ட அன்னையின் பஜன் நின்று, அவள் அலறி அடித்துக் கொண்டு கூக்குரலிட்டு அழ ஆரம்பித்தாள். தன் மடியிலேயே அவளது அருமை பச்சிளங்குழந்தை மாண்டு கிடக்க, செய்வதறியாது உன்மத்தத்தின் உச்ச கட்டத்திற்கே சென்றுவிட்டாள். யாரை கடவுள் என்று நம்பி, அவரது பாத சேவைக்கு தன்னை அர்பணித்தோமோ, அவர் கண் எதிரே தனது குழந்தை மாண்டு கிடக்க, பாபா உடனடியாக அருள் புரியவில்லையே, அவர் அருள் புரிய மாட்டாரோ என்ற ஆதங்கத்துடன் பாபாவை நோக்கி வசைபாட ஆரம்பித்தாள். பரிபூரண சரணாகதி அடைந்த தன்னை, சரணாகத வத்சலனான பகவான் கைவிட்டு விட்டதாகவே நினைத்து புலம்பினாள். நிந்தா ஸ்துதியாக அவள் ஏசல்களை அமைதியுடன் ஏற்ற பாபா செய்தது என்ன.
🌷பாபா கருணையின் அற்புதம்:
இத்தனையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாபா, தன் இருக்கையிலிருந்து மெதுவாக எழுந்தார். இறந்துவிட்ட குழந்தையின் உடலுக்கு அருகே வந்து, விபூதி துகள்களை அதன்மீது தூவினார். உறங்குவது போலும் சாக்காடு என்ற வள்ளுவர் குறளுக்கு ஏற்ப, குழந்தை அந்த நொடியே உயிர் பெற்று ஓங்கி அழுகுரல் இடத் தொடங்கியது. குழந்தை கிடத்தப்பட்டிருந்த துணியின் அடியில் தர்மாமீட்டரின் உடைந்த கண்ணாடித் துகள்கள் சிதறிக் கிடந்தன. அன்னை ஆனந்த சாகரத்தில் அமிழ்ந்தாள். தன் உயிரினும் மேலான குழந்தைக்கு உயிர் கொடுத்த ஸ்வாமியை, அவரது பவித்ர விபூதியின் விசித்திர ரட்சிப்பு தன்மையை நினைத்தாள். நன்றி நவில நா துடிக்க, இன்ப அதிர்ச்சி இதயத்தை அடைக்க, பாபாவை பரவசத்துடன் நமஸ்கரித்தாள்.
பரம பவித்ரமானது பாபா விபூதி .இது பரம விசித்ரமானதும் கூட. இக வாழ்வின் மேன்மைகளையும், மேலுலக மோட்சமும் தருகின்ற, பாபா விபூதியை நான் பக்தியுடன் தரிக்கிறேன் என்கிறது பாபாவின் விபூதி மந்திரத் துதி. பாபாவின் விபூதி ஒரு சர்வரோக நிவாரணி. பிணிதீர்க்கும் மாமருந்து. உயிர் காக்கும் சஞ்சீவி. விண்ணகம் அருளும் தன் நிகரில்லா மந்திரம்.
விபூதி பற்றிய பாபா பாடிய அற்புத தெலுங்கு கவிதையை பார்ப்போமா:
கொலனு கலுவையே ஸ்ரிங்காரமு
ஆகாஷமுனகு சந்த்ருடு ஸ்ரிங்காரமு
சமுத்ரமுனகு அலையே ஸ்ரிங்காரமு
ஸ்வாமி பக்துலகு விபூதியே ஸ்ரிங்காரமு.
குளத்திற்கு அணிகலன் தாமரை
விண்ணிற்கு அணிகலன் சந்திரன்
கடலுக்கு அணிகலன் அலைகளே
ஸ்வாமி பக்தர்களுக்கு அணிகலன் விபூதியே.
ஆதாரம்: Modern Miracles: The Story of Sathya Sai Baba
தமழாக்கம் : திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.
🌻 இகத்திற்கும், பரத்திற்கும் , ஈடில்லா மகிழ்ச்சிக்கும், சுகத்திற்கும், வளத்துக்கும், நோயில்லா வாழ்வுக்கும், ஜெகத்திலே நாம் பெற்ற அனுபூதி.. பாபா விபூதி. அதை அணிவோம். மகிழ்உறுவோம். 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக