தலைப்பு

வெள்ளி, 4 டிசம்பர், 2020

"நீ எவ்வளவு செலவு செய்கிறாய்?" - ஜெய்சங்கர் சுந்தரம் (Alumni, SSSIHL)


HDFC வங்கியில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் ஆகிய நாங்கள் ஒரு குழுவினராக 2004 டிசம்பரில் பிரசாந்தி நிலையத்திற்கு வந்திருந்த சமயம், சுவாமி அவர்கள் எங்களிடம் சமயத்திற்திற்கு ஏற்றவாறு மூன்று கேள்விகளை முன்வைத்தார்.

அ) எங்களது சம்பளம் எவ்வளவு?
ஆ) எங்களது பணி நாங்கள் பெறும் சம்பளத்திற்கு ஈடானதாக உள்ளதா?
இ) எங்களது நிறுவனம் ( முதலாளி ) எங்களது பணியில் மகிழ்ச்சி கொள்கிறதா? ( மகிழ்ச்சி கொள்கிறாரா? )

நாம் சார்ந்துள்ள நிறுவனங்களில் நமது கடின உழைப்பை அளித்து பகவானின் கல்வி நிறுவனத்திற்கு நற்பெயர் பெற்றுத்தருவதுதான் நாம் பகவானை மகிழ்வூட்டுவதற்கு மிக எளிதான வழி என பகவான் வலியுறுத்தியுள்ளார். நேர்மையான ஊக்கம்தான் எங்களது நிறுவனங்களிடம் ( முதலாளிகளிடம் ) எங்களுக்கு பாராட்டினைப் பெற்றுத்தரும் என்பதையும் எங்களுக்கு வலியுறுத்திவந்தார். சுவாமி அவர்கள் "வேலையே வழிபாடு, கடமையே கடவுள்" என்னும் தாரக மந்திரங்களை நாங்கள் பின்பற்றுவதற்கான வழியினை மிகத் தெளிவாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.


இறை அவதாரத்திற்கு மூன்று வகையான தன்மைகள்/குணங்கள் உண்டு. ஆங்கிலத்தில் அந்த மூன்று 'O'(ஓ) எனப்படுபவை:

அ) Omniscience - எல்லாம் அறிந்தவர்
ஆ) Omnipresence - எங்கும் நிறைந்திருப்பவர்
இ) Omnipotence - எல்லாம் வல்ல சக்தி பெற்றவர்

இந்த 3 'O' (ஓ) அம்சங்களின் உண்மைகளை எல்லாம் அனுபவித்து அறிந்துகொள்வதற்கு மிக எளிதான வழிதான் பர்த்தியில் சாயி மாணவராக இடம்பெறுவது.

நான் 2-ம் ஆண்டு MBA படித்துக் கொண்டிருந்த சமயம் எனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது. நான் எனது தாயாரிடம் தொலைபேசியில் பேசியபோது அவரது உடல்நலக்குறைவை அறிந்து எனக்கு கவலை உண்டாகியது. அவரது ஆரோக்கியத்திற்காக இவ்விசயத்தை பகவானிடம் தெரிவிக்கவேண்டுமென முடிவெடுத்தேன். மாலைநேரம் பஜன்ஹாலில் நான் அமர்ந்திருந்தபோது பகவான் அவர்கள் பஜனை முடிந்து தரிசனம் அளிக்க சுற்றிவரும் சமயம் அவர் என்னைப் பார்த்ததும் என் பெயரைக் கேட்டார். பின்னர் நான் பயின்றுவந்த வகுப்பினைப்பற்றி விசாரித்தார். நான், "சுவாமி, MBA"  என்று பதில் அளித்ததும் சுவாமி அவர்கள் தனது முகத்தில் ஆச்சர்யப் பார்வையை வரவழைத்துக் கொண்டு, எனக்கு MBA படிப்பிற்கு சேர்க்கை அனுமதியளித்தது யார் என்றும் நான் அந்த படிப்பிற்குத் தகுதியான வயதைவிட குறைந்த வயதுடையவனாகத் தோற்றமளிப்பதாகவும் கூறினார். நான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சுவாமியிடம், "சுவாமி, எது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை" என்று கூறினேன்.
சுவாமி நகர்வதை நிறுத்திவிட்டு நின்று, "எப்போது?" என்று கேட்டதும் நான், "சுவாமி, இன்று" என பதில் அளித்தேன். சுவாமி அவர்கள் ஒரு கூர்ந்த பார்வையுடன் என்னை நோக்கி, "இல்லை, இன்றல்ல. அது மூன்று நாட்களுக்கு முன்னர் இருந்தது. இப்போது அவர் நலமாக இருக்கிறார்" என்றுரைத்தார். பின்னர் சிறிது கணம் நிறுத்திவிட்டு சுவாமி அவர்கள் மீண்டும், "அவர் நலமாக இருக்கிறார்" என்றார். அந்த கடைசி வார்த்தைகள் என்னை இடிபோன்று தாக்கியது, ஏனென்றால் அன்றைய தினம் காலைநேரத்தில் நான் எனது தாயாருடன் தொலைபேசியில் பேசியபோதுதான் எனது தாயார் தனது உடல்நிலை குறித்த விபரத்தை என்னிடம் கூறியிருந்தார். அந்த கணப்பொழுதில் என்னுள் ஒரு ஆச்சர்யத்தை/குதூகலத்தை ஏற்படுத்தியது. ஒரு கணம் இறைவன் என்னிடம் எனது பெயரைக் கேட்டுக்கொண்டு எனக்கு MBA படிப்பிற்கான சேர்க்கை அனுமதி கிடைத்தது பற்றி ஹாஸ்யம் (நகைச்சுவை) செய்துகொண்டும், அடுத்த கணம் அவர் நம்மால் தினமும் கண்களால் காணப்பெறும் பூதவுடலின் வடிவம் பெற்றவர் மட்டுமல்ல, அதற்கும் மேலாக உச்சபட்சநிலையிலான (மிக உயர்ந்த நிலையிலான) விழிப்புணர்வு பெற்றவர் என்பதையும் உணர்த்தினார்.


இறைவனின் எல்லாம் வல்ல சக்திபடைத்த தன்மையை எனக்கு ஒரு நிகழ்வு உணர்த்தியது. நான் 8 வயதினனாக இருந்த சமயம், ஒரு பக்தரின் வீட்டில் பகவான் அவர்களின் படத்திலிருந்து விபூதி அதிசயம் உருவாகிவந்ததை அறிந்து அங்கு சென்றிருந்தேன். எனது அறியாமையினாலும் குழந்தைத்தனத்தாலும், நான் எனது தாயாரிடம் எங்கள் வீட்டில் உள்ள சுவாமி அவர்களின் படத்திலிருந்து விபூதி அதிசயம் உருவாகி வருமா என்று கேட்டேன். அதற்கு எனது தாயார் இந்த அதிசயங்கள் எல்லாம் முழுவதும் சுவாமி அவர்களின் கருணையினாலேயே நிகழ்வது என்றும் அவற்றின்மீது நாம் யாரும் கட்டுப்பாடு செலுத்த இயலாது என்றும் கூறினார். சில நாட்களுக்குப் பின்னர் எங்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படும் வகையில் எங்கள் இல்லத்தில் உள்ள பகவான் அவர்களது படத்திலிருந்து விபூதி அதிசயம் நிகழ்ந்தது. இறைவன் தனது சின்னஞ்சிறு குழந்தையின் பிரார்த்தனையை செவிமடுத்து அவர் எல்லாம் வல்ல சக்தி பெற்றவர் என்பதையும் எங்கும் நிறைந்தவர் என்பதையும் மற்றும் எல்லாம் அறிந்தவர் என்பதையும் நிரூபித்துக் காட்டினார்.

அதேபோன்று எனது நினைவில் மிக ஆழமாக பதிந்துவிட்ட மற்றுமொரு நிகழ்வு உள்ளது. அது டிசம்பர் 2002 காலகட்டம். HDFC வங்கியில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் அனைவரும் வங்கியின் மூத்த அதிகாரிகள் குழுவுடன் பிரசாந்தி நிலையத்திற்குச் சென்றிருந்தோம். பகவான் அவர்கள் எங்களை அன்புடன் அழைத்து மந்திரின் (ஆலயத்தின்) தரைத்தள போர்டிகோவில் பேசிக்கொண்டிருந்தார். சுவாமி எங்களது கடிதங்களை பெற்றுக்கொண்டே எங்களுக்கு மிக அருகில் வந்து தனது தீர்க்கமான பார்வையை செலுத்தி என்னிடம், "ஏய் தபேலா பையா, தற்போது நீ எங்கே இருக்கிறாய்?" என்று கேட்டார். நான்"மும்பை" என்று பதில் அளித்தேன். சுவாமி அவர்கள் பின்னர் எனது சம்பளம் பற்றி, குறிப்பாக தொகை விபரங்களைக் கேட்டறிந்தார். நான் எனது சரியான சம்பளத்தொகை விபரத்தைக் கூறினேன். பகவான் அவர்களது பதில்கள் எப்போதும் கேள்விக்கு அப்பாற்பட்டவை. அதேபோன்று பகவான் அவர்களது கேள்விகளும் விடையளிக்க இயலாதவை. அந்த நேரத்தில் அத்தகைய ஒரு பதில் அளிக்க இயலாத கேள்வியை நான் சந்தித்த எனக்கான தருணம் அது. சுவாமி அவர்கள் என்னிடம், "நீ எவ்வளவு செலவு செய்கிறாய்?" எனக் கேட்டார். நான் அமைதியாக இருந்தேன். சுவாமி அவர்கள் தனது வழக்கமான குதூகலமான/குறும்புத்தனமான பதில் கூறும் தொனியில் தனதருகில் நின்றிருந்த விடுதி காப்பாளரிடம் (வார்டன்)  பையன்களாகிய நாங்கள் எப்போதும் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை மட்டுமே வெளிக்காட்டிக் கொள்கிறோமே தவிர எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை எப்போதும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்றும், ஏனெனில் நாங்கள் எங்களது சம்பளம் முழுவதையும் செலவு செய்து தீர்ப்பதில் முனைப்பாக இருக்கிறோம் என்றும் கூறினார்.


இந்த சம்பவம் ஒரு வகையில் மட்டுமல்லாமல் பல வகைகளில் எனது அறிவுக்கண்களைத் திறக்கும் திறவுகோலாக அமைந்நது. எங்கள் சம்பள விபரங்களைப் பற்றி விசாரித்தும், வரவுக்கு மீறிய செலவினங்களால் உண்டாகும் தீமைகள் பற்றி எங்களுக்கு எச்சரிக்கை அளித்தும் அருளுகின்ற இறைவன் இங்கே நிறைந்துள்ளார். பகவானின் பாதகமலங்களில் அமர்ந்து நான் கல்வி பயின்ற மாணவப்பருவ காலங்களில் சுவாமி அவர்கள் கொண்டிருந்த அதே மனோபாவத்துடன் இப்போது சுவாமி அவர்கள் என்னைக் குறிப்பிட்டுக் கூறியது எனக்கு மரண அடியாக இருந்தது. சுவாமி அவர்கள் எனக்கு எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தியது எனது தேடல்களுக்கெல்லாம் விடையாக அமைந்தது. இது இந்த புனிதமான நிறுவனத்திலிருந்து பட்டம்பெற்று வெளியேறும் ஒவ்வொரு மாணவருக்குமான அனுபவம் / பாடம் ஆகும். சுவாமி அவர்களது நிறுவனத்தில் அங்கமாக ஏற்கெனவே இருந்தவர்களும் தற்போது இருப்பவர்களும் ஒவ்வொருவரும் நமது அன்புக்குரிய சுவாமியுடன் நமக்கு கிடைக்கப்பெற்றுள்ள மிக அரிதான மற்றும் மிகவும் விரும்பத்தக்கதான பந்தத்தினை அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறோம். இந்த பந்தமானது நிறுவனத்தில் நாம் பட்டப்படிப்பு முடித்து வெளியேறிவந்ததும் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. அது ஒரு வாழ்நாள் அனுபவம் மற்றும் அதற்கும் மேலாக நிலையான, அன்புடன் போற்றி வளர்க்கவேண்டியதும் ஆகும்.


- ஜெய்சங்கர் சுந்தரம்
மாணவர் ( 2000 - 2002
நிர்வாக கல்வியியல் ( Management Studies ),
ஶ்ரீ சத்ய சாயி உயர்கல்வி நிறுவனம்,
-தற்போது Product Head & Group EVP - LAS & Gold Loan at YES Bank


மொழிபெயர்ப்பு: M.சொக்குசாமி பாலசுப்பிரமணியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக