சோதித்து தெளிவது விஞ்ஞானம்...
(பக்தரை) சோதித்து தெளிய வைப்பது மெய்ஞானம்...
டாக்டர் பகவந்தம் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி ஆவார். டாக்டர் சர்.சி.வி ராமன் (நோபல் பரிசு பெற்றவர்) அவர்களால் போற்றி பாராட்டைப் பெற்றவர்.பல சிறந்த பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அகில இந்திய விஞ்ஞான கழகத்தின் இயக்குனராக மற்றும் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஞ்ஞான ஆலோசகராகவும் பணி ஆற்றியவர். பாபாவின் அண்மையில் வசிப்பதற்காக பிற்காலத்தில் பிரசாந்திலையத்திலேயே ஒரு அறையில் தங்கினார். சாதாரண வசதிகளைக் கொண்ட அந்த அறையில் இரண்டு படுக்கை விரிப்புகளும் சில தலையணைகளும் மட்டும் தான் இருந்தன. இந்த அறையில் சில சமயம் அவரது மகன் திரு. பாலகிருஷ்ணா ( Asst. Director, National Giophysical Research Institute)அவர்களும் தங்குவதுண்டு.
🌹 கிருஷ்ணன் தந்தது கீதை ...யுத்த களத்தில்...
சாயி கிருஷ்ணன் தந்தது கீதை.. சித்ராவதிமணலில்.
அந்த காலங்களில் பகவானின் லீலைகளை அருகிலிருந்து அனுபவித்தவர்கள் பலருண்டு.சித்ராவதி நதிக் கரையில் பகவானுடன் அருகமர்ந்து அவர் கூறும் உபதேசங்களைக் கேட்டவர்கள் பாக்கியசாலிகள். அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்வாமியும் ஒரு குழுவும் சித்ராவதி ஆற்றங்கரைக்கு சென்றிருந்தனர். டாக்டர் பகவந்தம் அவர்களுடன் இருந்தார். மணலில் அமரும் இடத்தை டாக்டர் பகவந்தமே தேர்ந்தெடுக்குமாறு பாபா கூறினார். அனைவரும் பகவந்தம் சுட்டிக் காட்டிய மணல்வெளியில் அமர்ந்தனர். பாபா ஒரு சீண்டலுடன் கேலிக்குரலில் கூறினார். "பகவந்ததம் நீ சந்தேகத்தில் உள்ளாய். நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏதோ ஒன்றை ஒளித்து வைத்துவிட்டு அதை எடுத்துத் தரலாம் என நினைக்கிறாய். ஆகவேதான் உன்னையே அமரும் இடத்தை தேர்ந்தெடுக்க சொன்னேன். விஞ்ஞானிகள் தமக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் நமது சனாதன அறிவாற்றலை ஒதுக்க முயல்கின்றனர்." இதைக்கேட்ட பகவந்தம் சிறிது மன உளைச்சலுடன் கூறினார். "பாபா.அனைத்து விஞ்ஞானிகளும் அவ்வாறு நினைப்பதில்லை. அணுகுண்டின் தந்தையான ஒப்பன்ஹீமர் பகவத் கீதையை நன்கு அறிந்தவர். நானும் சமஸ்கிருத மொழி கற்றவன். ஆன்மீக நூல்களில் நாட்டம் கொண்டவன்."
இதைக்கேட்டு நகைத்த பாபா "பகவந்தம். உனக்கு பகவத்கீதை புத்தகம் வேண்டுமா. கையை நீட்டு "எனக்கூறி தன் கரத்தால் சித்ராவதி மணலை எடுத்து பகவந்தம் நீட்டிய கரத்தில் மழையென சொரிந்தார். என்ன அதிசயம்.பாபா பொழிந்த மணல் துகள்கள் பகவந்தத்தின் கையில் ஒரு புத்தகமாக உருவெடுத்தது. அது ஒரு புதிதாக தெலுங்கு மொழியில்அச்சிடப்பட்ட பகவத்கீதை புத்தகம். அதில் பதிவாளர் , வெளியீட்டாளர் பெயர் இடம்பெறவில்லை.பாபா கூறினார் "என்னால் சமஸ்கிருத மொழியில் அச்சிடப்பட்ட பகவத்கீதை புத்தகத்தை சிருஷ்டிக்க முடியும். அம்மொழியில் நீ படிக்க சிரமப்படுவாய் என்றே உன் தாய்மொழியான தெலுங்கில் புத்தகத்தை சிருஷ்டித்தேன்." பாபாவின் இந்த செயலால் பகவந்தம் தன் சந்தேகத்தை விடுத்து பாபாவிடம் சரணாகதியானார்.
🌹 அறுவைக் கூடமின்றி செவிலியர் துணையின்றி பாபா நிகழ்த்திய அற்புத ஆபரேஷன்:
பகவந்தம் கூறுகிறார். "பாபா விஞ்ஞானத்தின் எல்லைகளைக் கடந்து தமது அற்புதங்களை நிகழ்த்துபவர்... ஆனால் அவர் விஞ்ஞானத்தின் விதிகளை மீறுவதில்லை. ஒரு சமயம் பாபா நிகழ்த்திய அற்புத அறுவைச் சிகிச்சை ஒன்றை என் கண்ணால் கண்டேன். உடன் எனது மகனும் இருந்தார். அறுவைச் சிகிச்சை முடிந்த பின் ஒரு பேண்டேஜ் துணி கிடைக்குமா என பாபா கேட்டார். தொலைபேசியில் பேசி இரண்டு நிமிடங்களில் பேண்டேஜ் துணி வரவழைப்பதாக என் மகன் கூற, பாபா அதுவரை பொறுத்திருக்க இயலாது என்று கூறினார். பிறகு தன் அருட்கரத்தை சுழற்ற பேண்டேஜ் துணிச் சுருள் வந்தது. பாபா அதை வைத்து கட்டு போட்டு அறுவைச் சிகிச்சையை முடித்தார்.கத்தியும் ஊசியும் எங்கிருந்தோ வரவழைத்த பாபாவுக்கு பாண்டேஜ் துணி வரவழைக்கத் தெரியாதா.. இதுதான் பாபாவின் லீலா விநோதம்.
பகவந்தம் கூறுகிறார்.... "பகவான் பாபா நம்மில் ஒருவரைப்போல் அல்ல. அவர் விஞ்ஞான எல்லைகளை கடந்த அற்புதம். அவர் ஒரு தத்துவம். எல்லையில்லா சக்தி--தெய்வீக சக்தி."
🌻 மெய்ஞான சக்தியின் முன் விஞ்ஞானம் கைகட்டி நிற்கிறது. இறை சக்தியை எந்த சக்தியும் எதிர்க்க இயலாது. ஆனால் பரிபூரண சரணாகதியால் செய்தால் இறைவன் அருளைப் பெற இயலும். 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக