கடவுள் எதிரே நடந்தால் வனாந்தரம் பிருந்தாவனமாகிறது. வறண்ட இதயம் வற்றாத கங்கையாகிறது. ஊமை பேசுகிறது. பார்வையில்லாதவர்க்கு முகப் பார்வையும்.. பார்வையுள்ளோர்க்கு அகப் பார்வையுமே கிடைத்துவிடுகிறது! அத்தகைய பேரதிசயம் எல்லாம் சர்வசாதாரணமாக கடவுள் சத்ய சாயியால் மட்டுமே நிகழ்கிறது.. இந்த நிகழ்வு இன்னமும் தொடர்கிறது.. அந்த அற்புத வெளிச்சங்களின் ஓர் சிறு சூரியக் கீற்று இதோ...
கரூரைச் சேர்ந்த பாலபட்டாபி என்னும் ஒரு உன்னதமான பக்தரின் அழைப்பின் பெயரில் 1947ல் சென்னை மாகாணத்தில் கரூர் என்னும் டவுனிற்கு சுவாமி விஜயம் செய்திருந்தார். அப்போது சுவாமிக்கு 21 வயது. கடவுளின் காலடி படாத இடமே இல்லை. கொடுத்து வைத்திருந்தது கரூர். கருவில் திருவளிக்கும் சுவாமி கரூருக்கு விஜயம் செய்திருந்தது அந்த மக்களின் நற்பேறே!
தினமும் கொண்டாட்டம், விழாக்கோலம் பூண்டிருந்தது கரூர்.ஜே ஜே என கூட்டம். தரிசித்து பரவசப்படவே அந்தக் கூட்டம் திரண்டது. தினமும் அலையடித்து ஓய்ந்து போகும் மனிதப் படகுகளுக்கு கலங்கரை விளக்கத்தால் எப்படி ஒரு பேரமைதி கிடைக்குமோ அப்படி இருந்தது சுவாமியை தரிசிப்பது!
அது 25 அக்டோபர் 1947.
ராஜகோபால் செட்டியார் இல்லத்தில் சுவாமியின் விஜயம்.
அது இறைவனின் தரிசனம்.. பரவசங்களுக்கு விலைபேசாத இலவச தரிசனம்... ஒவ்வொரு நாளும் பாபாவின் தரிசனம் மற்றும் உரையை கேட்க மக்கள் திரளாக கூடி அமர்ந்திருக்க, பாபா இங்குமங்கும் உலாவிக் கொண்டே பேசுவார். அவர் அப்படி பேசுவது சுவாசத்திற்கும் இதயத் துடிப்புக்குமான சம்மந்தமாகவே திகழ்ந்தது.
துவாபரத்தில் அர்ஜுனனுக்கு மட்டுமே அளித்த உபதேசம்.. கலியில் எல்லோர்க்குமாய் பேதமின்றி சுவாமி கீதை நிகழ்த்தியது அவர் பெருங்கருணைக்கு ஓர் நற்சான்றே!
ஒரு நாள் ஒரு ஏழை கிராமத்து பெண்மணி தனது ஏழு வயது பெண் குழந்தை (பிறவி ஊமை) உடன் வந்திருந்தார்.
மனம் கனத்துப் போக.. தனது பிள்ளையின் இடர் எனும் தலைமேல் விழப்பட்ட இடியுடன் வாழ்ந்து வந்த அந்தத் தாய் சுவாமியை தரிசிக்க வந்திருந்தாள்.
அம்மா என ஓர் வார்த்தை கூட அழைக்க முடியாத குழந்தையின் நிலையை நிதம் உணரும் தாய் .. தனது தாய்மைப் பேற்றை கூட மறந்து இன்னல் அடைந்தாள் என்றால் அதில் ஆச்சர்யமே இல்லை..
அம்மாவானாலும் அம்மா என அழைக்க வாய்ப்பில்லா அதற்கான வாயில்லா குழந்தையோடு வாயிலில் வருகிறாள்.
அன்று பாபா, அந்த குழந்தையின் அருகில் வந்து, "உன் பெயர் என்ன"? என வினவ, அவளின் தாயோ, அவள் பேச மாட்டாள் என்கிறார்! ஆனால் அதை பொருட்படுத்தாமல் பகவான் பெண்ணை கேள்விகள் கேட்டு கொண்டேயிருந்தார். "ஸ்வாமி" என உரக்கக் கூவிய அவள், எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறிவிட்டாள்!!
திரண்டிருந்த கூட்டம் "சத்ய சாயி பாபா கி ஜெய்" என கோஷம் இட்டது வானையே பிளந்தது.. அந்த இடமே அதி அற்புத தெய்வீக அதிர்வலைகளால் நிரம்பி இருந்தது..
அந்த ஊமை குழந்தையைப் பெற்றெடுத்த தாயின் மனம் பரவச முகட்டில் இறைவன் சத்ய சாயியை உரக்க அழைத்து நன்றி நன்றி என மொழிந்தது.. அந்த ஈர மொழி கண்ணீராய் வழிந்தது...
தெய்வீக அன்பு பேசும் திறனை கொடுத்து விட்டது!!
அதை கடவுளால் மட்டுமே தரமுடியும்.
கடவுள் தந்தார்.
கடவுளின் கருணை எல்லை இல்லாதது..
அவரின் எல்லைக்கு உள்ளே தான் எல்லா ஜீவன்களும்..
ஆதாரம்: Nectarine Leelas of Bhagawan Sri Sathya Sai Baba . By R. Balapattabi
🌻 கடவுளால் நிகழ்த்த முடியாதது எதுவுமில்லை. சுவாமியால் ஆற்றமுடியாத அற்புதம் ஏதுமில்லை. மகான்களாலும் இயலாத கர்மாவையே மாற்றி அமைக்கும் பேரதிசயம் இறைவன் சத்ய சாயியால் மட்டுமே முடியும். இவை எல்லாம் பார்ப்பதற்கும்/ படிப்பதெற்கும்/நினைத்துப் பார்ப்பதற்கும் நமக்கே அதிசயமாக தோன்றுகிறதே அன்றி சுவாமிக்கு எப்போதும் தான் நிகழ்த்தும் பேரன்பு ததும்பும் பேரற்புத செயல்கள் எல்லாம் சர்வ சாதாரண விஷயமே!!!🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக