105 வயதான திருமதி.பால திரிபுர சுந்தரி (சுந்தரம்மா) அவர்களுக்கு, ஷீரடி சாயி,சத்ய சாயி என இரண்டு அவதாரப்புருஷர்களையும் வணங்கும் பாக்கியம் கிடைத்திருந்தது!! 2004ம் வருடம் அக்டோபர் மாதம், தசராவின் போது, தனது 106 வயதை நிறைவு செய்யும் அவர், தன்னுடைய ஆத்மார்த்தமான அனுபவங்களை, விவரிக்கிறார்...
"எனக்கு அப்போது 13 வயது. என் கணவர் மன்மாட் இரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தார். அவர் ஷீரடி சாய்பாபாவின் பக்தராவார். எனக்கு 1908ம் வருடம், என்னுடைய 13 வயதில், முதன்முதலில் பாபாவின் தரிசனம் கிடைத்தது. ஒருமுறை பாபா எனக்கு சிவலிங்கம் ஒன்றை, வெள்ளிப் பேழையில் வைத்து, கொடுத்தார். அப்பேழையும் அந்த வடிவிலேயே இருந்தது. பாபா எனக்கு அவருடைய பாதுகைகளையும் தந்து அருளினார்.
1954 ம் ஆண்டு, நம்பள்ளி'யில்(Nampalli) இருந்த போது எனது கணவர் மரணமடைந்தார். சில வருடங்களை ஹைதராபாத்திலும், சிராலாவிலும் கழித்த நான், பின் ஷீரடியில் நிரந்தரமாகத் தங்க விரும்பினேன். ஆயினும் எனது நண்பர்களும், உறவினர்களும் வற்புறுத்தியதால், நான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களைக் காண, 1965ம் வருட வாக்கில் பிரசாந்தி நிலையத்திற்கு வந்தேன். நான், அவர் ஷீரடி பாபாவின் மறு அவதாரம் என்பதை நம்ப மறுத்தேன்.அந்த நாட்களில்...
நாங்கள் சித்ராவதி நதியில் நீராடிவிட்டு, தண்ணீர் எடுத்து கொண்டு வருவோம். அப்போதெல்லாம் நான் என் சக பக்தர்களிடம் "என்னால் இந்த காட்டில் தங்க முடியாது.இந்த பாபா, என்னுடைய பாபா இல்லை.ஆகவே நான் ஷீரடிக்கு செல்லவே விரும்புகிறேன்", என்று கூறி வந்தேன்.
அவ்வாறு ஒருநாள் சித்ராவதியில் இருந்து வந்த பின், சமைத்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது அங்கு வந்த சுவாமி, "உனக்கு இங்கு தங்க விருப்பம் இல்லை எனத் தெரிகிறதே," என்றார். நானும் சிறிது தயக்கத்துடன், "ஆம் சுவாமி, ஷீரடி செல்ல நினைக்கிறேன்", என பதிலுரைத்தேன். "நான் இங்கு இருக்கையில், நீ அங்கே என்ன செய்வாய்? நீ இப்பொழுது காடு எனக் கூறும் இவ்விடம் பெரிய நகரமாக மாறப்போவதை நீயே பார்க்க போகிறாய்" என்றார். உடனே நான், "எனது பாபா அங்கு தான் இருக்கிறார். ஆகவே நான் செல்ல வேண்டும்", என்று துணிந்து கூறி விட்டேன்!!
"அப்படியா!! என்னைப் பார்", என்று பாபா கூற, நிமிர்ந்து பார்த்தேன். அங்கே இரத்தமும், சதையுமாக ஸ்ரீ ஷீரடி சாய்பாபா நிற்பதைக் கண்டு, "என் பாபா!!', என்று கதறிய வண்ணம் அவரது பாதங்களில் விழுந்து வணங்கினேன்.பின் நிமிர்ந்து பார்க்கிறேன், அங்கே நின்றது, சாக்ஷாத் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களே தான்!!
(இதுவரை நான் ஸ்ரீ சத்ய சாய்பாபா, என்னுடைய பாபா இல்லை என்று நினைத்ததால்,பாத நமஸ்காரம் எடுத்துக்கொண்டது இல்லை. சுவாமி என் முன் நிற்கும் போது, சக பகதர்கள் பாதங்களை நமஸ்கரிக்கச் சொன்ன போதும் நான் ஒருபோதும் வணங்கியதில்லை!!)
"எப்போது ஷீரடிக்கு கிளம்புகிறாய்?" என்று குறும்பு சிரிப்புடன்,சுவாமி கேட்க, "எனது பாபா இங்கே இருக்கிறார், நான் எங்கும் செல்லமாட்டேன், இங்கேயே தான் இருப்பேன், என பதிலுரைத்தேன்.
பின் ஒருநாள், சுவாமி என்னிடம், 'நான் உனக்கு அளித்த லிங்கம் எங்கே? அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விடு', என்றார். நான் ஆச்சரியத்துடன், 'நீங்கள் என்னிடம் லிங்கம் எதுவும் தரவில்லையே', என்றேன்.
சுவாமி, ஷீரடியில் எனக்கு வெள்ளிப் பேழையில் லிங்கத்தை வைத்துக் கொடுத்த முழு சம்பவத்தையும் விவரித்தார். "பாதுகைகள் உன்னிடமே இருக்கட்டும். லிங்கத்தை திருப்பிக் கொடுத்துவிடு", என்றார்.நான் அந்த பெட்டியைத் தந்தபோது, சுவாமி லிங்கத்தை எடுத்து கொண்டு, பெட்டியை என்னிடமே திருப்பி தந்துவிட்டார்.
லிங்கத்தை தன் கைகளில் எடுத்து வைத்தவுடன், அது அப்படியே மறைந்து போனது!! சில நாட்கள் கழித்து,என்னிடம் இருந்த வெள்ளி பூஜை பொருட்கள்,அந்த வெள்ளிப்பேழை உட்பட, அனைத்தையும், சுவாமியிடமே அனுப்பிவிட்டேன். பாதுகைகள் மட்டும் என்னிடமே இருக்கின்றன.
என்னுடைய வயதைக் கருத்தில் கொண்டு, சுவாமி மிகக் கருணையுடன், கிழக்கு பிரசாந்தியில் உள்ள B2 அறையில் தங்கிக் கொள்ள ஒதுக்கிக் கொடுத்தார். ஏனெனில் அங்கு உள்ள வராந்தாவில் இருந்தே என்னால் சுவாமியை தரிசிக்க முடியும்!!!நான் இன்றளவும் அங்கேயே வசித்து வருகிறேன்.
- திருமதி.V.பால திரிபுர சுந்தரி என்கிற சுந்தரம்மா
தனது இறுதி மூச்சு வரை(106 வயது) தனக்கு கிடைத்த ஆழமான அனுபவத்தை இதயத்தில் தாங்கிப் பிடித்து சத்யசாயியே ஷிர்டி சாயி என நேரில் அனுபவித்து அவரின் பாதத்திலேயே இரண்டற கலந்த இத்தகைய பக்தர்கள் தான் இரு சாயியும் ஒன்றே என்பதற்கான சாட்சியம். அந்த பக்தியில் சுயநலம் இல்லை.. அந்த பக்தியில் பயம் இல்லை.. இல்லை எனில் மிக தைரியமாக சுவாமியிடம் தெரிவித்த பிறகே இவர்களுக்கு ஷிர்டி சாயி தரிசனமே கிடைத்தது.
சத்தியமாய் உணர வேண்டுமாயின் ஷிர்டி சாயியிடம் உண்மையாக சரணடைந்தவர்கள் மட்டுமே சத்ய சாயியிடம் ஐக்கியமாவார்கள். பிளாஸ்டிக் ரோஜாக்களிடம் எப்படி வாசனையை எதிர்பார்க்க முடியும்?
ஆதாரம்: As narrated to Mr. B. Parvatala Rao at Prasanthi Nilayam on 31.07.2004
தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக