தலைப்பு

திங்கள், 28 டிசம்பர், 2020

பாபாவை தரிசிக்க விழைந்த கைதிகள்... சிறைக்கே சென்று தரிசனம் கொடுத்த பாபா!

சிறைக்கும் கடவுளர்களுக்கும் யுக யுகமாய் தொடர்பு உண்டு போலும். திரேதா யுகத்தில் சீதா தேவியை சிறைமீட்ட ராமன், துவாபர யுகத்தில்  சிறையிலேயே பிறந்த கிருஷ்ணன்,  தேவர்களை சிறைமீட்ட குன்றுரை குமரன். இந்த வகையில் சர்வ தேவதா ஸ்வரூபமான நமது பாபா எவ்வாறு கருணயோடு  சிறைக்கே சென்று கைதிகளை ஆசீர்வதித்தார் என்பதையும்  காண்போம்... 

பாம்பே ஸ்ரீநிவாசன். சாயியின் பரம பக்தர். தொண்டுள்ளம் கொண்டவர்.  முதன் முதலில் தொடங்கப்பட்ட சேவாதள் தொண்டர் குழுவில் இணைந்து, பழம்பெரும் சேவாதள் ஆக மிளிர்ந்தவர். இவர் கூறும் நிகழ்வுகளில் பாபாவின் கருணை பொங்கும்  பரிமாணத்தைக் கண்டு கரம் குவிப்போம். 


🌹 பம்பாய் திரு மாளிகை தர்மக்ஷேத்ரா துவங்கியபோது:

பம்பாயில் பகவானின் திருமாளிகை தர்மக்ஷேத்ரா 1968ல் பகவானின் திருக் கரத்தால் துவக்கி வைக்கப் பட்டது. இத்துடன் பாபா அவர்கள் நிறுவனத்தின் மும் மணிகளான ஆன்மீக, சேவை மற்றும் கல்விப் பிரிவுகளையும்  அங்கு துவக்கி வைத்தார். நான் அப்போதுதான் முதன் முதலாக பாபாவை தரிசனம் செய்தேன். அப்போது 28பேர் கொண்ட சேவாதள் பிரிவு உண்டாக்கப்பட்டு அதில் நானும் இடம் பெற்றேன். பாபா தமது திருக்கரத்தால் ஒவ்வொரு சேவாதள தொண்டருக்கும் அடையாள கழுத்துப் பட்டியும், இலச்சினையையும் ( scarf and coin) அளித்து சிறப்பித்தார்.

அப்போது பாபா,  சேவை எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டுமென்ற
கோட்பாடுகளை அறிவித்தார்.


"ஒருவரை திருப்தி செய்யவோ, இயந்திர கதியிலோ செய்யும் சேவை பலன் தராது. அன்புடனும், சத்சங்க உணர்வுடன் ஆற்றப்படும் சேவை ஒருவரை பகவானிடம் அழைத்துச் செல்லும். நீ ஆற்றும் சேவையும், அதை செயல்படுத்தும் பாங்கும்  சேவையைப் பெறுபவர்களை ஆன்மீகப் பாதையில் பயணிக்க ஊக்கப் படுத்துவதாக இருக்கவேண்டும். அவர்கள் பகவானைப் பற்றி( சாய்ராம் தான் என்ற கட்டாயமில்லை) சிந்தனை பெற்று, தமது வாழ்வில் மாற்றம் அடைய வேண்டும். உதாரணமாக நாராயணசேவையை செயல்படுத்தும் போது, கடமைக்காக உணவை அளித்துவிட்டு வந்துவிடாமல், இன்முகத்துடனும், கனிவுடனும் சில சொற்கள் கூறி பரிமாறினால், அவர்கள் மனதில் நல் மாற்றங்கள் முகிழ ஆரம்பிக்கும்.இதுவே  சேவையின் குறிக்கோளாகும். இந்த தெய்வீக வழிகாட்டுதல்கள் என் மனதில் ஆழமாக பதிந்து, அதன்படி செயலாற்ற ஆர்வம் ஏற்பட்டது. பகவானின் திருப்பணிகளில் ஈடுபாட்டுடன் பங்கு கொண்டேன். சில காலம் கழித்து தாணாவிலுள்ள சமிதியின் கன்வீனராக பொறுப்பேற்க நேர்ந்தது. அப்போது   பஜன் மற்றும் இதர வழக்கமான சேவை செயல்பாடுகளைத் தாண்டி வேறு தனித்துவமான சேவைகளை மேற்கொண்டு, சக மனிதர்கள் வாழ்வில் ஆன்மீக மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற உந்துதல் பாபாவின் அருளால் ஏற்பட்டது. அப்போது சிந்தனையில் உதித்தவை கீழ்க்கண்ட விஷயங்கள்.


🌹இதயச் சிறையில் இறைவன்குடிபுக- தன்னலமற்ற சேவை ஒன்றே வழி:

தானேவில் தனித்துவமான சேவைக்கு வாய்ப்பு எங்குள்ளது என தேடியதில், இரண்டு இடங்கள் புலப்பட்டன. அதில் ஒன்று பிரபல மருத்ததுவமனை. மற்றொன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய மத்திய சிறைச்சாலை. 

தானே சிறைச்சாலை

மருத்துவ மனையில் மாதாந்திர பஜன்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிகழ ஆரம்பித்தன. சிறைச்சாலையில் சாயி பஜன் நடத்த , சிறையின் தலைமை அதிகாரியை அணுகினோம். எங்களின் கோரிக்கையை அவர் லேசாக எடுத்துக் கொண்டு , தட்டிக் கழிக்கும் முறையில் எங்களை அதைரியப்படுத்தி கூறினார்  "உங்களுக்கு தெரியாது. இந்த கைதிகள் மோசமான குற்றங்கள் செய்த கொடுந்தொழிலர். வேறு இடம் பாருங்கள் . உங்களுக்கு புண்ணியமாவது கிட்டும்" இதைக்கேட்டு மனம் தளராமல் , எங்கள் கோரிக்கையிலேயே உறுதியாய் நின்றதால், அவர் இறங்கி வந்து "சரி, மாதாந்திர பஜனுக்கு அனுமதிக்கிறேன்" என்றார். மகிழ்வுடன் ஏற்பாடுகளைத் தொடங்கினோம். 

ஆரம்ப தினத்தன்று, பகவானின் திரு உருவப் படத்தை அலங்கரித்து, சிறை வளாகத்தில் எங்களுக்கு ஒதுக்கப் பட்டிருந்த அரங்கத்தில் வைத்தோம். பஜன் குழுவினர் மேடையில் அமர்ந்தனர். குறித்த நேரத்தில் ஓங்காரம் ஓதியபின் பஜன் துவக்கப்பட்டது. மேடையில் நாங்கள், பகவான் ( ஓம்காரம் ஜெபிக்கும்போதே ஆவாஹனம் ஆகிவிடுவார் அல்லவா) தவிர அந்த அரங்கில் ஒரு  ஈ காக்கை கூட எட்டிப் பார்க்கவில்லை. பஜன் முடிந்து மங்கள ஹாரத்திவரை இதே நிலைமைதான். இதுவும் பகவான் சித்தம் என்று மனம் தெளிந்தோம். 

அடுத்தமாத பஜன் போது, சில தலைகள் எட்டிப் பார்த்தன. அதை அடுத்த மாதங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரடைந்து,
பின்னர் அதிக அளவில் பங்கேற்க ஆரம்பித்தனர். முதலில்  அனைவரும், கை தட்டலுடன் பாடல்களை ரசிக்க ஆரம்பித்தனர். பின்னர் கைதிகளில் சிலர் பஜன் பாடல்கள் கற்க ஆசைப்படவே, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. சில மாதங்களில் கைதிகள் சிலர் முன்னணி பாடகர்களாக மாறினர். நாங்கள் அனைவரும் பஜன் நிகழ்வின்போது, பின் வரிசையில்  அமர்ந்து உடன் பாடுவோராக மாறினோம். பகவான் நாமா மெல்ல அவர்களின் மனதில் நுழைந்து அவர்களை  முன்நோக்கி அழைத்துச் சென்றது போலும். "மெல்ல எழுந்த ஹரி என்ற பேரரரவம் உள்ளம் புகுந்து உகந்தேலோ எம்பாவாய்" என்ற சூடிக் கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாள் நாச்சியாரின் பாசுரம் நினைவுக்கு வருகிறதல்லவா?


🌹 தீனர்களை நோக்கி... தீனரட்சக பகவான்:

இப்படியே மாதங்கள் உருண்டன. சிறைச்சாலையுள்ளோரின் மன இருள் மங்கி, ஆத்மஒளி சுடர்விட ஆரம்பித்தது. "தமசோமா ஜோதிர் கமக" என்ற மாபெரும் வாக்கியத்தின் பொருள் விளங்க ஆரம்பித்தது. இந்நிலையில்  பாபா தர்மக்ஷேத்ரம் வரப்போவதாக செய்தி வரவே அதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் முற்பட்டோம். 

இதனால் அந்தமாத சிறைச்சாலை பஜன் நிகழ்வுகளை, அங்குள்ள கைதிகளின் வசம் ஒப்படைத்து அவர்களே நடத்தும்படி கேட்டுக்கொண்டோம்.
இதைக் கேட்ட பல கைதிகள், பாபாவை தரிசனம் செய்ய மிகவும் ஆசைப் பட்டனர். நாங்களும் அதைக் கேட்டு மகிழ்ந்து, அவர்களை வேன்களில் தர்மக்ஷேத்ரா அழைத்து சென்று, பாபாவின் தரிசனம் கிட்ட ஏற்பாடு செய்வதாகக் கூறினோம். ஆனால் ஜெயில் மேலதிகாரி இதற்கு சம்மதிக்கவில்லை. அவர்களை வெளியில் அழைத்துச் செல்வது உசிதமல்ல என்றுகூறி மறுத்துவிட்டார் மேலும் அவர் ஏளனமாக என்னைநோக்கி கூறியதாவது... "ஏன் நீங்கள் உங்கள் பாபாவை இங்கு அழைத்துவந்து சிறைக் கைதிகளுக்கு தரிசனம் தரும்படி கூறக்கூடாது" அவர் வாயிலாக பாபா எங்களுக்கு இட்ட கட்டளை இதுவோ? பகவான்மீது பாரத்தைப் போட்டு, பகவானை தாணா சிறைக்கு அழைத்துவர மாவட்ட , மாநில, அகில இந்திய சாயி நிறுவனத்தின் தலைமையகம் வரை இக் கோரிக்கை  கொண்டு செல்லப்பட்டு  பிறகு கடைசியாக உயர்திரு. இந்துலால் ஷா அதை பகவானின் திருச் செவியில் கொண்டு சேர்த்தார். பகவான் ஒன்றும் கூறாமல் அதை கேட்டுக் கொண்டார்.


🌹 ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து பஜன் பாடல்கள் பாடிய பாபா:

பகவான் தர்மக்ஷேத்ரா வருகை தந்தார். அங்கிருந்து  உல்லாஸ் நகருக்கு  ஒரு நிகழ்ச்சிக்காக சென்றார். நிகழ்ச்சி முடிவில் ஹாரத்தியை ஏற்க மேடை ஏறுகையில்
திரு. இந்துலால் ஷாவிடம் "இந்துபாய்
திரும்பும் போது தானே சிறைச் சாலைக்கு சென்றுவிட்டு போகலாம்"
என்றார். 

அருகிலிருந்து இதைக்கேட்ட எனக்கு பதைபதைப்போடு கூடிய பொங்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் இத் தகவலை, பாபா சிறைவளாகம் வரும் முன் யாராவது சென்று சொல்லவேண்டும். கைதிகளை கூட்டி பாபா தரிசனம்பெற ஒழுங்கு படுத்த வேண்டும். உல்லாஸ் நகரிலிருந்து தாணா நீண்ட தூரம். தகுந்த விரைவான போக்குவரத்தோ, செல் போன்களோ இல்லாத காலம். கையைப் பிசைந்து யோசித்தேன். ஆபத்பாந்தவராய் ஒரு தொண்டர் வந்தார். ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற அவர் தமது மோட்டார் சைகிலில், அதி விரைவாக பயணித்து தாணா சிறைக்கு சென்றுகூற, சகல ஏற்பாடுகளும் உடனடியாக செய்யப்பட்டது. பாபா சிறை வளாகத்தை அடைந்த சமயத்தில் பஜன் துவக்கப்பட்டு நடைபெற ஆரம்பித்தது. காரிலிருந்து இறங்கிய கருணாமூர்த்தி பாபா சிறை வளாகத்திற்குள் வரவேற்கப் பட்டார். அங்கு அமர்ந்திருந்த கைதிகளின் வரிசைக்கு மத்தியில் தமது பொன்னடிகளால் நடந்து , கண் அசைத்து, முறுவல் பூத்து, கண்டவர் உள்ளம் கொள்ளை கொள்ள தரிசனக் காட்சி தந்து அருளினார். துயர் சிறையில் இருந்த கைதிகளின் மனச் சிறையில் பாபா அடைபட்டார்.  பிறகு மேடை ஏறிய பாபா, மைக் வேண்டுமென கேட்டார். அவரது சுந்தரக் குரலில் கந்தர்வ கானமாக ஐந்து பஜன்கள் பாடி, நிறைவாக சுப்ரம்மண்யமும் பாடி முடித்தார்.

கண்டவர் மயங்க, கேட்பவர் கிறங்க, கண்களில் நீர் சொரிய , சிறைச்சாலை அறச் சாலையாக மாறியது. பிரியாவிடையுடன் பாபா தானே சிறை வளாகத்திலிருந்து கிளம்பி தர்மக்ஷேத்ரா வந்தடைந்தார். பாபாவிடமிருந்து இந்நிகழ்வு பற்றிய இன்சொற்கள் ஏதேனும் கிட்டாதா என ஏங்கியபடி காத்திருந்தோம். கடைசியில் பாபா அருகே நானும் மற்றொரு சேவாதள தொண்டரும் நிற்கும் சந்தர்ப்பம் கிட்டியது. பாபா என்னை நோக்கி "நான் ஏன் தாணா சிறை வளாகம் வந்தேன் தெரியுமா" எனக் கேட்க , நான் "ஸ்வாமி உங்கள் தரிசனமும்  அனுக்கிரகமும் சிறைக் கைதிகளுக்கு அளிக்கத்தான்" என்றேன். அதை மறுத்து பாபா கூறிய பதில் எனக்கு மட்டுமல்ல அனைத்து பாபா பக்தர்களுக்கும் பொருந்தும்.
"இல்லை பங்காரு, உனக்காக , உன் சேவைக்காக, உன் விடாமுயற்சியான பிரார்த்தனையின் விளைவாக."


ஆதாரம்: Shri.Bombay Srinivasan, Personal Narration

தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


🌻 சாய்ராம். சேவையின் அத்தனை பரிமாணங்களையும் பாபாவின் அற்புத விளக்கத்தில் கேட்டோம்.
அதை அடி ஒற்றி சேவை ஆற்றிய
அன்புத் தொண்டர் பெற்ற பாபாவின் அனுக்கிரகத்தையும் பார்த்தோம்.
இதை நினைவில் ஏற்றி சேவை புரிவோம். உயர்வடைவோம். ஜெய் சாய்ராம். 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக