தலைப்பு

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

உலகப் பிரசித்தி பெற்ற கண் மருத்துவரின் கவலை தீர்த்த சாயி கண்ணன்!

 

Dr. S.S Badrinath - President & Chairman Emeritus – Medical Research Foundation & 
Founder – The Sankara Nethralaya Group, one of India's largest charitable eye hospitals.

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி என்பவர் மகத்துவத்தின் மருத்துவம்.. அவரே கணம்தோறும் ஆற்றுகிறார் மருத்துவத்தின் மகத்துவம் என்பதை பிரபல கண்மருத்துவர் பத்ரிநாத் உணர்ந்த மகிமைப் பதிவு இதோ... 

அமெரிக்கன் நியூஸ்வீக் பத்திரிகையால் விருது பெறப்பட்ட 2020க்கான  உலகின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்று,  மேலும் இதே ஆண்டில் உலகின் தலைசிறந்த நான்கு கண் மருத்துவமனைகளில்  ஒன்று என அங்கீகரிக்கப்பட்டு பல விருதுகளையும் பெற்ற சங்கர நேத்ராலயா வின் நிறுவனர் தான் மதிப்பிற்குரிய டாக்டர் S.S பத்ரிநாத்.  இவர் வாங்கிய விருதுகளை பட்டியலிடவே ஒரு பக்கம் போதாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர் பி.சி.ராய் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கிறார்.  இத்தனை சிறப்புக்குரிய ஒரு சிறந்த டாக்டரின் சத்யசாயி அனுபவத்தை தான் இன்று பார்க்க போகிறோம்.

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களுடனான தம்முடைய தெய்வீக அனுபவங்களை டாக்டர் பத்திரிநாத் இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

என் மைத்துனி, ஸ்ரீமதி இந்திரா பார்த்தசாரதி பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் தீவிர பக்தராக இருந்தார். பல பாபா பஜன்களை இனிமையாகப் பாடுவார். அப்போதெல்லாம் நான் பகவானிடம் அவ்வளவாக ஈர்க்கபடவில்லை. நான் சங்கர நேத்ராலயாவில் Vitreo Retinal fellowship பயிற்சிக்காக வந்திருந்த டாக்டர் தீபக் கோஸ்லா மூலம் 1984 ஆம் ஆண்டு திரும்பவும் பாபாவைப் பற்றி அறிய நேர்ந்தது.


ஒவ்வொரு வார இறுதியிலும் அவர் பஸ் மூலம் புட்டபர்த்தி சென்று வருவார். பகவான் மீது டாக்டர் தீபக் கோஸ்லாவிற்கு இவ்வளவு ஆர்வமா! இவ்வளவு பக்தியா! என்று நான் வியப்பதுண்டு. இரண்டு வருடங்கள் உருண்டோடின. பகவான் அவருக்கு வேலை நியமனம் கொடுத்ததோடு, தமது அதி நவீன சிறப்பு மருத்துவமனையில், கண் சிகிச்சை துறையினை ஏற்படுத்தும் பொறுப்பினை ஒப்படைத்தார். அந்த மருத்துவமனை ஆரம்பித்து ஒருவருடம் ஆகிய பின்னர் நான் சுவாமியை சந்திக்கும் அந்த இனிய சந்திப்பு நிகழ்ந்தது. டாக்டர் தீபக் கோஸ்லா, எனது ஆலோசனையை பெற நான் ஒயிட்பீல்டு வர வேண்டும் என விரும்பி அழைப்பு விடுத்திருந்தார். 

அதற்காக பகவான்சத்ய சாய் பாபாவிடம் அனுமதி பெற்றிருந்தார்.1988 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி காலையில் நான் பிருந்தாவனம் சென்றேன். ஒயிட் ஃபீல்டில் உள்ள பகவானின் இல்லத்திற்கு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அது எளிமையாகவும் கம்பீரமாகவும் தோற்றமளித்தது. எங்கும் மாசுமறுவற்ற தூய்மையும், பக்தியையும் விசேஷ போற்றுதலையும் தூண்டும் வகையில் அந்த இடம் இருந்தது. சில நிமிடங்களுக்குப் பின்  பகவான் மென்மையாக அழகாக நடந்து அந்த அறைக்குள் நுழைந்தார். தமது இரு கைகளையும் தூக்கி அன்புடன் எங்களை ஆசீர்வதித்தார்.


மேலும் எங்களை நோக்கி தெளிவான குரலில், "இந்த கண் சிகிச்சை துறை அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். எவரும் வசதிகள் குறைவு என்ற காரணத்திற்காக திருப்பி அனுப்பப்படக் கூடாது." என திட்டவட்டமாக கூறினார். "எந்த மருத்துவமனைக்கும் இது இரண்டாம் பட்சமாக இல்லாமல் முதல் தரமாக இருக்க வேண்டும்." என்று ஆலோசனை கூறினார்.

அவர் சேவையில் முதல் தரத்தை விரும்பினார். அன்றைய தினம் என்னை பொருத்தவரை மிகவும் விசேஷமான நாளாகும். செப்டம்பர் 6 ஆம் தேதி மிகச் சிறப்பு வாய்ந்த நாள். சங்கர நேத்ராலயா ஆரம்பித்த தினம் என்பது மட்டுமல்ல, முதன் முதலாக நான் பகவானின் ஸ்பர்சனம், சம்பாசனம், ஆசிகள் வாய்க்கப்பெற்ற அதிர்ஷ்ட தினம். 


நான் சாஷ்டாங்கமாக வணங்கி அவரது ஆசியைப் பெற முயன்ற போது, அவர் மென்மையாக என் கையைப் பிடித்து கூறினார், "பரவாயில்லை! நீ அப்படியே நின்றவாறு நமஸ்காரம் எடுத்துக்கொள். ஏனென்றால் உன் முதுகில் வலி இருப்பது எனக்கு தெரியும்" என்றார். 

நான் திகைத்துப் போனேன். என் முதுகில் அவ்வப்போது ஒரு விதமான கடுமையான வலி ஏற்படுவது உண்டு. நான்  நரம்பு துறை சம்பந்தமான டாக்டர்களிடம் ஆலோசனையும் பரிசோதனையும் மேற்கொண்டு, மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் எனக்கு அந்த வலி இருந்துகொண்டே இருந்தது. இது எப்படி இவருக்கு தெரியும் என்று நான் திகைத்து நின்றேன். அப்பொழுது, நான் சிறிதும்  எதிர்பாராதபோது, பகவான் என் அருகில் வந்து நான் முதுகில் அதிக வலியை உணரும் இடத்தில் தன் கையை வைத்தார். பின் மென்மையாக அந்த இடத்தை வெகு நேரம் தடவிக் கொடுத்தார். அதன்பின் எனக்கு அந்த இடத்தில் வலி என்பது இல்லாமல் போயிற்று. கடந்த 32 வருடங்களில் ஒரு நாளும் எனக்கு அந்த இடத்தில் வலி தோன்றியதே இல்லை!

அதற்காக நான் எந்த மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. என் இரு கண்களிலும் ஆனந்தமாக கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. என் வாழ்வில் என்றுமே மறக்கமுடியாத தூய அன்பை அன்று நான் அனுபவித்தேன். 

அத்தகைய தெய்வீக ஆனந்தத்தை முன்னர் எப்போதும் நான் அனுபவித்தது கிடையாது. என் சாயி அனுபவங்கள் பலப்பல. வருங்காலத்தில் அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்." என்றார் டாக்டர் பத்ரிநாத். 

 கண்ணுக்கு கண்ணான நம் பகவான்!
 கண்ணின் இமையாய் காப்பான் நம் பகவான்!
 கண்ணீரை மாற்றும் சுடர் ஒளி!
மனக்கவலையை அகற்றும் பேரொளி!

ஜெய் சாய்ராம்!

ஆதாரம்: DIVINE GRACE - Sathya Sai Baba (THE INDIA TODAY GROUP)
நன்றி: S. Ramesh, Ex-Convenor, Salem Samithi


🌻 ஜீவராசிகளின் இதயக்கோவிலில் குடியிருக்கும் சத்ய சாயி பரம்பொருள் அறியாததேதும் இல்லை .. அவரே வலி நிவாரணி.. அவரே ஒளி நாராயணி என உணர்ந்து அவரின் சத்திய நிரந்தர பாதத்தை சரணடைவோமாக! 🌻

1 கருத்து: