தலைப்பு

வியாழன், 9 மே, 2019

கரு காக்கும் நாயகி!


மருந்தீச சாயியின் காப்பு காப்பியத்தில் ஒரு கர்ப்பிணியின் கதை பார்ப்போம்.

கௌசல்யா ராணி ராகவனுக்கு ஒரு சமயம் ரத்தப்போக்கு மிக அதிகமாகவும், விடாமலும் ஏற்பட்டது. பரிட்சை செய்ததில், ரத்தத்தை உறைய வைக்கும் பிளேட்லெட் அணுக்கள், இருக்க வேண்டிய அளவில் பத்திலொரு பங்குகூட இல்லை எனத் தெரிந்தது. "உடனே ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யணும். ஸ்ப்ளீன எடுத்து ஆபரேஷன் செய்ய வேண்டியிருக்கும். ஒன்று கவனமாய் இருங்கள்- அதாவது நீங்கள் கருத்தரிக்கக் கூடாது" என்று டாக்டர் கூறினார்.

உடனே மஹா பெரிய ஹாஸ்பிடலுக்கு ஓடி மஹா பெரிய டாக்டரை பார்த்தார் ராணி. பிரசாந்தி நிலையம்தான் அந்த மஹா ஹாஸ்பிடல், பாபாதான் மஹா டாக்டர் என்று சொல்லவும் வேண்டுமா?

மற்ற டாக்டர்கள் கருத்துக்கெல்லாம் மாறாக மஹா டாக்டர் பேசினார். “டாக்டர்கள் ஏதாவது சொல்வார்கள். உனக்கு அனுக்கிரகம் பண்ணுகிறேன். குழந்தையும் பிறக்கும். அதற்கு நாமகரணத்தில் இருந்து எல்லாம் சுவாமியே செய்கிறேன்” என்று நல்வாக்கு கூறினார்.

வாக்கின் உண்மை தெரியவோ என்னவோ, ராணி கருவுற்றார். டாக்டரிடம் சென்று காட்டவே பயந்து பேசாதிருந்தார். சுவாமியின் அபயசக்தியில் அசையா நம்பிக்கை வைத்து பாலவிகாஸ் வகுப்பு உற்சாகமாய் நடத்தினார். ராஜமகேந்திரபுர பாலவிகாஸ் மாநாட்டுக்கும் சென்று வந்தார். இப்போது ஆஸ்த்மா வேறு இவரை வாட்ட ஆத்மநாயகன் அருளால் அதிலிருந்து குணமானார். (ஆஸ்த்மா நிவாரணக் கதை ‘அன்பு அறுப’தில்( அத். 46) காணலாம்). பிறகு 8 மாத கர்ப்பிணியாக அந்த 1974-ஆம் வருஷத்திய சம்மர் கோர்ஸுக்கும் சென்று ஒரு மாதம் திவ்ய தரிசனம் பெற்று திரும்பினார்.

இவரது உடல்நிலையில் ஹெமடாலஜிஸ்டிடம் மாதம் இருமுறை செய்துகொள்ள வேண்டிய டெஸ்ட் உள்பட எதுவும் இக்காலத்தில் இவர் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் பிரசவத்திற்கு எந்த டாக்டரிடம் போய் நின்றால் கேஸ் எடுப்பார்கள்? எனவே பிரசாந்தி நிலைய மருத்துவமனையில்தான் அட்மிட் ஆக வேண்டும் என ராணி முடிவு செய்திருந்தார். ஆனால் முடிவுசெய்து, அதன்படியே முடித்துக் காட்ட முழு 'அதாரிட்டி ' பெற்ற சுவாமியோ அப்போது நடைபெற்ற பிரசாந்தி டவுன்ஷிப் பின் புனர்நிர்மாணத்தில் ஜாகைகளையெல்லாம் இடித்துவிட்டார் என்று இடியான செய்தி வந்தது.

சுவாமியிடமே முறையிடப் போன ராணியிடம் அந்த சுவாமி, “டெலிவரிக்கு மெட்ராசுக்குப் போ” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

படித்தறிந்த ஒரு பெண்மணியான ராணி பட்டிக்காட்டுப் பெண் போல மருத்துவ ஆலோசனையை மீறி கருத்தரித்து, 'அதன் பின்பும் அதற்கான சிகிச்சை எதுவும் பெறாமல் இப்போது அட்வான்ஸ்ட் ' கட்டத்தில் தம்மிடம் வந்ததற்காக சென்னை டாக்டர் எரிமலையாய் வெடித்தார். கடைசியில் ஒருவாறு சமாதானம் ஆகி இவரை ‘எக்ஸாமின்’ செய்தார். ஒரு தேதி கொடுத்து, அதற்குள் குழந்தை பிறக்கவேண்டும் என்றார்.

குழந்தையோ அந்தத் தேதிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, மேலும் ஒரு மாதம் ஆகியும் வயிற்றிலேயே கல்லுப் பிள்ளையார் ஆக இருந்தது.

“இனி வளரவிட்டால் ஆபத்து: ஆபரேஷனும் உன் விஷயத்தில் ரிஸ்கிதான். ஆனாலும் ரத்தம் ஏற்றி, ஆக்சிஜன் கொடுத்து அறுவை செய்து விட்டால் தான் நலம்” என்றார் டாக்டர்.

மறுநாள் பாபா சென்னை வருவதாக இருந்தால் அவரைக் கேட்டுக்கொண்டு ஆபரேஷன் செய்து கொள்ள ராணி எண்ணினார். டாக்டர் ஒப்பினார். ஆனால் அந்த ஒருநாள் கெடு தந்து, இதற்கு மேல் போனால் தாம் பார்க்க முடியாது எனச் சொல்லிவிட்டார்.

அடுத்த தினம். இம்மாதிரி சமயங்களில் நன்றாக சோதிக்கும் மாயாவி சென்னை வராமலே ஏமாற்றி விட்டார்! இதற்கடுத்த தினம் ராணி டெஸ்ட்டுக்காக மருத்துவமனை புகவேண்டியது தான்.

அன்று பகல் பாபாவின் படத்தின் முன் நின்று மனமார, கண்சோர வேண்டினார் ராணி. தசராவின்போது சுவாமியின் திருக்கரத்தால் சீரடி சாயிக்குச் செய்த விபூதி அபிஷேகப் பிரசாதம் ராணியிடம் இருந்தது. என்னவோ ஒரு உள்ளுந்துதல் பிறக்க, அத் திருநீற்றை ஒரு செம்பு ஜலத்தில் கலந்து அவ்வளவையும் உட்கொண்டார்.

வயிற்று உள்ளே உந்தத் தொடங்கிற்று, அதுவரை மந்தமாய்க் கிடந்த பிண்டம்!

டாக்டரே அதிசயிக்குமாறு அன்றே பரம நார்மல் டெலிவரியாக, கொழுகொழு குழந்தை பிறந்தாள்!

நாமகரணத்தில் இருந்து யாவும் செய்வதாகச் செப்பிய புண்ய நாமர் 26.1.1975 அன்று அதிர்ஷ்டக் குழந்தையை மடிமேல் சார்த்திக்கொண்டு, டாலர் 'எடுத்து' த் தந்து பொருத்தமாக சாயி கீர்த்தி என பெயரிட்டார்!

ஆதாரம்: அற்புதம் அறுபது, ரா. கணபதி
எழுத்தாக்கம்: N. ஸ்ரீனிவாசன், ஸ்ரீரங்கம், திருச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக