தலைப்பு

வியாழன், 30 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 12 | அலகிலா விளையாட்டுடையான்


அந்நாட்களில், நமது பகவான் சில சமயங்களில் பிரசாந்தி நிலையப் பகுதிகளில் தங்கி இருக்கும் பக்தர்களிடம் நேரிலேயே சென்று திவ்ய தரிசனம் அருள்வதுடன், சில பக்தர்களிடம் சம்பாஷித்தும் அருள்வார். அத்தகைய பாக்கியசாலிகள் அடையும் பெருமிதத்திற்கு அளவே இருக்காது.
 அவ்வாறான பாக்கியத்தினை நான் அந்நாட்களில் பலமுறை பெற்றிருக்கிறேன் என்பதை இங்கே உங்களுக்குக் களிகூர்ந்து சொல்லிக் கொள்கிறேன்.

சில தடவைகள் என்னை மந்திரின் மாடிக்கும் சுவாமி அழைத்திருக்கிறார். ஒருமுறை, மாடியிலே இருந்த பகவானது பெரிய திருவுருவப் படத்தினை, நான் கோரியதால், அதனைக் கழற்றச் செய்து, நான் திருச்சிக்கு எடுத்துச் செல்லவும் ஆசி கூறி, கொடுத்தருளினார். அதுபோன்றே மற்றொரு சமயம் மாடிக்கு அழைத்து, பகவானுக்கு அனுப்பப்பட்டிருக்கும் பலப்பல கடிதங்களின் மேலுறைகளைப் பிரித்தெடுக்கும் பணிகளையும் செய்ய என்னைப் பணித்தருளினார்.

முன்பெல்லாம் புட்டபர்த்தி செல்லும் பக்தர்கள் அப்போதைய சூழ்நிலையில், அங்கேயே தங்குவது மற்றும் தங்களது சாப்பாட்டு வசதிகளுக்காகத் தங்களைத் தயார் செய்துகொள்வது போன்ற விவரங்களைப் பற்றி நான் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. தற்போதுள்ள ‘தர்ஷன் ஹால்’ பகுதி பூராவும் முன்பு வெட்டவெளியான மணல் பகுதியாக இருந்தது. அதன் ஓரப்பகுதியில் பலவகைச்செடிகள் மற்றும் மரங்கள் பயிரிடப் பட்டிருக்கும். பல பக்தர்கள் ஏதாவதொரு மரச்சூழலைத் தேர்ந்தெடுத்து அதனடியில் தங்களது பெட்டி, படுக்கை முதலியவற்றை வைத்து, அந்த இடத்தையே தங்குமிடமாகக் கொள்வார்கள். வேறு பலர், மிகச்சிறிய கிராமமான புட்டபர்த்தியில் உள்ள வீடுகளிலும் தங்குவார்கள். பிரசாந்தி நிலையத்தின் சில பகுதிகளில் அங்கும் இங்குமாகச் சில சிறுசிறு வீடு போன்ற அமைப்புகளும் கட்டப்பட்டிருந்தன. அந்தவகை அமைப்புகளில், பிரசாந்தி நிலையத்திலேயே எப்போதும் தங்கக்கூடியவர்கள், குடும்பமாகத் தங்கி இருப்பார்கள். அவைபோன்ற வீட்டுப் பகுதிகளிலும், சுவாமி தரிசனத்துக்காக பிரசாந்தி நிலையம் செல்லும் பக்தர்களில் சிலர், ஓரிரு நாட்களுக்குத் தங்கிக் கொள்வார்கள்.

அதுபோன்ற காலகட்டத்தில் நான் ஒருமுறை புட்டபர்த்தி சென்றிருந்த போது, ஏற்கனவே அறிமுகமான ஒரு தம்பதியரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்கள் ஆச்சாரம் மிக்கவர்கள். அவர்கள் வெளியே எதுவும் அருந்த மாட்டார்கள். தாங்களே தயாரித்த உணவினை உட்கொள்வார்கள். ஒரு மரநிழலில் தங்களது சாமான்களை வைத்து அந்த மரத்தைச் சுற்றி ஒரு துணியால் திரைமறைவு ஏற்படுத்தியிருந்தார்கள்.

அந்த மறைப்புக்குள் அன்று அவர்களது மாலைச் சிற்றுண்டி தயாரிப்பு நடைபெற்றது. சிற்றுண்டி சாப்பிட என்னையும் அழைத்திருந்தார்கள். அந்த வீட்டு அம்மையார், பூரிக்கு மாவு பிசைந்து வட்டமான பூரிகளாகத் தயாரித்திருந்தார்கள். ஒரு பூரியை வாணலியில் கொதிக்கும் எண்ணையில், போட்டெடுத்தார்கள். திடுமென்று, திரையை அகற்றிக் கொண்டு, "ஆ கம்மென்று மணக்கிறது!" என்று சொல்லியவண்ணம் நமது சுவாமி உள்ளே வந்தார்! நாங்கள் எல்லோரும் ஆச்சரிய மிகுதியால் பிரமித்தபடி எழுந்து பணிவுடன் நின்றோம்.

புன்முறுவலித்தபடியே நம் பகவான், அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பூரியை எடுத்து எண்ணெயில் போட்டார். சட்டுவத்தால் ஓரிரு முறை அதனைப் புரட்டி வெளியே எடுத்த பகவான், என்னிடம் அதை ஒரு தட்டில் பெற்றுக் கொள்ளச் செய்தார். "உம் சாப்பிடு" என்று திருவாய் மலர்ந்தருளிய சுவாமியிடம், "நீங்கள் சாப்பிட வேண்டும் சுவாமி" என்று தட்டுடன் பூரியை நீட்டியபோது, "சுவாமிக்கு அதன் ஆவியே நைவேத்தியம் ஆயிற்று" என்று கூறியபோது நாங்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தோம். பூரியைச் சாப்பிடுமாறு சுவாமி மேலும் வற்புறுத்தவே, உப்பியிருந்த அந்தப் பூரியை நான் எனது கையால் அமுக்கியபோது, அதனுள்ளே வெல்லத்தினாலான தித்திப்பு மசாலா இருந்ததை, வியப்பு மேலிட யாவரும் பார்த்து அதிசயித்தோம்! "பூரியினுள்ளே தித்திப்பு மசாலா சுவாமி" என்று நான் ஆச்சரியத்துடன் சொன்னதைக் கேட்ட சுவாமி, “சாயி ஃபேக்டரியில் இதுபோன்றுகூடத் தயாராகிறதா?” என்று சொல்லிய வண்ணம், மற்றுமொரு பூரியை எண்ணெயில் போட்டெடுத்து என்னிடம் தந்தார். என்ன அதிசயம்! அதனுள் கிழங்கு மசாலா இருந்தது! அதனைப்பற்றி நான் உற்சாகத்துடன் பேசியதைப் புன்சிரிப்புடன் கேட்டபடியே சுவாமி, எங்கள் எல்லோரையும் ஆசீர்வதித்த வண்ணம் சென்றுவிட்டார்!

சுவாமி சென்றதைப் பார்த்தபடியே, நாங்கள் யாவரும் சிறிது நேரம் பிரமித்து நின்றிருந்தோம். அவ்வாறே எப்போதும் எங்களுடன் சுவாமி இருக்கக் கூடாதா? என்று அங்கிருந்த நாங்கள் ஒவ்வொருவரும் எண்ணிப் பேசிய வண்ணம் இருந்தோம் என்பதை சொல்லவும் வேண்டுமோ! ஜெய் சாய்ராம்.

ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

புத்தகத்தை வாங்கிப் படிக்க அணுகவும் 'சென்னை சுந்தரம் கோவில்'https://g.co/kgs/MrcEKk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக