தலைப்பு

சனி, 18 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 6 | வைத்தியநாதன்


திருச்சியில் 1964 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட ஸ்ரீ சத்திய சாயி பஜனா மண்டலியின் சாயி சேவா பணிகள் மிகவும் பணிவுடனும் ,தெய்வீக சிந்தனையுடனும், ஆற்றப்பட்டன. அதில் முக்கிய பங்காற்றியவர்கள் ஒரு ஒருவருடன் மற்றவர் ஒத்துப்போக கூடியவர்களாகவும், எல்லா முக்கிய
விழாக்களிலும் முழு ஈடுபாடு கொண்டு அதில் அவர்களுடைய பங்கை செவ்வனே ஏற்று நடத்துபவர்களாகவும், இருந்தனர். முக்கிய விழாக்களான விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, குரு பௌர்ணமி, வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி மற்றும் நவராத்திரி ஒன்பது நாட்கள், போன்ற எல்லாவற்றையும் விட சாயி சேவா நிறுவனங்களின் மிக முக்கிய விழா நாள் நமது பகவானின் பிறந்தநாள் விழாதான். அவ்விழா வெகு விமரிசையாய் திருச்சியில் தில்லைநகர் பஜனா மண்டலியில் கொண்டாடப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விழா நாட்களில், மாலை நேர நிகழ்ச்சிகளாக ,தில்லை நகரில் ஒரு பொது மண்டபத்தில், பகவானின் திரு உருவப்படம் மேடையிலே வைக்கப்பட்டு விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். மின்விளக்குகளாலும், ஒப்பனைகள் செய்யப் பட்டிருக்கும் விதம் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மாலை 5 மணிக்கு விழா நிகழ்ச்சிகள் துவக்கப்படும். திருச்சியில் மாவட்ட அளவில் முக்கிய அலுவலராக இருக்கும் ஒரு அதிகாரி, அழைக்கப்பட்டு அவர் அவ்விழாவிற்கு தலைமை தாங்குவார். திருச்சியிலே சிறந்த பேச்சாளர்களில் ஒருவர், அன்றைய விழாவில் பக்தி சம்பந்தமான ஒரு தலைப்பில் உரையாற்றுவார். பிறகு சாய் பஜனையும், மங்கள ஆரத்தியும் செய்யப்பட்டு, விபூதி பிரசாதமும், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதமும் விநியோகிக்கப்படும். விழா பூர்த்தியுற  இரவு சுமார் 9 மணி ஆகிவிடும். மேலே குறிப்பிட்டுள்ளது போல் ஒரு குறிப்பிட்ட விழாவுக்கான ஏற்பாடுகளை செய்யும் முகமாக, அவர்களுக்கு 20 நாட்கள் முன்பாக அந்த விழாவில் தலைமை தாங்க ஒரு மாவட்ட அதிகாரியையும், மற்றும் தேர்ந்த பேச்சாளர் ஒருவரையும், நேரில் கண்டு சுவாமியைப் பற்றி எடுத்துரைத்து, பஜனா மண்டலி சிறப்பு வழிபாட்டு முறைகளை விளக்கி, அவர்கள் வரவிருக்கும் விழா நிகழ்ச்சியை பற்றியும், அவர்கள் பங்கு பற்றியும் சொல்லி, அவர்களது இசைவினை கோரிப் பெறுவது அடியேனுடைய பணிகளாகும்.. மறுநாளே விழா விவரம், நடக்கும் இடம், விழா தலைவர் பெயர், பேச்சாளர் பெயர், மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் இவை உள்ளடக்கிய அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு, பலதரப்பட்ட மக்களுக்கும் விநியோகிக்கப்படும். விழாவிற்கு சுமார் 500க்கும் மேற்பட்டோர் வருகை தருவது வழக்கம். பகவான் ஆசியால், ஒவ்வொரு விழாவும் வெகு விமர்சையாக நடைபெற்று வெற்றிகரமாய் பூர்த்தி அடையும்.

இவ்வாறாக திருச்சி தில்லைநகர் ஸ்ரீ சத்ய சாயி பஜனா மண்டலியில், பல்வேறு விழா நிகழ்வுகள் நடைபெறுகையில் ,ஒரு விழாவுக்கு தலைமை தாங்க திருச்சி செஷன்ஸ் நீதிபதி திரு .ஷியாம் தாஸ் அவர்களை, அவரது இசை வுக்காக நேரில் சந்தித்தேன். அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த அவர், மராட்டியரான தாம் சீரடி பாபா பக்தர் என்றும் ,பர்த்தி பாபாவைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், அதிகம் தெரியாது என்றும், சுவாமியை பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்கள் ஏதும் இருந்தால், தமக்கு தேவைப்படுகிறது என்றும் சொன்னார் .நான் தயாராக எப்போதும் வைத்திருக்கும், ஓர் இரண்டு புத்தகங்களையும் பெற்றுக்கொண்டார். விழாவிற்கு தலைமை தாங்கவும் இசைந்தார். விழா நாளன்று, சரியான நேரத்திற்கு விழா மண்டபம் வந்து, பகவானது திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்று, வணங்கினார் .விழா துவங்கியதும், நான் அவரை அங்கு வருகை தந்து இருப்பவர்களுக்கு, அறிமுகப்படுத்தி, அவர் தலைமை உரை நிகழ்த்துவார் என்று சொல்லி அமர்ந்தேன். அவர் பேசிய போது தாம் தமக்குத் தரப்பட்ட பாபாவைப் பற்றிய புத்தகங்களை படித்த வகையில் அவர் ஒரு மகா புருஷர் என்பதாக புரிந்து கொண்டதாகவும், தாம் ஒரு முறை புட்டபர்த்தி சென்று நேரில் பார்த்து அனுபவப்பட விழைவதாகவும், குறிப்பிட்டார். விழா முடிவுற்று விடைபெற்று செல்கையில் விரைவில் புட்டபர்த்தி செல்ல எனக்கு ஆசை உள்ளது, அது பற்றி உங்களிடம் விரைவில் பேசுகிறேன் என்று கூறினார்.

சில நாட்கள் கழித்து அவர் வீட்டிற்கு வருமாறு எனக்கு ஆள் அனுப்பினார். நானும் சென்றேன். புட்டபர்த்தி செல்ல முடிவு செய்துவிட்டதாகவும், பயணம் பற்றிய எல்லா விவரங்களும் தெரிவிக்குமாறும், அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் நானும் விவரங்கள் யாவும் எடுத்துக்கூறி குறிப்புகளும் எழுதிக்கொடுத்தேன். தங்கும் வசதி பற்றி கேட்ட அவருக்கு, நான் திரு. கஸ்தூரி அவர்களுக்கு ஒரு கடிதம் தருவதாக சொல்லி, அவ்வாறே கடிதமும் எழுதிக் கொடுத்தேன். அவர் புட்டபர்த்திக்கு பயணிக்கும் முன் எனக்கு செய்தியும் சொல்லி அனுப்பினார்.

புட்டபர்த்தியில் அவரும் அவர் மனைவியும் தங்க திரு. கஸ்தூரி அவர்களும் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். அவர் அன்றிரவு கதவை தாழிட்டு படுத்து நன்றாக உறங்கினார். இரவு மணி மூன்று இருக்கும்... அவருக்கு பாத்ரூம் செல்ல உணர்வு ஏற்பட்டதால், அவ்வாறே சென்று கால் கழுவி, படிக்கட்டில் கால் வைத்த போது ,தடுமாறி அவர் கீழே விழுந்து விட்டார். கால் பெருவிரல் மடங்கிய நிலையில், அவர் விழுந்துள்ளதால், வலி தாங்க முடியாமல் சப்தம் போட்டதை கேட்ட அவர் மனைவி ,விழித்தெழுந்து வந்து அவரை தூக்கி, சமாளித்து கட்டிலில் படுக்க வைத்தார். சற்று நேரத்தில் கால் பெருவிரல் பெரிதாக வீங்கி, பாதத்தில் பாதி பாகமும் வீங்கிவிட்டது. அவர் மனைவியார் தாம் வைத்திருந்த வலி நிவாரணி தைலங்கள் போட்டு தேய்த்தும், அவருக்கு வலி குறையவில்லை.. மாறாக வீக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. செய்வதொன்றும் புரியாமல், அந்த அம்மையாரும் படுத்துக்கொள்ள, இவரும் வலியினால் முனகிக்கொண்டே படுத்துக் கொண்டார்.

விடிகாலை மணி 5.30. யாரோ கதவைத் தட்டுவது கேட்டது. அந்த அம்மையார் கதவை திறந்தார் .பகவான் பாபா நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அந்த அம்மையார், பிரமித்த வண்ணம் கும்பிட்டபடியே, பாபா.. உள்ளே வாருங்கள், என்று அழைத்தவாறு, உட்புறமாக சென்றார். நமது சுவாமி புன்முறுவலித்தபடியே, உள்ளே சென்று கட்டிலின் அருகே நின்றபடி, ஷியாம் தாஸ் ராத்திரி பாத்ரூமில் விழுந்து விட்டாயா ,வலி தாங்க முடியாமல் தவிக்கும் உனக்கு சிகிச்சை அளிக்கவே பொழுது விடியும் முன் வந்தேன்.. உன் காலை காட்டு என்று சொன்னதும், பிரமித்துப் போன திரு. ஷியாம் தாஸ் அவர்கள், சுவாமி... எனது பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்? திரு. கஸ்தூரி சொன்னாரா? என்று கேட்டதற்கு," எனக்கு எல்லாம் தெரியும்" என்று குறும்புத்தனமான சிரிப்புடன் சொல்லியவாறே, காலை மடக்க முடியாமல் அவதியுடன் படுத்திருந்த திரு. சியாம் தாஸ் அவர்களின், அடிப்பட்ட கால் பாதத்தில் பகவான் தமது திருக்கரங்களை வைத்து, பெருவிரலை வேகமாக இருமுறை மேலும் கீழும் அசைத்தார். உனக்கு பெருவிரலில் எலும்பு பிராக்சர் ஆனதால் ,அவ்வளவு வலியும், வீக்கமும் ..நான் சரி செய்து விட்டேன். இன்னும் சிறிது நேரத்தில் உனக்கு வலியும் இருக்காது, வீக்கமும் வடிந்துவிடும் பார் ,என்று சொன்னவர், கையசைத்து விபூதி வரவழைத்துஷ்யாம் தாஸுக்கும், அவர் மனைவிக்கும் கொடுத்தார். சுவாமி சொன்னது போலவே அடுத்த சில நிமிடங்களில் ஷ்யாம் தாஸுக்கு, வலியும் எங்கோ போனது, வீக்கம் வடிந்து விட்டது. அவர் உடனே எழுந்து நடக்க முயற்சித்தபோது, எந்த சிரமமும் இன்றி அவரால் நடக்க முடிந்ததை உணர்ந்த அவர் ,பகவானை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார். அவர் மனைவியும் நமஸ்கரித்தார் .பகவான் அவர்களை ஆசீர்வதித்து, அப்படியே தமது பொற்கரத்தினை  அசைத்து மோதிரங்கள் வரவழைத்து ,அவர்கள் இருவருக்கும் அணவித்து மகிழ்ந்தார்.

மேலும் ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு, திருச்சி திரும்பிய திரு. ஷ்யாம் தாஸ் அவர்கள், உடனே வரும்படி எனக்கு ஆள் அனுப்பினார். நான் அவர் தங்கியிருந்த அரசு மாளிகைக்கு சென்ற போது, வாயில் பக்கம் வந்து முன்பே நின்றவாறு, என்னை வரவேற்று, என்னிடம் எல்லா விவரங்களையும் சொல்லி, நான் மராட்டியன், ஷீரடி பாபாவை தெய்வமாக ஏற்றுக் கொண்டவன்.. நான் செய்த புண்ணியம் அந்த சீரடி பாபாவின் மறு அவதாரமான ஸ்ரீ சத்திய சாய் பாபாவை புட்டபர்த்தியில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.. அவரது திருக்கரம் பட்டதும், எனது இடது கால் பெருவிரல் எலும்பு முறிவு ஒரு நொடியில் சரியானது வியப்பிலும் வியப்பு!! அவர் வைத்தீஸ்வரன் தான் !! "i went  i saw.  I  was blessed" என்று சொல்லி, இவ்வளவும் உங்கள் நட்பு எனக்கு கிடைத்ததால் தான்; உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் என்று மனமுருக கூறினார்." சார் நீங்கள் கூறியதை போலவே நீங்கள் செய்த புண்ணிய வினையால் தான் இவ்வளவும் நடந்து உள்ளதே தவிர என்னால் எதுவும் செய்திட முடியாது" இன்னும் சொல்லப்போனால் பாபாவின் வாக்குப்படியே அவர் சங்கல்பித்தால் தான் எவரும் புட்டபர்த்தி செல்ல முடியும் ,இதுதான் உண்மை!! என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டேன் . ஜெய் சாய்ராம்.

ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

புத்தகத்தை வாங்கிப் படிக்க அணுகவும் 'சென்னை சுந்தரம் கோவில்'https://g.co/kgs/MrcEKk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக