தலைப்பு

வெள்ளி, 17 மே, 2019

லீலா மோஹன சாயி 1 | Chapter 5 | எல்லாம் வல்ல தன்மை


நான் விவரிக்க போகும் சுவாமியின் லீலா வினோத சம்பவம் 1964ல் நடந்தது என்று எனக்கு ஞாபகம்.ஒரு நாள் மாலை பிரசாந்தி நிலையத்தில் நேர்காணல் மற்றும் பஜனை வழிபாடு எல்லாம் முடிந்ததும், இரவு சுமார் 8.30 மணிக்கு திரு. கஸ்தூரி அவர்கள் ஒரு செய்தியை அறிவித்தார். அதாவது அன்றிரவு சுமார் 10.30மணிக்கு தாங்கொணா மழை கொட்டும் என்றும், ஆண்கள் எங்காவது பத்திரமான இடங்களுக்கு சென்று படுத்து கொள்ளுமாறும், பெண்கள் மட்டும் மந்திரில் தங்கி உறங்கலாம் என்றும் சொல்லி, இது" சுவாமி அறிவிக்க சொன்னது" என்றார்.

அப்போதெல்லாம் இப்போது உள்ளது போல் பலதரப்பட்ட தங்கும் கட்டிட வசதிகள் கிடையாது. மந்திர் ,அதன் மாடியில் சுவாமி தங்கும் அறை வசதிகள், மற்றும் கஸ்தூரி போன்றோர் வசிக்க சிறு சிறு வீடு அமைப்புகள், சிறியதான தபால் நிலைய கட்டிடம், ஒரு கேன்டீன் கட்டிடம், அந்த கேன்டீன் கட்டிடத்தின் மேற்கூரை பாகத்தில் கடப்பை "சிலாப்"கள் பரப்பப்பட்டு, அவைகள் ஒன்றோடு ஒன்று சேருமாறு ஒட்ட படாமலேயே இருந்ததால், மழை பெய்யும் போது உட்கார்ந்து சாப்பிட முடியாமல் ,தாரை தாரையாக தண்ணீர் கொட்டும்.. இதுதான் அக்காலத்தில் பிரசாந்தி நிலைய கட்டிடங்கள் இருந்த அமைப்பு விவரங்கள் ..மந்திருக்கு தென்புற மூலையில் அச்சக கட்டிடம் ஒன்று இருந்தது.

திரு கஸ்தூரி அவர்களின் அறிவிப்பு கேட்டவுடன் ,யாவரும் அவரவர் இரவு சாப்பாடு முதலியவைகளை முடித்துக்கொண்டு, பெண்கள் மந்திரிலும், ஆண்கள் அவரவர்களுக்கு கிடைத்த பாதுகாப்பு இடங்களுக்கும், சென்று விட்டனர்.. சுவாமி அறிவிக்க சொன்னது நடந்தே தீரும் என்ற அசையா நம்பிக்கை பக்தர்களுக்கு உண்டு.. காரணம், அப்போதெல்லாம் இது போன்று சுவாமி சொன்னதாக அறிவிக்கப்பட்ட பல சம்பவங்கள், அதேபோன்று நிகழ்ந்துள்ளது ...பலர் அனுபவத்தில் கண்டிருந்தனர். அப்போதெல்லாம் தினம் தினம் சுவாமி பல அற்புதங்களை நிகழ்த்துவார். பக்தர்களின் பக்தியுடன் கூடிய உற்சாகம் அளவற்ற இருக்கும். அக்காலத்தில் சுவாமி நிகழ்த்திய பல ஆயிரக்கணக்கான அற்புதங்கள் ,லீலைகள், அங்கிருந்தோர் பார்த்து, அனுபவித்து ,ஆனந்தத்திருந்தார்களே தவிர, மற்றவர்களுக்கு அது பற்றி கூறியோ, குறிப்புகள் எழுதி வைத்தோ, மற்றவர்கள் அல்லது பிற்காலத்து சந்ததியினர் அவை பற்றி அறிய ,எந்த முயற்சியும் செய்திருக்கவில்லை என்பது எனது பக்தி பூர்வமான ஏக்கம்!! அங்கு வந்து செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள், அங்கு செல்லாமல் கூட இருந்த, இருக்கும், ஆயிரமாயிரம் பக்தர்கள், ஒவ்வொருவர் அனுபவத்திலும் நிகழ்ந்துள்ள அற்புதங்கள் அல்லது லீலைகள் அல்லது அதிசய நிகழ்வுகள் எவ்வளவு எவ்வளவு ஆயிரமாயிரம்!! அவை பிற்காலத்தவருக்கு எடுத்துச் சொல்லப் படாமல் போய் விட்டனவே... என்பது எனது தாங்கொணா பக்தி ஏக்கம்!! துயரம்! துக்கமும் கூட !!ஒருவேளை சுவாமி சங்கல்பித்தால் அவை பூராவும், என் இச்சைப்படி யாவரும் அறிய நேரும் படி மலர வாய்ப்புண்டோ என்னவோ!!

நிற்க, இரவு சரியாக மணி 10.30. கருமை படர்ந்த வானம் வெகுண்டு கர்ஜித்தது. அம்பென சீறிவந்த கனத்த மழை துளிகள், பூமி தடத்தை தண்ணீர் காடாக்கின. தொடர்ந்து இரவு 3 மணி வரை கொட்டோ கொட்டென்று மழை பொழிந்தது!! மழை பெய்து எங்கு பார்த்தாலும், தண்ணீர் மயம் ...சித்ராவதி ஆறு மந்திர் பகுதியை தொட்டு விட்டது என்ற அளவிற்கு மழைப்பொழிவு இருந்தது. பக்தர்களில் பலரும், முக்கியமாக பல இடங்களில் இரவு பொழுதை கழிக்க சென்றிருந்த ஆடவர்கள், எப்போது விடியும் என்றே தூக்கம் கொள்ளாமல் காத்திருந்தனர்.

என்னையும் என் நண்பனையும் பொறுத்தவரை, சுவாமியின் அச்சக வெளிப்புற மேடை இரவு தங்கும் இடமாயிற்று. அந்த மேடை பூராவும், சாரல் அடித்ததால், ஒரு மூலையில் அங்கு கிடைத்த ஒரு ஈச்சம்பாயை தடுப்பாக வைத்துக்கொண்டு, கால்களை முடக்கி, உட்கார்ந்தபடியே இரவு நேரத்தை கழித்தோம். 3 மணிக்கு மழை நின்ற பிறகுதான், எங்கள் கால்கள் விறைத்து போயிருந்ததை எழுந்து நின்றும், நடந்தும் சரிசெய்து கொண்டோம். விடிகாலை ஐந்து மணிக்கே பல பக்தர்கள், தங்கள் தங்கள் காரியங்களை கவனிக்க அங்குமிங்கும் சென்றவாறு இருந்தனர். பெரு மழையால் ஏற்பட்ட தண்ணீர் வெள்ளம், தாழ்வான பகுதி நோக்கி வடிந்து கொண்டிருந்தது.. இருப்பினும் ஆங்காங்கே பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி தான் இருந்தது.

காலை மணி ஆறு முப்பது இருக்கும். மந்திர் பகுதியில் யாரோ ஒரு ஆணும் பெண்ணும் கூச்சலிடுவது கேட்டது. சுவாமியை அவர்கள் கண்டபடி நிந்தித்துப் பேசுவது கேட்டது. நானும் எனது நண்பனும், அச்சக பகுதியில் இருந்தமையால் கூச்சல் சத்தம் கேட்டதும், என்ன நிகழ்ந்தது என்று அறிய, மந்திர் பகுதியை நோக்கி ஓடினோம் ..அக்காலத்தில் சிற்றுண்டி மற்றும் காபி, டீ சாப்பிட, சுவாமியின் கேண்டீனை தவிர, பிரசாந்தி நிலையத்திற்கு வெளிப்புறம் தற்போதைய கோபுரம் தாண்டி ,மூன்று ,நான்கு கடைகள் உண்டு. அவைகளில் சாப்பாடு கிடைக்காது. சாப்பாட்டிற்கு கேன்டீன் தான் செல்ல வேண்டும். அக்கடைகளில் ஒன்றுக்கு சொந்தக்காரனும், அவன் மனைவியும் தான் ,மந்திர் பகுதியில் கூச்சலிடுகிறார்கள், என்பது நேரில் சென்றதும் எங்களுக்கு தெரிந்தது..

அவர்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை. இரவில் பெய்த மழையில் எப்படியோ அந்த பெண் குழந்தை காணாமல் போய்விட்டால் என்பதால்தான், அவர்கள் கண்டபடி அலறுகிறார்கள் என்பது தெரிந்தது. கடைக்காரன் தமிழிலும், தெலுங்கிலும், மாறி மாறி ஆக்ரோஷத்துடன் பகவானை நிந்தித்து பேசினான்.. அவன் மனைவி தலையிலும், மார்பிலும், அடித்துக் கொண்டு "எனது குழந்தையை பறிகொடுத்து விட்டேனே; இவரை கடவுள் என்று எண்ணி ஏமாந்து போனோமே" என்று சுவாமியை பலவாறு ஏசி பேசி கூச்சலிட்டாள்.." என் சன்னிதியில் டீ கடை வைத்து பிழைத்து கொள், நான் உனக்கு நல்வழியை காட்டுகிறேன் ,என்று சொன்னாயே, என் ஒரே பெண் குழந்தையை நான் இன்று இழந்து தவிப்பதற்கு நீ எனக்கு என்ன நல்வழி காட்ட முடியும்? என்று உரத்த குரலில், ஏளனமாக, பதற்றத்துடன் அலறியபடியே நிந்தனையாக பல வார்த்தைகளையும், கடைக்காரன் சொன்னான் .விடிகாலைப் பொழுதில் அங்கு கூடியிருந்த பக்தர் பலரும் "ஐயோ சுவாமியை நிந்திக்கிறானே" என்றனர். அதேசமயம் பாவம் குழந்தையை இழந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்ன செய்வது? என்றும் சொல்லிக் கொண்டனர்.. மேற்கொண்டு என்ன நடக்கப்போகிறது என்று எல்லோர் மனதிலும் பரபரப்பான எதிர்பார்ப்பு!!

மேலே பால்கனியில் சுவாமி வந்தார்! ஒரே நிசப்தம்! அந்த கடைக்காரனைப் பார்த்து,  ஏ,தொங்கவாடு! ஏன் கூச்சல் போடுகிறாய்? உன் குழந்தையை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள உங்கள் இருவருக்கும் பொறுப்பில்லாமல் இப்படி இங்கு வந்து அலறுகிறீர்களே? போங்கள்! உங்கள் கடைக்கு பின்புறம் உள்ள கிணற்றில், உங்கள் குழந்தையை தேடுங்கள் என்று சொல்லிவிட்டு உடனே உள்ளே சென்று விட்டார்.

கிணறா ?கிணற்றில் குழந்தையை தேடுவதா? அப்படி எடுத்தாலும் குழந்தை உயிருடன் வருமா? இப்படி தம்பதியினரும் மற்ற பலரும் முணுமுணுத்தனர்.. இதற்கிடையே பள்ள பகுதிகள், பல இடங்களில் மழைத் தண்ணீர் தேங்கி இருந்ததால் ,முதலில் டீக்கடைக்கு பின்புறம் உள்ள கிணற்றைக் கண்டு பிடிப்பதே பெரிய வேலை ஆனது.. பலரும் அங்குமிங்குமாக நீரில் நடந்து சென்றபோது, தண்ணீரில் மூழ்கி இருந்த கிணற்றின் மேல் புறச்சுவர் தட்டு பட்டதை உணர்ந்து, சுவாமி சொன்ன கிணறு அதுதான் என்று முடிவாயிற்று. இப்போது கிணற்றுக்குள் இறங்குவது பற்றி பலரும் யோசித்தபோது, அவ்வாறு இறங்கி உள்ளிருக்கும் எதனையும் வெளியே எடுத்து வரும் திறமை வாய்ந்தவர்கள் நான்கைந்து பேர்கள் கிணற்றுக்குள் மூழ்க முன்வந்தனர். அவர்களும் தங்களை தயார் செய்து கொண்டு கிணற்றில் இறங்கினர். சுமார் ஒரு நிமிடம் முதல் ஒன்றரை நிமிடங்கள், அங்கு ஒரே பரபரப்பு!! சலசலப்பு!!!

மூழ்கியவர்களில் இருவர், 5 வயது சிறுமியை கையில் உயர்த்திப் பிடித்தபடி, கிணற்று நீர் மட்டத்திற்கு வந்தனர்! கிணற்றருகே நின்றிருந்த சிலர் ,அந்தப் பெண்ணை உடனே பற்றிப் பிடித்துக் கொண்டனர் .சிறுமி உயிருடன் இருந்தாள். சிரித்த வண்ணம் இருந்தாள்.. " ஐயகோ" என்ன அற்புதம் !என்ன அதிசயம்! தரையில் இறக்கப்பட்ட சிறுமியைப் பார்த்து "சாய்ராம்" "சாய்ராம்" என்று குழுமி இருந்த பக்தர்கள் கோஷித்தனர்.  கடந்த சில மணிநேரம், 35 அடி ஆழத்தில், தண்ணீரிலேயே இருந்த அந்த சிறுமி வெளியே எடுத்துக்  வரப்பட்டபோது, எவ்வித விளைவுகளும் இல்லாமல் ,சர்வ சாதாரணமாக இருந்தாள் என்பதை கண்கூடாக பார்த்த நாங்கள் பிரமித்து விட்டோம்.!! அந்த சிறுமியை பலரும் கேட்டபோது எனக்கு "உள்ளே ஏதும் தொந்தரவுகள் இல்லை" "அங்கே தண்ணீரே இல்லை"" பாபா என்னுடன் தான் இருந்தார்" என்றாள்.

இங்கே நாம் கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்ததை எண்ணுகிறோம். சிறையில் தேஜோமயமாக அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், என்னை எடுத்துக்கொண்டு யமுனா நதியைக் கடந்து நந்தகோபன் அரண்மனையில் யசோதையினிடத்தில், விட்டுவிடு என்று உத்தரவிடுகிறார். வசுதேவர் அங்கே சிறையில் கிடைத்த ஒரு கூடையில், பகவானை வைத்து எடுத்துக்கொண்டு, தலையில் சுமந்த வண்ணம் ,நடுநிசியில் வெள்ளப்பெருக்கு இருந்த யமுனை ஆற்றில் இறங்குகிறார்.. அவரது தலை பகுதி வரை யமுனையில் இறங்கி விட்ட போதும், வழிவிடாத யமுனை, திடுமென்று தனது பிரவாகத்தை விலக்கிக்கொண்டு ,வழி விட்டதால் வசுதேவர் எச்சிரமமுமின்றி ,நடந்து சென்று அக்கறை அடைந்தாராம். இதற்கு பௌராணிகர்கள் வியாக்கியானம் எழுதுகையில், வசுதேவர் தமது தலை பகுதி வரை நீரில் இறங்கிய போது, நீர் பெருக்கோடு இருந்த யமுனை, அதுவரை வழிவிடாமல், அதன் பிறகு வசுதேவரின் தலை மீது இருந்த பகவான் கிருஷ்ணனின் பிஞ்சு மலர்ப்பாதங்கள் வசுதேவரது தலை மீது பட்டுக் கொண்டு இருப்பதை கவனித்த யமுனை, பகவானின் பாத கமலங்களை முத்தமிட இதுதான் சமயம்.... என்று எண்ணி அவ்வாறே பகவானின் பிஞ்சு மலர்ப் பாதங்களை முத்தமிட்டு வணங்கிய மறுநொடியில், தன் பிரவாகத்தை விலக்கிக்கொண்டு, வசுதேவர் செல்ல வழி விட்டாள் என்று வர்ணிக்கிறார்கள்!

அந்த சம்பவத்துக்கும், அதாவது யமுனையில் நீரற்று போனது என்பதற்கும் ,அச்சிறுமி 'அங்கு நீரே இல்லை' என்று சொன்னதற்கும், என்ன வேறுபாடு? இவ்வாறு தங்களது குழந்தை பகவான் பாபாவின் திருவருளால் தங்களுக்கு உயிருடன் திரும்ப கிடைக்கப்பெற்றதும், டீக்கடைக்கார தாய், தந்தையர், மட்டிலா மகிழ்ச்சி அடைந்தனர். தாம் பகவானை நிந்தித்தது குறித்து, மிகவும் வருந்தி, குழந்தையை தூக்கிக் கொண்டு, மந்திர் பக்கம் சென்று, தெய்வமே! எங்கள் குழந்தையை காப்பாற்றி எங்கள் குடும்பத்தையும் வாழ வைத்துள்ளீர்கள், உங்களை நிந்தித்துத் எவ்வளவு  கொடிய பாவத்தை நாங்கள் செய்துள்ளோம், நீங்கள் தெய்வம் தான்!!  பாபா எங்களை மன்னியுங்கள், தயவு செய்து வெளியே வாருங்கள், எங்களுக்கு உங்கள் தரிசனத்தை அளித்து, எங்களை மன்னித்ததாக சொல்லுங்கள், என்று அலறினர்.. ஆனால் சுவாமி வெளியே வரவே இல்லை. நிந்தித்தபோது வெளியே வந்த சுவாமி, வாழ்த்தும்போது வெளியே வரவில்லை, என்பதுதான் சுவாமி!! ஜெய் சாய்ராம்.

ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.
(ஆசிரியர் திரு சாய்மோஹனுடன் தொடர்பு கொள்ள: 
99401 18359)

புத்தகத்தை வாங்கிப் படிக்க அணுகவும் 'சென்னை சுந்தரம் கோவில்'https://g.co/kgs/MrcEKk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக