தலைப்பு

வியாழன், 16 மே, 2019

லீலா மோஹன சாயி 1| Chapter 4 | யக்ஞேஸ்வரன்


அது 1963 என்று எண்ணுகிறேன். ஒரு தடவை ஸ்ரீ பாபா நேர்காணலின் போது என்னிடம், "உனது தாயாரும், அவரது தாயாரும் ரொம்பவும் ஆச்சார சீலர்கள், தெய்வ பக்தி மிக்கவர்கள், சுவாமிக்கு அவர்களிடம் அன்பு உண்டு, நீ உன் ஊருக்கு சென்றதும், அவர்களிடம் விபூதி தயாரிக்க செய்து, சுவாமிக்கு எவ்வளவு கொண்டு வர முடியுமோ, அவ்வளவு எடுத்து வா" என்று சொன்னார். சுவாமி அவ்வாறு சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.

அந்நாட்களில் சுவாமியை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலர் பலவிதமாக விமர்சித்து பேசுவார்கள். பலதரப்பட்ட விமர்சனங்களில் அவர் எடுக்கும் விபூதி விஷயமாக அவரது ஜிப்பாவின் கை பகுதியின் நுனியில் பல சிறு சிறு பைகள் தைக்கப்பட்டு, அவைகளில் அவர் விபூதியை நிரப்பிக் கொள்கிறார். கையை அசைப்பது போல் செய்து விபூதி வெளிவருமாறு செய்து எடுத்துவிடுகிறார் என்பது ஒருவகை விமர்சனம்.. சுவாமி என்னிடம் விபூதி எடுத்து வா என்று சொன்னவுடன் அவ்வாறான விமர்சனம் உண்மையாக இருக்குமோ!! என்ற சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது. நமக்கு ஏற்படும் ஞானமும் அஞ்ஞானமும் அவர் செயல் தானே!! ஞான வழியில் நாம் முன்னேற அவர் நம்மை மேன்மேலும் ஊக்குவிக்கிறார், என்பதும் நமக்கு அக்ஞான தடுமாற்றம் ஏற்படுகையில் அவர் தமது சங்கல்பத்தால் அந்த தடுமாற்றத்தில் இருந்து நம்மை விடுவித்து நமக்கு தெளிவினை ஏற்படுத்துகிறார், என்பதும் இனி வரும் சம்பவம் விளக்கத்தினை நீங்கள் படிக்கையில் உணர்வீர்கள்!!

என் தாயார் ரொம்பவும் ஆசாரம் உள்ளவர். தினமும் மூன்று நான்கு தடவைகள் குளிப்பார். பூஜா காரியங்களிலும் சதா ஈடுபடுவார். அவரது தாயாரும், சுவாமி சொன்னது போல் ஆச்சாரம் மிக்கவர். நான் எனது ஊர் சென்றதும், சுவாமி விபூதி தயாரித்து தர சொல்லி இருக்கிறார் என்று சொன்னதும், எனது தாயாருக்கும் எனது பாட்டிக்கும் அளவில்லா பெருமை!! அவர்களை ஆச்சார மிக்கவர் என்று சுவாமியே சொன்னார் என்று கேட்ட போது அவர்களது உற்சாகம் எல்லையற்றதானது.

அவர்கள் விபூதி தயார் செய்ய முனைந்தனர். விபூதி தயாரிப்பதற்கான பசுமாட்டு சாணம் சேகரிப்பது அவர்களுக்கு தினமும் மதியம் 2 மணி வரை சரியாய் இருக்கும். விடிகாலை குளித்துவிட்டு, இறை துதி முதலியவற்றை முடித்து, வீட்டில் உள்ளோருக்கு உணவு தயாரித்தலையும் முடித்துவிட்டு பிறகு சாணம் சேகரிக்கும் வேலையில் ஈடுபடுவார்கள்.

பசுமாட்டு சாணம் தான் தேவையாம். தெருக்களில் எங்கு பசுமாட்டு சாணம் போடுகிற மாதிரி இருந்தாலும், உடனே அதன் பின் பக்கம் சென்று, சாணம் தரையில் விழுந்து விடாமல் ஒரு தட்டில் பிடித்து, சாணம் சேகரிப்பார்கள். அன்று மதியம் 2 மணி வரையில் சாணம் சேகரித்து முடித்த பிறகுதான், சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பிறகு ஆச்சார தன்மை குறைவாம். அன்றன்று சேகரித்த சாணத்தை கையாலேயே நன்கு பிசைந்து, அதில் உள்ள சிறு சிறு கற்கள், மற்றும் ஜீரணமாகாத வைக்கோல், போன்றவற்றை நீக்கி விட்டு சிறு சிறு அடைகளாக தட்டி உலர வைத்து விடுவார்கள். அந்த நேரத்தில் சிவன் நாமாக்களை உச்சரித்த படியும், அவர்களுக்கு தெரிந்த மந்திரங்கள் ஸ்லோகங்களை சொல்லிய வண்ணமும், அக்காரியத்தில் ஈடுபடுவார்கள்.

நான் ஒவ்வொரு வார முடிவிலும் திருச்சியிலிருந்து எனது கிராமவீட்டிற்கு செல்லும்போது பார்த்தால், அளவற்ற வகையில் சாண அடைகள் தயாரிக்கப்பட்டு, உலர வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறாக விபூதி தயாரிப்பு ஏற்பாடுகள் நடந்தபோது "சிவன் ராத்திரி" மிக அருகாமையில் வருவதாயிற்று. சிவன் ராத்திரி தினம் விபூதி முட்டம் போடப்பட வேண்டிய நாளாகையால் அதற்குள் எல்லா காரியங்களும் செய்யப்பட்டு முட்டம் போட நெல்உமி, மூட்டை மூட்டையாக சேகரிக்கப்பட்டு விட்டது. எங்கள் வீட்டு தாழ்வாரங்கள் நாற்புறமும் பல அடிகள் நீளம் உள்ளனவை யாக இருந்தமையால், ஆங்காங்கே உமி பரப்பி சாண  அடைகள் வைக்கப்பட்டு விபூதி முட்டங்கள் சிவராத்திரி அன்று எரியூட்டப்பட்டன. வீடு பூராவும் புகை மண்டலம்.. ஓரிரு நாட்களில் நன்றாக வெந்த சாண அடைகள் வெண்ணிறத்தில் விபூதி அடைகளாக எடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. அந்த காரியங்களையும் ஆசாரத்துடன் அவர்கள்தாம் செய்தார்கள்.

அதன் பிறகு விபூதி சாண அடைகள், "வஸ்திரகாயம்" என்ற முறையில் மிகவும் மிருதுவான துகள்களாக சேகரிக்கப்பட்டன. அந்த மிருதுவான விபூதி பெரிய பெரிய பானைகளில் சேகரிக்கப்பட்டு அதற்கு நல்ல மணம் கொடுப்பதற்காக அத்தர், ஜவ்வாது போன்ற வாசனைகள் சேர்க்கப்பட்டன. நான் ஏற்கனவே வாங்கிக் கொடுத்திருந்த பாலிதீன் உறைகளில் விபூதி நிரப்பப்பட்டு, அந்தப் பெரிய பாலிதீன் உறைகள் வாய் மூடப்பட்டன. பெரிய தலையணைகள் போன்று சுமார் 15 பாலிதீன் விபூதி மூட்டைகள் தயார் செய்யப்பட்டுவிட்டன!!

நான் ரயில்வேயில் பணி செய்து கொண்டிருந்தமையால், அந்த பாலித்தீன் விபூதி மூட்டைகளை எனது ஊரில் இருந்து திருச்சிக்கு ரயில்வே சிப்பந்திகள் மூலம் அனுப்பிவிட்டேன் .திருச்சி சென்ற பிறகு, ரயில்வே ஊழியர் சிலர் புட்டபர்த்தி செல்கிறார்கள் என்பதை அறிந்த நான், அவர்கள் மூலம் சில மூட்டைகளை அனுப்பி, புட்டபர்த்தியில் திரு. கஸ்தூரி அவர்கள் வீட்டில் வைக்க சொன்னேன். மீதம் இருந்த வற்றை நானும் மற்ற ஓரிரு நண்பர்களும் புட்டபர்த்திக்கு எடுத்துச் சென்றோம்..

நான் திரு. கஸ்தூரி அவர்களை பிரசாந்தி நிலையத்தில் சந்தித்தபோது ,அவர் வீட்டில் அடுக்கப்பட்டிருந்த விபூதி மூட்டைகளை பார்த்தேன். நான் எடுத்துச் சென்றதையும் அவைகளுடன் வைத்தேன். விபூதி வந்திருக்கும் விபரம் பற்றி சுவாமியிடம் அவர் ஏதும் தெரிவித்தாரா.. என்று திரு. கஸ்தூரியிடம் கேட்டபோது, "சுவாமிக்கும் ஒரு பக்தனுக்கும் சம்பந்தப்பட்டதை சுவாமியிடம் கேட்கவும் கூடாது, அப்படி கேட்பதை சுவாமியின் விரும்பவும் மாட்டார்",  என்று சொன்னார். எவ்வளவு அர்த்தமுள்ள ஆன்மீக நாகரீகம்!!

சுவாமி எனக்கு நேர்காணல் கொடுத்தார். சுவாமியும் விபூதி பற்றி ஏதும் கேட்கவில்லை. நானும் ஏதும் சொல்லவில்லை .சுவாமி மற்ற என் வீட்டு சம்பந்தமான விவரங்களை கூறி, விபூதி இட்டு ,என்னை வெளியே அனுப்பிவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சுமார் ஒன்றரை மாத கடின உழைப்பில், ஆசாரத்துடன் தயாரிக்கப்பட்ட விபூதி, அதிக பிரயாசையுடன் எனது ஊரிலிருந்து புட்டபர்த்தி வரை கொண்டுவரப்பட்டதை பற்றி, சுவாமி ஏதும் கேட்கவில்லையே, என்பது எனது ஆதங்கம்!! மறுநாளும் நேர்காணலில் உட்கார்ந்தேன். சுவாமி உள்ளே கூப்பிட்டார். அப்போதும் விபூதி பற்றி சுவாமி ஏதும் கேட்காததால் ,முடிவாக நானே விபூதி பற்றி பிரஸ்தாபித்தேன்..

சுவாமி சொன்னார், "சுவாமிக்கு தெரியும், நீ கொடுத்த விபூதி கஸ்தூரி வீட்டில் உள்ளது என்று!! உன்னிடம் விபூதி தயாரித்துக் கொண்டு வர சொன்னது, எனது ஜிப்பாவின் கை பகுதியில் உள்ள உரைகளை நிரப்பிக்கொள்ள அல்ல. பார்! சுவாமி ஜிப்பா கை பகுதியில் ஏதும் உறைகள் இருக்கின்றனவா என்று!! என சொல்லி சுவாமி ஜிப்பாவின் கைப் பகுதியை மடக்கி விட்டு காண்பித்தார். திகைத்துப் போன நான்," இனிமேல் தேவையற்ற எண்ணங்களுக்கு இடம் அளிக்க மாட்டேன் என்னை மன்னித்துவிடுங்கள் சுவாமி" என்று கூறியவாறு கண்ணீர் சொரிந்தேன்; என்னை அரவணைத்துக் கொண்டார்  சுவாமி. பிறகு சொன்னார், 'கடந்த ஒன்றரை மாதங்களாக உனது தாயாரும், அவரது தாயாரும், எவ்வளவு பிரயாசைப்பட்டு, சிரத்தை காட்டி, என்னிடமே மனதை வைத்து, தெய்வ ஈடுபாட்டுடன் நாமாக்களை சொல்லிய வண்ணம், இந்த விபூதியை தயாரித்தனர்.. அதுதான் யக்ஞம்.. ஹோமகுண்டத்தின் முன் உட்கார்ந்து, பல மந்திரங்களை சொல்லி, சுயநலத்துக்காக, யாகங்களை செய்வது என்பது யக்ஞம் ஆகாது, "யக்ஞம்" என்பதே தியாகம் என்று பொருள்படும்.. உனது தாயார் மற்றும் பாட்டியும் போன்று ஒரு நல்ல காரியத்தை, தெய்வ அர்ப்பணமாக, விரத பாவத்தில், சுயநலமற்று செய்வதெல்லாமே யக்ஞம் ..அவர்களை சாய் யக்ஞத்தில் ஈடுபடுத்த வேண்டியே ,அவர்களை விபூதி தயாரிக்க செய்து அவர்களுக்கு யக்ஞ பலனை வழங்கினேன்'.. சுவாமிக்கு யாரும் எதுவும் கொடுக்க தேவை இல்லை... என்ற விளக்கத்தைத் தந்து சுவாமி என்னை வெளியே அனுப்பினார்.

வியப்பிலும் வியப்பு என்னவென்றால், அன்று மதியமே சுவாமி வெறும் குடத்தினுள் தம் திருக்கரத்தை விட்டு, சுழற்றுவதன் மூலம், இரண்டு அடி உயரமுள்ள சீரடி பாபா சிலை மூழ்கும் வரை, விபூதி மழை பொழிய வைத்து ,எனது அறியாமைக்கு பாடம் புகட்டினார்!! ஜெய் சாய்ராம்.


(ஆசிரியரின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக